சாந்திப்பிரியா – 19 –
அங்கிருந்துக் கிளம்பி நாங்கள் அடுத்துச் சென்றது சித்தவட் எனும் ஆலயம். அதன் காலமும் பல ஆயிரம் முற்பட்டது என்கிறார்கள். இந்த ஆலயம் உஜ்ஜயினியின் இன்னொரு எல்லையில் சிப்ரா நதிக்கரையில்தான் உள்ளது. கங்கைக்கு யாத்திரை செய்து இறந்தவர்களுக்கு சிரார்தங்களை செய்து இறந்து போனவர்களுடைய ஆத்மாக்களை மோட்ஷம் பெற வழி வகுப்பது போலவேதான் இங்கு வந்து இறந்தவர்களுக்கு சிரார்த்தம் செய்வார்கள். அதை பிரேத ஷீலா என்கிறார்கள். அதாவது பிரேதங்களுக்கு விடுதலை தரும் இடம் என்பதாகும். கங்கைக்கு செல்வதும், கயா, விருந்தாவன் மற்றும் நாசிக் போன்ற இடங்களுக்கு சென்று இறந்தவர்களுக்கு இறுதி கார்யங்களை செய்வதும், இங்கு வந்து சிரார்த்தம் செய்வதும் ஒரே பலனைத்தான் தருகிறது என்கிறார்கள். அதன் காரணம் இங்கு வந்து இறந்தவர்களுக்கு சிரார்த்தம் செய்தால் அவர்களது ஆத்மா மோட்ஷத்துக்கு செல்லும் என்பது நம்பிக்கை.
வடநாட்டில் உள்ள இந்த ஆலயம் மட்டுமே முருகப் பெருமானின் ஸ்கந்த புராணத்துடன் சம்மந்தப்பட்டு உள்ளது என்பதின் காரணம் ஸ்கந்த புராணக் கதையின்படி சூரபத்மனை அழிக்க சிவபெருமான் முருகப் பெருமானை அனுப்பியபோது அவருக்கு சக்தி மிக்க வேல் எனும் ஆயுதத்தை பார்வதி தேவியானவள் கொடுத்தாளாம். அந்த சக்தி எனும் ஆயுதத்தை பார்வதி இங்கு வந்து தவம் செய்தப் பின் முருகனுக்குக் கொடுத்தாளாம். அந்த வேலினால் கொல்லப்பட்ட சூரபத்மனின் ஆத்மா மோட்ஷம் பெற்று முருகனின் இரண்டு சின்னங்கள் ஆகியதினால்தான் இங்கு வந்து இறந்தவர்களுக்கு சிரார்த்தம் செய்தால் அவர்களுக்கு மோட்ஷம் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆயிற்று. இந்த நதிக் கரையில் பார்வதி தேவி சிவபெருமானை துதித்து தவம் இருந்தாளாம்.
பார்வதி தேவி இங்கு வந்து ஒரு ஆல மரத்தை ஸ்தாபித்து அதன் அடியில் அமர்ந்து இருந்தபடி தவம் செய்தாளாம். ஆகவே அது புனித மரமாயிற்று. ஆனால் முகலாய மன்னர்கள் மத்திய பாரதத்தின் மீது படையெடுத்து வந்தபோது உஜ்ஜயினிக்கும் வந்த படையினர் இந்த மரத்தின் பெருமையைக் குறித்துக் கேள்விப்பட்டு, அதனால் ஆத்திரம் கொண்டு இந்த மரத்தை வெட்டி அதன் மீது ஆறு பலமான இரும்பு தகடுகளை வைத்து மரம் மீண்டும் வளராமல் இருக்கும் வகையில் அவற்றை அதன் மீது புதைத்தார்களாம். ஆனால் அந்த மரமோ மீண்டும் தளிர்விட்டு, அந்த இரும்புத் தட்டுக்களை பிளந்து கொண்டு வந்து தற்போது மிகப் பெரிய மரமாகி உள்ளதினால் அந்த மரம் சக்தி வாய்ந்த மரம் என்கிறார்கள். இங்குள்ள நதிக் கரையில் ஆல மரத்தடியின் கீழ் சிவபெருமான் சப்த மாத்ருக்களுடன் சேர்ந்து ஸ்தாபிக்கப்பட்டு பார்வதியினால் பூஜிக்கப்பட்டு இருக்கிறார் என்பதினால் அந்த சிவலிங்கமும் சக்தி வாய்ந்தது என்கிறார்கள். இந்த ஆலயத்தின் பக்கத்தில் ஓடும் நதியில் பல ஆமைகள் உள்ளன. அதனாலும் இதை சித்தவட் – ஆமைகள் உள்ள இடம் – என்கிறார்களாம்.
சித்தவட் ஆலயத்தில் வினாயகர் சன்னதி
சித்தவட் ஆலயத்தில் சிவபெருமான் சன்னதி
சிவபெருமான் சன்னதி அடியில்
சப்தமாத்ருக்கள் சிலை
இருந்த மரம். இதைதான் முகலாய மன்னர்கள்
சிதைக்க முயன்று தோல்வி அடைந்தார்கள்