சாந்திப்பிரியா
2
10) அந்த காரியம் என்ன என்றால் மரணத்தை தழுவும் நிலையில் உள்ளவர்களின் குடும்பத்தில் மூத்த மகன் இருந்தால், முடிந்தவரை மரணம் அடைய உள்ளவரின் தலையை சற்று நேரம் தன் தொடையில் வைத்துக் கொண்டு வலது காதில் பஞ்சாக்ஷர, அஷ்டாக்ஷரீ, மற்றும் ராம ராமா, சிவாய நமஹ போன்ற மந்திரங்களை சற்று நேரம் ஓதிக் கொண்டு இருக்க வேண்டும். இது சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள விதிமுறை என்றாலும் ஆனால் தற்காலத்தில் இதை கடை பிடிக்க முடியவில்லை என்பதினால், இறந்தவரின் தலையின் அடியில் தன் கையை ஒரு நிமிட நேரம் வைத்துக் கொண்டு அவரது காதில் இருமுறை ராம ராமா, சிவாய நமஹ போன்ற மந்திரங்களை கூறினால் கூடப் போதும் என்பதாகவும் கூறப்படுகின்றது. இது எதற்காக என்றால் மரணிக்க உள்ளவருடைய ஜீவன் தனக்கு கர்மா செய்ய உள்ளவன் தன்னோடு துணை இருக்கின்றான் என்ற எண்ணத்தை தன்னுள் அழுத்தமாக வைத்துக் கொண்டு அமைதியாக, துக்கம் இன்றி பிராணனை விடும் என்பதற்காக செய்யப்படுகின்றது. நமது கண்களுக்கு புலப்படாத வகையில் மரணம் அடைய உள்ளவரின் எண்ண அலைகளை, கர்மாவை செய்ய உள்ளவன் உள்ளுணர்வுடன் உச்சரிக்கும் மந்திர அலைகள் சூழ்ந்து கொண்டு ஆறுதல் தரும் என்பது நமக்கு தெரியாது, புரியாது, ஆனால், தியான நிலையில் ஒருவர் பெறும் மன அமைதியைப் போன்ற உண்மை நிலை ஆகும்.
10.1) இப்படியாக மந்திரம் ஓதுவதின் மூலம் உடம்பில் உள்ள பிராணன், அபானன், உதானன், வியானன், மற்றும் சமானன் என்கின்ற ஐந்து வாயுக்களும் ஒன்றாகி வெளியேறும் என்பது ஐதீகம். ஒவ்வொரு வாயுவும் ஒவ்வொரு தேவ கணத்துடன் சம்மந்தப்பட்டது என்றாலும் இவற்றில் பிராணன் மற்றும் அபானன் என்பவையே முக்கியம். பிராணனை சூரியன் என்றும் அபானனை சந்திரன் என்றும் கூறி உள்ளார்கள். உலகில் உள்ள அனைத்து அசைவுகளுக்குமே வாயுவே காரணம் என்பதை போலவேதான் ஒருவரது உடலுக்கு அத்தியாவசிய வாயுவான ஐந்து பிராணங்களில்தான் ஜீவாத்மா சஞ்சரிக்கின்றது. அப்படி வாழும் ஜீவாத்மா, வாயுக்களுடன் வெளியேறும்போது மந்திர ஒலியை எழுப்புவது நல்லது என்பதாக கூறினார்கள். மந்திரம் ஓதத் தெரியாதவர்கள், அல்லது செய்ய முடியாதவர்கள் தம் வீட்டில் இவற்றை ஓதத் தெரிந்தவர் யாராவது இருந்தால் அவர்கள் மூலம் அந்த மந்திரங்களை ஓதலாம். சாதாரணமாக சமய தீட்சை பெற்ற ஒருவர் மூலம் வலது காதில் பஞ்சாட்சர மந்திரம் அல்லது சிவாய நமஹா எனும் மந்திரத்தை ஓதுவார்கள். அது தவறல்ல. ஆனால் கர்மா செய்ய பாத்யதை உள்ள இளைய அல்லது மூத்த மகன் அதை செய்வதின் மூலம் மரணம் அடைய உள்ளவர் மனம் மேலும் அமைதி அடையும் என்பது நம்பிக்கை.
