சித்தாடி காத்தாயி

அம்மனுக்கு  

ஆலயம் எழுந்த கதை

வள்ளி தேவியுடன் முருகப் பெருமானுக்கு திருமணம்  நடந்தபோது அந்த திருமணத்தில் பங்கேற்றவர்களில் ஒருவர் மூலிகை இலைகளை ஆடையாக அணிந்து கொண்டு வாழ்ந்திருந்த கஞ்சமலை முனிவர் என்பவர்  ஆவார்.  அவர் பழனி மலை  முருகப் பெருமானின் நவபாஷாண சிலையை செய்த போகர் எனும் சித்தரின்  குரு ஆவார். வள்ளி தேவி, தெய்வானை, மற்றும் முருகப் பெருமான் திருமணம் முடிந்ததும் கஞ்சமலை முனிவர் பூலோகத்துக்கு வந்து சிவபெருமானை துதித்தபடி தவத்தில் அமர்ந்து கொண்டார். கஞ்சமலை முனிவர் வானத்தில் பறக்கும் சக்தி கொண்டவர். யார் கண்ணுக்கும் புலப்படாமல் ஒரு சிறு அணுவாக சுற்றுவது,  ஓரே சமயத்தில் பல இடங்களில் தோன்றுவது, உடலை எடையற்றதாக்கி காற்றில் மிதப்பது, உடல் எடையையும், வலிமையையும் ஒரு மலைக்கு சமமாக உயர்த்திக் கொள்ளுதல், நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் இருப்பது, விரும்பிய அனைத்தையும் எளிதாகப் பெறுவது, எவ்விதமான சக்தி படைத்தவரையும் அடக்கி ஆள்வது, மற்றவரை தன் விருப்பப்படி ஆட்டுவிப்பது போன்ற  சக்திகளை உள்ளடக்கியதே அஷ்டமா சித்தி  ஆகும்.  அவர் 1000  வருட காலம் ஒரு குகையில் தவம் இருந்தவர். அவரை காலங்கி முனிவர் என்றும் அழைப்பார்கள்.

அவரது தவத்தினால் மனம் மகிழ்ந்து போன சிவபெருமான் அவர் முன் தோன்றி காட்சி தந்த பின் கலியுகத்தில் பூமியில்  அவதரிக்க இருந்த முருகப் பெருமானுக்கு உதவிட பூலோகத்தில் தங்கி இருக்கும் வகையில் வள்ளி தேவிக்கு சித்தாடி கிராமத்தில் ஒரு ஆலயம் அமைக்குமாறும், அதில் வள்ளி தேவி காத்தாயி அம்மன் எனும் பெயரில் வீற்று இருப்பாள் என்றும் அதே ஆலயத்தில் பார்வதி தேவிக்கும், முருகப் பெருமானுக்கும் சன்னதி அமைக்க வேண்டும் என்றும் கட்டளை இட்டார்.  அதைக்  ஏற்றுக் கொண்ட கஞ்சமலை முனிவர் தன்னிடம்  பல இறை சக்திகள் இருந்தாலும் அதை தனியே தன்னால் செய்ய இயலாது,  அதற்கு பூலோக மக்களின் உதவியும் தேவை என்பதை உணர்ந்தார்.  உடனடியாக யார் கண்களிலும் படாத வகையில்  தன்னை உருமாற்றிக்  கொண்டு  தினை பூமி என்று அழைக்கப்பட்ட  வயல்வெளி நிறைய  தினை பயிர்கள் பயிரிடப்பட்டு  இருந்த சித்தாடி கிராமத்திற்கு சென்றார். அங்கங்கே சில குடிசைகள் தென்பட்டன.

