-10-

ஆகம முறையிலான வழிபாடு மற்றும்
ஆகம முறையற்ற வழிபாடு

175) தெய்வ வழிபாடு தொடங்கிய பண்டைய காலத்தில் வழிபடப்பட்ட தெய்வங்கள் யார்? கிராமங்களின் நல்வாழ்வோடு தொடர்புடைய தெய்வங்கள், முக்கியமாக பெண் தெய்வங்கள், வன்முறை தோற்றத்தில் அல்லது இரக்க உணர்ச்சி கொண்ட தெய்வங்களாக காணப்பட்டு வழிபடப்பட்டன. பிராமணர்கள் மற்றும் பிராமணர் அல்லாதவர்கள் என்ற பேதங்கள் இல்லாத அந்த காலத்தில் கிராமத்தில் இருந்த அனைவரும் ஒரே வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று அங்கிருந்த கிராம தெய்வம், காவல் தெய்வம் அல்லது கற்கள் அல்லது ஆவிகள் வடிவில் இருந்திருந்த தெய்வங்களை வழிபட்டு வந்தார்கள்.
176) நாம் அனைத்து நடப்புக்களையும் தீவீரமாக ஆராய்ந்தால் பலராலும் வழிபடப்பட்டு வரும் குல தெய்வங்களில் சுமார் 85% தெய்வங்கள் பெண் தெய்வங்களாகவே இருப்பதைக் காணலாம். பெண் தெய்வங்கள் அனைவருமே பார்வதி தேவியின் அவதாரங்கள், 10% விஷ்ணு அல்லது சிவபெருமானின் அவதாரங்கள் மற்றும் 5% முக்கிய தெய்வங்களான விநாயகப் பெருமான், அனுமன், விஷ்ணு போன்றவர்களாக இருக்க, பிரதான தெய்வங்களான சிவன், பிரம்மா, சரஸ்வதி, மகாலட்சுமி அல்லது சந்திரன், சூரியன், சனிஸ்வரர், கிருஷ்ணர் போன்றோர் குல தெய்வமாக வழிபடப்படவில்லை.

177) மெல்ல மெல்ல சென்று கொண்டிருந்த கால ஓட்டத்தில் அனைவருமே ஒற்றுமையாக ஆகம வழிமுறை இல்லாத வழிபாட்டு முறையை கடைபிடித்துக் கொண்டு இருந்தாலும் இந்தியாவில் பல இடங்களிலும் ஆரியர்கள் குடியேறத் துவங்கியதும் ஆகம வழி முறையிலான வழிபாட்டு முறை தோன்றத் துவங்கியது. ஆகம வழிபாட்டு முறை என்பது சமிஸ்கிருதத்தில் மந்திரங்களை உச்சரித்து வழிபடப்படும் நிலை ஆகும். இப்படியாக ஒருபுறம் ஆகம வழி முறையிலான வழிபாட்டு முறையில் சாத்வீக உணவுகளை பிரசாதமாக படைத்து வழிபாடு நடக்க, இன்னொரு பக்கத்தில் ஆகம வழி முறை இல்லாத பூஜை புனஸ்காரங்களை செய்து கொண்டிருந்தவர்கள் மாமிசங்களை பிரசாதமாக படைத்தார்கள். இந்தப் பிளவு பிராமணர்கள் மற்றும் பிராமணர்கள் அல்லாதோர் என்ற பிரிவு ஏற்பட வழி வகுத்தது.
178) ஆகம வழிபாட்டு முறையை நம்பியவர்கள் ஆகம வழிபாட்டு முறையில் வணங்கப்பட்டு வந்திருந்த குலதெய்வங்களை தமது தெய்வமாக ஏற்றுக் கொண்டு இருந்தார்கள். அதை போலவேதான் ஆகம வழிபாட்டு முறையை நம்பாதவர்கள் இன்னொரு தெய்வத்தை தமது குலதெய்வமாக வணங்கித் துதித்தார்கள். இப்படியாக கிராமங்களில் பிராமணர்களால் வழிபடப்பட்ட மற்றும் பிராமணர்களால் அல்லாதோர்களால் வழிபடப்பட்ட இரண்டு குலதெய்வங்கள் இருந்தன. அதனால்தான் இன்றும் கிராமங்களில் இரண்டு வழிபாட்டு மையங்களில் (ஆலயங்கள்) ஒரே தெய்வத்தின் அவதாரமாக இரு தெய்வங்கள் இருந்தாலும், அந்த தெய்வங்களின் உருவங்கள் வெவ்வேறு தோற்றத்தில் இருப்பதைக் காணலாம்.
