பாலக்காட்டு மீன்குளத்தி

மீனாட்சி ஆலயம்

சாந்திப்பிரியா

கேரளாவில் பள்ளசேனா என்ற சிறிய கிராமத்தில் உள்ளதே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் மீன்குளத்தி மீனாட்சி எனும் ஆலயம். ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் கொடையனூர் சென்று அங்கிருந்து பள்ளசேனாவுக்கு செல்லலாம். இல்லை என்றால் பொள்ளாச்சி சென்று, அங்கிருந்து கோவிந்தபுரம் வழியே கொல்லன்கோட்டையை சென்றடைந்து அங்கிருந்து பள்ளசேனாவிற்கு செல்லலாம். அல்லது பாலக்காட்டை சென்றடைந்து அங்கிருந்து எட்டிமறை என்ற ஊரின் வழியாக ஆலயத்துக்கு செல்லலாம்.  நகரில் இருந்து இருந்து 22 அல்லது 23 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது . 

பல நூற்றாண்டுகள் வீர சைவ வெள்ளாளர்கள் என்ற சமூகத்தினர் (சிலர் அவர்களை மன்னடியார் என்று அழைக்கின்றார்கள்) சிலர் சிதம்பரம், கும்பகோணம், மதுரை, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மதுரை மீனாட்சியை தமது குல தெய்வமாக வணங்கி வந்திருந்தார்களாம். ஒரு காலத்தில் சிதம்பரம் மழை இன்றி வறண்ட நிலமாயிற்று. பஞ்சம் தலை விரித்தாட, அந்த பிரிவை சேர்ந்த மூன்று குடும்பங்கள் வேறு இடங்களுக்கு சென்று வாழத் துவங்கினார்கள். அப்படி சென்றவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்து ஒரு கல்லையும் தம்முடன் எடுத்துச் சென்று அதையே தமது குலதெய்வத்தின் சிலையாக கருதி வழிபட்டு வந்தார்களாம். இப்படியாக வேறு இடத்தை தேடி அலைந்த மூன்று குடும்பங்கள் முடிவாக கேரளாவுக்குச் சென்று பாலக்காட்டை உள்ளடக்கி இருந்த பள்ளசேனாவில் தங்கி வைர வியாபாரம் செய்து வந்தனர். பாலக்காட்டை சென்றடைந்தவர்கள் அந்த கல்லை ஒரு இடத்தில் வைத்து அதையே மீனாட்சி அம்மனாக கருதி வழிபட்டனர். அதன் பின் வருடா வருடம் மதுரைக்குச் சென்று குல தெய்வ தரிசனம் செய்து விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்கள்.

பொதுவாகவே அந்த காலத்தை சார்ந்த பாலக்காட்டை சேர்ந்த பலரும் வெளியில் செல்லும்போது வெய்யில் மற்றும் மழையை தவிர்க்க ஓலைக் குடை ஒன்றை தம்முடன் எடுத்துச் செல்வார்கள். அந்த மூன்று குடும்பத்தில் வயதானவர் ஒருவர் இருந்தார். அவருக்கு அதிக வயதாகி விட்டதினால் வருடா வருடம் மதுரைக்குச் சென்று அம்மனை வழிபட முடியவில்லை. அது அவருக்கு பெரிய குறையாக இருந்தது. ஆகவே அவர் தினமும் குளத்தில் நீராடியபின் அவர்கள் கொண்டு வந்திருந்த கல்லிடம் ‘அம்மா உன்னை மதுரைக்கு வந்து சேவிக்க முடியவில்லை. ஆகவே அங்குள்ள நீயே நான் இங்கு செய்யும் என்னுடைய பூஜையை ஏற்றுக் கொண்டு எனக்கு அருள் புரிய வேண்டும்’ என வேண்டுவாராம். இந்த நிலையில்தான் ஒரு நாள் அவர் ஒரு குளத்தருகில் தம்முடைய ஓலைக் குடையை என்றும் போல வைத்து விட்டு குளித்து விட்டு வந்தார். குளித்தப் பின் வந்து தனது குடையை எடுத்துக் கொண்டு செல்லக் கிளம்பியவரால் அந்தக் குடையை எடுக்க முடியவில்லை. அப்படியே பூமியில் ஒட்டிக் கொண்டு இருந்தது.