11) இன்னும் சில குடும்பங்களில் மரணம் அடையும் தருவாயில் உள்ளவர்களை சூழ்ந்து நின்று பஜனை பாடுவார்கள். ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள் வீட்டில் உள்ள அனுபவம் மிக்கவர்கள் நாடி பிடித்து பார்த்து ஜீவன் பிரியும் நிலையை உணர்ந்தால் ‘யாரும் அழக் கூடாது, ஜீவன் போகப் போகுது, ராம ராம ராமா என்று கூறத் துவங்குங்கள்’ என்பார். அடுத்த நொடியில் மரணம் அடையும் தருவாயில் உள்ளவர் ஜீவன் அமைதியாக பிரிந்து விடுவதைக் காணலாம். ஜீவன் வெளியேறும்போது ஆசாபாசங்களினால் தன்னை அது கட்டுப்படுத்திக்க கொண்டு விடக் கூடாது, இறைவன் நினைவோடுதான் வெளியேற வேண்டும் என்பதற்காகவே யாரும் அழக் கூடாது என்று கூறுவார். இப்படி பல விதமான பழக்கங்கள் பல பிரிவினரிடையே உள்ளன. இப்படி எல்லாம் செய்ய வேண்டியதின் அவசியம் என்ன என்றால் உடலில் இருந்து வெளியேறும் அந்த ஆன்மா, தன்னோடு தன் குடும்பத்தினர் இருக்கின்றார்கள், தான் இறந்தாலும் தனது பசி தாகத்திற்கு அவர்கள் கர்மாக்களை செய்வார்கள் என்ற மன தைரியத்துடன், இறைவனை பரிபூரணமாக சரண் அடையும் மன நிலையோடு, இறைவனையே எண்ணிக் கொண்டு வெளியேறும் என்ற ஐதீகமே.
12) பஜனைகளை பாடும் மன நிலையில் இல்லாதவர்கள் வீட்டில் தொடர்ந்து சஹஸ்ரநாம பாராயணம் அல்லது நாராயணீயம், சுந்தரகாண்டம், ராம ராமா, கோவிந்த நமஹா … கோவிந்த நமஹா…. போன்றவற்றை உச்சரித்துக் கொண்டும் உரக்கப் படித்துக் கொண்டு இருக்க வேண்டும். இல்லை என்றால் ஒலி நாடாவில் போட்டு அதை அமைதியான சூழ்நிலையில் ஒலி பரப்பினால் அதுவும் நல்லதற்கே என்றெல்லாம் கூறப்படுகின்றது. இது சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டதா என்ற தயக்கம் தேவை இல்லை. முன்காலங்களில் வாழ்ந்திருந்த மக்கள் எளிய நிலையில் தெய்வ பக்தி கொண்டு வாழ்ந்து வந்திருந்தார்கள். அந்த காலத்தில் சாமான்யர்கள் பயன்பாட்டிற்கு உகந்த ஒலி நாடாக்கள் மூலம் இசைக்கும் சாதனங்களும் இருந்திடவில்லை என்பதினால் உறவினர்கள் வாய் வழியே அவற்றை ஓதினார்கள். ஆகவே தற்காலத்தில் அப்படிப்பட்ட சாதனங்களை பயன்படுத்துவதில் தவறு எதுவும் இல்லை. மரணம் அடையும் தருவாயில் உள்ளவர்கள் அறையில் பகவான் நாமத்தை பரப்பிடும் சூழ்நிலையே முக்கியம் ஆகும். இறக்கும் தருவாயில் உள்ளவர் அருகே கூடி உள்ளவர்கள், தத்தம் வாய் வழியே மட்டுமே நாமாவளியை ஓத வேண்டும் அல்லது பாடிட வேண்டும் என எந்த சாஸ்திரத்திலும் கூறப்படவில்லை. அதற்கு விஞ்ஞான ரீதியிலான காரணமும் கிடையாது. மனிதர்கள் வாய் வழியே ஓதுவதற்கு இணையாக பகவானின் நாமகரணத்தை எந்த விதத்திலாவது அந்த இடத்தில் சூழ வைப்பதே முக்கியம் ஆகும்.
13) எதற்காக தெய்வீக பாராயணங்களை ஓத வேண்டும் என்றால் அந்த இடத்தின் சூழ்நிலையை முதலில் தெய்வீகத் தன்மைக் கொண்டதாக மாற்ற வேண்டும் என்பதே. சாதாரணமாகவே பல்வேறு தன்மைகளைக் கொண்ட நல்ல மற்றும் தீய கணங்கள் வான் வெளியில் அங்காங்கே சுற்றிக் கொண்டு உள்ளன. இவ்வாறு வான் வெளியில் சுற்றிக் கொண்டு இருக்கும் தீய கணங்கள் மரணம் அடையும் தறுவாயில் உள்ளவர் அல்லது மரணம் அடைந்தவர் வீட்டின் மேல் பகுதிக்கு சென்று வெற்றிடத்தில் சுற்றியபடி இருக்கும். அவை நம் கண்களுக்கு புலப்படாது. வான் வெளியில் மற்றும் வீட்டின் உள்ளேயும் சுற்றிக் கொண்டு இருக்கும் மற்ற கணங்களை அவற்றினால் ஓரளவு கட்டுப்படுத்த முடியும். அதனால் சற்றே ஏமார்ந்தால் இறந்தவரது ஆத்மா வெளியேறும்போது அதை தம் கட்டுப்பாட்டில் அந்த தீய கணங்களினால் இழுத்துக் கொண்டு சென்றுவிட முடியும். மரணம் அடைந்தவரது ஆத்மா அவரது உடலை விட்டு வெளியேறி மேலுலகில் உள்ள வஸுக்களிடம் கொண்டு சேர்க்கப்படும் முன்னால் அந்த ஆத்மாவை தம்முடையக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தீய கணங்கள் முயலும். உடலில் இருந்து வெளியேறும் ஆத்மாவை தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால், அந்த ஆத்மாக்களுக்கு செய்யப்படும் கர்மாக்களின் பயன் தனக்கும் கிடைக்கும், தமக்கும் நல்ல கதி கிடைக்கும் என அவை நம்புகின்றனவாம். சாதாரணமாக தீய கணங்களினால் மனிதர்கள் எவரையும் ஒன்றும் செய்ய முடியாது. அந்த சக்தி அவைகளுக்கு இல்லை. அதை போலவே அந்த தீய கணங்களினால் தெய்வீக மந்திர சக்தி ஒலிகளை தாங்க முடியாது. இது இயற்கை நியதி ஆகும்.
