தெய்வீக அன்னை

சிவம்மா தாயீ

-சாந்திப்பிரியா

ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் பெரும்பாலான பக்தர்களுக்கு பாபாவின் நேரடி பெண் சிஷ்யையாக இருந்த  தெய்வீக அன்னை  சிவம்மா தாயீ’ குறித்த செய்திகள் எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்றாலும் கடந்த சில வருடங்களாக மெல்ல மெல்ல அன்னாரின் வாழ்க்கை வரலாறும், அவர் செய்துள்ள பணிகளும் சாயி பக்தர்கள் இடையே பரவி வருகின்றது. பெண் சிஷ்யை என்ற வகையில் பொதுவாகவே அனைவரும் அறிந்துள்ளது பாபாவுடன் ஷீரடியில் தங்கி இருந்த  தெய்வீக அன்னை  ராதாகிருஷ்ண மாய்  என்பவரைக் குறித்துதான். 1899 ஆம் ஆண்டில் பிறந்த  தெய்வீக அன்னை  ராதாகிருஷ்ண மாய்க்கு  அவரது பதினேழாம் வயதில் திருமணம் ஆயிற்று. அடுத்த எட்டு நாட்களிலேயே அவரது கணவர் இறந்து விட்டார். மனதில் வேதனை நிறைந்து வாழ்ந்தவர் ஒருநாள் வீட்டை விட்டு வெளியேறி, இந்தியாவின் பல இடங்களிலும் இருந்த ஆலயங்களுக்கு சென்று வழிபட்ட பின் இறுதியாக 1907 ஆம் ஆண்டுவாக்கில் ஷீரடிக்கு வந்து விட, அவருக்கு ஷீரடி ஸ்ரீ சாயிபாபா அடைக்கலம் தந்து சாவடி மற்றும் துவாரகமாயிக்கு  இடைப்  பகுதியில் ஒரு இடத்தில் தங்க வைத்தார் என்பது  செய்தியாகும்.   தெய்வீக அன்னை  ராதாகிருஷ்ண மாய் தமது தாயைப் போன்றவர் என ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவே கூறினார் என்றும், முடிவில் அந்த தெய்வீக அன்னை அவருடன் கலந்து அப்படியே மறைந்து விட்டதாகவும் கூறுகின்றார்கள். அதனால்தான் அந்த தெய்வீக அன்னையார் குறித்து பாபாவின் பக்தர்களுக்கு தெரிந்து உள்ளது, அதே சமயத்தில் ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவின் நேரடி பெண் சிஷ்யையான தெய்வீக அன்னை சிவம்மா தாயீ குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போய்  விட்டது என்பதின்  காரணம் தெய்வீக அன்னை சிவம்மா தாயீ சீரடியில் இருந்து வெகு தொலைவில் இருந்த தென் இந்திய பகுதியில் தங்கி இருந்ததுதான்.

ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவுடன் அவர் வாழ்ந்திருந்த காலத்தில் நெருக்கமாக அவருடனேயே தங்கி இருந்தவர்கள் வடநாட்டை, குறிப்பாக மராத்திய மானிலத்தை  சேர்ந்தவர்கள் என்பதினால், அவர்களுடன் நெருக்கமாக பழகி இருந்தவர்களைக் குறித்து மட்டுமே அவர்கள்  அறிந்திருந்தார்கள். பாபாவின் வாழ்வின் முதல் கட்ட காலத்தில் ஸ்ரீ பாபாவின் பெருமையும், புகழும் மராட்டிய மானிலத்தில்  மட்டுமே பரவி இருந்தது. மற்ற இடங்களில் அதிகம் பரவிடவில்லை. ஸ்ரீ பாபாவின் புகழ் பிற இடங்களில், முக்கியமாக தென் இந்திய பகுதியில் முழுமையாகப் பரவுவதற்கு, தமிழ்நாட்டில், முக்கியமாக சென்னை நகர மையத்தில் சாயி ஆலயம் அமைத்து ஸ்ரீ சாயி புகழைப் பரப்பிய  பூஜ்ய ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி, என்ற  தென் இந்திய மகான் மட்டுமே காரணமாக இருந்தார். ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் மேன்மையை பரப்பி, ஸ்ரீ பாபாவுடன் நேரடித் தொடர்பில் இருந்த அவரைக் குறித்தும் கூட ஸ்ரீ சாயி சரித்திரத்தில்  கூறப்படவில்லை எனும்போது தெய்வீக அன்னை சிவம்மா தாயீ குறித்த தகவல்கள் ஸ்ரீ சாயி சரித்திரத்தில் இடம் பெறாதது ஆச்சர்யம் தரக்கூடியது அல்ல. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஸ்ரீ பாபாவின் தீவிரமான பக்தர்கள் இருந்திருந்தாலும் -தெய்வீக அன்னை சிவம்மா தாயீயின் உறவினர் முதல் அந்த அன்னைவரை – எவரும்  ஷீரடி ஸ்ரீ சாயிபாபா வாழ்ந்திருந்த காலத்தில் அவருடன் நெருக்கமாக அவருடனேயே தங்கி இருந்த திரு மால்சபதி, திரு ஹேமட் பந்த், திரு காகா சாஹேப் தீக்ஷித், திரு நானா சாஹேப் சாண்டோல்கர், திரு கோபால் ராவ், திரு தாஸ்கணு மஹராஜ் போன்ற எவருடனும் தொடர்ப்பில் இருந்திடவில்லை. இதன் காரணமாகவே ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் அதிகாரபூர்வமான வாழ்க்கை வரலாற்றையும், அவருடைய லீலைகளையும் காட்டும் ஸ்ரீ சாயி சரித்திரத்தில் அவர்களது பெயர்கள் காணப்படவில்லை என்பதாக நினைக்கத் தோன்றுகின்றது.

ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் ஒரே பெண் சிஷ்யையான தெய்வீக அன்னை சிவம்மா தாயீ அவர்கள் 29-05-1889 ஆம் ஆண்டு கோயம்பத்தூரில் உள்ள வெள்ளிக் கிணறு எனும் கிராமத்தில் பிறந்தவர். விவசாயம் மற்றும் பல  தொழில்களில் புகழ் பெற்றவர்களாக இருக்கும் கவுண்டர் எனும் பிரிவில் பிறந்த அந்த அன்னையாரின் தந்தை திரு வேலப்ப கவுண்டர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு இருந்தார். திரு வேலப்ப கவுண்டருக்கு அவருடைய மனைவி திருமதி புஷ்பாவதி மூலம் நான்கு குழந்தைகள் பிறந்தார்கள். அவர்களில் இருவர் ஆண்கள், மற்றும் இருவர் பெண்கள். அந்த நால்வரில் மூத்தவர் தெய்வீக அன்னை சிவம்மா தாயீ அவர்கள் ஆவார்.