கஞ்சமலை முனிவர் சித்தாடிக்கு சென்றதும் ஒரு மரத்தடியில் நின்று கொண்டு  தூரத்தில் சென்று கொண்டு இருந்த அந்தணர் ஒருவரை ‘மகனே…. இங்கே வா’  என்று கூவி அழைத்தார். அவர் கண்களுக்குத் தெரியாமல் இருந்ததினால் அந்த அந்தணர் தன்னை அழைத்த குரல் வந்த திசையை நோக்கி நடந்து சென்று பார்த்தபோது  அங்கு யாரையும் காண முடியவில்லை என்றதும்  பயம் வந்து விட வேகமாக நடக்கலானார். ஆனால் அதே குரல் அவரை மீண்டும் அழைத்தது. ‘மகனே… அஞ்சேல், இந்த ஊரைக் காக்க வந்துள்ள நான் இங்குதான் இருக்கிறேன். நீ தினமும் இங்கு வந்து என்னை பூஜித்து வழிபட்டால் நான் இங்கேயே இருந்து கொண்டு அனைவரையும் காப்பாற்றுவேன்’ என்றதும் குரல் வந்த மரத்தடியை நோக்கி மீண்டும் நடந்து சென்று மரத்தின் அடியில் யாராவது அமர்ந்து இருக்கின்றார்களா எனது தேடியபோது அங்கு குவியலாக குங்குமம் மட்டுமே இருந்ததைக் கண்டார். அந்தக் குரல் கஞ்சமலை முனிவரின் குரல் என்பதை அறிந்திடாத அந்த அந்தணர் நினைத்தார் ‘இந்த குங்குமக் குவியலுக்குள் ஊரைக் காக்க வந்துள்ள  எதோ ஒரு தெய்வம்  மறைந்து கொண்டு உள்ளது, அதுவே என்னை அழைத்து உள்ளது… தமது ஊரைக் காக்க வந்துள்ள எதோ தெய்வத்தின் குரலே அது’ என்று  நினைத்தார்.

இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தத்தம்  கிராமங்களில் கிராம தேவதை என்ற பெயரில் ஏதாவது ஒரு தெய்வத்தை கிராம மக்கள்  வணங்கித் துதிப்பார்கள். தம்மை அபாயத்தில் இருந்து காப்பாற்றியவர்கள், இயற்கை சீற்றங்களில் தானாகவே ஓடி வந்து மக்களுக்கு உதவி செய்து இயற்கை சீற்றத்தில் இருந்து காப்பாற்றியவர்கள், மற்றும் மாபெரும் வீரர்கள் போன்றவர்களது மரணத்திற்குப் பிறகு அவர்கள் வாழ்ந்த அல்லது மறைந்த இடத்தை புனிதமாகக் கருதி சிலை  அல்லது வெறும் ஒரு பாறாங்கல்லை புதைத்து வைத்து அந்த சிலையை கிராமத்து கடவுளாகக் கருதி வழிபடுவார்கள். அது மட்டும் அல்ல, அந்த ஊரில் இருந்த நல்ல மனிதர்கள் அந்த ஊரிலேயே  நல்ல ஆவிகளாக இருந்து கொண்டு  இயற்கை சீற்றங்களான வெள்ளம், புயல் மற்றும் பிற தீமைகளில் இருந்து  கிராம மக்களை காப்பாற்றி வருகின்றார்கள் என்பது பொதுவான நம்பிக்கை இருந்தது.  அதை போலவே சில நேரங்களில் ஊர் திருவிழாக்களில் சாமியாடிகள் என்பவர்கள் (சிலர் உடலில்  தெய்வம் புகுந்து கொண்டு பேசும்) ஊர் மக்களை சிலவற்றை செய்யுமாறு கட்டளை இடுவார்கள். சில நேரங்களில் யாருடைய கண்களுக்கும் தெரியாமல் வானத்தில் இருந்து பேசி கட்டளைகளை தருவார்கள். சில நேரங்களில்  யாராவது கனவில் தெய்வங்கள் தோன்றி சிலவற்றை செய்யுமாறு கட்டளை இடுவார்கள். அப்படிப்பட்ட ஆவிகளை மதிக்காமல் அவமதித்தால் அவர்கள் அந்த ஊரில் தொற்று நோய்களை பரப்பியும், இயற்கை சீற்றங்களை வரவழைத்தும் ஊர் ஜனங்களை துன்பத்தில் ஆழ்த்துவார்கள் என்ற பயம் கலந்த நம்பிக்கை ஆழமாகவே இருந்தது.  ஆகவே கண்களுக்குத் தெரியாத அந்த ஆவிகளை தேவதைகள், கிராம தேவதை மற்றும் ஊர் காக்கும் தேவதை என்ற பெயர்களில் வணங்கி வந்திருந்தார்கள். தம்மை நம்பி வழிபடும் மக்களைக் காக்கும் விதமாக அந்த கிராமத்தில் ஏதாவது  தீய சக்திகளோ அல்லது தீய ஆவிகளோ நுழைய முயன்றால் அவற்றை அந்த கிராம எல்லையிலிருந்தே  துரத்தி அடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது. இப்படிப்பட்ட நம்பிக்கைகள் நிலவி வந்ததினால்தான் அந்த  அந்த அந்தணரும் குங்குமக் குவியலில் இருந்து வெளிவந்த குரலை அன்னையின் தெய்வ வாக்காகவே நம்பி இருக்க வேண்டும்.

