நாம் ஏன் வீட்டில் எண்ணை விளக்கு ஏற்றுகின்றோம் ? எந்த ஒரு விளக்கின் ஒளியும் இருளை அகற்றுகின்றது, வெளிச்சத்தைத் தருகின்றது. அதை போலவேதான் வீட்டில் பூஜை அறையில் ஏற்றும் விளக்கும் ஒருவர் மனதில் உள்ள அறியாமை எனும் இருட்டை அகற்றி அந்த வீட்டில் உள்ளவர்களது வாழ்க்கையில் ஏற்படும் துயரம் மற்றும் துன்பங்கள் எனும் இருட்டு பகுதி அகல வழி வகுக்கின்றது. முதலில் விளக்கு ஏற்றுவது எப்படி துவங்கியது, அதன் பயன், தத்துவம் என்ன எனும் அனைத்தையும் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
பிரும்மன் இந்த அகண்டத்தைப் படைத்தபோது வாழ்வின் ஆதாரத்துக்காக பஞ்ச (ஐந்து) பூத சக்திகளான நீர், நெருப்பு, நிலம், ஆகாயம் மற்றும் வாயு என்பவற்றைப் படைத்தார். நீரும், நிலமும் கீழ் இருக்க ஆகாயம் மற்றும் வாயு மேலே இருக்க, நெருப்பு இரு இடங்களிலும் இருக்க அவை அனைத்தையும் இணைக்கும் ஒரே சக்திகளாக சூரியன் மற்றும் சந்திரனின் ஒளிக் கதிர்கள் அமைந்து இருந்தன.
பிரம்மனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர் இனங்களைத் தவிர கண்களுக்குத் தெரியாத ஜீவ சக்திகளையும் படைக்க அவை தம்மை சிறு சக்தி வாய்ந்த அணுக்களாக மாற்றிக் கொண்டு சந்திர சூரிய ஒளி மூலம் பூமிக்கு சென்று அங்கு தமக்கு பிடித்த இடங்களில் வாழத் துவங்கின. அந்த ஜீவ சக்திகளில் தெய்வீக சக்தி அணுக்களும் இருந்தன. அனைத்துமே இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. நல்ல எண்ணங்களைத் தரும் தரும் ஜீவ சக்திகள் எனவும், தீய எண்ணங்களைக் கொண்ட ஜீவ சக்திகள் எனவும் பிரிக்கப்பட்டன. தீமை தரும் எதிர்மறை சக்திகள் (Negative) இருட்டிலே வாழ ஆசை கொண்டன. நன்மை தரும் ஜீவசக்திகள் எனப்பட்ட நேர்மறை சக்திகள் (Positive) வெளிச்சத்தில் வாழ்ந்தன. எங்கெல்லாம் நேர்மறை சக்திகள் அதிகம் இருந்தனவோ, அங்கெல்லாம் அமைதியும், நல்ல எண்ணங்களும் நிலவ, எங்கெல்லாம் எதிர்மறை சக்திகள் அதிகம் இருந்தனவோ, அங்கெல்லாம் இனம்புரியாத குழப்பங்களும் அமைதி இன்மையும் படர்ந்திருந்தன. அவற்றில் மூன்றாவதாக செயல் இன்றி இருந்த தெய்வீக சக்தி உயிர்களும் அடக்கம். அவை ஏன் படைக்கப்பட்டன?
நன்மை தரும் ஜீவசக்திகள் மனிதர்களின் எண்ணங்களில் நல்ல மனநிலையை உருவாக்க, தீய ஜீவசக்திகளோ எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் இருந்த மனிதர்களின் நல்ல எண்ணங்களை கெடுத்து தீய எண்ணங்கள் உருவாக முயன்று வந்தன. இந்த இரண்டு சக்திகளுக்கும் இடையே ஓயாமல் நடைபெறும் யுத்த பூமிதான் மனிதர்களின் இல்லங்கள் ஆகும். யாருடைய கை ஓங்கி இருந்ததோ அதற்கேற்ப அந்த இல்லங்களில் ஒற்றுமை, மன அமைதி மற்றும் மகிழ்ச்சியோ, துன்பங்களோ நிலவின. இப்படியாக ஒவ்வொரு இல்லங்களின் சூழ்நிலையிலும் அந்த ஜீவசக்திகள் நன்மை தரும் அணுக்களாகவும், தீமை தரும் அணுக்களாகவும் வாழ்ந்து வரலாயின. அவற்றின் இடையே எதன் ஆதிக்கம் அதிகமாகின்றதோ அந்த சூழ்நிலைக்கேற்ப அந்தந்த குடும்பங்களின் வாழ்க்கை முறையும் அமைந்து இருக்கும் என்பதை பிரும்மன் அடிப்படை தத்துவமாக வைத்தார்.