14) அதனால்தான் உரத்தக் குரலில் ஓதப்படும், அல்லது பாடப்படும் தெய்வீக மந்திர ஒலி இறக்கும் தருவாயில் உள்ளவர்களது வீட்டின் சூழ்நிலையை ஆக்கிரமித்தபடி இருக்கும்போது அந்த மந்திர உச்சாடனையின் சக்திகள் அங்கிருந்து தீய கணங்களை துரத்தி அடித்து விடும். மேலும் அந்த மந்திர உச்சாடனைகள் இறந்தவரது உடலில் இருந்து வெளியேறிய ஆத்மாவை சுற்றி உள்ள வெற்றிடத்தை ஆக்ரமித்துக் கொண்டு, ஆத்மாவினால் உலக பந்தத்தின் வேறு எதையும் யோசனை செய்ய இயலாதவாறு செய்து விடும். இப்படிப்பட்ட சூழ்நிலையை நாம் அமைத்துக் கொடுப்பதின் மூலம் மரணம் அடையும் நிலையில் உள்ளவர்கள் அல்லது மரணம் அடைந்து விட்டவர்களின் ஆத்மா தெய்வ நினைவோடு இருந்தபடி செல்லவும், அது வாழ்ந்திருந்த உடலுக்கு நல்ல கதி கிடைக்க வழிவகுத்து, அடுத்த ஜென்மத்தில் தான் யாராக பிறக்க வேண்டும் என எண்ணினார்களோ அவர்களாகவே பிறக்க உதவும் என்பதெல்லாம் புராணங்கள் மற்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள ஆன்மீக கூற்றுக்கள் ஆகும்.
15) மரண நிலையில் இருந்தவர் மரணமும் அடைந்து விட்டதும் அவர் உடலில் இருந்து பிராணன் அதாவது ஆத்மா வெளியேறி அந்த உடலின் மேல் பகுதியில் சுற்றிக் கொண்டே இருக்கும். ஆகவே மரணம் அடைந்தவர் உடலை தர்பைப் புல்லைப் பரப்பிய தரையில் உடலின் தலைப் பகுதியை தெற்கு நோக்கி இருக்குமாறு படுக்க வைத்து, இறந்தவரின் ஆன்மா இறைவனை அடைய வேண்டும் என்பதற்காகவும், பித்ரு லோகத்தில் உள்ள அவர்களுக்கு முன்னர் இறந்து விட்ட ஏழு தலைமுறையினரின் குடும்பத்தினருடன் சேர்ந்து சாந்தி அடைய வேண்டும் என்பதற்காகவும் சில சடங்குகளை செய்யத் துவக்க வேண்டும். தர்பை புல் மும்மூர்த்திகளின் அம்சம் என்றும் ஆகாயத்தில் தோன்றிய அந்த தர்பைப் புல்லின் அடிப் பகுதியில் பிரஹ்மாவும், நடுப்பகுதியில் திருமாலும், நுனியில் சிவபெருமானும் வசிப்பதாகவும் அதுவே பரப்பிரும்மனின் வடிவம் என்றும் புராண ஐதீகம் உண்டு என்பதினால் தர்பை உள்ள இடத்தில் இருந்து தீய சக்திகள் ஓடி விடும். இதனால்தான் இறந்தவரது உடலில் இருந்து வெளியேறிய ஆத்மாவை தீய சக்திகள் அணுக முடியாமல் இருக்க தர்பை மீது சவத்தை வைப்பார்கள்.
