சூதகர் கதையைத் தொடர்ந்து கூறினார் ”அரண்மனைக்கு வந்த செம்படவன் கூறியதைக் கேட்ட மன்னனால் அதை நம்பவே  முடியவில்லை. இப்படியும் இருக்குமா என வியப்பு அடைந்தான். ஆகவே செம்படவன் கூறுவது உண்மையா, பொய்யா என்பதை சோதனை செய்து பார்க்க விரும்பியவன் அந்த சிலையை அரண்மனைக்கு எடுத்து வரச் சொல்லி அதை அங்கேயே வைத்து விட்டுச் செல்லுமாறும் நான்கு நாட்கள் பொறுத்து அதை எடுத்துச் செல்லுமாறும் ஆணையிட்டார்.

பின்னர் இரண்டே நாளில் அதைப் போலவே நூறு சிலைகளை செய்யச் சொல்லி அதன் இடையே அந்த உண்மையான சிலையையும்  வைத்து  செம்படவனை அழைத்து அதில் அவனுக்கு கிடைத்த உண்மையான சிலை எது என்பதைக் கண்டு பிடித்து கூறுமாறு ஆணையிட்டான். அப்படி செம்படவன் உண்மையான சிலையைக் கண்டு பிடித்து விட்டால் மட்டுமே அவனை தான் நம்புவேன் என்றும், இல்லை என்றால் தெய்வீகத்தை கொச்சைப் படுத்துவதைப் போல பொய்யை கூறி வதந்தியைப் பரப்பியவனை ஆயுள் முழுவதும் சிறையில் வைத்து விடுவேன் என்றும் அறிவித்தான்.

மறுநாள் அந்த செம்படவன் அரண்மனைக்குச் சென்று எது உண்மையான சிலை என்பதைக் கண்டு பிடித்துக் காட்ட வேண்டும். இல்லை என்றால் சிறைவாசம் நிச்சயம் என்ற நிலை.  பயத்துடன் தூங்கிக் கொண்டு  இருந்தவன் கனவில் மீண்டும் தேவி பிரசன்னமாகி அவனை தைரியப்படுத்தினாள். அவன் அரண்மனைக்குச் சென்று சிலைகளைப் பார்க்கும்போது அந்த சிலைகளில் எந்த சிலையின் வலது கால் அசையுமோ அதுவே உண்மையான தன் சிலை என்று கூறினாள்.

மறுநாள் அரண்மனையில் சபை கூடியது. நிறைய மக்கள் அங்கு வந்து கூடி இருந்தார்கள் . அந்த சிலைகளில் உண்மையான சிலை எது என்பதை எளிதில் கண்டு பிடிக்க இயலாத அளவு அனைத்து சிலைகளுமே ஒன்று போலவே இருந்தன. செம்படவனும் வந்து அந்த சிலைகளை பார்த்தான். மனதார தேவியை வணங்கினான். சிலைகள் அனைத்தையும்  பார்த்துக் கொண்டு இருந்தவன்   கண்களுக்கு மட்டுமே தெரியும் வகையில் ஒரு சிலையின் வலது கால் ஆடியது. ஓடிச் சென்று அதை எடுத்தவன் அதுவே தனக்குக் கிடைத்த சிலை என்று மன்னனிடம் காட்டினான்.  அதன் அடியில் மன்னன் ஒரு அடையாளக் குறி செய்து வைத்து இருந்ததினால் அவன் கண்டு பிடித்ததே சரியான சிலை  என்பதை உணர்ந்த அனைவரும் பிரமித்தார்கள் . மன்னன் மீண்டும் மீண்டும் பல முறை சிலைகளை ஒன்றாக்கி வைத்து விட்டு உண்மையான சிலையை அடையாளம் காட்டுமாறு கூறினாலும் ஒவ்வொரு முறையும் தனது வலது காலை அவன் கண்களுக்கு மட்டுமே தெரியுமாறு காட்டிய தேவியின்  திருவிளையாடலினால் எத்தனை முறை மாற்றி மாற்றி வைத்தாலும் செம்படவன் அந்த உண்மையான சிலையை கண்டு பிடித்து எடுத்தான்.

