சண்டி சப்த சதியில் வரும் ஒரு கதை இது. சுரதன் என்ற அரசன் மற்றும் சமாதி எனும் வைசியன் என்ற இருவரும் தத்தமது இல்லங்களில் இருந்து விரட்டப்பட்டவர்கள். எங்கு செல்வது என புரியாமல் தங்கும் இடம் தேடி அலைந்தவர்கள் முடிவாக ஒரு வனத்தை அடைந்தார்கள். அங்கு பல இடங்களிலும் சுற்றி அலைந்தவர்கள் முடிவாக சுமேதஸ் என்ற மஹரிஷியிடம் அடைக்கலம் புகுந்து தமது மனக் குறைகளைக் கூறி அழுதார்கள். அவருடைய குடிலோ அமைதியாக, மனதுக்கு ஆறுதல் தரும் இடமாக இருந்தது.
அவர்களை அன்புடன் வரவேற்ற மகரிஷி அவர்கள் வந்ததின் காரணத்தைக் கேட்க உடனடியாக அந்த மன்னன் அவர் முன் அழுது புலம்பத் துவங்கினார். ”மாபெரும் முனிவ பெருமானே , நான் ஒரு மன்னன். ஆட்சியை இழந்து இங்கு வந்துள்ளேன். என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. நான் தூய்மையான வாழ்க்கையை நடத்தினேன், என் வாழ்க்கையில் பணக்காரர்கள் அல்லது ஏழை என பேதம் பார்க்காமல் அனைவரையும் ஒன்று போலவேதான் நடத்தினேன். அனைவரையும் மரியாதையுடன் நடத்தினேன். மற்றவர்களின் நலனுக்காக நன்மைகளை செய்யும் பல செயல்களில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். எனக்கு சொந்தமான பொக்கிஷத்தைக் கொண்டே பல வகையான தான தர்மங்களை செய்து வந்தேன். நான் யாரையும் ஏமாற்றவில்லை, மற்றவர்களின் பொக்கிஷங்களை அபகரிக்க எண்ணியதில்லை. மற்றவர்களது இன்பங்களை அழித்ததில்லை. நான் செய்யாத தர்மம் இல்லை, தானங்கள் இல்லை, நற்காரியங்கள் இல்லை என்றாலும் கூட என்னை சுற்றி இருந்தவர்கள் என்னை விரட்டி அடித்து விட்டு வேதனைப்படுத்தினார்கள். இதற்கு என்ன காரணம் ?” என்று கேட்டபோது அந்த மஹரிஷி அவனுக்கு அறிவுரை கூறத் துவங்கினார்.
” மன்னா, முதலில் உன் மனதை அமைதியாக வைத்துக் கொள். மனதிலும் இதயத்திலும் தூய்மையுடன் இருந்து மகத்தான செயல்களை, தான தர்மங்களை செய்ததாகக் கூறுகிறீர்கள், மற்றவர்களின் பொக்கிஷங்களை பார்த்து பொறாமை கொள்ளவில்லை, அவற்றை பறிக்க ஒருபோதும் எண்ணவில்லை என்று கூறுகிறீர்கள். ஒரு கணம் உங்கள் கூற்று அனைத்தையும் ஒப்புக் கொள்கின்றேன். ஆனால் உங்களது எதிர்மறை எண்ணங்களினால் ஈர்க்கப்பட்டு நீங்கள் செய்த தவறான செயல்களை எப்போதாவது நினைத்துப் பார்த்தது உண்டா ? அவற்றை வேண்டுமென்றே அல்லது அறியாமையில் நினைவுபபடுத்திப் பார்க்க விரும்பவில்லையா? குழந்தைப் பருவம் முதல் முதிர்ச்சி அடைந்து நல்ல நிலையில் இருந்தவரை நீங்கள் எந்த வித தீய உணர்வுகளும், செயல்களும் இல்லாதவராக, ஒழுங்கு மிக்க நேர்மையான மனிதனாக மட்டுமே வாழ்ந்து இருந்திருக்க வேண்டும் என்று என்னை நம்பச் சொல்கின்றீர்களா?
