பொங்கு சனி

அக்னீஸ்வரர் ஆலயம்

-சாந்திப்பிரியா-

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைபூண்டிக்கு அருகில் உள்ள திருக்கொள்ளிக்காடு என்ற கிராமத்தில் உள்ளதே சனி பகவானுக்கு மேன்மை தரும் மகிமை வாய்ந்த அக்னீஸ்வரர் ஆலயம் ஆகும். இந்த ஆலயத்துக்கு வந்து சூரிய பகவான், சனீஸ்வர பகவான், மற்றும் அக்னி பகவான் என்ற மூவரும் தத்தம் தோஷங்களையும், குறைகளையும் களைந்து கொண்டு சென்றதாக ஆலய வரலாறு உள்ளது. இந்த ஆலயம் உள்ள இடத்தை அக்னி ஸ்தலம் என்றும் கூறுவார்கள். இங்குள்ள மூல தெய்வம் அக்னிபுரீஸ்வரர் மற்றும் அவரது மனைவியான மிருது பாத நாயகி அம்பிகா எனும் அம்பாள் ஆவார். மிருது பாத நாயகி என்றால் பஞ்சைப்போல மிருதுவான பாதத்தைக் கொண்டவள் என்பதாகும். அதை போலவேதான் அக்னீ என்பது நெருப்பை குறிக்க புரீஸ்வரர் என்பது அந்த இடத்தில் (திருக்கொள்ளிக்காடு) வசிப்பவர் என்பதாகும்.

இந்த ஆலயத்தில் எழுந்துள்ள மூலவருடைய பெயர் அக்னிபுரீஸ்வரர் என வந்ததின் காரணம் என்ன என்பதை குறித்த சில கதைகள் கூறப்படுகின்றன.

சூரிய பகவான் உஷா தேவியை மணந்து கொண்டார், ஆனால் அவரது வெப்பத்தை தாங்க முடியாமல் போனவள் நிழலாக உள்ள சாயா தேவி என்பவரை அவருக்கு மணமுடித்து வைத்தாள். ஆனால் சாயா தேவியாலும் அவருடைய வெப்பத்தை தாங்க முடியாமல் விலகி நிற்க அதுவே சூரிய பகவானுக்கு மனைவிகள் பக்கத்தில் இருக்க முடியாத நிலையிலான தோஷமாயிற்று. இதனால் மனம் ஒடிந்துபோன சூரிய பகவான் திருகொள்ளிக்காட்டுக்கு வந்து சிவபெருமானுக்கு பூஜைகளை செய்து தவமிருந்தார். தனது தோஷத்தை விலக்கி, தன்னுடைய மனைவிகள் தனது வெப்பத்தை உணர முடியாத நிலையை தந்து தன்னுடன் அவர்கள் இருக்க வேண்டும் என வேண்டினார். அவருடைய பூஜையை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் அவர் முன் காட்சி அளித்து அவருக்கு ஏற்பட்டு இருந்த தோஷத்தை விலக்கி அருள் புரிந்தார்.

அதன் பின் சூரிய பகவானது மனைவியான உஷா தேவி மூலம் அவருக்கு ஒரு மகன் பிறந்தார். அவரே தர்மத்தையும் நீதியையும் நிலை நாட்டும் தர்மராஜா எனும் எம பகவானாக அவதாரம் எடுத்தார். அடுத்து சாயா தேவி மூலம் ஒரு பிள்ளை பிறக்க அவரே சனி பகவானாகி ஒன்பது கிரகங்களில் அனைத்து கிரகங்களை விட மிக்க வலிமை கொண்டவர் முன்ஜென்ம மற்றும் வாழும் ஜென்மம் என அனைத்து ஜென்மங்களிலும் பாவங்களை செய்பவர்களுக்கு தக்க தண்டனை தரும் தெய்வமாக இருக்க வேண்டி இருந்தது. ஆனாலும் தனக்கு தரப்பட்ட தொழிலை நடு நிலைமையோடு சிறப்பாக செயல்படுத்தத் துவங்கினார். அவரவர் செய்த பாவங்களுக்கு ஏற்ப தண்டனை கொடுத்தார். அதில் அதிகபட்ஷ தண்டனையாக கடுமையான 7½ சனி தோஷத்தை தந்தார். அந்த 7½ வருட வருட தோஷத்தைக் கொண்டவர்கள் கடுமையான மன உளைச்சல் மற்றும் கஷ்ட நஷ்டங்களை அடைந்தார்கள். இதனால் சனி பகவான் மீது மக்களது மனதில் வெறுப்பு ஏற்பட்டு அவரிடம் ஒரு பயமும் தோன்ற அவரை விட்டு விலகி தமக்கு ஏற்பட்டு துன்பங்களைக் குறைக்குமாறு பிற தெய்வங்களை வேண்டத் துவங்கினார்கள்.

