அத்தியாயம் – 44

சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”கங்காபுரத்தில் நந்திவர்மா  என்கின்ற நெசவாளி இருந்தார். அவருக்கு ஒருமுறை  வெண் குஷ்ட நோய் வந்து விட்டது.  அவர்  தான் வெண்குஷ்ட நோயில் இருந்து குணமடைய வேண்டும் என்பதற்காக துல்ஜாபூரில் இருந்த பவானி தேவியை  மூன்று வருடங்கள் தொடர்ந்து வழிபாட்டு வந்தார். ஒருநாள் அவருடைய கனவில் பிரசன்னமான பவானி தேவி அவரை கனப்பூரில் இருந்த ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் சென்று அவரை வணங்கி துதிக்குமாறு கூறி விட்டு மறைந்து விட்டாள். ஆனால் அந்த பிராமணரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பவானி தேவியின் சன்னதிக்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டு சிலையை நோக்கிக் கூறினார் ‘அம்மா பவானி தேவி, நான் உன்னை விட வேறு எந்த மனித அவதாரத்தையும் நம்புவதாக இல்லை. எனக்கு வியாதி குணம் ஆகாவிடிலும் சரி, இங்கேயே இருந்து உன்னை வணங்கியபடி மரணம் அடைவதையே விரும்புகிறேன்’. இப்படிக் கூறியவர் அந்த ஊரிலேயே இருந்து வந்தார்.
 ஆனால் அவருக்கு தினமும் அதே கனவு தொடர்ந்தது. அவரும் மசியவில்லை. ஒருநாள் அந்த ஆலய பூசாரி இருவருக்கும்  அதே கனவு வந்து  அதில் பூசாரிக்கு பவானி தேவி ஆணையிட்டாள் ‘பண்டிதரே, வெண்குஷ்டம் வந்துள்ள இந்த பிராமணன் இந்த ஆலயத்துக்குள் நுழைந்தால் அவரை உள்ளே விடாதே. அப்படி மீறி வந்தால் பலவந்தமாக வெளியில் அனுப்பி விடு’. அவர்களும் மீண்டும் மீண்டும் ஆலயத்துக்குள் நுழைந்த நந்திவர்மாவை ஆலயத்தை விட்டு பலவந்தமாக வெளியில் கொண்டு விட்டனர்.

ஆகவே அந்த பிராமணரும் வேறு வழி இன்றி கனக்புரத்துக்கு சென்று ஸ்வாமிகளை  தேடி அவரிடம் சென்றார்.   அவரைக் கண்ட ஸ்வாமிகளோ அவர் அங்கு வர உள்ளது  தனக்கு முதலிலேயே தெரியும்  என்றும் அவர் வெண் குஷ்டத்தினால் அவதிப்படுவதினால் தன்னிடம் நம்பிக்கை இல்லாமல்தான்  வந்து இருக்கிறார் என்பதும் தெரியும் என்றும் ஆனால் தானும் அவரைப் போன்ற சாமான்ய மனிதரே என்றும் கூறியதும், நந்திவர்மா வெட்கம் அடைந்தார்.  தான் அறியாமல் செய்து விட்ட தவறுக்கு மன்னிப்புக் கேட்டார்.

அவர் ஸ்வாமிகளிடம் கெஞ்சினார்  ‘ஸ்வாமி, நான் பாபம் செய்து விட்டவன். என்னை நீங்கள் முதலில் மன்னிக்க வேண்டும். உங்களை நம்பாமல் இங்கு வந்துள்ள எனக்கு உங்கள் தரிசனத்தையும் தந்து பெருமை கொடுத்து உள்ளீர்கள்.  நீங்கள் உண்மையிலேயே பெரும்  கடவுள். எனக்கு வந்துள்ள நோயினால் என்னை விட்டு என் மனைவியும் விலகிச் சென்று விட்டாள்.  என்னை நான் வணங்கி வந்த பவானி தேவியே எங்களிடம் செல்லுமாறு ஆணையிட்டாள்  என்பதினால் நான் உங்களிடம் அடைக்கலம் கேட்டு வந்து இருக்கின்றேன். தயவு செய்து எனக்கு கருணைக்  காட்டி என் நோயை குணப்படுத்துங்கள்’.
 அவர் கூறியதை மெளனமாக கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்த ஸ்வாமிகள் தன்னுடைய ஒரு சிஷ்யரை அழைத்து அவரை சங்கமத்திற்கு அழைத்துச்  சென்று குளிக்கச் வைத்தப் பின் புதிய ஆடைகளைக் கொடுத்து, அவற்றை உடுத்திக் கொண்டப் பின் அங்குள்ள கருநெல்லி மரத்தை மூன்று முறை பிரதர்ஷணம்  செய்யச் சொல்லி, அதை அவர் செய்து முடித்ததும் அவரை தம்மிடம் அழைத்து வருமாறு கூறினார்.