ஆமாம் இதற்கும் வீட்டில் எண்ணை விளக்கு ஏற்றுவதற்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும்? மேலே படியுங்கள், புரியும்.
பல்வேறு உயிரினங்கள், நேர்மறை மற்றும் எதிர்மறை ஜீவ சக்திகளுடன் அகண்டத்தைப் படைத்த பிரும்மன், மன மகிழ்ச்சி நிலவும் சூழ்நிலையை உருவாக்க, எதிர்மறை சக்திகளின் ஆதிக்கத்தை அடக்கி நேர்மறை சக்திகளுடைய ஆதிக்கத்தை அதிகரிக்க இன்னொரு உபாயத்தையும் செய்து வைத்து இருந்தார். இருட்டிலே வாழ்ந்துகொண்டு மனிதர்களின் வாழ்வில் இருட்டை ஏற்படுத்திக் கொண்டு இருந்த எதிர்மறை சக்திகளை துரத்தி அடித்து சாந்தமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றால் இருட்டை விலக்கும் வெறும் விளக்கு ஒளி மட்டும் போதாது, அதையும் மீறி அவற்றைத் துரத்த அதிக வலிமை நேர்மறை சக்திகளுக்கு தேவையாக இருந்தது.
அந்த மார்கத்தை தனியார் வீடுகளில் எப்படி ஏற்படுத்தித் தர இயலும்? அந்த ரகசியத்தை அவரே படைத்திருந்த ரிஷி, முனிவர்களுக்கு போதனை செய்து இருந்தார். அதில் எளிய வழியானது குறிப்பிட்ட எண்ணெய் மற்றும் விளக்குத் திரியின் உதவியோடு தோற்றுவிக்கப்படும் அசாதாரண சக்தி கொண்ட ஒரு குறிப்பிட்ட தன்மையிலான தெய்வீக ஒளி ஆகும். அந்த குறிப்பிட்ட தெய்வீக ஒளி அலை செயல்படாமல் இருந்த தெய்வீக சக்தி உயிர் அணுக்களை தட்டி எழுப்பும் வல்லமை படைத்தது. அவற்றின் அளவுகோல் என்ன என்பதே பிரும்ம ரகசியம். அந்த தன்மையை சாதாரண விளக்கு ஒளிகளால் தர இயலாது. வீடுகளின் வெற்றிடங்களில் உறங்கிய நிலையில் அமர்ந்து இருக்கும் மூன்றாவது தெய்வீக ஜீவஅணுக்கள் எழுப்பப்பட்டால் அவை நல்ல எண்ணங்களைக் கொண்ட அணுக்களுக்கு கூடுதல் பலம் தரும். தீய அணுக்களை எதிர்த்து யுத்தம் செய்து அவற்றை வெளியேற்ற இயலும். இதுதான் அந்த ரகசியம் ஆகும்.