நீங்கள் பேசுவதற்கு முன் இருமுறை யோசித்துப் பேச வேண்டும். உங்களுடைய தற்போதைய அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணம் நீங்கள் தெரிந்தே செய்த பல பாவங்கள் உள்ளன. ஆனால் அவற்றை மறைக்க முயல்வது உங்களுடைய பெரும் தவறு. நீங்கள் மேன்மையான மன்னனாக அமர்ந்த பின்னர் உங்களது இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு, உங்களுக்கு யார் யார் பல வகைகளிலும் உதவினார்களோ, அவர்கள் அனைவரையும் உதாசீனப்படுத்தி அவமானப்படுத்தினீர்கள். அவர்களை புறக்கணித்தீர்கள். ஆனால் நீங்கள் அதிகாரத்தின் உச்சத்தை அடைய அவர்களின் தோள்களில்தானே பயணம் செய்தீர்கள். நீங்கள் பல்வேறு நல்ல செயல்களை செய்தீர்கள் என்றாலும் உங்கள் மனதிலும் இதயத்திலும், எண்ணங்களிலும் தூய்மையை வைத்து இருக்கவில்லை. எதை செய்தாலும் அதற்கு ஒரு வெகுமதியை எதிர்பார்த்தே செய்து வந்தீர்கள். அப்படி இருந்தும் விரிவான பல சடங்குகளை செய்து, தேவியை வணங்கி அவளுடைய அருளை பெற எத்தனை முயற்சி செய்தாலும் அது நடக்காது. அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே அவர்களுக்கு அருள் புரிந்து, தண்டனையையும் அந்த தேவி தருகின்றாள்.
உங்கள் ஆட்சியின் துவக்க கால கட்டங்களில் நீங்கள் நல்ல நோக்கங்களும், நல்ல எண்ணங்களும் கொண்ட தூய்மையானவராக இருந்துள்ளீர்கள். அதனால் அந்த நேரங்களில் நீங்கள் தேவியின் அருளைப் பெற்றிருக்கலாம். தேவியின் கிருபையால் ஒரு சக்தி வாய்ந்த மன்னனாக அமர்ந்தீர்கள். ஆனால் ஒரு கட்டத்தில், நீங்கள் அடைந்திருந்த மேன்மை அனைத்தும் உங்கள் முயற்சியினால் மட்டுமே கிடைத்தது என்ற ஆணவம் உங்கள் மனதில் புகுந்து கொள்ள, அந்த ஆணவம் மற்றும் மமதை அளவுக்கு மீறியபோது உங்கள் ஒழுக்கம் கீழே வீழ்த் துவங்கியது. சக்தி வாய்ந்த அந்த தேவி கூட உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஒரு பிரமையை ஏற்படுத்தி வந்தீர்கள். உங்கள் செயல்பாடுகளில் மகிழ்ச்சி கொண்டு உங்களுக்கு தொடர்ந்து மேன்மையை தேவி தந்து வ்ருவார் எனக் கருதத் துவங்கினீர்கள்.
ஆணவ மிகுதியால் உங்களுடைய ஏற்றத்துக்கு காரணமான அனைவரையும் அவமதிக்கவும் புறக்கணிக்கவும் ஆரம்பித்தீர்கள். அதனால் உங்களது வேதனையிலும், மகிழ்ச்சியிலும் பங்கு கொண்டு உங்கள் முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர்கள் உங்களை விட்டு விலகினார்கள். ஆனால் உங்களுடைய பெற்றோர்கள் அவர்களது முந்தைய பிறப்புகளில் செய்த நல்ல செயல்களால் மட்டுமே நீங்கள் அனைத்து நன்மைகளையும் பெற முடிந்தது என்றாலும் அது உங்களால் வந்தது என்று என்னத்த துவங்கியதே நீங்கள் ஒரு முட்டாள் என்பதை எடுத்துக் காட்டியது. அதனால்தான் நீங்கள் ராஜ்யத்தையும் இழந்தீர்கள்.