179) சேர,சோழ மற்றும் பல்லவ மன்னர்கள் ஆட்சியில் இருந்தபோது ​​அவர்கள் மெல்ல மெல்லப் பெரிய ஆலயங்களைக் கட்டினார்கள், அவை பல கிராமங்களிலும் நகரங்களிலும் இருந்தன. அவற்றில் இருந்த பெரும்பாலான தெய்வங்கள் அந்த பகுதிகளில் வசிப்பவர்களின் குல தெய்வமாக மாறி, தெய்வ வழிபாட்டையும் நம்பிக்கையையும் வளர்ச்சி அடைந்ததில் முக்கிய பங்காற்றியது.
180) கிராமங்களில் வழிபடப்பட்டு வந்திருந்த தெய்வங்கள் இரு வகையிலானவை. ஒரு பிரிவிலான தெய்வங்கள் கருணையுள்ளம் கொண்டவர்களாக இருக்க, இன்னொரு பிரிவிலான தெய்வங்கள் கோபக்கனல்கள் வீசிய தெய்வங்களாக இருந்தன. தம்மை நல்ல முறையில் ஆராதனை செய்து சாந்தப்படுத்தப்படுத்தாவிடில் கிராமத்தில் தீர்க்க முடியாத  பிரச்சனைகளை, இயற்கை அழிவுகளை தோன்றத் செய்து விடுவார்கள். பொதுவாக, கிராம தெய்வங்கள் என்று அழைக்கப்படும் தெய்வங்கள் கிராம மக்களை தீமைகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் உள்ளிட்ட பிற ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவதாக நம்புகின்றார்கள். அம்மன் அல்லது காவல் தெய்வங்கள் என்று அழைக்கப்படும் பெண் தெய்வங்கள் வளம் தரும் தெய்வங்களாக கிராமங்களில் கருதப்படுகின்றன.
181) விசித்திரமாக முதன்மை தெய்வங்களின் கூட பிரிவினை காணப்பட்டது. உதாரணமாக ஆண் தெய்வங்களில் விஷ்ணு பகவான், சிவ பகவான் மற்றும் பார்வதி தேவியின் வெளிப்பாடாக இருந்த பெண் தெய்வங்களான திரிபுரசுந்தரி, லலிதாம்பிகை, காமாட்சி, பவானி, மீனாட்சி ஆகியோர் ஆகம வழிபாட்டு முறையில் வணங்கப்பட்டிருந்த தெய்வங்களாக இருந்தார்கள். அதே சமயத்தில் சிவபெருமானிடமிருந்து வெளியான வீரபத்திரர், பைரவர் போன்ற ஆண் தெய்வங்கள் மற்றும் முனீஸ்வரன், காத்தவராயன், ஐயனார், கருப்பசுவாமி ஆகிய கிராம தெய்வங்களோடு பார்வதி தேவியின் வெளிப்பாடாக இருந்த பெண் தெய்வங்களான மாரியம்மன், எல்லம்மா, பேச்சியம்மன், சீதாளம்மா, பாதாளம்மா, அங்காள பரமேஸ்வரி, கங்கம்மா, சப்த கன்னிகை போன்ற பெண் தெய்வங்களும், ஆகம வழிபாட்டு முறையை ஏற்காத குடும்பங்களின் குலதெய்வங்களாக இருந்தார்கள். முருகப் பெருமானும் அவரது துணைவியார் வள்ளி தேவியும் ஆகம மற்றும் ஆகம வழிபாட்டு முறையை ஏற்காதவர்கள் என இரு பிரிவினராலும் வழிபடப்பட்டார்கள் .
