எழுதியவர்: சாந்திப்பிரியா 

பாகம் :1

‘வேல் மாறல்’

முருகப் பெருமானின் வேலின் மகிமைகள்

முருகப் பெருமானின் வேலின் மகிமையை அறிந்து கொள்ளும் முன்னர் முருகப் பெருமானின் அவதாரத்தை அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.  அது என்ன? சனத்குமார   முனிவர் என்பவர் பிரும்மாவின் மன எண்ணத்தில் இருந்து தோன்றியவர். அவர் ஒரு  பிரம்ம ஞானி, உள்ளும் புறமும் எல்லாம் ஒன்று என்று உணர்ந்திருந்தவர். வெளி வந்தது முதலே  அவர்  ஆழ்ந்த தவத்திலேயே இருந்தார். இப்படிப்பட்டவருக்கு விசித்திரமாக ஒரு நாள் ஒரு கனவு வந்தது. அந்த கனவில்  தேவர்களும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் சனத்குமாரர் தேவ சேனாபதியாக இருந்தவாறு  யுத்தம் செய்து, அசுரர்களை எல்லாம் அழிக்கிறார். அந்த கனவைக் பார்த்துக் கொண்டிருந்த சனத்குமாரர்  விழித்தெழுந்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தகப்பனாரான பிரம்மாவிடம் போய் தனது  கனவைக் குறித்து கூறி அதற்கான  அர்த்தம் என்ன என்று கேட்டார்.

அதைக் கேட்ட பிரும்மா அவரிடம் கூறினார்  ‘மகனே  நீ பூர்வ ஜென்மத்தில்  வேத அத்யயனம் (அத்யயனம் என்றால் கற்றுக் கொள்வது, படிப்பது, பலமுறை சொல்லிப் பார்ப்பது என்பது பொருள். வேதத்தை நாம் குருவிடம் இருந்து செவி வழியே  கேட்டு, மறுபடியும் மறுபடியும் அதை பலமுறை சொல்லிப் பார்த்து கற்றுக் கொள்வது) செய்தாய். அதில் அசுரர்களுடன் யுத்தம் என்று வருவது உன் மனதில் ஆழப் பதிந்து விட்டது. வேதங்கள் ஓதி வேள்வி வளர்த்து தேவர்களை மகிழ்விக்கும் போது அதனால் மனம் மகிழ்ந்து அருள் புரிபவர்கள்  தேவர்கள். அப்படிப்பட்டவர்களை அழிக்க நினைக்கிறவர்கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் ஆழ்ந்த பிடிமானம் இருந்ததினால்,  அசுரர்களையெல்லாம் நாமே அழித்து விட மாட்டோமா?’ என்று பூர்வ ஜன்மத்தில் நினைத்தாய். அந்த நினைப்புத்தான் இந்த ஜென்மாவிலும் தொடர்ந்து கனவாக  வெளியாகி உள்ளது.  உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது உண்மையில்  நடந்து விடும். அதனால் நீ  ஒருநாள் தேவ சேனாதிபதியாக பொறுப்பு ஏற்றுக் கொண்டு  அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிறாய். இந்த ஜன்மாவில் நீ  ‘தேவராவது, அசுரராவது, எல்லாம் ஒரே பிரம்மம்’ என்று இருப்பதால், இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப் போகிறாய்’ என்றார்.

சூரபத்மனின் கொடுமைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க ஒரு மகனை பிறப்பிக்க வேண்டும் என்பது விதியாக இருந்ததினால் அதை நிறைவேற்றும் சமயம் வந்து விட்டதை உணர்ந்து கொண்ட சிவபெருமான் தனது மனைவி பார்வதியுடன் தவத்தில் இருந்த சனத்குமாரரின்  முன் தோன்றி அவரை தனது குழந்தையாக பிறக்குமாறு கூறினார்.  அதை ஏற்றுக் கொண்ட சனத்குமாரர் ‘சரி உனக்கு மகனாக பிறக்கின்றேன்’ என்று வாக்கு கொடுத்தார். அவர் பிரும்ம ரிஷி என்பதினால்  யோனி மூலம் பிறப்பு தொடர்பான பாவங்களைத் தவிர்ப்பதற்காக பார்வதி தேவியின் மூலம்  பிறக்க வேண்டாம் என முடிவு செய்து ‘உனக்கு மகனாக பிறக்கின்றேன்’ என சிவபெருமானிடம் வாக்கு கொடுத்தவர்  பார்வதியையும் சேர்த்து ‘உங்களுக்கு மகனாக பிறக்கின்றேன்’  என வாக்கு கொடுக்கவில்லை. ஆகவே பார்வதி இன்றி எப்படி சிவபெருமானுக்கு மகனாக பிறப்பது?