இளமைக்  கால பருவத்தில் தெய்வீக அன்னை சிவம்மா தாயீ கூட்டு குடும்பத்தில் வாழ்ந்தவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு  கொண்டு இருந்த அவருடைய பெரியப்பா திரு தங்கவேல் கவுண்டர் ஒரு கட்டத்தில் துறவறத்தை மேற்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். தெய்வீக அன்னையின் குடும்பத்தினர் அனைவருமே எளிமையான வாழ்வை மேற்கொண்டு இருந்து வந்தவர்கள். தெய்வீக அன்னை சிவம்மா தாயீ பள்ளிப் படிப்பை மேற்கொண்டு இருந்ததாக  தகவல் இல்லை. அந்த காலத்தில் இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்ததினால் கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையிலான பள்ளிக் கூடங்கள் கிடையாது. அதனால்தான்  தெய்வீக அன்னை சிவம்மா தாயீ ஓரளவுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்த அளவில் மட்டுமே பள்ளிக்கூடம் சென்று இருந்திருக்க வேண்டும்.  அவள் வாழ்க்கை வரலாறு குறித்து காணப்படும் கட்டுரைகளிலும் கதைகளிலும்  அவருடைய இளமைக் கால வாழ்க்கை குறித்த தகவல்களும் கிடைக்கவில்லை. அந்த காலங்களில் வீட்டில் உள்ள பெண்கள் வயதுக்கு வந்ததுமே அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து  விடுவார்கள். அதனால்தானோ என்னவோ 1904 ஆம் ஆண்டு தெய்வீக அன்னை சிவம்மா தாயீக்கு பதிமூன்று வயதானபோது அவளுக்கு திரு சுப்பையா கவுண்டர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கு திருமணம் ஆகி ஒரே வருடத்தில் மணிராஜ் எனும் மகன் பிறந்தார். திரு சுப்பையா கவுண்டர் கோயம்பத்தூரிலேயே ஒரு வேலையில்  அமர்ந்திருந்தார். எவருடனும் அதிகம் பழக மாட்டார், பிடிவாதம் மற்றும் அடிக்கடி எரிச்சல் அடைவதும் அவர் பிறவிக்கு குணம் ஆகும். தான் எனும் மமதை அதிகம்.  பிறருடன் அனுசரித்துக் கொண்டு போக இயலாத அவருடன் தெய்வீக அன்னை சிவம்மா தாயீயினால் நெருங்கி வாழ முடியாத சூழ்நிலை இருந்தது.

திரு தங்கவேல் கவுண்டர்  ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் சீடராக இருந்தவர் என்பதினால் அவர் வீட்டிற்கு பல மகான்கள் வருகை தருவது உண்டு. அதனால் தெய்வீக அன்னை சிவம்மா தாயீ மனதில் அவளை அறியாமலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. அந்த காலத்தில் ஷீரடி  ஸ்ரீ சாயி பாபா கிழக்குப் பகுதியில் பெரும் புகழ் பெற்ற மகானாக இருந்து வந்தார். அப்போதுதான் திரு தங்கவேல் கவுண்டர் சுமார் எழுபது வயதானவராக கருதப்பட்டு வந்திருந்த ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவை கோயம்பத்தூர் அருகில் இருந்த பொள்ளாச்சி நகருக்கு அழைத்து வந்திருந்தார். ஷீரடி ஸ்ரீ சாயிபாபா எழுபது வயதானவர் எனக் கூறப்பட்டாலும், அவர் உண்மையில் எந்த ஆண்டு பிறந்தார் எனும் வரலாற்று செய்திகள் எதுவுமே கிடைக்கவில்லை. கோயம்புத்தூருக்கு வந்த ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் தரிசன விழா இரு நாட்கள் கொண்டாடப்பட்டு வந்தன. முதல் நாள் விழா முடிவுற்றதும் ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவிடம் வந்த திரு தங்கவேல் கவுண்டர், அந்த கூட்டத்தில் ஒரு மூலையில் தமது குடும்பத்தினர் பலரும் அமர்ந்து இருக்கின்றார்கள் என்றும், அவர்களில் எவராவது ஒருவருக்கு அவர் மந்திரோபதேசம் செய்து தீட்ஷை தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அதை ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவும் ஏற்றுக் கொள்ள அந்தக் கூட்டத்தில் இருந்து ஆறுபேர்களை திரு தங்கவேல் கவுண்டர் அழைத்து வந்தார். அனைவரையும் பார்த்த   ஷீரடி ஸ்ரீ சாயிபாபா அவர்களில் இருந்த பெண் குழந்தையான அன்று ராஜம்மா என அழைக்கப்பட்ட தெய்வீக அன்னை சிவம்மா தாயீயை அழைத்து அவள் காதில் காயத்ரி மந்திரம்  ஓதி அவளுக்கு தீட்ஷை தந்தார். அது மட்டும் அல்ல, பிற்காலத்தில் தெய்வீக அன்னை சிவம்மா தாயீ தனது வாழ்க்கை வரலாற்றை ஒரு பத்திரிகையாளரும் கூறியபோது தனக்கு ஷீரடி ஸ்ரீ சாயிபாபா காயத்ரி மந்திரத்தை காதில் மட்டும் போதவில்லை, அதை ஒரு காகிதத்தில் எழுதித் தந்தார் எனக் கூறி உள்ளார். எது எப்படியோ, காயத்ரி மந்திரத்தை ஆண்கள் மட்டுமே ஓதி வந்த  அந்த காலத்தில் ஒரு பெண்ணுக்கு அதுவும் ஷீரடி ஸ்ரீ சாயிபாபா மந்திரோபதேசமாக தந்தது வரலாற்று சிறப்பு மிக்கதாகவே உள்ளது. அப்படி ஒரு மந்திரோபதேசத்தை ஷீரடி ஸ்ரீ சாயிபாபா அவர்கள் வேறு எந்த ஒரு பெண்மணிக்கும் ஓதி உள்ளதாக அவருடைய சரித்திரத்தில் எங்குமே காணப்படவில்லை. இதன் மூலம் தெய்வீக அன்னை சிவம்மா தாயீ அவர்கள் மட்டுமே ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் முதலும், முடிவுமான நேரடி சிஷ்யையாக மாறினார் என்பது விளங்கும்.

ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் வரலாற்று செய்திகளை படித்தோம் எனில் பாபா அவர்கள்  1858 முதல்  1918 வரை ஷீரடி நகரை விட்டு வெளியில் சென்றதே இல்லை என்பது புரியும். ஆனால் ஷீரடி ஸ்ரீ சாயிபாபா அவர்கள் பகவான் தத்தாத்திரேயரின் அவதாரம் என்பதினால் அவரால் பல இடங்களிலும், ஒன்றுடன் ஒன்று எத்தனை தொலைவில் தள்ளி இருந்தாலும், ஒரே நேரத்தில் தமது பூத உடலுடன் ஒரே நிலையில் காட்சி அளிக்க முடியும்  என்பதின் காரணம் சில தெய்வங்கள் அப்படிப்பட்ட சக்தியைப் பெற்று உள்ளன என்பதே.  ஆகவே ஷீரடி நகரில் ஷீரடி ஸ்ரீ சாயிபாபா தங்கி இருந்தாலும், அவரால் கோயம்புத்தூருக்கு சென்று இருக்க முடியும் என்பதைக் கேட்கும்போது அது வியப்பை தரவில்லை. இது குறித்து யாரும் சந்தேகப்பட வேண்டியது இல்லை. அதை போலவேதான் பகவான் தத்தாத்திரேயரின் நான்காவது அவதாரமாக கருதப்பட்ட, ஹும்னதாபாத்தில் வாழ்ந்திருந்த ஸ்ரீ மானிக் பிரபு எனும் தெய்வப் பிறவி பல இடங்களிலும் ஒரே நேரத்தில், ஒரே நிலையில், நேரடியாக பூத உடலுடன் காட்சி அளித்து இருக்கின்றார்  என்பதை அவர் வாழ்க்கை வரலாற்றை படித்தால் தெரிய வரும்.