இப்படியான நம்பிக்கைகள் அந்த காலத்தில் இருந்தமையினால்  அந்த அந்தணனும்  குங்குமம் கொட்டிக் கிடந்த இடத்திற்கு தினமும் சென்று அதற்கு பூ வைத்து ‘அம்மா தாயே நீதான் இந்த ஊர் ஜனங்களைக் காப்பாற்றி அருள் புரிய வேண்டும்’ என பிரார்த்தனை செய்து கொண்டு பூஜை செய்து வணங்கலானார்.  சில நாட்கள் இது தொடர்ந்து நடந்தது.   கஞ்சமலை முனிவர் இப்படியாக அங்கு வள்ளி தேவியின் இன்னொரு தோற்றமான காத்தாயி அம்மனுக்கு  ஆலயம் அமைக்கும் முதல் முயற்சியை துவக்கி வைத்து விட்டார். ஒவ்வொரு நாளும் அந்த அந்தணர்  பூஜை செய்து முடித்த  பின் அந்த குங்குமத்தில் மறைந்திருந்த காத்தாயி அம்மன் ஏதாவது ஒரு விதத்தில் – அதாவது பல்லி கத்துவது, பறவை அங்கு வந்து உட்கார்ந்து கூவுவது அல்லது வேறு விதங்களிலான சப்தங்களை எழுப்பி  அந்த பூஜையை தான் மனதார ஏற்றுக் கொண்டதின் அடையாளமாக  காட்டுவது வழக்கமாக இருந்தது. ஒரு நாள் அந்த அந்தணர் நினைத்தார் ‘இத்தனை கடுமையான தகிக்கும் வெய்யில் இந்த குங்குமத்தின் மீது விழுகின்றதே, அது சரி அல்லவே, அதை எப்படி தடுத்து நிறுத்துவது’. அந்த மன உறுத்தலினால் மறுநாள் முதல் கடும் வெய்யில் அடிக்கத் துவங்கியதும்  குங்குமக் குவியல் மீது தனது கையை குடைபோல வைத்து வெய்யில் விலகும்வரை அப்படியே அமர்ந்திருந்தார். நாட்கள் நகர்ந்தாலும் இந்த செயலும் தொடர்ந்து நடந்தது.

வெய்யில் காலம் முடிந்து மழைக்காலம் துவங்கியது.  வெளித் தெரியாமல் அங்கேயே மறைந்திருந்த காத்தாயி அம்மன் அந்த அந்தணரிடம் கேட்டாள்’ வெய்யிலில் இருந்து இதுவரை என்னைக் காத்து விட்டாய். மழை பெய்யும் போது நான் அந்த மழை நீரினால்  பாதிக்காமல் இருக்க என்ன செய்யப் போகிறாய் ?’ சரியான கேள்விதான் என்றாலும் உடனடியாக ஒரு பதிலைக் கொடுக்க முடியாமல் திணறிய அந்தணர்,  அடிப்பகுதியில் குங்குமம் பாதுகாப்பாக இருக்கும் வகையில் களிமண்ணால் ஆன ஒரு பெரிய பொம்மையை செய்து வந்து அதை அந்த குங்குமக் குவியல் மீது வைத்து விட்டார். மழை நீர் அதன் மீது விழுந்தாலும் குங்குமக் குவியலை அழிக்காத வகையில் அந்த மண் பொம்மை பாதுகாத்தபடி இருந்தது. ஆனால் இன்னொரு யோஜனை அவரை சுற்றியது. நீரில் களிமண் எத்தனை நாட்கள் கரையாமல் இருக்க முடியும்? அதற்கான தீர்வை அந்த தேவியே கூறட்டும் என எண்ணி அங்கேயே  தியானத்தில் அமர்ந்து கொண்டார்.  தெய்வ மகிமை  என்பதைக் காட்டும் வகையில் எத்தனை கடுமையான மழை பெய்தும் மழை நீர் அதன் மீது விழவில்லை, அந்த களிமண் பொம்மையும்  மழையினால் பாதிக்கப்படவில்லை. மழை  காலமும் முடிந்தது. குங்குமக் குவியல் கரையாமல் அப்படியே பத்திரமாக களிமண் பொம்மைக்கு அடியில் இருந்து வந்தது.

