பகவான் ஹனுமாரின்

வாலின் மகிமை

எழுதியவர்: சாந்திப்பிரியா

பகவான் ஹனுமார் வழிபாடு குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை கூறுவார்கள். பகவான் ஹனுமார் படத்தை பூஜை அறையில் வைத்து வழிபடக் கூடாது, அப்படி தொடர்ந்து செய்து வந்தால் திருமணம் ஆகாதவர்கள் பிரும்மச்சாரியாகவே இருப்பார்கள், திருமணம் ஆனவர்கள் திருமண வாழ்வில் அதிக நாட்டம் இல்லாமல் இருப்பார்கள் என்றெல்லாம் மூட நம்பிக்கை உள்ளது. அந்த எண்ணங்களின் அடிப்படைக் காரணம் பகவான்  ஹனுமார் ஒரு பிரம்மச்சாரியாக கருதப்படுவதே ஆகும். ஆனால் அவை அனைத்துமே அடிப்படை உண்மை இல்லாத, சாமான்யர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வேத புராணங்களில் காணப்படாத செய்திகள். அவரவர் மனதில் எழுந்த பயத்தின் விளைவாக, மூட நம்பிக்கையில், தவறான எண்ணங்களின் அடிப்படையில் பரப்பப்பட்டவை ஆகும். ஆனால் அப்படிப்பட்ட கருத்துக்கள் குறிப்பிட்ட சில பகவான் விக்கிரக வழிபாட்டை மேற்கொள்வதற்கே பொருந்தும் என்றாலும், அதே சமயம் பூஜை அறையில் சுவற்றில் மாட்டி வைக்கப்பட்டு வழிபடப்படும் ஒருசில தெய்வங்களுக்கு அந்த கருத்து பொருந்தும். 

பகவான் ஹனுமாரின் வாலில் பொட்டு வைத்து வேண்டிக் கொள்ளும் வழிபாட்டின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளும் முன்னால் வீட்டில் வழிபாட்டுக்குறிய தெய்வ வழிபாடு குறித்த சில தன்மைகளை குறித்து தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.   பொதுவாகவே பூஜை அறைகளில் வதம் செய்யும் காட்சியில் உள்ள, யுத்த கோலங்களில் உள்ள, கழுத்திலும் உடலிலும் கபால ஓட்டை மாலையாக அணிந்தபடி பயங்கரமாக நாக்கை வெளியில் இழுத்து வைத்து, ரத்தம் சொட்டும் வாளினை கைகளில் ஏந்தியபடி காணப்படும் உக்ர தெய்வங்களின் படங்களை வைத்து வழிபடக்கூடாது என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட உக்கிர தெய்வங்களை முறைப்படி ஆராதித்தால் மட்டுமே  நமக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்க தெய்வங்கள் அருள் புரிவார்கள். அப்படிப்பட்ட தெய்வங்களை முறைப்படி ஆராதிக்காவிடில் அவர்களது கோபத்துக்கு ஆளாகி தொடர்ந்து தொல்லைகளையும் துயரங்களையும் நம் வாழ்வில் சந்திக்க நேரிடும். இதனால்தான் சாந்தமான தோற்றத்தில் உள்ள தெய்வத்தை நாம் பூஜை அறையில் வைத்து வணங்கலாம் என்பதாக கூறுவார்கள். இந்த நிலை விக்கிரஹ வழிபாடு மற்றும் படத்தை பூஜை அறையில் மாட்டி வைத்து வழிபடும் இரண்டுக்குமே பொருந்தும். உக்கிர தெய்வங்களாக அரக்கர்களை வதம் செய்யும் கோலத்தில் உள்ள பத்திரகாளி, மகிஷாசுரமர்த்தினி, ஹயக்ரீவர் மற்றும் பிரதியிங்கரா தேவி, கால பைரவர் போன்றவர்களைக் கூறுவார்கள். அதேபோல சன்யாசி கோலத்தில் உள்ள சிவபெருமான் மற்றும் தனது மார்பை கிழித்துக் கொண்டு ராமபிரான் தன் இதயத்தில் உள்ளதைக் காட்டும் ஹனுமானின் தோற்றம் கூட அடக்கம். அதன் காரணம் அப்படிப்பட்ட தெய்வங்கள் உக்ர நிலையில் இருப்பதினால், அவற்றை வழிபட அந்தந்த தெய்வங்களுக்கு உகந்த வழிபாடு விதிமுறைகள், நியமங்கள் போன்றவற்றை தகுந்த ஆச்சார்யர்கள் மூலம் கற்றறிந்து செய்ய வேண்டும் என்பதே ஆகும். உக்ர தெய்வங்கள் சாந்தமான நிலையில் இருந்து கொண்டு நம்மை காத்தருள வேண்டும் என்பதற்காக அந்த நியமங்களை கடை பிடித்து அவற்றுக்கு பூஜைகளை செய்ய வேண்டும். இல்லை என்றால் அவற்றின் உக்ரம் நமக்கு பல பாதகங்களை  தந்து விடும். கிரஹஸ்தர்களால் அத்தனை நியமங்களையும் கடை பிடிப்பது எளிதல்ல என்பதற்காகவே உக்கிர தெய்வங்களை வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபடுவதை தவிற்குமாக பெரியவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள், இப்படிப்பட்ட அறிவுரைகளும் காலம் காலமாக கூறப்பட்டு வந்துள்ளன.