182) வியப்பு அளிக்கும் வகையில் இன்றும் பல கிராமங்களில் உள்ள ஆலயங்களில் பிராமணர்கள் மற்றும் பிராமணர் அல்லாத பல குடும்பங்கள் ஆகம வழிபாடில்லாத குலதெய்வங்களை வழிபடுகின்றனர். அதன் காரணம் அவர்களது மூதையோர் அந்த தெய்வங்களை பரம்பரை பரம்பரையாக அந்த ஆலயங்களில் வழிபட்டு வந்துள்ளார்கள் என்பதே. உண்மையில் ஆரியர்களின் வருகைக்குப் பிறகே ஆகம மற்றும் ஆகம வழிபாட்டு முறை இல்லாத வழிபாடு துவங்கியது. கிராமங்களில் வழிபடப்படும் தெய்வங்கள் பெருமளவில் பெண் தெய்வங்களாகவே உள்ளன. ஏனெனில் கிராம மக்கள் பெண் தெய்வத்தை ஆதி சக்தி அல்லது பராசக்தி என்று அழைக்கப்படும் சக்தியின் அம்சமே என்றும் அவர்கள் காவல் தெய்வமாக மட்டுமே உள்ளனர் எனக் கருதாமல் தங்களது கிராமத்தின் பிரதிநிதியாக உள்ளனர் எனவும் கருதினார்கள். கிராம தெய்வங்களை ஆதி சக்தி அல்லது பராசக்தி என்று அழைக்கப்படும் சக்தியின் அம்சமே அவர்கள் என்று நம்பினர். பிரபஞ்சத்தில் உள்ள பெண் தெய்வங்கள் அனைத்துமே பார்வதி தேவியிலிருந்து தோன்றியவை என்றும் அவர்களே மழை பொழிவிக்கும் தெய்வங்கள், கிராமத்தின் முக்கிய பாதுகாவலர், குறிப்பாக பெரியம்மை அல்லது அவ்வப்போது தோன்றி வந்திருந்த பிளேக் போன்ற பயங்கரமான நோய்களை கட்டுப்படுத்துபவர்கள் என்றும் கிராமங்களில் இருந்த கால்நடைகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாவலர் என்றும் நம்பினார்கள்.
183) பெண் தெய்வங்களே பெருமளவில் ஆகம வழிபாடு அற்ற முறையிலான வழிபாட்டை ஏற்காத மக்களால் வணங்கப்படுகிறது. பெரும்பாலான பெண் தெய்வங்கள் தனித்துவமான கதைகளைக் கொண்டிருந்தன. ஒவ்வொரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தத்தம் சமூகத்தை சேர்ந்த குலதெய்வமாக சில பெண் தெய்வங்களை மட்டுமே வணங்கி வருகின்றார்கள். தெய்வத்தின் தன்மை மற்றும் உள்ளூர் பழக்க வழக்கங்களைப் பொறுத்து கிராமிய தெய்வங்களுக்கான வழிபாட்டு முறைகளில் மிகப் பெரிய வேறுபாடு காணப்படுகின்றது.

அனைத்து உலகிலும் காணப்படும்
குலதெய்வ வழிபாடு

184)ஒரு வீட்டு தெய்வம் அல்லது ஆவி என்பது வீட்டைப் பாதுகாத்து குடும்பத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களையும் கூட பாதுகாத்து வருகின்றது. பேகனிசம் எனப்படும் இந்த நம்பிக்கை நான்காம் நூற்றாண்டை சேர்ந்த சில கிறிஸ்தவர்களின் பொதுவான நம்பிக்கையாக இருந்தது (பேகனிசம் என்பது நான்காம் நூற்றாண்டில் ஆரம்ப கால கிறிஸ்தவர்களால் பல தெய்வ வழிபாட்டை கடைப்பிடித்த ரோமானியப் பேரரசின் மக்களுக்காக கடைபிடிக்கப்பட்டது) இந்த செய்தியானது உலகின் பல பகுதிகளிலும் கூறப்படும் நாட்டுப்புறக் கதைகளிலும் காணப்படுகின்றது. வீட்டு தெய்வங்கள் எனக் கருதப்பட்டவை இரண்டு வகையாக இருந்தன. முதலாவதாக, வீடு மற்றும் ஆரோக்கியத்துடன் சம்மந்தப்பட்ட ஹீத் என்ற பெயரில் இருந்த வீட்டு தெய்வம் என்று