ஒரு எண்ணெய் விளக்கை குறிப்பிட்ட திரி போட்டு ஏற்றுவதில் மூலம் அந்த தன்மையை எப்படி ஏற்படுத்தித் தர இயலும் என்ற கேள்வி எழலாம். எண்ணெய் விளக்கை ஒரு குறிப்பிட்ட திரியை வைத்து எரியவிடுவதின் மூலம் மட்டுமே தெய்வீக சக்திகளை தட்டி எழுப்பும் அலைகளை வெளிப்படுத்த முடியும் என்பதல்ல. அதுவே மூல இயக்கம் ஆகும். அதோடு இன்னொரு சக்தியும் சேர்ந்தால் மட்டுமே அந்த இயக்கம் முழுமை அடைய முடியும். அதுதான் அதில் அடங்கி உள்ள இன்னொரு ரகசியம். விளக்கை ஏற்றிய பின் நாம் தெய்வத்தை வேண்டிக் கொண்டு பிரார்த்திக்கும்போது அந்த எண்ணங்களும், மந்திரங்களும் ஒரு குறிப்பிட்ட அலைகளை நம் உடலில் இருந்து உருவாக்கி, அதை வெளியேற்ற, அந்த அலைகள் அந்த எண்ணெய் விளக்கின் ஒளியில் சங்கமிக்கின்றன. இப்படியாக குறிப்பிட்ட விளக்குத் திரி மற்றும் எண்ணை எனும் பொருட்களின் மூலம் வெளிப்படும் சிறிய தீயுடன் பிரார்த்தனைகளால் வெளிப்படும் எண்ண அலைகளுடன் சேர்ந்து கொண்டு நம் எண்ணங்களுக்கு விளங்காத வகையில் விளக்கு ஒளியின் வெப்பத் தன்மையை மாற்றி அமைத்து அதன் பின் வேறு ஒரு மென்மையான அதிர்வலையை உருவாக்கி அந்த தீயில் இருந்து வெளிப்படுத்தும். அந்த வெப்பத் தன்மை அசாதாரணமானது, அமைதியானது, நமக்கு விளங்காதது.
எண்ணெய் விளக்கின் தீப ஒளி அந்த குறிப்பிட்ட மூன்றாவது அதிர்வலைகளை வெளிப்படுத்தும்போது, அந்த அதிர்வலைகள் உறங்கி கொண்டு இருக்கும் தெய்வீக ஜீவசக்திகளை தட்டி எழுப்புகின்றன. தட்டி எழுப்பப்படும் தெய்வ ஜீவ சக்திகள், தீமைகளை தரும் உயிர் அணுக்களுடன் நடைபெறும் யுத்தத்தில் நன்மை தரும் அணுக்களுக்கு உதவி செய்து தீமை தரும் அணுக்களை விரட்டி அடிக்கின்றன. பிரம்மனிடம் இருந்து கற்றறிந்திருந்த இந்த ரகசியத்தை அந்த ரிஷிகளும், முனிவர்களும் உலக நன்மைகளுக்காக மெல்ல மெல்ல பரப்பினார்கள். இதனால்தான் வீடுகளில் விடியற்காலையும், மாலையிலும் எண்ணெய் விளக்கை ஏற்றி வைக்கும் பழக்கம் துவங்கியது. அப்படி செய்வதின் மூலம் நல்ல எண்ணங்களைத் தரும் ஜீவ சக்திகள் நிறைந்த இடமாக ஒரு இல்லத்தை மாற்றி அமைக்கலாம் என்பதை உணர வைத்தார்கள்.
அதனால்தான் அடிப்படை காரணங்களை விலாவாரியாக விளக்கி கூறாமல் ‘வீட்டிலே இரு வேளைகளிலும் எண்ணெய் விளக்கு ஏற்றி வைத்து இரண்டு வரிகளாவது ஸ்தோத்திரம் கூறு. அது சௌபாக்கியத்தை தரும்’ என்று பொதுவாக அறிவுறுத்துவார்கள். தீமைகளை தரவல்ல ஜீவ அணுக்கள் இருட்டிலேயே உலவிக் கொண்டு இருக்கும் என்பதினால் இருட்டை விலக்கும் ஒளியும் தேவை, தெய்வீக அணுக்களை தட்டி எழுப்பவல்ல அதிர்வுகளும் தேவை ஆகியது. இதன் வெளிப்பாடே வீட்டின் பூஜை அறையிலோ, பூஜை அறை இல்லாத வீட்டின் ஒரு இடத்திலோ விடிகாலை மற்றும் மாலை நேரத்தில் எண்ணெய் விளக்கு ஏற்றி வைத்து குறைந்தது இரண்டு நிமிடங்களாவது தெய்வத்தை பிரார்த்திக்கும் பழக்க வழக்கங்கள்.