ஹனுமாருடைய பஞ்சமுக தோற்றம் கூட தீய சக்திகளை வசியம் செய்து கொண்டு அவற்றின் சக்திகளை ஏவி எதிரிகளை அடக்கி வந்திருந்த மயில்ராவண வதத்தின் போதுதான் தோன்றியது என்பதினால் பகவான் பஞ்சமுக ஹனுமாரும் கூட ஒரு யுத்த தெய்வமாகவே இருந்துள்ளார். அதனால்தான் அப்படிப்பட்ட பஞ்சமுக ஹனுமாரை  பூஜை அறையில் வைத்து வணங்காமல், மாற்றாக சாந்த முகம் கொண்ட பகவான் ஹனுமானை வழிபடலாம், பொட்டு வைத்து வேண்டுதல் செய்யலாம் என்கின்றார்கள். இந்த அடிப்படையில்தான் அனைத்து தெய்வங்களின் சக்திகளையும் தனது வாலில் உள்ளடக்கிக் கொண்டுள்ள பகவான் ஹனுமார்  வாலுக்கு பொட்டு வைத்து வேண்டிக் கொள்வதின் மகத்துவம் முன்னிலை பெறுகின்றது.

பகவான் ஹனுமாரை சிவபெருமானின் அம்சம் என்பதாகவே புராணங்களில் கதைகள் உள்ளன. பல பெரிய மகான்களும் அதையே கூறி உள்ளார்கள். இன்னும் சிலர் அவரை மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்பதாகவும் கூறுவார்கள். புராணங்களில் அவர் வாயு பகவானின் மைந்தன் எனவும் கூறப்பட்டு உள்ளது. பகவான் ஹனுமானைக் குறித்த செய்திகள் நாரத புராணம் மற்றும் விஷ்ணு புராணங்கள் மூலமே தெரிய வந்துள்ளன.

ராமபிரானுக்கு யுத்த காலத்தில் துணை புரிந்து அவர் யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே பகவான் ஹனுமானுடைய அவதாரம் படைக்கப்பட்டதாம். அதன் காரணம் நாரத முனிவர் விஷ்ணு பகவானுக்கு கொடுத்த சாபம்தான் காரணமாம். ஒருமுறை விளையாட்டாக விஷ்ணு பகவான் நாரத முனியின் முகத்தை நாரதருக்கே தெரியாமல் குரங்கு போல ஆக்கிவிட்டார். அதை அறியாமல் ஒரு வைபவத்துக்கு சென்ற நாரதர் அவமானப்பட்டு கூனி குறுகினார். கோபத்துடன் விஷ்ணுவிடம் சென்று அவருடைய ஒரு பிறப்பில் அவருடைய உயிரை ஒரு வானரம் மூலமே காக்கும் நிலை வரட்டும் என சபித்து விட்டதினால் பகவான் ராமபிரானாக அவதரித்த விஷ்ணு பகவானுக்கு பகவான் ஹனுமாருடைய துணை தேவைப்பட்டது என்பதினால் பகவான் ஹனுமானின் அவதாரம் தோன்றியதாம்.