ஒரு நாள் தன்னை மறந்து தியானத்தில் இருந்தவர் மனக் கண்ணில் ஒரு உருவம் தெரிந்தது. மெல்ல மெல்ல  சில கட்டங்கள், அதன் மீது முக்கோணங்கள் என எழுந்தவாறு இருக்க  அதன் நடுவில் ஒரு பெண் உருவம் பெரியதாக தெரிந்தது.  அந்த பெண் தெய்வத்தின் அழகை எந்த விதத்திலும் வர்ணிக்க முடியாத வகையில்   தத்ரூபமாக இருந்தது. சற்று நேரத்தில் அந்த பெண் உருவம் கூறியது ‘மைந்தனே நான் இந்த  தினைப்புனத்தை காக்க வந்தவள். ஆதியில் மூவுலகையும் காத்தவள்  நானே. ஆகவே இந்த மண்ணைக்  காக்க வந்து, மூன்று சுற்றுக்களுடன் கூடிய கொண்டையைக் கொண்ட சிலையாக   இந்த பக்கத்தில் ஓடும் ஆற்றில் மறைந்துள்ள என்னை வெளியில் எடுத்து, பிரதிஷ்டை செய்து வழிபடு’.

இப்படியாக கூறிய பின் அந்த குரல் நின்று விட்டது. தியானம் கலைந்த அந்தணருக்கு ஒன்றும் புரியவில்லை. மனத்  திரையில் தோன்றிய காட்சி மறைய மறுத்தது, காதில் விழுந்த குரலும் ஒலித்துக் கொண்டே இருந்தது. தன்னை அறியாமல் விடியற்காலை ஆற்றின் கரைக்கு சென்று நின்று கொண்டார்.  ஆற்றில் ஏதாவது மும்முடி கொண்ட சிலை மிதந்து வருமா என பார்த்துக் கொண்டே நின்றார். சில மணி நேரத்தில் மும்முடி கொண்ட சிலை மிதப்பது போல காட்சி தெரிந்தது. அவர் எதிரிலேயே அது நீரில் மூழ்கியது. அவ்வளவுதான். அப்படியே அந்த சிலையை பிடிக்க ஆற்றில் பாய்ந்தார். நீரில் மூழ்கி தேடியபோது ஆற்று மணலில் முழுகிக் கிடந்த சிலை கிடைத்தது.  அந்த சிலையை தலையில் வைத்துக் கொண்டு ஆனந்தக்   கூத்தாடியவர் அந்த சிலையை கொண்டு வந்து  மேற்கு பகுதியில் சிறு மேடை ஒன்றை அமைத்து  அதன் மீது மரத்தடியில் களிமண் பொம்மையில் பாதுகாப்பாக தான் வைத்திருந்த குங்குமக் குவியலைக் கொண்டு வந்து கொட்டினார். குங்குமக் குவியல் மீது நதியில் கிடைத்த சிலையை பிரதிஷ்டை செய்து விட்டார். அந்த சிலையை  ஊரைக் காக்க வந்த ஆயி எனக் கூறி வழிபடலானார். அந்த பெயரே பின்னாளில் காத்தாயி அம்மன் என மருவி இருக்க வேண்டும். 

நாம் மகிழ்ச்சியாக  உள்ள நேரத்தில்  சில நேரங்களில் நம்மை அறியாமலேயே பிழைகளை செய்து விடுவது உண்டு. அதை போலவேதான் அந்த அந்தணரும் ஆற்றில் கிடைத்த சிலையை பிரதிஷ்டை செய்யும்போது தன்னை அறியாமலேயே ஒரு பெரிய தவறை செய்து விட்டார்.    பீடம் அமைத்து ஆற்றில் கிடைத்த சிலையை பிரதிஷ்டை செய்த பின், மழையில் இருந்து இத்தனை நாளாக அந்த குங்குமக் குவியலைக்  காப்பாற்றியது அந்த மண்பொம்மைதானே, இத்தனை நாளும் அதற்கு பூஜை வேறு செய்து வழிபட்டு உள்ளோமே என சற்றும் யோஜனை செய்து பார்க்காமல், நாம் செய்த களிமண் பொம்மைத்தானே, இனி எதை எதற்காக வைத்து இருக்க வேண்டும் என நினைத்து அதை எடுத்து ஆற்றில் வீசி எறிந்து  விட்டார்.