ஸ்வாமிகள் கூறியது போலவே சங்கம் நதிக்குச் சென்று அதில் நந்திவர்மா குளிக்கத் துவங்கியதுமே அவருடைய உடலில் இருந்த வெண்குஷ்டம் மறையத் துவங்கி விட்டது. அவர் உடல் பளபளக்கத் துவங்கியது. அவர் தூக்கி எறிந்து இருந்த உடைகள் கறுகிக் கிடந்தன.  அவர் ஸ்வாமிகளிடம் சென்ற பின் மீண்டும் ஒருமுறை உடல் முழுவதும் வெண்குஷ்டம் மறைந்து விட்டதா என சோதனை  செய்து கொள்ளுமாறு அவரிடம் ஸ்வாமிகள் கூறியதும், தம்மை சோதனை செய்து கொண்ட நந்திவர்மா உடல் முழுவதும் குஷ்டம் மறைந்து விட்டாலும் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சிறியதாக  திட்டு போல  குஷ்டம் இருந்ததைக் கண்டார்.

அதைக் குறித்து அவர்  ஸ்வாமிகளிடம் கூறியதும் ஸ்வாமிகள் கூறினார் ‘பிராமணரே, நீங்கள் என் மீது முழு நம்பிக்கையையும் வைத்துக் கொண்டு குளிக்கச் செல்லவில்லை. மனதின் ஓரத்தில் உண்மையில் நான் குணம் அடைவேனா என்ற தயக்கம் இருந்தது. அதனால்தான் இது உள்ளது. இது முழுவதும் குணம் அடைய வேண்டும் என்றால்  இங்கு இன்னும் சில நாட்கள் தங்கி இருந்து இங்குள்ள தெய்வத்தை துதித்து பாடல்களைப் பாடிக் கொண்டு இரு. அப்போது பூரண குணம் அடைவாய்’ .

அதைக் கேட்டதும் மீண்டும் நந்திவர்மாவுக்கு வெட்கம் ஏற்பட்டது. தனது தவறை முற்றிலும் உணர்ந்தார். ஸ்வாமிகளின்  பாதங்களில் விழுந்து மன்னிப்பைக் கேட்டப்  பின் கூறினார் ‘ஸ்வாமி, எனக்கு பாடல்கள் எதுவுமே தெரியாதே. நான் எப்படி இங்குள்ள கடவுள் மீது பாடலைப் பாடுவது?’ என்று கேட்டதும், அவரை அருகில் வருமாறு அழைத்த ஸ்வாமிகள் அவர் நாக்கைக் நீட்டச் சொல்லி அதன் மீது சிறிது வீபுதியை தூவினார். அடுத்த வினாடி அந்த பிராமணர் தன்னை மறந்து பாடத் துவங்கினார். அருவி கொட்டுவது போல அவர் வாயில் இருந்து பாடல்கள் வெளி வந்தன. அந்த பாடலின் உள்ளடக்கம்  இதுதான்:

 ‘மாயையினால் சூழப்பட்டு உள்ள நான் என் அருகிலேயே இருந்துள்ள உண்மையான சக்தியை கொண்ட உங்களை புரிந்து கொள்ள முடியாமல் இருந்துள்ளேன். இதுவரை உங்களை வணங்காமல் வெற்று ஜடமாக இருந்து இருக்கிறேன்.  நான் பூர்வ ஜென்மங்களில் எறும்பாக பிறந்து இருந்தேன். அதன் பின் அடுத்தடுத்த ஜென்மங்களில் பல பிறவிகளை எடுத்தேன். ஆனால் இந்த ஜென்மத்தில்தான்  பிராமணனாகப் பிறந்து உள்ளேன்.  ஆனாலும் உங்களை எப்படி நான் அடையாளம் தெரியாமல் இருந்து உள்ளேன் என்பதை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. ஒவ்வொரு ஜீவனும்  பிறப்பெடுக்கும் முன் வானத்தில் இருந்து பூமியில் விழும் மழை மூலம்  பூமியில் வந்து அதற்குள் புதைந்து கிடந்தது அங்கு முளைக்கும் செடிகளில் புகுந்து, அந்த செடிகளின் தானியமாக மாறி இருக்கும். அதன் பின் அவற்றை உண்ணும் மனிதர்களின் உடலில் செல்கிறது.