இராமாயண யுத்தத்தில் பகவான் ராமனுக்கு துணை புரிந்த பகவான்  ஹனுமாருக்கு அவரைக் கண்டு எதிரிகள் அனைவரும் பயப்படும் நிலையையும், எந்த ஒரு உருவையும் அவரால் எந்த நிலையிலும் எடுக்க முடியும் சக்தியையும் பகவான் பிரும்மா கொடுக்க, பகவான் சிவபெருமான் அவர் அழிவற்ற சிரஞ்சீவியாக இருப்பார் என்றும், எத்தனைப் பெரியதாக இருந்தாலும் அந்த மலையையோ, கடலையோ எளிதில் தாண்டிச் செல்லும் சக்தியையும் கொடுக்க, இந்திர பகவான் வலிமை கொண்ட வஜ்ராயுத சக்தியையும், நீரினால் எந்த துன்பமும் நேராது என வருண பகவானும் பல்வேறு சக்திகளை  பகவான் ஹனுமானுக்கு கொடுத்தார்கள். அவர்களைத் தவிர எம பகவான், சூரிய பகவான், பகவான் குபேரர், சீதா தேவி மற்றும் நவகிரகங்களின் சக்திகளையும் பகவான் ஹனுமார் பெற்றுக் கொண்டு அவற்றை தனது வாலில் அடக்கிக் கொண்டார் என்பதினால் அவருடைய வாலின் மகிமை  அதீத முக்கியத்துவம் பெற்றது.

பகவான் ஹனுமாருடைய வாலில்தான் அவர் யுத்தத்தின்போது பல தெய்வங்களிடம் இருந்தும் பெற்று இருந்த அத்தனை தெய்வ சக்திகளும் நிறைந்துள்ளன, அத்தனை நவக்கிரகங்களின் சக்திகளும் அடங்கி உள்ளன என்பதினால் தினமும் ஒரு பொட்டை வாலில் வைத்து வரும்போது அந்த பொட்டு வைக்கும் இடத்தில் உள்ள தெய்வங்களின் சக்திகள் அதனதன் சக்திக்கேற்ப வேண்டுதல் செய்பவரின்   துயரங்களை, மற்றவர்கள் கண் திருஷ்டியை, மற்றவர்களால் ஏற்படும் தீமைகளை மெல்ல மெல்ல களையத் துவங்கும். இதற்கு மேலும் இன்னொரு மகிமையும் உள்ளது. கண்களை மூடியபடி அமர்ந்துள்ள பகவான் ஹனுமான் தினமும் தொடர்ந்து கோடிக்கணக்கான ராம நாம ஜெபத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பதினால் அந்த மந்திரத்தின் சக்தியும் வாலில் போய் மற்ற சக்திகளுடன் அமர்ந்து கொள்கின்றது. இதனால் தினமும் பொட்டு வைக்கையில் அந்த மந்திரத்தின் சக்தி பொட்டு வைப்பவர் உடலில் புகுந்து சென்று அவர்கள் உள்ளே உள்ள அனைத்து தீய எண்ணங்களையும், தீய சக்திகளையும் அழிக்கத் துவங்கி விடுவதினால், மெல்ல மெல்ல பகவான் ஹனுமான் வாலில் பொட்டு வைத்து துதிப்பவர்கள் மனதிலும் இதயத்திலும் இனம் புரியாத தெய்வீக அமைதி நிலவத் துவங்குவதை உணர்வார்கள். இந்த நம்பிக்கையினால்தான் பகவான் வாலுக்கு பொட்டு வைத்து வேண்டிக் கொள்ளும் பழக்கம் வந்துள்ளதாம்.

இலங்கைக்கு சென்ற பகவான் ஹனுமானின் வாலில் ராவணனின் வீரர்கள் தீ மூட்டி விட்டதும் அந்த தீயினால் அவருக்கு எந்த துன்பமோ துயரமோ ஆகாமல் இருக்க அக்னி பகவான் வரம் கொடுத்தார். அது மட்டும் அல்ல தனது வாலை எத்தனை பெரியதாகவும் நீட்டவோ சுருக்கவோ முடியும், எத்தனை கனத்தையும் எளிதில் சுமக்க முடியும் என்ற சக்திகளையும் அவர் கொடுத்தார்.