16) தென் பகுதியில்தான் யமதேவர் இருப்பதாகவும், அந்த பிராணனை அழைத்துக் கொண்டு செல்ல வந்துள்ளவரை நோக்கி காலை நீட்டி படுக்க வைத்து அவரை அவமதிக்கக் கூடாது என்பதினால் இறந்தவருடைய தலையை தெற்கு நோக்கி படுக்க வைப்பது ஐதீகம் ஆகும். பிணத்தின் தலையை தென் பகுதியை நோக்கி வைப்பதின் மூலம் இறந்து கிடப்பவர் உடலில் அதுவரை குடி இருந்த ஆத்மாவை அழைத்துக் கொண்டு போக வந்து உள்ள யமதர்மனை அந்த சடலம் சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பதாகவும் ஐதீகம் உண்டு . தென் பகுதியில் தலையை வைத்து உடலைக் கிடத்துவதற்கு விஞ்ஞான ரீதியான இன்னொரு காரணமும் உள்ளது. தென் பகுதியில் காந்த சக்தி அதிகமாக உள்ளதினால் உடலில் இருந்து வெளியேறும் ஆத்மா எளிதில் உடலில் இருந்து பிரிந்து வெளியேறிச் செல்ல தென் திசை உதவுகிறது.
17) இந்து மதத்தின் முக்கியமான நூல்கள் ரிக்வேதம், ‘இறந்தவர் உடலில் இருந்து வெளியேறிச் செல்லும் ஆத்மாவானது தன் பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் இந்த பிரபஞ்சத்தில் தான் தோன்றக் காரணமான பரமாத்மாவுடன் மீண்டும் கலந்து விடுகிறது’ என்று கூறுகிறது. ‘ஜீவாத்மா என்பதும் பரபிரம்மன் என்பதும் ஒன்றுதான், வேறல்ல என்றும் அனைத்து உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஜீவாத்மா விளங்குகின்றது’ என்று அத்வைதம் கூறுகிறது. அத்வைத்யத்தை இயற்றியவர் ஸ்ரீ ஆதி சங்கரர். ஒருவர் இறக்கும் போது ஆன்மாவானது உடம்பில் உள்ள பத்து வாசல்களில் ஏதாவது ஒரு வாசல் மூலம் வெளியேறுவதாகவும் இறந்தவுடன் அந்த வாசல் பகுதி சற்று ஈரப்பதமாக காணப்படும் என்றும் அதன் மூலம் ஆத்மா வெளியேறிய பாதையை அனுபவஸ்தர்களினால் உணர முடியும் என்றும் கூறுகின்றார்கள்.
18) பிறப்பெடுத்து விட்ட எந்த ஒரு ஆத்மாவிற்கும் பிறப்பும் இறப்பும் ஒரு சக்கரம் போல அமைகின்றது. அவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜனன மரண காலம்வரை அவை ஒரு உடலில் வாழ்கின்றன. அது முடிந்தபின் வெவேறு பிறப்புகளை பல்வேறு நிலைகளில் எடுக்கின்றன. மரணத்தை பற்றி பகவத்கீதை ‘எப்படி ஒருவன் அழுக்கடைந்த தனது துணிகளை மாற்றிக் கொள்கிறானோ, அப்படித்தான் ஒருவனது உடலில் உள்ள ஆத்மாவும் அந்தந்த உடலில் தங்க வேண்டிய காலம் முடிவடைந்ததும், அழிக்க வேண்டிய அந்த உடலில் இருந்து வெளியேறி இன்னொரு உடலில் குடி கொள்ளும். ஆத்மாவை எந்த ஒரு ஆயுதத்தாலும் வெட்ட முடியாது, எரிக்க முடியாது, தண்ணீர் விட்டு துவைக்கவோ, அதற்குப் பின்னர் உலர வைக்கவோ முடியாது என்பதின் காரணம் அந்த ஆத்மா கண்ணுக்கு தெரியாதவன், அது யார் என்பதை சிந்தித்தும் பார்க்க முடியாது’ என்று கூறுகின்றது. பிரகதாரண்யக உபநிடதம் ஜீவாத்மாவைப் பற்றிக் குறிப்பிடுகையில் அது ‘பார்க்கப்படாமல் பார்க்கும், கேட்கப்படாமல் கேட்கும், நினைக்கப்படாமல் நினைக்கும், அறியப்படாமல் அறியும். அது தான் உனது ஆன்மா, ஒருவனது உடலுக்குள் உள்ளுறைபவன், அழியாதவன் ஆன்மா’ என்பதாக கூறுகின்றது. அதனால் இத்தனை சுதந்திரமான ஆத்மா ஒருவர் உடலை விட்டு வெளியேறும்போது மற்றவர் துக்கப்பட கூடாது. மாறாக, அது நல்ல முறையில் அதன் அடுத்த பயணத்தை தொடர வேண்டும் என்பதற்காக, அதற்கான கிரியைகளை முன்னோர்கள் கூறி உள்ள முறையில் உணர்ச்சிபூர்வமாக செய்ய வேண்டும் என பண்டிதர்கள் கூறுகின்றார்கள். இங்கு ஒன்றை முக்கியமாக கூற வேண்டும். ஆத்மாவை ஆன்மா, ஆத்மா, ஜீவாத்மா என்ற பல்வேறு பெயர்களில் பல நூல்கள் குறிப்பிட்டு இருந்தாலும், அவை அனைத்துமே ஒருவரது உடலுக்குள் குடி உள்ள ஜீவனையே குறிப்பிடுகின்றன.