நாட்கள் செல்லச் செல்ல தெய்வீக அன்னை சிவம்மா தாயீ தன்னை அறியாமலேயே ஷீரடி ஸ்ரீ சாயிபாபா மீது அதிக ஈடுபாடு கொள்ளத்  துவங்கினார். ஆனால் அவரது கணவருக்கு ஷீரடி ஸ்ரீ சாயிபாபா மீது நம்பிக்கை இல்லாமல் இருந்ததினால் அவளுக்கு ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவைக்  காண செல்ல வேண்டும் என்பதில் ஒத்துழைப்பு தர மறுத்தார். ஆனாலும் தெய்வீக அன்னை சிவமாதாயீயின் வற்புறுத்தலால் அவளுடன் ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவை  காண ஷீரடி  செல்ல சம்மதித்தார்.  அப்போது தெய்வீக அன்னை சிவம்மா தாயீக்கு பதினேழு வயதே ஆகி இருந்தது. அவர்கள் குடும்பமாக ஷீரடிக்கு புறப்பட்டுச் சென்றார்கள். அந்த முதல் பயணத்திலேயே தெய்வீக அன்னை சிவம்மா தாயீக்கு ஸ்ரீ பாபாவின் அற்புத அனுபவம் ஏற்பட்டது. அந்த காலத்துப் பெண்கள் வெற்றிலைப் பாக்கு சாப்பிடுவது பழக்கம். ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தபோது அவருடன் உதவிக்கு சென்று இருந்த பெண்மணிக்கு ரெய்ச்சூர்  நிலையத்தில் தெய்வீக அன்னை சிவம்மா தாயீ ஒரு கட்டு  பீடா வாங்கி கொடுத்தார். அதை மென்று தின்னத் துவங்கிய அந்த பெண்மணி, அது சாப்பிட முடியாத அளவில் சுவை அற்றதாக உள்ளது எனக் கூறிவிட்டு, அதை அப்படியே வெளியில் துப்பி விட்டாள். ஓரிரு நிமிடங்கள் கடந்தன. மேல் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு வயதான பயணி கீழே இறங்கி வந்தார். அவர்கள் கேட்காமலேயே ஒரு கட்டு பீடாவை அவர்களுக்கு தந்தபின் மேலே சென்றுவிட்டார். அற்புதமான சுவை கொண்ட அந்த பீடாவை தின்றதும் அந்த முதியவருக்கு நன்றி கூற அவர்கள் மேல் இருக்கையில் அவரைத் தேடியபோது, அவர் காணப்படவில்லை. அவர்கள் ஷீரடிக்கு சென்றதும், அது குறித்து சிலரிடம் பேசியபோது, ஷீரடி ஸ்ரீ சாயிபாபா தான் பக்தர்களுடன் எப்போதும் உள்ளதை அவர்களுக்கு தெரிவிக்க  நடத்தும் அற்புதங்களில் ஒன்று என்ற உண்மையைக் கூறினார்கள். அதன் பின்னர் ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவை தெய்வீக அன்னை சிவம்மா தாயீ சந்தித்தபோது ஷீரடி ஸ்ரீ சாயிபாபா அவரிடம் ‘நல்லா இருக்கின்றாயா?’ என தமிழில் கேட்டதாக அன்னை கூறி உள்ளார். ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவுடனான முதல் சந்திப்புக்குப்  பிறகு அவருடைய மீதான ஈடுபாடு  அந்த தெய்வீக அன்னைக்கு இன்னமும் அதிகம் ஆயிற்று.

அதன் பிறகு எப்போது ஷீரடி ஸ்ரீ சாயிபாபா தன்னிடம் பேசினாலும், தமிழில்தான் உரையாடினார் என்பதாக தெய்வீக அன்னை சிவம்மா தாயீ ஒரு பேட்டியில் கூறினாராம். ஷீரடி ஸ்ரீ சாயிபாபா ஷீரடியில் பல லீலைகளை நடத்தி உள்ளார் என்பது திரு ஹேமச்சந்தி பந்த் என்பவர் எழுதி உள்ள புத்தகத்தில் காணப்படுகின்றது. அதில் ஒரு மகிமையாக, எரிந்து கொண்டு இருந்த அடுப்பில் வைக்கப்பட்டு இருந்த அண்டாவில் இருந்து கொதித்துக் கொண்டு இருந்த கஞ்சியை ஷீரடி ஸ்ரீ சாயிபாபா வெறும்  கைகளால் வெளியில் எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்த நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த நேரத்தில் தானும் அங்கிருந்த மிகச் சிறிய கூட்டத்தினரில்  ஒருவள் எனவும், ஷீரடி ஸ்ரீ சாயிபாபா கைகளினால் தானும் அந்த பிரசாதத்தை பெற்றுக் கொண்டு உண்டதாகவும் தெய்வீக அன்னை சிவம்மா தாயீ   கூறி இருக்கின்றார்.  அதை போலவே ஷீரடி ஸ்ரீ சாயிபாபா தன உடலின் பாகங்களை தனித்தனியே கழற்றி எடுத்து விட்ட  பின், தனது குடலையும் வெளியில் எடுத்து சுத்தம் செய்து மீண்டும் தன்னுள் வைத்துக் கொண்ட கண்டயோகம்  எனும் மகிமையையும் நேரில் பார்த்ததாகவும் தெய்வீக அன்னை சிவம்மா தாயீ கூறி உள்ளார்.