அதைக் கண்டு மகிழ்ந்து போன மன்னனும் அந்த சிலையை பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைக்க உள்ளதாகக் கூறி  அதை அரண்மனையிலேயே வைத்துக் கொண்டு அந்த செம்படவனுக்கு நிறைய  பொருள் கொடுத்து அனுப்பினான். அடுத்து ராஜ குருக்களின் ஆலோசனைப்படி நல்ல நாளும், நேரமும் பார்த்து அந்த சிலையை புனித சடங்கு செய்து பூஜித்து ராஜ உபசாரத்துடன் தற்போது இந்த ஆலயம் உள்ள இடத்தில் சென்று அங்கிருந்த லிங்கேஸ்வரருடன் சேர்த்து பிரதிஷ்டை செய்தார் ( இன்றும்  கர்பக்கிரகத்தில்  உள்ள தேவியின் சிலை செம்படவனுக்குக் கிடைத்த அதே சிலை என்கிறார்கள் – சாந்திப்பிரியா ) .

ஆலயத்தின்  ஈசனின் பெயர் முன்னைனாதப் பெருமான். அவர் ஏற்கனவே அங்கு பூமியில் இருந்து தானாகவே எழுந்தருளி இருந்தார். ராமபிரானும் அவருக்கு பூஜை செய்திருந்தார்.  அவருடன் உள்ள தேவிக்குப் பெயர் வடிவாம்பிகா தேவியாகும். அங்குள்ள ஆலயத்தில் வியாச முனிவரும் கூட பூஜைகளை செய்து வணங்கி உள்ளார். அங்கு நேர்த்திக் கடன்களை செய்தால் அவை நிச்சயம் நிறைவேறும். பாப விமோசனமும் செய்து கொள்ளலாம். நல வாழ்வு பெறவும், அடுத்தப் பிறவியில் நல்ல பிறவி கிடைக்கவும் அங்குள்ள ஈசனை வணங்கினால் போதும். நிச்சயம் அது கிடைக்கும்’ என்று கூறியதும் அனைத்து முனிவர்களும் ‘சிவ, சிவ. சிவாய நமஹா’ என முழக்கமிட்டபடி கலைந்து சென்றார்கள்.

 ஆலயத்தின் படங்கள்  நன்றி:- http://www.panoramio.com/user/69195

இந்த ஆலயத்தை சுற்றி இன்னும் சில ஆலயங்களும் உள்ளன. கிமு 543 ஆண்டில் இலங்கையை ஆண்டு வந்த விஜயன் எனும் மன்னன் புனருத்தாரணம் செய்தார் என்பது தெரிகிறது. அவரைத் தவிர இந்த ஆலயத்துக்கு சோழ மன்னனான குளக்கோட்டன்  மற்றும் சிங்கள மன்னரான பராக்கிரமபாகு போன்றவர்கள் பல விதங்களிலும் பொருள் உதவி செய்தும், ஆலய வருமானத்திற்காக  பல கிராம  நிலங்களைக் கொடுத்தும்  உதவி இருக்கிறார்கள் .  தவிர 17 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராஜ சிங்கம் எனும் மன்னன்  வைஷ்ணவ பக்தரானாலும் இந்த ஆலயம் அன்னிய  நாட்டவரால் சிதைக்கப்பட்ட செய்தியைக் கேட்டு மனம் வருந்தி இந்தியப் பகுதிகளில் இருந்து சிற்பக் கலைஞர்களை வரவழைத்து ஆலயத்தை சீரமைத்தார். இந்த ஆலயத்தின் மகிமைப் பற்றி தக்ஷிண கையாலயப் புராணத்திலும் குறிப்புக்கள் உள்ளனவாம். ஆலயத்தின் அருகில் மிகப் பெரிய குளமும்  ஆல மரமும் உள்ளன. அந்த ஆலமரமே ஆலயத்தின் தல விருட்ஷமாகும். இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு என்ன என்றால்  ஆலயத்திக்கு உள் வீதி, ராஜ வீதி மற்றும் மாட வீதி என  மூன்று  வீதிகள் உள்ளன. வருடத்திற்கு  இரு முறை இரண்டு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இந்த ஆலயத்துக்கு ஜாதி பேதம் இன்றி சமய பேதம் இன்றி பல மக்களும் வந்து வணங்குகிறார்கள் என்பது மற்றும் ஒரு சிறப்பாகும்.

புத்த  தளம் எனும் மாவட்டத்தில் உள்ள ராமாயணத்தோடு சம்மந்தப்பட்ட இந்த ஆலயம் கொழும்பில் இருந்து 82 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

-முடிந்தது-