19) மானிட பிறப்பெடுத்து வந்த ஆத்மாக்கள் இரண்டு சூழ்நிலைகளில் -மனதாலும், செயல்கள் மூலமும் பாவ காரியங்களை செய்கின்றன. செய்வது தவறு என்பதை உணர்ந்தாலும் அவற்றை அகங்காரத்தினால் செய்து விடும். இரண்டாவது, சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக தாம் செய்வது பாபச் செயல் என்பதை அறியாமலேயே அந்த பாவத் செயலில் ஈடுபட்டு கர்மாக்களை பெறும். இந்த இரு நிலைகளில் அறிந்தே செய்யப்பட்ட பாவ வினைகளுக்கு தண்டனையை அந்த ஆன்மா அனுபவித்தே ஆக வேண்டும். அறியாமல் செய்து விட்ட பாவ வினைகள் மரணம் அடைந்தவர்களது வாரிசுகள் அவருக்காக செய்யும் மரணச் சடங்குகள் அல்லது கிரியைகள் மூலம் நிவர்த்தியாகின்றன அல்லது குறைந்து போகின்றன என்பதாக ஆகம நூல்கள் கூறுகின்றன. இதனால்தான் மரணம் அடைந்து விட்டவர்களுக்கு சில இறுதிக் கிரியைகளை செய்ய வேண்டும் என்பது நியதி. யாராகிலும் கர்மாக்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது இறைவனின் நியதி என்பதினால், செய்யப்படும் கிரியைகள் மூலம் அந்த ஆத்மாக்கள் மன சாந்தி பெற்று எதையும் எதிர்கொள்ளும் மன நிலையில் இயற்கையோடு வாழத் துவங்கும்.
20) உடலுக்கு செய்யும் இறுதிக் கிரியைகள் மூலம் ஆன்மாவானது அந்த உடலைத் தாங்கி நின்ற காலத்தில் அறியாமல் செய்த தீவினைகள் நீங்கப் பெற்று சாந்தி அடைவதாக ஐதீகம். கிரியைகள் இரண்டு வகைப்படும். ஒன்று சுபகிரியை மற்றது அபரக்கிரியை. இறந்த பின் ஒருவருக்கு செய்யப்படும் சடங்குகள் (இறுதிக் காரியங்கள்) அனைத்துமே அபரக்கிரியை என அழைக்கப்படுகின்றது.
21) இறந்தவர்களது இறுதிக் கிரியைகளை யார் செய்ய வேண்டும் என்பதற்கு சில விதி முறைகள் உள்ளன. மரணம் அடைந்து விட்டவரின் நெருங்கிய இரத்த உறவினர்கள் மட்டுமே இறுதிக் கிரியைகளை செய்ய பாத்தியத்தை (உரிமை) கொண்டவர்கள். ஒரு குடும்பத்தில் மரணம் அடைந்து விட்டவர் குடும்பத்தின் தலைவரான தந்தை என்றால் அவருடைய மூத்த மகனும், மூத்த மகனும் மரணம் அடைந்து இருந்தால், அவருக்கு அடுத்த சகோதரரும் தந்தைக்கு சடங்குகளை செய்ய உரிமைப்பட்டவர்கள். மரணம் அடைந்து விட்டவர் தாயார் எனில் அவருடைய இளைய மகனும், அவர் மரணம் அடைந்து இருந்தால் அவருக்கு அடுத்த மூத்த சகோதரர் அல்லது அடுத்த இளைய சகோதரர் இறுதிக் கடன்களை செய்வதில் முதல் உரிமை பெற்றவர்கள். இறந்துவிட்டது குடும்பத்தில் உள்ள திருமணம் ஆகாத மகன்கள் அல்லது திருமணம் ஆகாத மகள்கள் என்றால் அவர்களது தந்தைதான் சடங்குகளை செய்ய வேண்டும். தந்தை இல்லை என்றால் மூத்த சகோதரர் சடங்குகளை செய்ய வேண்டும்.