இப்படியாக மக்கள் மனதில் சனி பகவான் மீதான நல்ல எண்ணம் அழியத் துவங்க, அதனை உணர்ந்து கொண்ட சனி பகவான் மனம் வருந்தி திருகொள்ளிக்காட்டுக்கு வந்து தன்னை தண்டனை தரும் தொழிலில் இருந்து விலக்கி விடுமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டு பூஜைகளை செய்து தவமிருந்தார். அவருடைய பூஜையினால் மனம் மகிழ்ந்து போன சிவபெருமானும் அவருக்கு நெருப்பு ஜுவாலையாக காட்சி தந்து அவர் நடு நிலைமையோடு செய்து வரும் தொழிலை வெகுவாக புகழ்ந்து அவரை தேற்றினார். அது மட்டும் அல்லாமல் அங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு அளவற்ற செல்வத்தையும், வளத்தையும் தரும் அனுகிரக மூர்த்தியாக, பொங்கு சனியாக இரண்டாவது அவதாரம் எடுத்து அந்த தலத்திலேயே அமர்ந்து கொண்டு அருள் புரியுமாறும் கூறினார். இதனால் தேவலோகத்தில் செல்வத்தை தரும் வகையில் தேவி மகாலட்சுமி எத்தனை உயர்வான இடத்தில் அமர்ந்துள்ளாரோ அதற்கு இணையாக பூமியில் செல்வத்தை தரும் வகையில் ஏர்கலப்பை மற்றும் காகத்தின் சின்னம் பொரித்த கொடியை கையில் ஏந்திய திருக்கொள்ளிக்காடு பொங்கு சனி பகவானாக இரண்டாவது அவதாரம் எடுத்து அமர்ந்தார். சனி பகவானின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் அந்த ஆலயத்திலேயே சிவலிங்க உருவில் அமர்ந்து கொண்டார். சனி பகவானுக்கு சிவபெருமான் நெருப்பு ஜுவாலையாக காட்சி தந்ததினால் இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் இளம் சிவப்பு நிறத்தில் காட்சி தருகின்றது. பொங்கு சனி பகவானது செயல்களுக்கு துணை புரிய அவருடைய குருவான பைரவப் பெருமானும் பொங்கு சனி பகவானின் சன்னதியின் எதிர் சன்னதியில் அவரைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் என்பது இந்த ஆலயத்தின் விசேஷமான காட்சி ஆகும்.

முதல் அவதார சனி பகவான் தவறு செய்பவர்களுக்கு தண்டனை தரும் அதிபதியாக இருந்தாலும், அதே நேரத்தில் அவரவர் செய்த தவற்றை உணர்ந்து, அதற்கான தக்க பரிகாரம் செய்து கரையூர் சங்கரநாராயண ஆலயத்தில் வந்து தன்னை வணங்கி துதிப்பவர்களது தண்டனையின் தாக்கத்தை குறைக்கின்றார். அங்கிருந்து திருநள்ளாறுக்கு வந்து தம்மை வணங்கி துதிப்பவர்களது துன்பங்களை தக்க நேரத்தில் முழுமையாக விலக்குகின்றார் என்பது ஐதீகம். அது மட்டும் அல்லாமல் தேவி மஹாலக்ஷ்மியின் செல்வத்தை பாதுகாத்து, அதே தேவி தரும் செல்வங்களை தேவியின் கட்டளைக்கு ஏற்ப அளிக்கும் அதிபதியான குபேர பகவானைப் போலவே சக்தி கொண்டு, தன்னுடைய இரண்டாவது அவதாரத்தில் பொங்கு சனி பகவானாக அமர்ந்து கொண்டு திருகொள்ளிக்காட்டுக்கு வந்து தம்மை வணங்கித் துதிக்கும் பக்தர்களது இழந்த செல்வங்களை மீட்டுத் தந்து, வளம் மிக்க வாழ்க்கையை தருகின்றார் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ஒரு முறை பாண்டவ சகோதரர்கள் வனவாசத்தில் இருந்தபோது அவர்கள் தங்கி இருந்த அரக்கு மாளிகையை, கௌரவர்களது வேண்டுகோளுக்கு ஏற்ப தீயிட்டு அழித்ததினால் அக்னி பகவான் 7½ சனி தோஷத்தை பெற்றார். அந்த தோஷத்தின் காரணமாக தனது பல சக்திகளையும் அக்னி பகவான் இழக்க நேரிட்டது. தாம் இழந்துவிட்ட சக்திகளை மீண்டும் பெற வேண்டும் என அக்னி பகவானும் திருகொள்ளிக்காட்டுக்கு வந்து சிவபெருமானுக்கு பூஜைகளை செய்து தவம் இருந்தார். அவரது தவத்தினால் மனம் மகிழ்ந்துபோன சிவபெருமானும் அவருக்கு காட்சி தந்து அவர் இழந்த சக்திகளை திரும்பக் கொடுத்தார். அக்னி பகவானது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு பிற தெய்வங்களும் அங்கு வந்து தம்மை ஆராதிக்கும் வகையில் அந்த இடத்திலேயே ஒரு சிவலிங்க உருவில் அமர்ந்து கொள்வதாகவும் வாக்குறுதி தந்தார்.