கருதினார்கள். அதை கிரேக்க ஹெஸ்டியா எனும் தெய்வம் (ஒரு பண்டைய காலத்தில் இருந்த கிரேக்க மதத்தினர் வழிபட்ட கன்னி மற்றும் ஆரோக்கியத்தின் தெய்வம்) மற்றும் நார்ஸ் ஃப்ரிக் (ஜெர்மானிய புராணங்களில் கூறப்பட்டு உள்ள தெய்வம்-திருமணம், தீர்க்கதரிசனம், தெளிவுத்திறன் மற்றும் தாய்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது) போன்ற தெய்வங்களுடன் ஒப்பிட்டார்கள். இரண்டாவது பிரிவு தெய்வங்கள் என்பது ஒரு தனி தெய்வம் அல்ல, பொதுவாக பெரிய தெய்வங்களை விட குறைவான சக்திகளைக் கொண்டிருந்த அனிமிஸ்டிக் தெய்வத்தின் இனங்கள்.  பண்டைய காலத்தில் இருந்திருந்த ரோம மதத்தை சேர்ந்த ஒரு பிரிவினர், கொரியாவை சேர்ந்த சில மதத்தினர் மற்றும் ஆங்கிலோ சாக்சான் போன்ற பிரிவுகளில் இருந்தவர்கள் ஒருவித தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள் . சிறிய சிலைகள், தாயத்துக்கள், ஓவியங்கள் அல்லது சிலைகள் போன்ற வடிவங்களில் வைக்கப்பட்டு இருந்த தெய்வங்களை ஆலயத்தில் அல்ல வீடுகளில் வைத்து வழிபட்டார்கள். அந்த தெய்வங்கள் குடும்ப உறுப்பினர்களாகக் கருதப்பட்டு உணவருந்த அழைக்கும் வகையில் உணவு மற்றும் பானங்களை வைத்து வழிபடுவார்கள். (Ref: https://en.wikipedia.org/wiki/Household_deity).
185)இந்த பிரபஞ்சத்தின் பல நாடுகளிலும் பல்வேறு மாதங்கள் உள்ளன. அவர்கள் அனைவருக்கும் தெய்வங்கள் உண்டு. ஒவ்வொரு பிரிவினருக்கும் அவரவர் நம்பிக்கைகள் உள்ளன என்பதை எல்லாம் பார்க்கும்போது நமக்கு முன் எழும்பும் முக்கியமான கேள்வி என்ன என்றால் இந்த பிரபஞ்சத்தில் எத்தனை தெய்வங்கள் உள்ளன?
186) யஜுர்வேதத்தின் கூற்றின்படி 33 கோடி தெய்வங்கள் உள்ளன. (Ref : https://en.wikipedia.org/wiki/Hindu_deities). மற்றொரு கருத்தின்படி 33 கோடி தெய்வங்கள் அல்ல மொத்தம் 33 மில்லியன் கடவுள்கள் அதாவது 33,000,000 உள்ளனர் என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது (Ref: https://www.huffpost.com/entry/the-33-million-demigods-o_b_1737207). எத்தனை தெய்வம் எனும் கணக்கில் ஆண் மற்றும் பெண் தெய்வங்கள், துணை தெய்வங்கள்,தேவ கணங்கள், தேவதைகள், மோகினிகள் மற்றும் யோகினிகள் ஆகியோர் அடக்கம் ஆகி இருக்கலாம். பிற மதத்தினர் வணங்கும் தெய்வங்கள் கணக்கில் எடுக்கப்படாமல் இருக்கலாம். யஜுர் வேதம் எழுதப்பட்ட காலத்தில் இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதமும் இருந்திருக்கவில்லை. இருப்பினும், தெய்வீகங்கள் குறித்து கூறப்பட்டு உள்ள இரண்டு புள்ளி விவரங்களும் தவறானவை என சில ஆய்வாளர்களால் எதிர்க்கப்படுகின்றன. அவர்கள் கூற்றின்படி வேதங்களால் குறிப்பிடப்பட்ட 33 கோடி கடவுள்கள் என்ற சொல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, 33 கோடி என்பது 33 வகைகளைக் குறிக்கிறது என்பதே அவர்களது வாதம் ஆகும்.