- இறந்து போனவர் ஆணாக இருந்தால் வெளி நாட்டில் அல்லது வெளியூரில் உள்ள மூத்த மகனும், தாயாராக இருந்தால் வெளி நாட்டில் அல்லது வெளியூரில் உள்ள இளைய மகனும் வந்துதான் இறுதிக்கு காரியம் செய்யவேண்டும் என்ற தவறான எண்ணம் தற்காலத்தில் உள்ளது. ஆனால் அவர்களால் பத்து மணி நேரத்துக்குள் வர முடியாவிடில் யார் யார் காரியங்களை செய்ய அருகதை உள்ளவர்கள் என்பதற்கு ஒரு பட்டியலையே சாஸ்திரங்கள் கூறி உள்ளன. இந்த வரிசைப் பட்டியலை வைத்யனாத தீட்ஷித்தியம் புத்தகத்தில் காணலாம். வரிசை கிரமத்தில் ஒளரச புத்திரன் அதாவது மூத்தவன் என்பது முதல் , மகனின் மகன், பேரனின் மகன், தத்து பிள்ளை, தத்து பிள்ளையின் மகன், தத்து பிள்ளையின் பேரன், சொத்தை அடைய உள்ள பெண் வயிற்றுப பேரன், மாப்பிள்ளை, யாருமே இல்லை என்றால் மனைவி, சக்காளத்தியின் மகன், இளைய சகோதரன், என நீண்டு சென்று நண்பர்கள் மற்றும் வீட்டில் வேலை செய்யும் பிராமண வேலைக்காரன் வரை பட்டியல் நீளுகிறது. அதை போலவேதான் திருமணம் ஆன பெண்ணுக்கும் தகனம் செய்பவர்கள் பட்டியல் உள்ளது.
- தன் பெற்றோர்களின் விருப்பமில்லாமல் அவர்களுக்கு மன வேதனையை அளித்து, தனக்கு பிடித்தவளுடன் வாழ்ந்து கொண்டு ஒரு புதல்வனையும் பெற்று விட்ட மகனுக்கு அவனுடைய பெற்றோர்களுக்கு கர்ம காரியங்களை செய்யும் உரிமை கிடையாது என்பதாக கருட புராணம் கூறுகின்றது. அதையே சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன.
- இறந்தவர்களுக்கு கர்மங்களை செய்யும் தகுதி இறந்தவருக்கு பிறந்த மகன்களுக்கு மட்டுமே உள்ளது. ஒருவேளை மரணம் அடைந்தவர்களுக்கு மகன்கள் புத்திரர்கள் எவரும் இல்லாமல் இருந்தால் மரணம் அடைந்தவர்களின் உடன் பிறந்த மூத்த சகோதரன் அல்லது இளைய சகோதரன் அல்லது அவர்களின் புதல்வர்கள் கர்மாக்களை செய்யலாம். ஒருவேளை இறந்தவர்களுக்கு உடன் பிறந்த சகோதரர்களும் இல்லாத பட்சத்தில் மரணம் அடைந்தவரது மனைவியின் கையால் தர்ப்பைப் புல்லை வாங்கி பங்காளி உறவினர்கள் கர்மாவை செய்யலாம். ஒருவேளை மரணம் அடைந்தவர்களுக்கு யாருமே இல்லாத அல்லது செய்ய மனம் இல்லாத உறவினர்கள் இருந்தால் கர்மாக்களை புரோகிதரே செய்து கொடுக்கலாம். அதை போலவேதான் மகன்கள் இல்லாத தாயார்கள் இறந்தால் அவர்களுக்கான கர்மங்களை அவர்களுடைய கணவர்களே செய்ய வேண்டும்.
- சில சந்தர்பங்களில் மகன்கள் யாருமே இல்லை எனில், மூத்த பெண்ணின் கணவரும் ஈமக் கிரியைகளை செய்யலாம். ஆனால் அவரது தந்தை உயிரோடு இருந்தால் அவராலும் அதை செய்ய முடியாது. அதற்கு சாஸ்திர விதிகள் இடம் தரவில்லை என்பதினால் தற்காலத்தில் சில வீடுகளில் அந்த வீட்டின் பெண்கள் கூட கிரியைகளை செய்யத் துவங்கி உள்ளார்கள். ஒருவர் ஆண் சந்ததி இல்லாமல் இறந்து போனால் அவருடைய ஆண் உறவினர் ஒருவரை நியமித்தே இறுதிக் கிரியைகள் செய்யும் வழக்கம் உள்ளது. பெண்கள் இறுதிக் கிரியைகள் செய்யக் கூடாது என்று எந்த நூலிலும் குறிப்பிடவில்லை. ஆனால் சாஸ்திரப்படி பெண்கள் தங்களின் பெற்றோர்களுக்கு இறுதி சடங்கு, காரியம் செய்ய முழு உரிமை உண்டு. தர்ம சாஸ்திரத்திலும் ஆண் பெண் எனும் பாகுபாடு கூறப்படவில்லை. இறுதிக் கிரியைகளை பெண்கள் செய்யக் கூடாது என்பது ஒரு நடைமுறை வழக்கமாகவே இருந்து வந்துள்ளது என்பதினால் இதில் நாம் கருத்து கூற விரும்பவில்லை.