எந்த வீடுகளில் தொடர்ந்து தினம் தினம் எண்ணெய் விளக்கு ஏற்றப்படுகின்றதோ, அங்கெல்லாம் குறிப்பிட்ட எண்ணெய் மற்றும் விளக்குத் திரியுடன் ஏற்றப்படும் விளக்கின் தீப ஒளியில் இருந்து வெளிப்படும் நன்மை தரும் அணுக்களுக்கு உதவிடும் தெய்வீக ஜீவசக்திகளை தட்டி எழுப்பும் அதிர்வலைகள் தொடர்ந்து வெளி வந்து கொண்டே இருக்கும். அப்போது தீமைகளை செய்யும் ஜீவஅணுக்கள் (எதிர்மறை சக்திகள்-Negative) அங்கிருந்து துரத்தி அடிக்கப்பட்டு, நன்மைகளை தரும் ஜீவஅணுக்கள் (நேர்மறை சக்திகள்- Positive) ஆதிக்கம் பெறுகின்றன. நமது கண்களுக்கு புலப்படாத வகையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அந்த நிகழ்வுகளினால் மன அமைதி தரும் ரம்யமான சூழ்நிலை அந்த வீட்டில் அமைகின்றது. இப்படியாக மேலும் மேலும் அந்த வீட்டில் நேர்மறை சக்திகள் அதிகரித்துக் கொண்டே செல்கையில் அங்குள்ளவர்கள் அந்த சூழ்நிலையின் காற்றை ஸ்வாசிக்கையில் அவர்களது உடலிலும் அவை புகுந்து கொள்ளும். இப்படியாக உடலில் புகுந்து கொள்ளும் நேர்மறை சக்திகள் அவர்களது ரத்தத்தில் கலந்து மூளையை சென்றடையும். அப்போது அவர்கள் எண்ணம் தூய்மைப்படும். நேர்மறை சக்திகள் அவர்களது எண்ணங்களை தெளிவாக்குகின்றது. அதனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்களால் எந்த சிக்கல்களையும் திறமையுடன் எதிர்கொள்ள முடிகின்றது. கர்ம வினைகளினாலும், செய்த பாவ புண்ணியங்களினாலும் ஏற்படும் நிகழ்வுகளை, விதியின் விளைவுகளை எண்ணெய் தீபம் ஏற்றுவதில் மூலம் தடுக்க முடியாது என்றாலும், அந்த நிலைகளை திறமையுடன், மன உறுதியுடன், மன அமைதியுடன் எதிர்கொண்டு அவற்றின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளும் நிலையை இது ஏற்படுத்தித் தருகின்றது.
இப்படியாக நல்ல விளைவுகளை தரும் நம் எண்ணங்களுக்கு விளங்காத அமைதியான இந்த பழக்கம் ஆன்மீக நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் அமைந்திருக்கவில்லை. நேர்மறை மற்றும் எதிர்மறை எனும் சக்திகளைக் குறித்து விஞ்ஞான பூர்வமாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. ஆகவே இப்படிப்பட்ட நல்ல பலன் தரும் பழக்கத்தை விஞ்ஞான சாதனங்கள் இல்லாத பண்டையாக காலத்தில் வாழ்ந்திருந்த மூதையோர்களால் எப்படி கண்டறிந்திருக்க முடியும் என்பது வியப்பான செய்தியே.