இதனிடையே காலம் கடந்தது. தெய்வீக அன்னையின் கணவர் வேறு வேலையில் அமர்ந்த பின் பெங்களூருக்கு வந்து குடி அமர, தெய்வீக அன்னை சிவம்மா தாயீயும் அவருடன் வர வேண்டியதாயிற்று. பெங்களூருக்கு வந்தது முதல் அந்த தெய்வீக அன்னை மேலும் அதிக அளவில் ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் பக்தையாக மாறி விட்டாள். எப்போதுமே ஸ்ரீ பாபாவின் நாமத்தை உச்சரித்தபடி இருந்தாள். சிந்தனை முழுவதும் ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் நினைவுடன் இருந்ததினால் கணவன் மனைவி எனும் இல்லற இன்ப வாழ்க்கையில் நாட்டத்தைக் குறைத்துக் கொண்டு ஆன்மீக வாழ்வில் அதிக நாட்டம் கொள்ளாத துவங்க, கணவன் மனைவி இல்லற உறவு தடைப்பட்டதினால் ஏற்பட்ட கோபத்தில் அவளுடைய கணவருடன் அடிக்கடி சண்டையும் சச்சரவும் ஏற்பட்டது. வாழ்க்கையில் புயல் வீசியது.  அவர்களுக்கு இடையிலான நெருக்கம் குறையத் துவங்க ஒருநாள் கோபமுற்ற அவரது கணவர் திரு சுப்பையா கவுண்டர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அது குறித்து வேறு சிலர் கூறுவது என்ன என்றால் அவருடைய கணவருக்கு  தெய்வீக அன்னை சிவம்மா தாயீ தாம்பத்திய உறவை கொடுக்க இயலாமல் இருந்ததினால் அவருக்கு தானே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார் எனவும், அதன் பின்னரே அவர் அந்த வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறுகின்றார்கள். அதனால் தனிமைப் படுத்தப்பட்ட தெய்வீக அன்னை சிவம்மா தாயீயும் ஆறுதல் கொடுக்க ஆதரவற்ற நிலையில் தனது மகனை அழைத்துக் கொண்டு கோயம்பத்தூரில் இருந்த தனது தந்தையின் வீட்டுக்கு சென்று விட நேர்ந்தது.  ஆனால் அங்கும் அவளுக்கு சோதனை தொடர்ந்தது.   போலீஸ் வேலையில் இருந்த அவளுடைய மகன் ஒருநாள் இரு சக்கர வாகன விபத்தில் பலியானார். அவருடன் அவர் மனைவியும் பலியாகிவிட, தான் முற்றிலும் அனாதை  போல ஆனதாக தெய்வீக அன்னை உணர்ந்தார். அவளது தந்தை அவளைத் தேற்றினார். காலம் அவளது துயரத்தைக் குறைக்கத் துவங்கியதும், அந்த தெய்வீக அன்னை ஒரு உண்மையை உணர்ந்தார். அதாவது ஷீரடி ஸ்ரீ சாயிபாபா தன்னை அவரிடம் முழுமையாக சரணடைய வைத்துக் கொண்டு, தனது சேவையை அவள் செய்ய வேண்டும் என விரும்பி இருந்திருக்க வேண்டும், அதனால்தான் இப்படி எல்லாம் தனது வாழ்க்கையில் நடந்து உள்ளது என்பது புரிந்தது. அது முதல் முழூ மூச்சுடன் ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவுக்கு சேவை செய்ய அந்த தெய்வீக அன்னை  தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.