22) மரணம் அடைந்தவரின் ஆத்மா முதல் மூன்று நாள் தண்ணீரிலும், அதற்கு அடுத்த மூன்று நாட்களுக்கு அக்னியிலும், அதற்கு அடுத்த மூன்று நாட்கள் விண் வெளியிலும் வஸுக்களுடன் வசிக்கிறது. இந்த ஒன்பது நாட்களிலும் அது வசித்த வீட்டு வான் வெளியிலேயேதான் சுற்றிக் கொண்டே இருக்குமாம். பத்தாவது நாளில் அந்த ஆத்மா வசித்து வந்திருந்த வீட்டிற்குள் வருகின்றது என்பதினால்தான் பத்தாம் நாள் காரியம் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது என சாஸ்திரம் கூறுகிறது. அதன் பின் அங்கேயே வான் வெளியில் சுற்றித் திரியும் அந்த ஆத்மாவானது 11 மற்றும் 12 இரு தினங்களிலும் இறுதிக் கிரியைகளை செய்யும் வாரிசு கொடுக்கும் பிண்டத்தை உண்கிறது. அதன் பின்னர்தான் யம கிங்கரங்கள் கயிற்றால் இந்த ஜீவனை கட்டி இழுத்துச் செல்ல வருவார்கள்.
23) அப்போது அந்த ஆத்மா தன் வீட்டை பார்த்து கதறிய வண்ணம் நாள் ஒன்றுக்கு 247 காத தூரம் என பகலிலும் இரவிலும் நடந்தவாறு அந்த யம கிங்கரர்களுடன் யமபுரியை நோக்கி நடந்து செல்லத் துவங்குமாம். இவ்வாறு நடந்து செல்லும் ஜீவனுக்கு பசி தாகம் அதிகம் ஏற்படும். பசியும் தாகமும் அந்தந்த ஜீவன் சுமந்து கொண்டு செல்லும் கர்மாக்களின் அளவைப் பொறுத்தே அமைந்து இருக்கும்.
- ஜீவாத்மா மரணம் அடைந்திருந்த உடலில் இருந்தபோது செய்திருந்த கர்ம வினைகளுக்கு ஏற்ப அது அழைத்துச் செல்லப்படும் பாதைகள் எளிதில் கடந்து செல்லும் தன்மையிலும், நடந்து செல்லவே முடியாத நிலையிலும் இருக்குமாம். உருவமற்ற ஆத்மா எப்படி நடந்து செல்லும் என்பதாக ஒருவர் கேள்வி எழுப்பலாம். பூமியில் உள்ள பாதைகளை போலவேதான் வான்வெளியில் ஆத்மாக்களை அழைத்துச் செல்ல அவர்களால் நடக்க முடிந்த தேவ தன்மையிலான பாதைகள் இறைவனால் அமைக்கப்பட்டு உள்ளன. அவை நம் கண்களுக்கு தெரியாது. அவற்றில் மானிடர்களால் நடந்து செல்ல முடியாது, உருவமற்ற ஆத்மாக்களும் தேவ கணங்களாலும் மட்டுமே அவற்றில் பயணிக்க முடியும்.
- இப்படியான நிலையில் ஒருவரது உடலை விட்டுப் பிரிந்த ஜீவாத்மா தான் செய்தது பாபச் செயல் என்பதை அறியாமல் செய்திருந்த பாவங்களின் தாக்கத்தை குறைக்கவும், யமலோகம் செல்லும் வரையிலாவது கடுமையாக கடக்க வேண்டிய பாதையின் உக்கிரத்தை குறைத்து, அமைதியான மன நிலையில் அந்த ஜீவன்கள் பயணிக்க, அவர்களது வாரிசுகள் செய்யும் நியமங்களும் கர்மாக்களும் அவர்களுக்கு பெரிய அளவில் உதவுகின்றன. வாரிசுகள் கர்மாக்களையும், கிரியைகளையும், தானங்களையும் சிரத்தையோடு செய்தால் ஆற்றல் மிக்க மந்திர சக்தியின் ஈர்ப்பினால் யமதர்மராஜனின் மனம் இளகி அவரது கட்டளைக்கேற்ப யமகிங்கர்கள் தாம் அழைத்துச் செல்லும் ஜீவாத்மாக்களை எளிதில் செல்லக் கூடிய, மன அமைதி தரும் நல்ல பாதையில் அழைத்துச் செல்வார்களாம்.