அதனால்தான் சிவபெருமான் சனத்குமாரனை தனது மனதில் ஏந்திக் கொண்டு  தனது நெற்றி பொட்டில் இருந்து ஆறு தீப்பொறிகளை  வெளியிட்டு அக்னி தேவனிடம் (நெருப்புக் கடவுள்) அவற்றைக்  கொடுக்க, அவர் சூடு தாங்காமல் அதை  பூமாதேவியிடம் (பூமி தெய்வம்) கொடுத்து விட,  அவளால் அந்த சூட்டை கையில் வைத்துக் கொள்ள முடியாமல் போய், கங்கா (பார்வதி மாதாவின் சகோதரி)  மாதாவிடம் கொடுக்க,  அதைப் பெற்றுக் கொண்ட பூமா தேவி  அதை வெந்நீராக மாற்றி புதருக்குள் தள்ளி விட்டாள். அதையே ஆறு சப்த கன்னிகைகள் எடுத்து பாலூட்ட, அவர்களிடம் இருந்து  அந்த ஆறு குழந்தைகளையும் பெற்றுக் கொண்ட பார்வதி தேவி  அவர்களை அணைத்துக் கொள்ள, அந்த ஆறு குழந்தைகளும், ஆறு முகம் கொண்ட ஒரே  குழந்தையாக்கி விட்டார்கள். இப்படியாக சனத்குமாரரே இன்னொரு பிறவி எடுத்து முருகனாக  அவதரித்தார் என்பதாக புராணக் கதை உள்ளது. சனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்று சந்தோக்ய உபநிஷத்திலும் சொல்லப்பட்டு உள்ளதாம்.

முருகப் பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் ஆயுதங்களில் முதன்மையானது வேலாயுதம் என்பது ஆகும்.  தீயவர்களை, தீமைகளை அழிப்பது ‘வேலின்’ செயல் என்பதினால்தான் ‘வேல்-ஐ’ ஏந்தியவர்களுக்கு வெற்றியைத் தரும் வெற்றி ‘வேல்’ என்ற பெயரை அடைந்து உள்ளது. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ‘வேல்’-ஐ  முருகப் பெருமானுக்கு தந்தவர் அவருடைய தாயாரான பார்வதி தேவி  என்பதினால் அந்த ‘வேல்’-ஐ  ஆராதிப்பவர்களுக்கு அவர்களுக்கு வெளியில் உள்ள  பகை (இங்கு வெளிப் பகை என்பது தீய கர்மாக்களினால் ஏற்படும்  பலன்களைக் குறிக்கின்றது) மட்டும் அல்லாமல் உள்ளத்துக்குள்ளேயே உள்ள பகையையும் (இங்கு பகை என்பது தீய எண்ணங்கள் என்பதைக் குறிக்கும்)  அழிகிறது என்பது தத்துவம் ஆகும்.

‘வேலின்’ தன்மை  சிவபெருமானைப் போலவே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐம்பெரும் செயல்களையும் ஆற்றவல்லது. அதனால்தான் அப்படிப்பட்ட ஆற்றல் வாய்ந்த ‘வேல்-ஐ’,  தீய சக்திகளான அசுரர்களை  யுத்தத்தில் அழித்து வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சக்தி தேவி முருகப் பெருமானுக்கு கொடுத்தாள். இங்கு தீய சக்தி என்பது  அனைத்து விதமான தீய  எண்ணங்கள், அறியாமை, உடல் உபாதைகள், தீய கர்ம வினைகள் போன்றவற்றைக் குறிக்கின்றது.

மனிதனின் வாழ்வில் உள்ள ஆணவம், வினைப் பலன், மாயை எனப்படும் மூன்றைத்தான் மும்மலங்கள் எனக் கூறி, அவற்றையே  தத்துவ ரீதியாக அசுரர்கள் அல்லது அரக்கர்கள் என்பதாக குறிப்பிடுகின்றார்கள்.  நம்முடைய மனதில்  நல்ல எண்ணங்களை வளர்த்து, அசுரத்தனமான தீய எண்ணங்களை அழிப்பது சக்தி தேவியின் ‘வேலின்’ தன்மை ஆகும். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ‘வேலின்’ தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டி அருணகிரிநாதர் ‘வேலின்’ சக்திக்கு  தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார். அதையே வள்ளி மலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள்   ‘வேல் மாறல்’ எனும் பாடலாக தொகுத்து நமக்கு வழங்கி உள்ளார். அதில்  ‘வேல்’ என்பது முருகப் பெருமானின் கையில் உள்ள ‘வேல்-ஐ’ மட்டும் அல்ல முருகப் பெருமானையே குறிக்கின்றது .

மாறல் என்பது மாற்றம் என்ற பொருளை இங்கு குறிக்கின்றது. அதாவது முருகப் பெருமானின் கையில் உள்ள ‘வேல்’-ஐ  வணங்கி துதிப்பதின் மூலம் நமது வாழ்க்கையில்  ஏற்படும் துன்பங்களை விலக்கிக் கொண்டு வளமான மாற்றத்தை  பெறலாம் என்பதை   குறிக்கும் வகையில்தான் அதன் பெயரை ‘வேல் மாறல்’ என்பதாக கூறி உள்ளார்.