மறுநாள் எப்போதும் போல அங்கு வந்து பூஜையை முடித்தப் பின்னல் அன்னையை குரல் கூவி அழைத்தார். ஆனால் அதை அன்னை ஏற்றுக் கொண்டதற்கான அடையாளக் குரல் வெளி வரவில்லை. மீண்டும் மீண்டும் உரத்தக் குரலில் அழைத்தார். அன்னையின் பதில் கிடைக்கவில்லை.  மனம் பதறிப் போய் ‘அம்மா, நான் என்ன பிழையை செய்து விட்டேன், எனக்கு பதில் தர மறுக்கிறாய்?’ என அழுது புலம்பியபோது திடீர் என மீண்டும் ஒரு குரல்  ஆற்றுப் பக்கத்தில் இருந்து வந்தது ‘மைந்தனே, நான் எப்படி அங்கு வர இயலும் ? என்னைத்தான் நீ மீண்டும் ஆற்றுக்குள் தூக்கிப் போட்டு விட்டாயே. ஆகவேதான் நானும் ஆற்றோடு போய் விட்டேன்’. அந்த அந்தணருக்கு தன்  மண்டையில் யாரோ ஓங்கி அடிப்பது போல இருந்தது.  தான் அறியாமல் செய்து விட்ட தவறை உணர்ந்தார். ஆனால் என்ன செய்ய முடியும் ? காலம் கடந்து விட்டது, களிமண் பொம்மையும் ஆற்றில் கரைந்து விட்டது. இனி அதை எப்படி திரும்பக் கொண்டு வர முடியும்?

‘அம்மா, தெரியாமல் தவறு செய்து விட்டேன். இந்தப் பாவி செய்த தவறை மன்னித்து விடம்மா. நீ திரும்பவும் இங்கு வர வேண்டும்.  இல்லை  எனில் நான் பூஜிக்கும் இந்த  சிலையை  என்  இடுப்போடு கட்டிக் கொண்டு நானும் இந்த ஆற்றில் குதித்து என்னை அழித்துக் கொள்வேன். என் மனதாற உன்னை  ஆராதித்தேன். இரு கரங்கள் போதாதென்ற அளவில் பூக்களை போட்டு பூஜித்தேன். ஆனாலும் தவறு என்பதை உணராமல், அவசர கதியில், நீ குடி கொண்டு இருந்த களிமண்ணால் ஆன சிலையை எடுத்து  ஆற்றில்  போட்டு விட்டேன். இந்த இரு கால்களும்தானே என்னை ஆற்றுக் கரை வரை போக உதவியது. முதலில் இவை இரண்டையும் முறித்து விடுகிறேன் என பைத்தியம் பிடித்தவர் போல அலறிக் கதறியவாறு தொடர்ந்து தோப்புக்கரணம் போடத் துவங்கினார். தோப்புக்கரணம் போடப் போட கால்களில் இருந்த சதைகளும், நரம்புகளும் பிய்ந்து இரத்தம் கொட்டியது. என்னதான் இருந்தாலும் ஒரு தாயினால் தன் குழந்தைப்படும் அவஸ்தையை வெகு நேரம்  பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்பதினால் மனம் இறங்கி மீண்டும் அவர் முன் தோன்றி ஆசி கூறினாள்.

‘மகனே உன் பக்தியை மெச்சினேன். அறியாமல் செய்து விட்ட உன் பிழையையும் மன்னித்தேன். நான் இங்கு மூன்று கொண்டைகளோடு ஞானாம்பிகையாகவும், உன் மனதில் இடம் கொண்டுள்ளதினால்  ஒட்டிக் கொண்டவள் என்ற ஒட்டியாண ரூபியாகவும் உங்கள் அனைவரையும் காத்து அருளும் வகையில் கருணாமயியாகவும் இங்கிருப்பேன்’  என அவருக்கு காட்சி தந்து  ஆசிர்வதித்தப் பின்  மீண்டும் ஆற்றில் இருந்து அவர் எடுத்து வந்து  பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்த சிலைக்குள்   தன் சக்தியை செலுத்தி ஒளி ஏற்றினாள். அந்த மூன்று அம்சங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உள்ளதே  காத்தாயி அம்மனின் தலையில் காணப்படும் மூன்று கொண்டை முடிச்சுக்கள்.