இன்று உங்கள் நிலை என்ன என்று பாருங்கள். உங்கள் வீழ்ச்சிக்கான காரணங்களை அறிந்து கொள்ள முடியாமலும், மன அமைதி இல்லாமலும், தனி ஆளாக நிற்கின்றீர்கள். அதன் காரணம் நீங்கள் செய்த தவறான செயல்களை எண்ணிப் பார்க்கவில்லை. உங்களுடைய எண்ணங்களும் மனதும் தூய்மையாக இருந்திருந்தால் இந்த சோதனையான காலகட்டத்தில் உங்களுக்கு தேவி உடனடியாக ஏதாவது ஒரு விதத்தில் அருள் புரிந்து உதவி இருக்க மாட்டாளா என்பதை உணர்ந்தீர்களா ? உங்களுடைய தற்போதைய சோதனை ஒரு ஆரம்பம் மட்டும்தான். இன்னமும் உங்கள் முட்டாள்தனத்தை நீங்கள் உணராவிட்டால், உங்கள் கட்டுப்பாட்டின்றி உங்களுக்குள் இருந்து கொண்டு இருக்கும் பழிவாங்கல் மற்றும் ஆணவம் போன்ற எண்ணங்களுக்கு அடிமையாகிக் கிடந்தால் இன்னமும் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும்.
தேவியை வணங்கும் தத்துவம் என்ன தெரியுமா? ‘அவளை நேர்மையுடனும், பக்தியுடன் துதிக்க வேண்டும். அவள் மீது முழு நம்பிக்கை வைக்கவேண்டும் . தூய்மை அற்ற மனதுடனும், பல்வேறு காலங்களில் உன்னிடம் அன்பாகவும், நெருக்கமாகவும் இருந்தவர்களை பழிவாங்கும் நோக்கத்தையும் மனதில் கொண்டு அவளை ஆராதனை செய்தால் தேவி நிச்சயமாக உங்கள் அருகில் இருக்க மாட்டார். ஆகவே உங்களது வேண்டுதலை முழுமையாக ஏற்றுக் கொண்டு தேவி உங்களது கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவாள் என்ற தவறான மாயையில் இருக்க முயலாதீர்கள். நீங்கள் எதற்காக தேவியை வழிபாடு செய்து துதிக்கின்றீர்கள் ? மாயையான எண்ணங்களை விலக்கி , அவளே இந்த உலகை படைத்தவள் என்பதை நன்கே புரிந்து கொண்டுஅவளை வணங்க வேண்டும். அவள் அனைவரது மனதையும், எண்ணங்களையும் முற்றிலுமாக அறிந்தவள் என்பதினால் அவளை ஏமாற்ற முடியாது என்ற உண்மையை மனதில் ஆழமாக பதித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அனைவருக்கும் முன்னால் பரிபூரணமாகவும் நேர்மையாகவும் இருப்பதை போல வெளி உலகிற்கு காட்டிக் கொண்டு, உங்களுடைய வேதனைகள் தீர வேண்டும் என்பதற்காக தேவியின் அருளைக் கோரி பூஜையோ ஆராதனையோ செய்தால், அவளது அருள் கிடைத்து விடும் என எதிர்பார்ப்பது மாயை. அவளிடம் சரணடைவதற்கு முன், மனதில் உள்ள துரோக உணர்வுகளையும், பழிவாங்கும் எண்ணங்களையும் முற்றிலும் அழிக்க வேண்டும். அப்போது மட்டுமே அவளது அருள் உனக்கு கிடைக்கும், உனது துயரங்களும் வேதனைகளும் நீக்கி உன்னை மாயையின் உலகத்திலிருந்து வெளியே வர உதவுவாள்.
எனது ஆலோசனை உனக்கு உகந்ததாக தோன்றினால் நவராத்திரியின் புனித காலகட்டத்தில் சண்டி சப்த சத்தியை உச்சரித்து நேர்மையுடன் தேவியிடம் பிரார்த்தனை செய்து இழந்த அனைத்தையும் திரும்பப் பெற்று சங்கடங்களை விலக்கிக் கொள்”.
தனது தலையில் யாரோ பெரிய கல்லைக் கொண்டு தாக்கியதை போல மன்னன் உணர்ந்தான். உண்மை மனதுக்குள் மேலெழ அப்படியே அவர் கால்களில் விழுந்து வணங்கியவன் தான் செய்த தவறுகளை எண்ணிப் பார்த்தான். தான் செய்துள்ள தவறுகளே தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது என்பதை உணர்ந்தான். இனியாவது திருந்தி வாழலாம் என முடிவு செய்தவன் சண்டி சப்த சதியை பூஜித்து ஆராதிக்கும் முறையைக் கேட்க அவரும் அதை கூறலானார்.
Thank you so much I am blessed to read this story through you in Navaratri ,I am gifted.,,🙏🙏🙏🙏🙏