பலரது வீடுகளிலும் பூஜை அறையில் உள்ள பல்வேறு உலோகங்களிலான தெய்வ விக்கிரஹங்கள், மரசட்டங்கள் போட்ட தெய்வப் படங்கள், யந்திரங்கள் மற்றும் கற்களிலான சாலிகிராமம், லிங்கம் போன்ற பிற பொருட்கள் உள்ளதைக் காணலாம். அவை சாதாரண கற்கள் அல்ல என்பது வேறு விஷயம். பூஜை அறையில் அவ்வப்போது பூஜிக்கும்போது ஓதப்படும் மந்திர ஒலியினால் வெளிப்படும் மந்திர அதிர்வுகளை அந்த விக்கிரகம் தன்னுள் இழுத்து வைத்துக் கொள்கின்றது என்பது அந்த உலோகங்களின் தன்மை ஆகும். ஆனால் அனைத்து உலோகங்களும் இந்த தன்மை கிடையாது. ஒரு சில உலோகங்கள் மட்டுமே அந்த தன்மைக்கு கொண்டவையாக அமைந்து உள்ளன. அதனால்தான் அந்த காலங்களில் பூஜை அறைகளில் இருந்த தெய்வ விக்கிரகங்கள் குறிப்பிட்ட உலோகங்களினால் மட்டுமே செய்யப்பட்டவையாக இருந்துள்ளன, தெய்வப் படங்களும் குறிப்பிட்ட மரச்சட்டத்தில் மாட்டி வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடாத தக்கது. அவற்றில் உள்ளடங்கிய ரகசிய தன்மைகளை புரிந்து கொள்ளாமல், பெரியோர்கள் கூறுகிறார்கள் என்பதினால் அவற்றை அவர்கள் பயன்படுத்தி உள்ளார்கள். பூஜை அறையில் பூஜிக்கும் வெளிப்படும் அதிர்வலைகள் அந்த உலோகத்தில் உள்ளே இழுத்துக் கொள்ளப்பட்டதும், மெல்ல மெல்ல அந்த உலோகத்தின் அடிப்படைத் தன்மை நமக்கு புரியாத நிலையில் மாறி விடுகின்றது. இந்த நிலையில் எண்ணெய் விளக்கின் தீப ஒளி மற்றும் பிரார்த்தனைகள் மூலம் எழும் எண்ண அலைகள் என மூன்று சேர்ந்து ஏற்கனவே அடிப்படை உலோகத்தின் தன்மை மாறி இருந்த விக்ரஹத்தின் உள்ளே புகுந்து கொள்ளும்போது, அவை அனைத்தும் சேர்ந்து இன்னொரு தெய்வீக அலையை வெளிப்படுத்துகின்றது. அதுவும் தெய்வீக ஜீவசக்திகளை தட்டி எழுப்பும் வல்லமைப் படைத்த அதிர்வலைகளாக அமைகின்றன. அவைகளும் நேர்மறை சக்திகளுக்கு உதவி செய்து எதிர்மறை விளைவுகளைத் தரும் அணுக்களை விரட்டி அடிக்கின்றன.
இப்படியாக தொடர்ந்து ஏற்றப்படும் எண்ணெய் விளக்கின் ஒளி மற்றும் மந்திர மற்றும் பிரார்த்தனை உச்சாடனைகள் மூலம் வெளியேறும் அதிர்வுகள், உலோக விக்கிரகங்கள் மூலம் வெளிப்படும் தெய்வீக அதிர்வலைகள் என அனைத்தும் சேர்ந்துஅந்த வீட்டில் உள்ள தீமை செய்யும் எதிர்மறை சக்திகளை விரட்டி அடிக்கும். உலோக விக்கிரங்கள் மட்டும் அல்ல பூஜை அறையில் உள்ள சாலிக்கிராமக் கற்கள், ஸ்படிகக் கற்கள், நவரத்தினங்களிலான தெய்வ சிலைகள் மற்றும் தெய்வ உருவங்களை உள்ளடக்கிய விசேஷமான மரச் சட்டங்கள் போன்ற அனைத்துமே உலோக சிலைகளை போலவே தத்தம் அடிப்படை தன்மையை மாற்றிக் கொண்டு, எண்ணெய் விளக்கின் தீப ஒளி மற்றும் மந்திர / பிரார்த்தனை உச்சாடனைகள் மூலம் வெளியேறும் அலைகளில் இணைந்து கொண்டு எதிர்மறைசக்திகளை தாக்கி அழிக்கும் சக்தியை மேலும் பெருக்கிக் கொள்ளும்.
இவற்றைத் தவிர பூஜை அறையில் வைக்கப்படும் குங்குமம், மஞ்சள் பொடிகள், சந்தனம் போன்ற அனைத்திலும் மேலே கூறப்பட்ட நிலையில் நமக்குத் தெரியாத தன்மை மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்க அவையும் தெய்வீக அணுக்களை தட்டி எழுப்பும் அதிர்வலைகளை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும்.