மறுநாளும் அவர் முன் தோன்றி காட்சி தந்த அம்மன்  தான் நம்பிராஜன் என்பவரிடம் வளர்ந்ததினால் தன்னை நம்பி வந்தோரை  கைவிட மாட்டேன் என்றும், பறவைகளை வயல்வெளியில் இருந்து விரட்டி அடித்தது போலவே மக்களின் அறியாமையை அவர்கள் மனதில் இருந்து துரத்தி  அடித்து அவர்களது துன்பங்களையும் துயரங்களையும் விலக்குவேன்  என்பதாகவும் உறுதி அளித்தாள்.

அதே போல  கஞ்சமலை முனிவர் மற்றும் பார்வதி தேவியுடன் சேர்ந்தே இருக்க விரும்புவதினால் அவர்களுக்கும் தன் ஆலயத்தில் சன்னிதானம் அமைக்க வேண்டும் எனவும் கூறினாள்.  அதை போலவே பிற ஏழு முனிவர்களான இளம் ஊதா நிறமேனி கொண்ட செம்முனி,  தீய எண்ண  ஓட்டங்களை விரட்டி அடிக்கும் வாழு முனி , செல்வத்தைத் தர உதவிடும் கும்ப முனி, ஞானத்தை பெருக்க உதவிடும் லாட முனி, யோக நிலையில் உள்ள ஜடா முனி, அமைதியான உருவைக்  கொண்ட நாத முனி, உடலெங்கும் முத்துக்களால் ஆன ஆபரணங்களை போட்டுக் கொண்டுள்ள முத்து முனி போன்றவர்களுக்கும் அங்கு இடம் அமைத்து அவர்களை வழிபட வேண்டும் என்று உத்தரவு இட்டாள்.

ஆலய வளாகத்தின்  உள்ளேயே இடது கையை ஒரு நாகத்தின் தலையில் வைத்திருந்தவாறும், கையில் தாமரை மலரை ஏந்திய நிலையிலும் கஞ்சமலை  சிவபெருமான் காட்சி அளிப்பதை போலவேதான் காத்தாயி அம்மனும் தனது கையில் தாமரை மலரை ஏந்திய நிலையில் காட்சி தருகின்றாள். அதை போலவேதான் இன்னொரு பகுதியில் வீரபாகு முனிவர் தனது மனைவி வீரமித்ராவுடன் காட்சி தர லாட சன்யாசி, பேச்சாயி அம்மன் மற்றும் தன்வந்தரியும்   காட்சி தருகின்றார்கள்.

கோவிலூர் நெல்லித் தோப்பில் உள்ள காத்தாயி ஆலய கதையில்   அந்த ஏழு முனிவர்களும்  வள்ளி தேவியை எடுத்து வளர்த்த வேடன் நம்பிராஜனின் மகன்கள் என்பதான செய்தியை தருகின்றது. கிராமிய கதையின்படி அந்த ஏழு முனிவர்களும் காத்தாயி அம்மனுக்கு காவல் உள்ள பரிவார தேவதைகள் என்பதாக கூறுகின்றார்கள்.  இதனால்தான் காத்தாயி அம்மன் எனும் ஆலயம் எங்கு இருந்தாலும் அந்த ஆலயங்கள் அனைத்திலுமே  அந்த ஏழு முனிவர்களது சிலைகள் காணப்படுகின்றன. சில கிராம பாடல்களில் காத்தாயி அம்மன் தவம் என்ற பெயரில் பாடல்  உள்ளதாகவும், காத்தாயி அம்மனின் திருமணத்தை மன்னார்சாமி காத்தாயி திருமணம் என்ற பெயரில் பாடலாகப் பாடுகிறார்கள் என்பதாகவும் செய்தி உள்ளது. மன்னார்சாமி எனும் பெயர்   மன்னர்களில் மன்னன் என்பதான பொருளுடன்  முருகப் பெருமானைக் குறிக்கும்.