பயந்து போன அந்த வயதானவர் அங்கே விளையாடிக்கொண்டு இருந்த இரண்டு சிறுவர்களை அழைத்து, ‘இந்தப் பொருட்களையும் குடையையும் பார்த்துக் கொள்ளுங்கள். இதோ, வந்து விடுகிறேன்’ என்று சொல்லி விட்டு, வீட்டுக்குச் சென்று நடந்த அதிசயத்தைக் கூறிய பின் அவர்களையும் அங்கு அழைத்து வந்தார். ஆனால், அவர்களாலும் பூமியில் ஒட்டிக் கொண்டு இருந்த குடையை எடுக்க முடியவில்லை. அப்போது, அங்கே ஒரு ஒளிவட்டம் தெரிந்தது. அனைவரும் மெய்சிலிர்த்து நின்றார்கள். பயந்து போனவர்கள் உள்ளூரில் இருந்தவர்களை அழைத்து வந்து அந்த அதிசயத்தைக் காட்ட, அங்கு வந்தவர்கள் எப்படி முயன்றாலும் எவராலும் அந்தக் குடையை தூக்க முடியவில்லை. ஆகவே ஜோதிடர் (பிரசன்னம் கூறுபவர்) ஒருவர் அழைத்து வரப்பட்டார். வந்த ஜோதிடரும் பிரசன்னம் பார்த்த பின் அந்த இடத்தில் மதுரை மீனாட்சி குடி கொண்டு உள்ளாள் எனவும் அவர்கள் அந்த இடத்திலேயே அவளுக்கு ஆலயம் எழுப்பி வழிபடுமாறும் கூறினார். ஆகவே அந்த குடையை எடுக்க முடியாத அதே இடத்திலேயே மதுரை மீனாக்ஷிக்கு ஒரு சிறிய ஆலயம் எழுப்பி வணங்கி வரலானார்கள்.

நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு அதே அன்னை மீண்டும் இன்னொருவருடைய கனவில் தோன்றி தனக்கு அங்கேயே பெரிய அளவிலான ஆலயம் எழுப்புமாறு கூறிவிட உள்ளூர் மக்களிடம் நிதி திரட்டி அந்த சிறு ஆலயத்தின் பக்கத்திலேயே இன்று உள்ள ஆலயம் எழுப்பி, அந்த குளத்தையும் நான்கு புறமும் சிறு சுவர் எழுப்பி நல்ல முறையில் சீரமைத்தார்களாம்.

எதனால் ஆலயத்தில் உள்ள அம்மனை மீன்குளத்தி அம்மன் என்று கூறுகின்றார்கள்? ஒரு நாடோடிக் கதையின்படி அந்த குடை எடுக்க முடியாமல் இருந்த இடம் மீன்கள் அதிகம் இருந்த குளத்தின் பக்கத்தில் அமைந்து இருந்ததினால் அங்கு கண்டு பிடிக்கப்பட்ட அம்மனை மீன் குளத்தி அம்மன் எனக் அழைக்கலானார்களாம். இன்னொரு கதையின்படி அந்த ஆலயம் எழுந்தபோது ஒரு பக்தரின் கனவில் தோன்றிய அம்மன் தான் ஒரு சாபத்தின் காரணமாக அந்த ஆலயத்தின் பக்கத்தில் உள்ள மீன்கள் நிறைந்த குளத்திலேயே ஒரு மீனாக வசித்து வந்ததாகவும் அதனால்தான் சாப விமோசனம் பெற்றதும் அங்கேயே தான் தங்க விரும்பியதாகவும் கூறி, அங்கேயே கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து கொண்டதினால் அவளை மீன்குளத்தி அம்மன் என அழைத்தார்கள். இன்னும் சிலரின் கூற்றின்படி இங்குள்ள அம்மன் மீனைப் போன்ற கண்களை உடையவள். மீன் உறங்குவது இல்லை. அதை போலவேதான் இந்த அம்மனும் இரவு பகல் என இல்லாமல் எந்நேரமும் மீனைப் போலவே விழித்திருந்தவாறு பக்தர்களைக் காத்து வருகின்றாள் என்பதினால் அவளை மீனைப் போன்று ஆட்சி செய்கின்றாள் எனும் பொருளில் ‘மீன்குளத்து மீனாட்சி’ என அழைக்கின்றார்கள் என்றும் கூறுகின்றார்கள்.

அந்த ஆலயத்தில் அமரும் முன் தான் வாழ்ந்திருந்த அந்த குளத்தில் தனக்கு துணையாக இருந்த மீன்களை யாருமே கொல்லக் கூடாது என்றும், அப்படி யாரேனும் அந்த குளத்தில் இருந்து மீன்களை பிடித்தால் அவர்கள் வாழ்க்கையில் பெரும் பாவத்தை சுமந்து பல இன்னல்களை அனுபவிப்பார்கள் என்றும் கூறியதினால் அன்று முதல் இன்றுவரை அந்த குளத்தில் யாருமே மீன் பிடிப்பது இல்லையாம். அதையும் மீறி அந்த குளத்தில் இருந்து மீனை பிடித்தவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்களாம்.