நம் எண்ணங்களுக்கும், கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட இந்த அதிசய, அமானுஷ்ய நிகழ்வுகள் அனைத்துமே நான்கு பொருட்களின் அதிர்வலைகள் மூலமே நடைபெறுகின்றன என்பது சற்றே அதிசயமாக உள்ளது. ஒன்றில்லாமல் ஒன்றில்லை என்பதை போலவே குறிப்பிட்ட பூஜை அறையில் ஏற்றி வைக்கப்படும் தீபத்தின் எண்ணெய், திரிகள், விகிரஹங்கள், பிற பொருட்கள் மற்றும் பிரார்த்தனை அலைகள் என அனைத்தும் ஒன்றிணையும்போது மட்டுமே இந்த நிகழ்வுகள் நடைபெறும் என்பதாக ஆன்மீக மகான்கள் கூறுகின்றார்கள். இதில் இன்னொரு அதிசயமான உண்மை என்ன என்றால் நாள் முழுவதும் எண்ணெய் விளக்கு எரிந்தாலும், இந்த குறிப்பிட்ட தன்மையை முதல் காலைப் பொழுது வரையிலும் , முதல் மாலைப் பொழுது வரையிலும் ஏற்றி வைக்கப்படும் எண்ணெய் விளக்கு தீப ஒளியினால் மட்டுமே தர இயல்கிறது என்பதேயாகும். அதன் காரணம் அந்த நேரத்தில் வெளிப்படும் சூரிய ஒளி மற்றும் சந்திர ஒளியினால் மட்டுமே அந்த மாற்றத்தைத் தரும் தன்மையை ஜீவசக்திகளுக்கு தர இயலும் என்பதாக பிரும்ம நியதி உள்ளதாகக் கூறுகின்றார்கள்.
அதே நேரத்தில் அறையில் ஏற்றி வைக்கப்படும் ஊதுபத்தியில் இருந்து வெளிப்படும் புகை அந்த நேர்மறை அணுக்களை கிரகித்துக் கொண்டு வீட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்று பரப்புகிறது. அந்த ஊதுபத்தியின் மணத்தை வீட்டினர் ஸ்வாசித்து உள்ளிழுக்கயில் அவர்கள் உடலில் நேர்மறை அணுக்களின் ஆதிக்கம் அதிகரிக்க அவர்கள் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்ற எந்த சிக்கல் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தைப் பெறுகின்றார்கள்.
இதுவே பூஜை அறையில் விடியற்காலை மற்றும் மாலைப் பொழுதில் எண்ணெய் விளக்கு ஏற்றி வைக்கும் பழக்கத்தின் அடிப்படை தத்துவம் ஆகும்.
பண்டைய காலத்தில் அனைத்துப் பொருட்களின் விலைகளுமே மிகக் குறைவாக இருந்ததினால் பூஜை அறையில் விளக்கேற்ற பசுவின் மூலம் கிடைத்த நெய்யையே விளக்கில் பயன்படுத்தினார்கள். பசுவின் நெய் கொண்டு எண்ணெய் விளக்கை ஏற்றி வைக்கையில் குடும்ப மகிழ்ச்சி பெருகி வளம் மிக்க வாழ்க்கை அமைவது மட்டும் அல்லாமல் அதிக நோய்கள் அற்ற வாழ்க்கை அமைந்திருக்கும் என்பார்கள்.
எந்தெந்த எண்ணெய்கள் விளக்கு ஏற்றுவதற்கு சிறந்தவை என்பதின் பட்டியலை வரிசைகிரமமாக கீழே தந்துள்ளேன்.
1. பசு நெய்
2. மற்ற பிராணிகள் மூலம் பெறப்படும் தூய நெய்
3. நல்லெண்ணெய்
4. ஆமணக்கு எண்ணெய்
5. விளக்கெண்ணெய்
விளம்பரங்கள் மூலம் பூஜை அறைகளில் தீப விளக்கு ஏற்ற சிறந்ததாக வேப்பெண்ணை மற்றும் தேங்காய் எண்ணை உட்பட பல்வேறு எண்ணெய் வகைகளைக் கூறி எந்த எண்ணையை பயன்படுத்தினால் எந்த நன்மைகளை தரும் என்பதாக கூறுகிறார்கள் என்றாலும் அதை நம்புவதும், நம்பாததும் அவரவர் பொறுப்பாகும். எனக்கு தெரிந்தவரை பண்டை காலத்தில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்கள் மேலே கூறப்பட்டு உள்ள ஐந்து மட்டுமே.