இப்படியாக வாழ்ந்து கொண்டு இருந்தவள் 1917 ஆம் ஆண்டு ஷீரடிக்கு சென்று இருந்தபோது அவரது இயற்கைப் பெயரான ராஜம்மா என்பதை சிவம்மா என ஷீரடி ஸ்ரீ சாயிபாபா மாற்றினார். சிவம்மா என்ற பெயர் சிவபெருமானின் தாயாரின் பெயர் என்பதாக ஸ்ரீ பாபா அவரிடம் கூறினாராம். அந்த பெயர் மாற்றமே அவளது வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதன் பின் ஷீரடி ஸ்ரீ சாயிபாபா அவளை பெங்களூருக்கு சென்று, தனது பெயரில் ஆஸ்ரமம் ஒன்றை நிறுவி மக்களுக்கு சேவை செய்யுமாறு கூறி அனுப்பினார்.  அதை அப்படியே ஏற்றுக் கொண்ட அந்த தெய்வீக அன்னை சிவம்மா தாயீ உடனடியாக பெங்களூருக்கு கிளம்பி வந்தார் என்றாலும் அங்கு அவளுக்கு ஆதரவு தந்து தங்க இடம் கொடுக்க யாருமே இல்லை என்பதை இங்கு வந்த பின் உணர்ந்தார். ஆனாலும் ஸ்ரீ பாபாவின் கட்டளையை ஏற்று வந்து விட்டதினால் அங்கும் இங்கும் சுற்றி அலைந்து கொண்டு ரோடு ஓரங்களில் பிச்சை எடுத்து சாப்பிட்டு, இரவு தங்கி காலத்தை ஓட்டினாள். இந்த நிலையில் முடிவாக மடிவாளா எனும் இடத்தில் வந்தவள் அங்கு இறந்தவர்களை புதைக்கும் சுடுகாடு போல இருந்த இடத்தில் வந்து தங்கி விட்டாள். சுற்றிலும் அடர்ந்த செடி கொடிகளும், முற்புதர்களுமாக மண்டிக் கிடந்த அந்த இடத்தில் தங்கி இருந்தவள் தியானத்தில் ஈடுபட்டாள், பிட்சை எடுத்து உண்டாள், மரத்தடியில் தங்கினாள். ஒருநாள் அந்த ஊரின் கிராம முனிசீப்பாக இருந்த திரு நாராயண ரெட்டி என்பவர் அங்கு வந்து அவளது கதையைக் கேட்டறிந்தபின், அவள் தங்கி இருந்த இடத்தையே அவளுக்கு தானமாக கொடுத்து விட்டார். அந்த இடம் அவருக்கு சொந்தமானது ஆகும். இதுவும் ஸ்ரீ பாபாவின் மகிமையாகவே இருந்திருக்க வேண்டும். இல்லை எனில் தெய்வீக அன்னை அங்கு சென்று ஏன் தங்க வேண்டும்?  முன்பின் தெரியாதவர் திடீர் என அங்கு வந்து அவள் கதையைக்  கேட்டு விஜாரிக்காமல், ஒரே நாளில் அந்த நிலத்தை அவளுக்கு பட்டா  செய்து கொடுக்க வேண்டும்?   பின் நாளில் தெய்வீக அன்னை அந்த நிகழ்சசிகள் பற்றிக் குறிப்பிடுகையில் நடந்தவை அனைத்துக்கும் மக்களின் நன்மைக்காக தன்  பெயரில் (ஷீரடி ஸ்ரீ சாயிபாபா) ஆலயம் அமைத்துக் கொள்ள எண்ணிய லீலைகளே என்று கூறினார்.