அந்த ஆலயத்தில் வெளி சன்னதியில் (ஆலய வளாகத்துக்கு உள்ளேயே) உள்ள பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக கூறப்படுகிறார். பல இன்னல்களுக்கும் அவருக்கு பரிகார பூஜைகளை செய்கின்றார்கள். ஆலயத்தின் உள்ளே உள்ள அம்மன் கர்பகிரகத்தை சுற்றி பிரதர்ஷணம் செய்ய அனுமதிப்பது இல்லை. அதன் சம்பிரதாயம் என்ன என்று தெரியவில்லை. மீன் குளத்தி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள கற்பகிரகத்தில் உள்ள அம்மனை நேராக நின்று தரிசனம் செய்து வணங்கிய பின் இடப்புறமாக திரும்பி வெளியில் சென்று விட வேண்டும். ஆலயத்து வளாகத்துக்குள்ளேயே சப்த கன்னிகைகள், வினாயகர், சிவபெருமான், துர்கை போன்றவர்களுக்கும் சன்னதிகள் உள்ளன. இங்குள்ள துவஜஸ்தம்பம் தேக்கு மரத்தினால் செய்யப்பட்டு செப்பு தகட்டினால் முழுமையாக மூடப்பட்டு உள்ளதாகக் கூறுகின்றார்கள்.

இந்த ஆலயத்துக்கு வந்து குழந்தை மற்றும் திருமண பாக்கியம் பெற செய்யப்படும் வழிபாடுகள் நிச்சயமாக அவர்களது வேண்டுகோட்களை நிறைவேற்றுகிறது என்பதாகக் கூறுகின்றார்கள். அதை போலவே வியாபாரம் அல்லது வணிக நிறுவனம் வளர்ச்சி அடைய வேண்டும் என இந்த ஆலயத்தில் வேண்டிக் கொள்ளும் வணிகர்களின் வேண்டுதல் நிச்சயமாக நிறைவேறுவதாக இன்னொரு நம்பிக்கை உள்ளது. பில்லி சூன்யம் பாதிப்புகள் அகல, குறைகள் தீர்ந்திட மீன் குளத்தி பகவதி அம்மனை வணங்கினால் அவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதாகக் கூறுகின்றார்கள்.

இந்த ஆலயத்தில் சந்தனக் கல்லில் அரைத்த சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. குங்குமமும், அர்ச்சித்த மலரும் சந்தனத்தோடு வழங்குகின்றனர். இந்த ஆலயத்துக்கு செல்லும் ஆண்கள் வேட்டி அணித்து கொண்டு, மேல் ஆடை இல்லாமல் இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிப்பார்கள்.கால்சட்டை மற்றும் சட்டை, ஜிப்பா போன்ற மேலுடை அணிந்த ஆண்கள் எந்த காரணத்தைக் கொண்டும் ஆலயத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை . 

இந்த ஆலயத்தில் பலவிதமான அர்ச்சனைகள் செய்யப்பட்டாலும் முக்கியமானதும் விசேஷமானதும் அமோக அறுவடை பெற வேண்டும் என விவசாயிகள் செய்யும் ‘நிறப்பண அர்ச்சனை’ என்பதாகும் எனக் கூறுகின்றார்கள். அறுவடைக்குப் பிறகு ஒருபடி விளை பொருளை அம்மனுக்குக் காணிக்கையாக செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளும் பூஜை அது என்பதாக கூறுகின்றார்கள்.

ஆலயம் காலை 5.30 மணி முதல் 11.30 வரியிலும் மாலை 5.00 முதல் 8.30 வரையில் திறந்து உள்ளது. ஆனால் செய்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் 12.30 வரை ஆலயம் திறந்து இருக்கும். ஆலய விலாசம் மற்றும் தொடர்ப்பு கொள்ள வேண்டிய முகவரி:

பல்லஸ்ஸனா ஸ்ரீ பழையகாவில் பகவதி ஆலயம்
பழையகாவு தேவஸ்ஸோம்
பல்லஸ்ஸனா . P.O., பாலக்காடு (டிஸ்ட்ரிக்ட் )
பின் : 678 505
Phone: 04923 268495, 322125
mail@meenkulathitemple.com
www.meenkulathitemple.com