இராமாயண யுத்த காலகட்டத்தில் பகவான் ஹனுமாருடைய மகிமை வெளித் தோன்றியது. அதற்கு முன்னர் அவர் ஆற்றல் குறித்த, அவரது மகிமை குறித்த எந்த ஒரு செய்திகளும் அதிகம் காணப்படவில்லை. யுத்தம் முடிவடைந்ததும் ராமபிரான் தான் மறைய முடிவு செய்து விட்டதை கூறியதும், அவர் முன் மண்டியிட்டு அமர்ந்த பகவான் ஹனுமார் தான் பூமியிலேயே இருந்து கொண்டு ராமபிரானின் நாமத்தை பூமியிலே உள்ளவர்கள் மனதார ஜெபிப்பதை காண ஆசைப்படுவதாகக் கூற பகவான் ராமனும் அவர் அமைதியான சாந்த உருவில் ஆலயங்களில் அமர்ந்திருப்பார் என்றும், அங்கு வரும் பக்தர்களுடைய ராம நாம ஜெபத்தினால் அவர் மனம் மகிழ்வார் எனவும் கூறிவிட்டு மறைந்தார்.

ஒரு நாடோடிக் கதையின்படி  பகவான் ராமர் மறையும் முன்னர் அவர் அவதாரத்தில் இருந்த பகவான் மஹாவிஷ்ணு தனது சுய ரூபத்தில் பகவான் ஹனுமாருக்கு  காட்சி அளித்து அவருக்கு பல தெய்வங்களிடம் இருந்தும் கிடைத்த சக்திகளை அவருடைய வாலின் நுனிப் பகுதியில் உள்ள சிறிய மணியில் அடக்கிக் கொள்ள வேண்டும் என்றும், அந்த கோலத்தில் உள்ள பகவான் ஹனுமாரை வேண்டி வணங்குபவர்கள் அந்த மணியை அடிக்கும்போது அந்த மணியின் மெல்லிய இனிமையான ஓசை ராமநாம ஜெபத்தை ஒலிக்கும் என்றும் கூறினார்.

மேலும் எவர் ஒருவர் தனது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள பகவான் ஹனுமானின் வாலினை வணங்கி விரதம் இருப்பார்களோ, அவர்கள் அந்த விரத முடிவில் அந்த மணியை அடித்து விரதத்தை முடிக்கும்போது அவர் அந்த மணி ஓசையில் கண் விழித்து அவர்களுக்கு அருள் புரிவார், அதனால் அவர்களுடைய அனைத்து தீமைகளும் அழியும் என்றும் கூறினார். இந்த அடிப்படையினால்தான் ஆலயங்களில் மணியடித்து பூஜைகள் செய்யும் பழக்கம் துவங்கியது என்றும் கூறுகின்றார்கள். மணியடித்து பூஜிக்கும் வழக்கம் அதற்கு முன்னர் நிலவியதாக எந்த ஒரு புராணத்திலும் குறிப்புக்கள் கிடையாது.

இதனால்தான் பகவான் ஹனுமாரை வழிபட வேண்டும் எனில் வீட்டில் சாந்த சொரூபமான வாலில் மணி கட்டிய பகவான் ஹனுமாரின் படத்தை- அவர் எந்த கோலத்தில் சாந்தமாக இருந்தாலும், கையில் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு பறக்கும் காட்சியிலோ, பகவான் சிவபெருமானின் முன்னால் மண்டியிட்டு வணங்கும் காட்சியிலோ இருந்தாலும் அவற்றை வைத்து வழிபடலாம் என்றும், யுத்த கோலத்தில் உள்ள பகவான் பஞ்சமுக ஹனுமானை பூஜை அறையில் மாட்டி வைத்து வழிபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறுவார்கள். பூஜை அறையில் மாட்டி வைத்து வழிபடப்படும் பகவான் ஹனுமான் எந்த கோலத்தில் இருந்தாலும் சரி, அவருடைய வாலில் மணி கட்டி இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

நாம் நம்முடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேறவும், துன்பங்கள் களைய வேண்டும் எனவும், தீய சக்திகளின் துன்புறுத்தல்களில் இருந்தும் விடுதலை பெற வேண்டும் எனவும் பகவான் ஹனுமாருக்கு தினமும் பொட்டு வைத்து வழிபடலாம். தினமும் பகவான் ஹனுமாரின் வால் நுனியில் உள்ள மணி கட்டிய இடத்தில் ஒரு சிந்தூர் பொட்டு வைப்பது பல நன்மைகளைத் தரும்.