விளக்குகளை வடக்கு, மேற்கு, கிழக்கு போன்ற பக்கங்களை நோக்கி இருக்குமாறு வைக்கலாம். ஆனால் தெற்கு நோக்கி விளக்கை வைக்கலாகாது. திசையின் குழப்பத்தை தவிர்க்க மேல்நோக்கி எரியும் தீப விளக்கை பயன்படுத்துவது நல்லது. ஏன் எனில் மேல் பகுதியில்தான் தெய்வங்களின் இல்லங்கள் உள்ளன. எந்த திசையில் விளக்கை ஏற்றி வைத்தால், என்ன பலன் கிடைக்கும் என்பது கீழாய் தரப்பட்டு உள்ளது.
1. வடக்குத்திசை – செல்வம் தழைக்கவும் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கவும் இந்த திசையை நோக்கி தீபத்தை ஏற்றுவதே சிறந்தது.
2. கிழக்குத்திசை – மன அமைதி கிடைக்க மற்றும் அடிக்கடி தோன்றும் நோய்கள் குறைய
3. மேற்குத்திசை – கடன்கள் குறையவும், எதிரிகள் அடங்கவும்.
ஒரு சிலர் மூன்று எண்ணெய் விளக்குகளை – இரு பக்கத்திலும் இரண்டு மற்றும் மத்தியில் ஒன்று – ஏற்றி வைப்பார்கள். அது உண்மையில் மெத்த நன்மையைத் தரும். ஆனால் அந்த மூன்று விளக்குகளையும் வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு என மூன்று திசைகளையும் நோக்கி வைத்து இருக்க வேண்டும். அதை போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையை நோக்கி விளக்குகளை மாற்றி மாற்றி வைத்து பிரார்த்தித்தால் அதுவும் சிறந்ததே. எந்த காலத்திலும் தெற்கு நோக்கி விளக்குகளை ஏற்றக் கூடாது.
பஞ்சுத் திரி, வாழை மட்டை திரி, தாமரைத் தண்டின் திரி, பல்வேறு மரப்பட்டைகளின் திரிகள் மற்றும் பல்வேறு வண்ணத்து துணிகளின் நூல் இழைகளை திரிகளாக பயன்படுத்துமாறு பண்டிதர்கள் கூறினாலும், பண்டைக் காலத்திலும் ஆலயங்களிலும் பல நூலிழைகளைக் கொண்ட பஞ்சு திரியே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதைக் காணலாம். ஆகவே வேறு சில குறிப்பிட்ட காரணங்களுக்காக சில குறிப்பிட்ட திரி வகைகள் பயன்படுத்தப்பட்டாலும், பொதுவாக தினமும் ஒரு வேளையாவது எண்ணெய் விளக்கேற்ற பஞ்சு திரியை பயன்படுத்துவதே சிறந்தது எனக் கூறப்படுகின்றது.
அடுத்து விளக்கு ஏற்ற எந்த வகையான உலோக விளக்கை பயன்படுத்தலாம் என்பது கேள்வி. தங்கம், வெள்ளி , தாமிரம், ஸ்டீல் (எஃகிரும்பு) மற்றும் ஈயம் போன்றவற்றை கொண்டு தயாரித்த விளக்கு (ஐம்பொன் என்பார்கள்). அதை பயன் படுத்தலாம். அல்லது பித்தளை, தங்கம், வெள்ளி போன்றவற்றிலான விளக்குகள் அல்லது மண் விளக்கு ஆகியவற்றை பயன்படுத்தலாம் என்றாலும் வெறும் எஃகிரும்பினால் (stainless steel) தயாரித்த விளக்கை பயன்படுத்தக் கூடாது. ஏன் எனில் அது எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும்.