இப்படியாக அக்னி பகவான், பெரும் வெப்பத்தை தந்த சூரிய பகவான் மற்றும் சனி பகவானின் வேண்டுதல்களை ஏற்றுக் கொண்டு நெருப்பு ஜுவாலையாக காட்சி தந்த சிவபெருமான் அந்த ஆலயத்திலேயே சிவலிங்க உருவில் அமர்ந்து கொண்டதினால் அங்குள்ள மூல தெய்வமான சிவலிங்கத்திற்கு அக்னீஸ்வரர் என்ற பெயர் வந்ததாக ஐதீகம் உள்ளது.

இன்னொரு கதையின்படி நள மஹாராஜனுக்கு 12 வருட சனி தோஷத்தைத் தர திருகொள்ளிக்காட்டில் இருந்து புறப்பட்டு கரையூர் வழியே திருநள்ளாறுக்கு சென்ற சனி பகவான் நள மகாராஜனுக்கு தோஷத்தை அளிக்க, தோஷத்தை அனுபவித்த அதே நள மஹாராஜனும் அதே திருநள்ளாறுக்கு வந்து தனக்கு தோஷத்தை அளித்த அதே சனி பகவானை வேண்டித் துதித்து தோஷத்தை முழுமையாக விலக்கிக் கொண்டாராம். ஆனால் தான் இழந்த செல்வங்கள், மனைவி, குழந்தைகள் மற்றும் பெருமையை திரும்பப் பெற நள மஹாராஜனும் திருக்கொள்ளிக்காடு வந்து இந்த ஆலயத்தில் இரண்டாவது அவதாரத்தில் அமர்ந்து இருந்த பொங்கு சனீஸ்வர பகவானை வேண்டி துதிக்க வேண்டி இருந்ததாம். அதற்குப் பிறகே அவர் இழந்த அனைத்தும் அவருக்கு மீண்டும் கிடைத்ததாம்.

நீர்மை, நீதி மற்றும் சத்தியம் என அனைத்தையும் மாசு இன்றி கடைப்பிடித்து தமது ஜனங்கள் வளத்தோடு வாழ வேண்டும் என்ற முறையில் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்த ராஜா ஹரிச்சந்திரனும் ஒருமுறை விசுவாமித்திர முனிவரின் சாபத்தினால் ஏற்பட்ட தோஷத்தினால் அனைத்தையும் இழந்து நின்றபோது, திருக்கொள்ளிக்காடு வந்து இந்த ஆலயத்தில் இரண்டாவது அவதாரத்தில் அமர்ந்து இருந்த பொங்கு சனீஸ்வர பகவானை வேண்டி துதித்து இழந்த அனைத்தையும் திரும்பவும் பெற்றுக் கொண்டதான இன்னொரு கதையும் இந்த ஆலயத்தில் கூறப்படுகின்றது.

இந்த ஆலயம் முதலில் செங்கல்லினால் கட்டப்பட்டு இருந்ததாகவும் முதலாம் குலோத்துங்க சோழன் அதை பாறையினால் ஆன ஆலயமாக மாற்றி அமைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் ராஜ ராஜன் மற்றும் ராஜேந்திர சோழர்களது கல்வெட்டுக்களும் இந்த ஆலயத்தில் காணப்படுகின்றன என்பதினால் இது நிச்சயமாக சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ள ஆலயமாகவே அதாவது 1500 வருடத்துக்கும் முற்பட்ட ஆலயமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகின்றது. இந்த ஆலயத்தில் ராஜ கோபுரம் கிடையாது என்பது இந்த ஆலயத்தின் இன்னொரு தனித் தன்மை ஆகும்.