187) ஆய்வாளர்களில் ஒருவர், ‘33 கோடி கடவுள்கள் என்பது முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட உண்மை, ஏனெனில் சில வெளிநாட்டு அறிஞர்கள் வேத சமஸ்கிருதத்தை தவறாக மொழிபெயர்த்துள்ளனர். அதர்வண வேதம், யஜுர் வேதம் மற்றும் சதபத-பிரம்மாணா எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ‘த்ரயஸ்த்ரீம்சதி கோடி’ என்ற சொல் 33 கோடி அல்ல முப்பத்தி மூன்று (33) கடவுள்கள் என்று சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் கோடி என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று ‘வகை’ மற்றொன்று கோடி என்பதாகும். (Ref : http://www.thenewsnow.co.in/newsdet.aspx?q=7208). எனவே கோடி என்ற சொல் எத்தனை வகைகளிலான தெய்வம் என்பதை குறிக்கின்றது என்று கூறுகின்றார்.

188) இன்னொரு கருத்தின்படி பதிவு செய்யப்பட்ட வரலாற்று செய்திகளின்படி 8,000 முதல் 12,000 தெய்வங்கள் வணங்கப்பட்டு வந்துள்ளதைக் காண முடிகின்றது. அவை அனைத்துமே ஒன்பது வகைகளிலான தெய்வங்கள். அவற்றில் 5 வகைகளிலான தெய்வங்கள் இந்துக்களால் வணங்கப்பட்டவை ஆகும். (Ref: https://lisbdnet.com/how-many-gods-are-there-in-the-world/).
189) மானுடவியலாளர்கள் கூற்றின்படி இந்த பிரபஞ்சத்தில் குறைந்தது 18,000 வகைகளிலான தெய்வங்கள் வணங்கப்பட்டு வந்துள்ளன. பிரபஞ்சத்தில் இன்றைய ஜனத்தொகையில் சுமார் 80 சதவிகித மக்கள் ஏதாவது ஒரு வகையிலான தெய்வ வழியிலான ஆன்மீக மார்கத்தை சார்ந்தவர்கள் என்று கூற முடியும் (ref: https://www.psychologytoday.com/us/blog/your-brain-food/202107/why-do-humans-keep-inventing-gods-worship). அவர்கள் பலதரப்பட்ட தெய்வங்களை வணங்குபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
190) தெய்வங்களாக கருதப்படும் கிராம மற்றும் காவல் தெய்வங்கள் இந்த கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனவா என்பது தெரியவில்லை. நிச்சயமாக, நாம் வணங்கும் தெய்வங்களின் எண்ணிக்கை 33 கோடியாகவோ அல்லது 33 மில்லியனாகவோ அல்லது வெறும் 33 என்பதற்காகவோ இருக்க வாய்ப்பில்லை. பல்வேறு பதிவு கணக்குகள் குழப்பத்தை உருவாக்குவதால், அவை அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, உண்மை நிலையை மற்றொரு கோணத்தில் ஆய்வு செய்வது நல்லது.
191) 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் பரந்த நிலப்பரப்பில் மட்டும் 6,40,930 கிராமங்கள் பரவியுள்ளன (Ref: https://testbook.com/question-answer/how-many-villages-are-approximately-there-in-ind–5e1d7f7cf60d5d2d6cf1c8ee). தெய்வ வழிபாடு இல்லாத ஒரு கிராமம் கூட இந்தியாவில் இல்லை. பெரும்பாலான கிராம தெய்வங்கள் அவர்களது தோற்றத்தில் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு உள்ளன. எனவே, நியாயமான மதிப்பீட்டின்படி இந்தியாவில் மட்டும், 50% கிராமங்களில் உள்ள மக்கள் ஏதோ ஒரு வகையான தெய்வத்தை வணங்கி வரலாம் என்பதை பார்க்கும்போது சுமார் மூன்று லட்ச தெய்வங்கள், அதாவது ஒரு கிராமத்திற்கு ஒன்று என்ற கணக்கில்   உள்ளூர் மக்களால் வழிபடப்பட்டு வருகின்றன என்பதை ஒரு அனுமானமாகக் கூறலாம்.
192) நான் எழுதி உள்ள அனைத்து பாராக்களிலும் உள்ள செய்திகளை படிக்கும் போது, இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு லட்சத்துக்கும் குறையாமல் பல தெய்வங்கள் பல வடிவங்களிலும் தோற்றங்களிலும் இருக்கலாம். அவை அனைத்துமே வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வெவ்வேறு மதத்தினர் வணங்கித் துதிக்கும் தெய்வங்கள் ஆகும்.