சாதாரணமாக ஒரு முகம் கொண்ட விளக்கையே அனைத்து இல்லங்களிலும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சில பண்டிதர்கள் சிவ சக்தியை வெளிப்படுத்தும் இரண்டு முக விளக்கை பயன்படுத்தயுமாறும் கூறுகின்றார்கள். பொதுவாக அனைத்து நாட்களிலும் ஒரு முக விளக்கையும், விசேஷ தினங்களிலும் பண்டிகை தினங்களிலும் ஒன்று முதல் ஒன்பது முகம் கொண்ட விளக்கை ஏற்றலாம் என்பதே நல்லது ஆகும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட விளக்குகள், லட்சுமி மற்றும் பல குபேர விளக்குகளையும் சேர்த்து ஏற்றினால் பலன் அதிகம் என்பார்கள். ஆனால் உண்மை என்ன என்றால் ஒன்றுக்கும் அதிகமான அளவில் விளக்குகளை ஏற்றி வைத்தால் பலன் அதிகம் கிடைக்கும் என்பது மாயை என்பதாகவே நன்கு கற்று அறிந்த பண்டிதர்கள் கூறுகின்றார்கள். ஒரே நாளில் எத்தனை விளக்குகளை ஏற்றி வைத்தாலும் அவை அனைத்தும் சேர்ந்து வெளிப்படுத்தும் தெய்வீக அணுக்களை தட்டி எழுப்பும் அதிர்வலைகள் ஒரு விளக்கை ஏற்றி வைத்தால் வெளிப்படும் அதிர்வலைகளின் அளவில்தான் இருக்கும் என்பது பிரும்ம நியதியாகும். அதே நேரத்தில் தினம் தினம் ஏற்றி வைக்கப்படும் ஒரே ஒரு எண்ணெய் விளக்கு தன் தீப ஒளி மூலம் வெளிப்படுத்தும் தெய்வீக அணுக்களை தட்டி எழுப்பும் அதிர்வலைகள் அழியாமல் இருக்கும் வகையில் அவற்றை வளர்த்துக் கொண்டே இருக்கும்.
ஆகவே எத்தனை விளக்கை ஏற்றி வைத்தாலும் அவற்றில் இருந்து எழும் தீப ஒளி ஒரே ஒரு விளக்கை ஏற்றி வைப்பதின் மூலம் கிடைக்கும் பலன் என்னவோ அதே அளவில்தான் இருக்கும். அதை போலவேதான் கடைகளில் கிடைக்கும் லட்சுமி மற்றும் குபேர தெய்வங்கள் பொரித்த விளக்குகள் அதிக நன்மைகளைத் தரப்போவது இல்லை. அது மனதுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியைத் தரலாம், பூஜை அறையில் அழகு சேர்க்கலாம், மனதுக்கு ரம்மியமாக இருக்கலாம் ஆனால் அவை தரும் பலன்களும் ஒரே ஒரு எண்ணெய் விளக்கை ஆத்மார்த்தமாக ஏற்றி வைத்தால் கிடைக்கும் பலனைப் போலவேதான் இருக்கும். அதே சமயத்தில் பூஜைகளையும், யாகங்களையும் செய்து அவற்றின் மூலம் கிடைக்கும் சக்திகளை ஏற்றி வைத்து தரப்படும் லட்சுமி மற்றும் குபேர தெய்வங்கள் பொரித்த விளக்குகள் நல்ல பலன்களைத் தரலாம். தினமும் இருவேளை ஆத்மார்த்தமாக ஏற்றி வைக்கப்பட்டு பிரார்த்தனை செய்யப்படும் எண்ணெய் விளக்கின் தீப ஒளி வீட்டு சூழ்நிலையை அமைதிமயமானதாக மாற்றி அமைத்து அந்த வீட்டினரின் வாழ்க்கையில் வளத்தை கொடுத்து குடும்ப ஒற்றுமையையும் நிலைக்க வைத்திருக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்வார்கள். நமக்குத் தேவை தினமும் இரு வேளையிலும் பூஜை அறையில் எண்ணெய் விளக்கு ஏற்றி வைத்தால் நல்லவை நடக்கும் என்பதை முழுமையாக நம்புவதே.