கையில் கலப்பை, காகச் சின்னம் கொண்ட கொடி, கைகளில் ஹஸ்தம் மற்றும் அபாய முத்திரையுடன் காணப்படும் சனி பகவானது சன்னதி தென்மேற்கு நோக்கி அமைந்துள்ளது. பேய், பிசாசுக்களுக்கு உகந்த பூ ஊமத்தம் பூ என்பதினால் எந்த ஒரு ஆலயத்திலும் ஊமத்தம் பூவை பூஜைகளுக்கு பயன்படுத்துவது இல்லை. ஆனால் இந்த ஆலயத்தில் மட்டும் ஊமத்தம் பூவைக் கொண்டு பூஜை செய்வது மிக விசேஷமாக கருதப்படுகின்றது. அதற்கான புராணக் கதை ஒன்றும் இந்த ஆலய வரலாற்றில் கூறப்படுகின்றது. ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமான் தனது மனைவி பார்வதி தேவியுடன் அற்புதமான நடனம் ஆடினார். அதை தேவர்களும் ரிஷி முனிவர்களும் கண்டு களித்தார்கள். பேய் பிசாசுகளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதினால் வருத்தம் அடைந்த பேய், பிசாசுக்கள் திருகொள்ளிக்காட்டுக்கு வந்து சிவபெருமானுக்கு ஊமத்தம் பூவைக் கொண்டு பூஜை செய்து தம்முடனும் சிவபெருமான் நடனம் ஆட வேண்டும் என அவரை வேண்டித் துதித்தார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் அங்கு வந்து ஊமத்தம் பூ மலையை அணிந்து கொண்டு அவர்களுடன் நடனம் ஆடினாராம். அதனால் மனம் மகிழ்ந்து போன பேய், பிசாசுக்கள் இனி எந்த ஒரு பக்தர் அங்கு வந்து சிவபெருமானையும், பொங்கு சனீஸ்வரரையும் வணங்கி துப்பார்களோ அவர்களது குடும்பத்தில் எவருக்குமே தங்களால் எந்த பிரச்சனையும் வராது என சத்தியம் செய்து கொடுத்தார்களாம். இதனால் இங்கு வந்து வழிபடும் பக்தர்களது இல்லங்களில் பேய், பிசாசுக்கள் வகையிலான எந்த தொல்லையும் இருக்காது என்பது நம்பிக்கை ஆகும். ஊமத்தம் பூவைக் கொண்டு பூஜை செய்வதும் இதனால்தான் இங்கு ஐதீகமாக உள்ளதாம்.

இந்த ஆலயத்தின் பிரதான தெய்வங்கள் திருகொள்ளிக்காடர் எனும் அக்னீஸ்வரர், தேவி மிருதுபாத நாயகி மற்றும் பொங்கு சனீஸ்வரர் ஆகும். தனி சன்னதிகளில் உள்ள மற்ற தெய்வங்கள் வினாயகப் பெருமான், பகவான் பிரும்மா, பகவான் தக்ஷிணாமூர்த்தி, வள்ளி மற்றும் தெய்வானை தேவிகளுடன் முருகப் பெருமான், தேவி துர்க்கை, தேவி மஹாலக்ஷ்மி மற்றும் நவகிரகங்கள். பிற ஆலயங்களில் வெவ்வெறு திசைகளை நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள நிலையில் காணப்படும் நவகிரகங்களுக்கு மாற்றாக இங்குள்ள ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள நவகிரகங்கள் ஒன்றுடன் ஒன்று நேராகவே பார்க்கும் விதத்தில் (பா எனும் எழுத்து வடிவில்) அமைந்துள்ளன என்பது கூடுதல் விசேஷம். அதன் காரணம் இங்குள்ள நவகிரகங்கள் பொங்கு சனி பகவானின் சக்திக்கு அடங்கி உள்ளவை, அவற்றுக்கான தனி சக்திகள் இங்கு கிடையாது என்பதே. ஆலயத்தின் எதிரில் பெரிய தண்ணீர் குளம் ஒன்று காணப்படுகின்றது. அந்த குளத்தில் எள்ளையும் தண்ணீரையும் விட்டு இறந்து போன மூதையோர்களது ஆத்மாக்கள் பசி இன்றி, தண்ணீர் தாகமின்றி இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டால் அது நிறைவேறும் என்பதும் ஒரு நம்பிக்கையாக உள்ளது.

இந்த ஆலயத்துக்கு திருவாரூர் அல்லது திருத்துறைபூண்டியில் இருந்து செல்ல நிறைய பேருந்துக்குள் உள்ளன. தனி நபர் வண்டிகளிலும் செல்ல நல்ல சாலை உள்ளது. ஆலய விலாசம்

திருக்கொள்ளிக்காடு ஆலயம்
திருக்கொள்ளிக்காடு சாலை,
கீராலத்தூர்
திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம் , தமிழ் நாடு 610205

ஆலய குருக்களின் தொலைபேசி எண் : 95853 82152

ஆலயம் காலை ஏழு மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரையும் மதியம் 4.30  மணி  முதல்  இரவு 7.30 மணிவரையிலும் திறந்து இருக்கும். ஆனால் சனிக்கிழமைகளில் ஆலயம் மதியம் மூடப்படாமல் முழு நேரமும் திறந்து உள்ளது.