முருகப் பெருமான் மயிலின் மீது ஏறி அமர்ந்தவாறும், கையில்   ‘வேல்-ஐ’ ஏந்திக் கொண்டுள்ள காட்சியிலும் நம் முன் தோன்றுகிறார்.  முருகப் பெருமானின் ஞானம் மற்றும் தெய்வீகத்தை வெளிப்படுத்தும் மயில் ஆன்மீக அழகைக் குறிக்கிறது, ‘வேல்’ என்பது எதிர்மறை மற்றும் அறியாமையை அழிக்கும் தெய்வீக ஆயுதத்தைக் குறிக்கிறது.

இதனால்தான் கையில் வேலை ஏந்தியபடி காட்சி அளிக்கும் முருகப் பெருமானை  வழிபடும் போது ஞானம் கிடைக்கின்றது, பிராரப்த வினைகளின் தீய  பலன்கள் அழிகின்றன, மனதில் வைராக்கியம், துணிவு, சுய நம்பிக்கை, தைரியம் மற்றும் அறிவாற்றல்கள் போன்றவை அதிகரிக்கின்றன. கிரஹ தோஷங்கள் அழிகின்றன. எனவே முருகப் பெருமானையும் அவருடைய ஆயுதமான ‘ வேல்-ஐ’ யும்’  வேல் மாறல்  எனும் பாடல் மூலம் துதிக்கையில்  நமது துயரங்களும், துன்பங்களும் மற்றும் நம்மை பற்றிக் கொண்டுள்ள தீராத நோய்களும் அழிகின்றன என்பது நம்பிக்கையாகும்.

அருணகிரிநாத ஸ்வாமிகள்   25  திரு வகுப்பு பாடல்களை  பாடி அருளியுள்ளார்.  இந்த 25 திருவகுப்புகளில்  மூன்றாவது  வகுப்புதான்   வேல் மாறல்  திரு வகுப்பு என்பது ஆகும்.  அந்த மூன்றாவது  வகுப்பு பாடல்களைதான்  ஸ்ரீ வள்ளி மலை சச்சிதானந்த ஸ்வாமிகள்  தொகுத்து நமக்கு அருளி இருக்கின்றார். ‘திரு வேல் வகுப்பு’  என்றால் முருகப் பெருமானின் கையில் ஏந்தி உள்ள ‘சக்தி வேலின் மேன்மையையும் பராக்கிரமத்தையும்  எடுத்துரைக்கும் பாடம்’ என்பதாகவே பொருள் கொள்ள வேண்டும். வேல் மாறல்  மகா மந்திர  பாராயணத்தில்  மொத்தம் பதினாறு பாடல்கள் உள்ளன.

அருணகிரிநாத ஸ்வாமிகள்  அருளிச் செய்துள்ள ‘வேல் வகுப்பு’ உடல் நோய், மன நோய், உயிர் நோய் ஆகிய மூவகைப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகி, அவற்றை உடனே தீர்த்தருளவல்ல ஆற்றல் படைத்தது.  எல்லாவிதமான  ஆபத்தையும் நீக்கி அதை பாராயணம் செய்பவர்களுக்கு உயிர்த் துணையாய் நிற்கின்றது, பேய், பிசாசு மற்றும் பூதம் போன்ற  துஷ்டப் பகைகளையும், யமனையும் விரட்டவல்லது என்பதாக நம்புகின்றார்கள். ‘சக்தி வேலின் மேன்மையையும் பராக்கிரமத்தையும் எடுத்துரைக்கும் பாடம்’ என்பதாகவே மந்திர சக்தி வாய்ந்த வேல் மாறல் எனும் மஹா மந்திரம் பார்க்கப்படுவதினால்  அதை பாராயணம் செய்யும் முன் முருகப் பெருமானின் வேல் மாறல் எனும் மந்திர சக்தி வாய்ந்த  பாடல்களின்  முழுமையான அர்த்தம் என்ன என்பதை புரிந்து கொண்டு பாராயணம் செய்தால்தான்  அதன் முழு பலனையும் முருகப் பெருமானின் அருளால்  பெற முடியும்.

அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த வேல் மாறலை பக்தி, சிரத்தை, மன கட்டுப்பாடோடு இருந்தவாறு  குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்து வந்தால் நமது நியாயமான வேண்டுகோட்களுக்கு நிச்சயமாக பலன் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும்.

இந்த பாராயணத்தில் கூறப்பட்டு உள்ள பாடலின் முதல் பாடலை  20  முறையும், அதே பாடலை  இறுதியில் இருபது முறையும் படிக்க வேண்டும். அதே பாடல் இடை இடையேயும் கூறப்பட்டு உள்ளது. அதே போல குறிப்பிட்ட சில பாடல்கள் அங்கங்கே மீண்டும் மீண்டும் பாடப்பட்டு உள்ளது.  இதுவே பொதுவாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாராயண முறை என்பதாக  கூறப்படுகின்றது என்பதினால் இதை நம்பிக்கையோடு பாராயணம் செய்வது அவசியம் ஆகும்.

அடுத்து தொடர்வது ………..பாகம் – 2