பச்சைவாழி அம்மன் என்கின்ற காத்தாயனி  அம்மன்

பச்சைவாழி அம்மன் என்கின்ற  காத்தாயனி  அம்மனும் இதே ஆலயத்தில் ஒரு சன்னதியில்  அமர்ந்து   இருக்கின்றாள். புராணங்களை படித்தால் பல தெய்வங்கள் தமது கணவன் – மனைவிகளை துறந்து, மனிதப்பிறப்பு எடுத்து வந்து சாப விமோச்சனம் பெற்றதும் மீண்டும் அவரவர்களே மறு மணம் செய்து கொண்டு உள்ளது தெரியும் .அதனால்தான் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் பார்வதி தேவி பெற்று இருந்த ஒரு சாபத்தின் காரணமாக அவள் பூலோகத்தில் பிறந்து தவத்தில்  இருக்க வேண்டி இருந்தது.  தவத்தின் முடிவில் சிவபெருமான் அவளுக்கு காட்சி தந்து அவளை மீண்டும் மணக்க இருந்தார். அதற்கு முன்னரே காத்யாயன  முனிவர் ஒருமுறை சிவபெருமானிடம் ஒரு விஜித்திரமான கோரிக்கையை வைத்து இருந்தார்.  அது என்ன என்றால் ‘பார்வதி தேவி அவருக்கு  மகளாகப் பிறக்க வேண்டும். அவளை சிவபெருமானுக்கு அந்த முனிவரே மணம் முடித்துக் கொடுக்க வேண்டும்’. ஆகவே இதுவே சரியான தருமணம் என முடிவு செய்த சிவபெருமான்  பார்வதி தேவியை பூலோகத்துக்கு  சென்று  காத்யாயன முனிவரின் மகளாகப் பிறந்து திருமண வயதை எட்டும்போது தவத்தில் இருக்குமாறு கூறி அனுப்பி வைக்க அவளும் காத்யாயன  முனிவரின் மகளாகப் பிறந்து கல்யாண வயதை அடைந்தவுடன் சிவபெருமானை துதித்து தவத்தில் இருந்தாள். அவளது தவத்தை மெச்சிய சிவபெருமான் அவள் முன் தோன்றி அவளை மணக்க இசைந்தார். அந்த திருமணத்தை அவரது சக முனிவர்களான சிவ, தர்மா, நடா, யோகா, வாஸ், புருடா போன்ற முனிவர்கள் மற்றும் வேறு பல முனிவர்கள் முன்னிலையில்  காத்யாயன முனிவர் நடத்தி வைத்தார்.  திருமணம் முடிந்ததும் காத்தாயனி எனும் பெயரில் பார்வதி தேவியே அங்கு காத்தாயி அம்மன் சன்னதியின் பக்கத்து சன்னதியில் அமர்ந்து கொண்டு அருள் பாலிக்கின்றாள். பார்வதி தேவியின் திருமணம் அங்கு நடந்ததினால் திருமணத் தடை உள்ளவர்களும், குழந்தைகள் இல்லாதவர்களும் அங்கு வந்து அவளை ஆராதித்து பூஜித்தால் அவர்களது கோரிக்கை நிறைவேறும் என்பது நம்பிக்கை.

முடிவுறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை தாலுக்காவில்  செங்குடி எனும் கிராமத்தில் ஒரு காத்தாயி அம்மன் ஆலயம் உள்ளது. அதை போலவே தஞ்சாவூர் உடையார் கோவில் பசும்படியார் வசிக்கும் ஸ்ரீ காத்தாயி அம்மன் கோவில்,  சாக்கோட்டை காத்தாயி அம்மன் ஆலயம், புதுக்கோட்டை வல்லவாரி காத்தாயி அம்மன் ஆலயம், திருத்துறைப்பூண்டி காத்தாயி அம்மன் ஆலயம் மற்றும் வடுவூர் தென்பாதி காத்தாயி அம்மன் போன்ற இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன. அத்தனை ஏன் சித்தாடி கிராமத்திலேயே  இன்னொரு காத்தாயி அம்மன் ஆலயம் உள்ளது. இவற்றைத் தவிர வேளாங்கண்ணி மகழிவாழ் முனீஸ்வரர் காத்தாயி அம்மனும் பெருமை வாய்ந்த ஆலயம் ஆகும். ஆனால் அவை அனைத்திலுமே  காத்தாயி அம்மன்  கிராம தேவதையாகவே  கருதப்பட்டு வழிபடப்படுகிறாள்.

முடிவுற்றது