

அத்தியாயம் – 52
இப்படியாக சித்த முனிவர் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளைப் பற்றிய கதைகளை கூறியதைக் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் மறைந்து போனக் கதையைக் கேட்டதும் அப்படியே தன் நிலை மறந்து சமாதி நிலைக்குச் சென்றுவிட்டார். உடல் முழுதும் வியர்வையினால் நனைந்தது. கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியபடி இருந்தது. அப்படியே சமாதி நிலையில் அமர்ந்து இருந்த நமத்ஹரகாவை தட்டி எழுப்பினார் சித்த முனிவர். ”மகனே, நீ மேன்மையான தியான நிலையை அடைந்து ஞான வழிக்கு செல்லத் துவங்கி விட்டாய். ஆகவே இனி நிச்சயமாக உனக்கு முக்தி கிடைக்கும். தத்தாத்திரேயரின் அவதாரமான ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் மகிமைகளைக் குறித்து நான் கூறிய அனைத்தையும் நீ ஆழ்ந்த கவனத்துடன் கேட்டாய். அது உன்னோடு நின்று விடக் கூடாது. என்னுடைய குருநாதரின் அமிர்தம் போன்ற மேலான மகிமைக் கதையை நான் எப்படி உனக்குக் கூறினேனோ அது போலவே நீயும் இந்த மண்ணில் வாழ்ந்து வரும்வரை உன்னை குருவாக ஏற்றுக் கொண்டு வருபவர்கள் மூலம் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் மகிமைகளை அனைவருக்கும் பரப்பிக் கொண்டு இருக்க வேண்டும். அதுவே நீ தத்த அவதாரமான ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கு செய்யும் மகத்தான சேவை ஆகும். மகனே, ஒன்றை நீ நினைவில் வைத்துக் கொள். தத்தாத்திரேயரின் அவதாரமான ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி நம் கண்களுக்கு புலப்படாமல் இருக்கின்றாரே தவிற அவர் வேறு எங்கும் சென்று விடவும் இல்லை, மறைந்தும் விடவில்லை. சூஷ்சுமமாக கனக்பூரில் கருநெல்லி மரத்தடியில்தான் இன்னமும் நம் கண்களுக்குப் புலப்படாமல் அமர்ந்து கொண்டு அனைவருக்கும் அருள் பாலித்துக் கொண்டு இருக்கிறார். இதுதான் சத்தியம்”
அதைக் கேட்ட நமத்ஹரகா தான் தன்னுடைய கனவில் வந்த குருதேவரை சந்திக்க சென்று கொண்டு இருக்கும்போதே பாதி வழியில் சித்த முனிவர் மூலம் ஸ்வாமிகளுடைய சரித்திரத்தைக் கேட்டு ஆனந்தம் அடைந்ததாகவும், தான் உயிர் உள்ளவரை ஸ்வாமிகளின் மகிமைகளை தன்னால் முடிந்த அளவில் தான் செல்லும் இடங்களில் எல்லாம் பரப்பிக் கொண்டு இருப்பேன் என்றும் சித்த முனிவரிடம் கூறிய பின்னர் அவரை வணங்கி விட்டு எழுந்தார். அவர் சித்த முனிவரிடம் தம்மை ஸ்வாமிகளின் பாதுகைகள் உள்ள கனக்பூருக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்று பணிவுடன் கேட்க சித்த முனிவரும் தான் அங்குதான் சென்று கொண்டு உள்ளதாகவும், தன்னைத் தொடர்ந்து வந்தால் ஸ்வாமிகள் சூஷ்சுமமாக அமர்ந்துள்ள கருநெல்லி மரம் உள்ள இடத்தை அடைந்து அங்கு ஸ்வாமிகளின் தரிசனத்தைப் பெறலாம் என்று கூறிவிட்டு மெளனமாக கனக்பூரை நோக்கி நடக்கத் துவங்கினார். நமத்ஹரகாவும் அவர் பின்னால் மெளனமாக ஸ்வாமிகளை தியானித்தபடியே நடக்கலானார். அவர்கள் பயணம் தொடர்ந்தது.