அந்த ஆண் மற்றும் பெண்களுக்குள் அவர்களை ஏற்கனவே இயக்கும் ஆத்மாவுடன் சம்மந்தப்படாமல் தனி ஜீவனாக  உள்ளே நுழையும் அது தனக்கு விதிக்கப்பட்ட  நியதிக்கடி ஒரு பெண்ணின் கருவில் முட்டையாகி அங்கேயே தங்குகிறது.  அது போலவேதான் ஒரு ஆணின் உடலிலும் செல்லும் ஜீவனும்  அவரது விந்துவில் தங்குகிறது. ஆணும் பெண்ணும் ஒன்றாக இணையும்போது அவர்களுக்குள் புகுந்துள்ள ஆத்மாவானது ஒன்றாகக் கலந்து கருவாகி குழந்தையாக பிறக்கிறது. அந்த இரண்டு ஜீவன்களும் ஒன்றாகி, ஒரே ஜீவனாகி முட்டையாக மாரிவிட்டப் பின்னரோ, கரு வளர்ந்து வரும்  நிலையில் இருக்கும்போதோ, தாயின் வயிற்றில் குழந்தையாக உருளும் போதோ ஏன் அத்தனை, அந்த தாயின் வயிற்றில் இருந்து வெளி வரும்போதும் கூட அந்த ஜீவனை கட்டுக்குள் வைத்துள்ள உங்களை  வணங்க வேண்டும் என்ற மனநிலையை  கொள்ளவில்லை. அப்படி அது உங்களை அடையாளம் கண்டு கொண்டு உங்களை தியானிக்கத் துவங்கி விட்டால் அது ஏன் இந்த பூமியில் துன்பங்களில் சுழலும்?

காலபோக்கில் அது வளரத் துவங்கி வாழ்க்கையின் சுகபோகங்களில் அகப்பட்டுக் கொண்டு துன்பங்களில் உழன்று கொண்டு தன் காலத்தை வீணடித்துக் கொள்கின்றது. வயதானபோதோ மற்றவர்களுடைய தயவில் வாழ வேண்டிய நிலையில்  சென்று விடும் அந்த ஜீவன் உள்ள உடலும் அப்போதும் உங்களை  வணங்க வேண்டும் என்ற மனநிலையை  வளர்த்துக்  கொள்ளவில்லை.

ஆனால் என்னைப் போன்ற ஒருசில பாக்கியசாலிகளினால் உங்களை யார் என்பதை முதலில் புரிந்து கொள்ள முடிவதில்லை என்றாலும் பின்னர் புரிந்து கொண்டு உங்களிடம் சரண் அடைய வைத்து விடுகிறது.  மனித குலத்தைக் காப்பாற்ற மனித அவதாரம் எடுத்து வந்துள்ள திருமூர்த்தியாக  நீங்கள் பூமிக்கு வந்து எனக்கு அருள் புரிந்து உள்ளாய்.

குருதேவா, எங்களது அனைத்து பாபங்களையும்அழித்து முக்தி தர அவதரித்து உள்ளவரே, இங்கு வந்துள்ளவரே, எப்படி தீயானது பஞ்சு மூட்டையை பொசுக்கி விடுமோ அப்படித்தான் எங்கள் பாபங்களை பொசுக்க நீ அவதாரம் எடுத்து வந்துள்ளாய் என்பது இப்போது புரிகிறது. என்னை உன்னிடம் சமர்பித்து விட்டேன். இனி என்னை நீங்களேசம்சார பந்தங்களில் இருந்து விடுதலை தந்து  முக்தி கிடைக்க வழி செய்ய வேண்டும்’.

அதைக் கேட்டு மகிழ்ந்த குருதேவர் அவருக்கு கவீஸ்வரர் என்ற பட்டம் கொடுத்து மீதம் இருந்த வெண் குஷ்டத்தையும் மறைய வைத்தார். அதன் பின் அந்த பிராமணரும் தன்னுடைய சேவையை ஸ்வாமிகளுக்கு தந்து தன்னுடைய மீதி வாழ்க்கையை  அங்கேயே கழித்து வந்தார் (இப்படியாக அத்தியாயம்-44 முடிவடைந்தது).

……….தொடரும்