அதை போல நம்முடைய குறிப்பிட்ட வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக 48 நாட்கள் (வேறு சிலர் அதை 45 நாட்கள் விரதம் என்றும் கூற்றுவார்கள்) விரதம் இருப்பது போல அவருடைய வாலில் பொட்டு வைத்து வணங்குவது உண்டு. நமது கோரிக்கைகள் நிறைவேற குளித்தப் பின் பூஜை அறைக்கு சென்று பகவான் ஹனுமானுக்கு முன்பாக நின்று கொண்டு பத்து முறை கீழ்கண்ட ஹனுமான் காயத்ரி மந்திரத்தை சொல்லிவிட்டு, நமது வேண்டுகோளை மனதில் நினைத்துக் கொண்டு பகவான் ஹனுமாருடைய வாலில் கீழ் பகுதியில் துவங்கி பொட்டு வைத்து நமஸ்கரிக்க வேண்டும்.

ஓம் ஆஞ்சனேய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமத் பிரசோதயாத்

இப்படியாக காயத்ரி மந்திரத்தை ஓதும்போது அது அவரவர் காதில் மட்டுமே ஒலிக்கும் வகையில் இருக்க வேண்டும், மற்றவர்கள் கேட்கும் அளவில் உரக்கக் கூறக்கூடாது. 48 நாளோ அல்லது 45 நாளோ தினம் தினம் பகவான் ஹனுமானின் வாலில் தொடர்ந்து பொட்டு வைத்து வணங்க வேண்டும். 48 நாட்கள் முடியும் முன்னரே வைக்கப்படும் பொட்டு வாலின் நுனிப்பகுதியை அடைந்து விட்டாலும் கவலை வேண்டாம். மீதி பொட்டுக்களையும் வாலின் நுனியில் உள்ள பொட்டின் மீதே பொட்டாக வைக்கலாம். 48 அல்லது 45 நாட்கள் முடிந்தவுடன் வாலின் நுனியில் போடப்படும் பொட்டு முடிந்ததும் மறக்காமல் வாலின் நுனி மீதுள்ள மணியின் மீதும் ஒரு பொட்டு வைத்து வேண்டுதலை முடித்துக் கொள்ள வேண்டும். அதன் பின் வீட்டில் பிரசாதம் செய்து பகவான் ஹனுமானுக்கு படைத்த பின் ஒரு ஆலயத்துக்கு சென்று பகவான் ஹனுமாரை வணங்கி விட்டு வர வேண்டும்.

வாலில் பொட்டு வைத்து வழிபடும் வேண்டுதலை செய்வதை செய்வாய் கிழமை அல்லது சனிக்கிழமை துவங்குவது நல்லது. வேண்டுதலுக்கு பொட்டு வைக்கும் பெண்களின் மாத விலக்கு காலத்தில் அவர்களுக்கு பதிலாக வேறு எவரேனும் பொட்டு வைத்து விரதத்தை தொடரலாம். ஆனால் எது எப்படி இருந்தாலும் 45 அல்லது 48 ஆவது நாளன்று வேண்டுதலின் முடிவில் வேண்டுதலை துவக்கியவர் பொட்டு வைத்து விரதத்தை முடித்து வைக்க வேண்டும் என்பது முக்கியம். ஆகவே விரதத்தை துவக்கும் பெண்கள் மாதவிலக்கை கவனத்தில் கொண்டு விரதத்தை துவக்குவது நல்லது.

இப்படிப்பட்ட பொட்டு வைக்கும் பகவான் ஹனுமார் படம் எளிதில் கிடைப்பது இல்லை என்பதினால் கீழே பகவான் ஹனுமாருடைய படங்கள் பிரசுரிக்கப்பட்டு உள்ளது. அதை கடையில் கொடுத்து பிரிண்ட் செய்து கொண்டு பயன்படுத்தலாம்.