193) ஆப்பிரிக்காவில் உள்ள பல பழங்குடியினர் பல தெய்வங்களை வழிபடுகிறார்கள். 1989 ஆம் ஆண்டில், எழுபது மில்லியனுக்கும் அதிகமான அளவிலான ஆப்பிரிக்க மக்கள் ஆப்ரிக்காவில் சிறந்த மதமாக காணப்பட்ட யோருபா மதத்தின் ஏதாவது ஒரு பிரிவை கடைபிடித்ததாக கணிக்கப்பட்டது. யோருபா மதம் பரவலாக ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா மக்களை ஈர்த்து இருந்தது. நைஜீரியாவின் மூன்று முக்கிய இனக்குழுக்களில் ஒன்றான யோருபா, ஒரே இன மற்றும் கலாச்சார தோற்றம் போன்றவற்றைக் கொண்டு இருந்தாலும், அவை மூன்றுமே வெவ்வேறு மாநிலங்களில் ஊன்றி இருந்தன. யோருபாவில் ஆறாயிரம் தெய்வங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. (Ref : https://www.encyclopedia.com/history/news-wires-white-papers-and-books/deities-yoruba-and-fon-religions).
194)தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜூலு பாரம்பரிய மதம் பொதுவாக விலங்குகள் அல்லது இயற்கை நிகழ்வுகளின் பொதுவான வகுப்புகளுடன் தொடர்புடைய ஏராளமான தெய்வங்களைக் கொண்டுள்ளது. மூதாதையர்கள் அன்குலுங்குலு (பெரியவர்களுக்கும் பெரியவர்கள்) எனப்படுவோர் ஆவி உலகில் வசிப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். மேலும் அவர்களே அனைத்து உயிர்களுக்கும் ஆவி உலகத்திற்கும் இடையில் இடைத்தரகர்களாகக் செயல்படுகிறார்கள் மற்றும் கடவுளுடன் கைகோர்த்து வேலை செய்கிறார்கள் என்பதாக நம்புகின்றார்கள். இன்று வடக்கு குவாசுலு-எனும் நாட்டினரால் ஸ்தாபிக்கப்பட்ட இடத்தில் ஜூலு ஒரு முக்கிய குலமாக இருந்தனர்.
195) பண்டை காலத்தை சேர்ந்த கிரேக்கியர்கள் பல கடவுள்களை வழிபட்டனர், ஒவ்வொன்றும் ஒரு தனித் தன்மைகளைக் கொண்ட தெய்வங்கள். கிரேக்க புராணங்களில் அந்த தெய்வங்களின் தோற்றம் மற்றும் அவை எந்த வகையில் மானிடர்களுடன் தொடர்ப்பு கொண்டு இருந்தன என்பதை விளக்கும் வரலாற்று கதைகள் காணப்படுகின்றன.
196) உலக மதங்களின் எண்ணிக்கை மற்றும் அளவைக் கண்காணிக்கும் ஒரு சுயத்தன்மையான, மத சார்பற்ற நிறுவனமான Adherents என்பதின்படி (Ref: https://www.theregister.com/2006/10/06/the_odd_body_religion/) இந்த உலகில் சுமார் 4,300 மதங்கள் உள்ளன என்பதாக தெரிகின்றது. ஒரு மதத்திற்கு ஒரு  தெய்வம் எனக் கணக்கிட்டாலும் 4300 மதங்களுக்கு 4300 எண்ணிக்கைக்கு குறைவான அளவில் தெய்வங்கள் இருக்க முடியாது.
197) எனவே எத்தனை தெய்வங்கள் வழிபடப்பட்டன என்பதற்கு யாராலும் தீர்க்கமான பதிலைக் கூற முடியாது.  தெய்வங்களின் எண்ணிக்கையைக் குறித்து  நாம் கேட்கும் மற்றும் படிக்கும் அனைத்தும் வெறும் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை. உலகில் பல வகைகளிலான தெய்வ வழிபாட்டு முறைகள் உள்ளன, அவற்றின் எண்ணிக்கை எத்தனை என்பதை உறுதியாக கூற முடியாது என்பதை நாம் நம்ப வேண்டும்.

-முடிவுற்றது-