- பசியோடு நடந்து செல்லும் ஜீவனுக்கு மாதத்தில் ஒரு நாள், அதாவது அந்த ஜீவன் இறந்த திதியன்று, ஓரிடத்தில் தங்க அனுமதி அளிக்கப்படும். அதனால்தான் ஒரு ஜீவன் இறந்த பின் ஒவ்வொரு மாதமும் அந்த ஜீவன் மரணம் அடைந்த திதியன்று அந்த ஜீவனின் பசியையும் தாகத்தையும் அடக்க மாதாந்திர திதி நடத்தப்பட்டு பிண்டம் போடப்படுகிறது. இவ்வாறு 12 மாதங்களும் வரக்கூடிய திதியன்று பிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க வேண்டும். இவ்வாறு ஒரு ஆண்டு காலம் நடந்து செல்லும் அந்த ஜீவன் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் யமபுரத்தை அடைகிறது. இதனால்தான் பயணிக்கும் ஆத்மா யமபுரிக்கு செல்வதற்கு எடுத்துக் கொள்ளும் ஓர் ஆண்டு காலமும் அந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு குதூகுலம், கொண்டாட்டம், சுபகாரியம் போன்றவை நடைபெறக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.
24) பெண்கள் சுமங்கலியாக இறப்பதை ஒரு பெரிய பாக்கியமாகவே கருதுகின்றனர். பூவோடும், பொட்டோடும் சுமங்கலியாக இறக்கும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. முன் காலங்களில் கர்ப்பவதி பெண் மரணம் அடைந்தால், வயிற்றில் இருக்கும் கருவை, தாயை எரிக்கும் முன்னர், தனியாக எடுத்து புதைத்து விடுகிறார்கள். அதை போலத்தான் குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டால் அல்லது இறந்தே பிறந்து விட்டாலும் அதை வீட்டு தோட்டத்தில் அல்லது நதிக் கரைகளில் எடுத்துச் சென்று யாருக்கும் தெரியாமல் புதைத்து விடுவார்கள். அதன் காரணம் குழந்தையின் மண்டையோடு சக்தி வாய்ந்தது. பிறக்காமல் இறந்த எந்த ஒரு உயிராக இருந்தாலும், அந்த உடலை தீ மூட்ட கூடாது, புதைக்க வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. சிறு குழந்தைகளின் மண்டையோடு தாந்த்ரீகர்கள் கையில் கிடைத்து விட்டால் அதைக் கொண்டு அவர்களால் சில தவறான சக்திகளை பெற முடியும் என்பதால் குழந்தைகளை யாருக்கும் தெரியாமல்தான் புதைத்தோ அல்லது தகனமோ செய்து விடுவார்கள். தற்காலத்தில் இப்படிப்பட்ட பழக்கங்கள் கைவிடப்பட்டு விட்டது என்பதாக கூறுகின்றார்கள். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் குழந்தைகளை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று தகனமோ அல்லது புதைப்பதோ இல்லை. கருட புராணம் 2.2.8 பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்கள் பிசாசுகளாக மாறி விடுவார்கள் என்பதாக கூறப்பட்டு உள்ளது.
- ஒரு மனிதனின் உயிர் பிரிந்த பின்பு, அந்த உடல் மண்ணில் புதைக்கப்பட்டோ அல்லது நெருப்பில் எரித்துச் சாம்பலாக்கப்பட்டோ அழிக்கப்படுகிறது. ஒருவன் வாழ்க்கையின் இறுதிச் சடங்கு என்பது அவன் இறந்து போனவுடன் அவனின் உடலுக்கு அவனின் சொந்த பந்தங்களும் நண்பர்களும் மேற்கொள்ளும் முக்கிய சடங்காகும். இது அவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மேற்கொள்ளப்படுகின்றது என்பதினால் துர்மரணத்தை அடைந்தாலும், தற்கொலை, கொலை செய்யப்பட்டவர் மற்றும் விபத்துக்களில் பலியானவர்கள் என எவராக இருந்தாலும் பொதுவாக அவர்களை தகனம் செய்ய வேண்டும் என்பதே சரியான சாஸ்திர முறை என பண்டிதர்கள் கூறுகின்றார்கள். சில சமய கோட்பாடுகளின்படி அப்படி மரணம் அடைந்தவர்களது பிரேதங்களை புதைத்து விடுவார்கள். குழந்தைகளின் உடல் புதைக்கப்பட வேண்டும் எனவும் வாலிப வயதை தாண்டிய வர்களின் (18 வயதிற்கு மேல்) உடல் தகனம் செய்யப்பட வேண்டும் எனவும் ரிக்வேதம் (10:16) அறிவுரைக்கின்றது. ஆனாலும் அப்படி மரணம் அடைந்தவர்களுக்கு செய்ய வேண்டிய நியமத்தை அவரவர் குல வழக்கத்தின்படி கடைபிடிக்க அந்தந்த வீட்டு பண்டிதர்கள் கூறுவார்கள். உயிர் பிரிந்த உடல் அழிக்கப்படுவதற்கு முன்பாக சில சடங்குகள் (நடைமுறைகள்) செய்யப்படுகின்றன. இதற்கு இறுதிச் சடங்கு என்று பெயர். இவை பெரும்பான்மையாக அவர்கள் சார்ந்துள்ள சமயங்களின் கொள்கைகளுக்கும் அவற்றின் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதாக உள்ளது.