அடுத்து தெய்வீக அன்னை அந்த இடத்தை சுற்றி இருந்த முற்புதர்களை அழித்து சுத்தம் செய்த பின் அங்கிருந்த பெரிய மரம் ஒன்றின் அடியில் அமர்ந்து கொண்டு கண்களை மூடி இருந்தபடி தியானத்தில் ஆழ்ந்தாள். பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தன. அவள் அசையவில்லை, உணவு அருந்தவோ இல்லை குளிக்கவோ அமர்ந்து இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவே இல்லை. அப்படியே சிலைப் போல அமர்ந்து இருந்தாள். பல நாட்கள் அந்த அன்னை அமர்ந்திருந்த கோலத்தில் அவள் தலை மீது பொன்னிற நாகப்பாம்பு அமர்ந்து இருந்ததை  அந்த வழியே சென்ற பொது மக்களில் பலரும் கண்டுள்ளார்கள். மெல்ல மெல்ல அந்த தெய்வீக அன்னையை சுற்றி கரையான் புற்றும் எழுந்துவிட்டது. ஆனாலும் அந்த தெய்வீக அன்னையின் உதடுகள் ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் நாமத்தை உரக்க உச்சரித்தபடி இருந்ததைக் கண்டவர்கள் அவள் தெய்வ சக்தி பொருந்தியவராகவே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டார்கள். அங்கு நின்றுகொண்டு அவளை  பார்த்தபடி இருக்கும்போது, அவர்களும் ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் நாமத்தை உச்சரித்தபடி இருந்தார்கள். சில காலம் கடந்ததும், உணவும் உட்கொள்ளாமல் அமர்ந்து இருந்தவரை சுற்றி கரையான் புற்றும் எழும்பியபடி இருக்க, பாம்பும் அங்கு குடி இருந்ததைக் கண்ட சில பொது மக்கள் தைரியமாக அந்த பாம்பை துரத்திய பின் கரையான் புற்றையும் அழித்து விட்டு தெய்வீக அன்னை சிவம்மா தாயீயை வெளியில் எடுத்து பழரசம் தந்து அவரது தவத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள்.  தெய்வீக அன்னை சிவம்மா தாயீயும் அவர்களது கோரிக்கைக்கு செவி சாய்த்து தனது தவத்தை முடித்துக் கொண்டார். இப்படியாக அந்த தெய்வீக அன்னையின் பன்னிரண்டு ஆண்டு கால தவம் முடிவுக்கு வந்தது.

தெய்வீக அன்னையின் பன்னிரண்டு ஆண்டு கால தவம் முடிவுக்கு வந்ததும் அந்த இடத்தை சுத்தப்படுத்திய பின்  தான் வசிக்க சிறிய அளவிலான வீடு ஒன்றை கட்டிக்  கொண்டார். அதில் உள்ளே ஒரு அறையும், வெளியில் ஒரு வராண்டாவும் இருந்தன. அந்த வராண்டாவில் இருந்த ஒரு கல் திண்ணையில்தான் அநேகமாக அந்த தெய்வீக அன்னை  அமர்ந்திருந்து இருப்பாராம். அவருடைய குருநாதரான ஷீரடி ஸ்ரீ சாயிபாபா அவ்வப்போது அவருக்கு வழிகாட்டியபடி இருக்க, தன்னிடம் வந்த பக்தர்களை ஆசிர்வதித்து வந்தார். மெல்ல மெல்ல அங்கு வந்த மக்கள் அவரிடம் காணிக்கைகளைக் கொடுக்கலாயினர். அவர்களைத் தவிர முன்பின் தெரியாத பலரும் பொருளுதவியும், பண உதவியும் செய்து வந்தார்கள். ஆனால் அவை எதையுமே அந்த  தெய்வீக அன்னை சிவம்மா தாயீ தனக்காக பயன்படுத்திக் கொள்ளவில்லை. பிறருக்கு உதவி செய்தார். தனக்கு வந்த நன்கொடைகளை பயன்படுத்தி சிறு குழந்தைகளுக்காக ஆரம்ப நிலைப் பள்ளியையும் நிறுவினார். எப்போதுமே ஷீரடி  ஸ்ரீ சாயிபாபாவின் நாமத்தை உச்சரித்தபடி இருந்தவர்  அந்த இடத்திற்கு ஷீரடி ஸ்ரீ சாயி பாபா ஆஸ்ரம்  என பெயரிட்டார்.

தெய்வீக அன்னை சிவம்மா தாயீயிடம்  ஆசி கேட்டு வந்த பல பக்தர்களுக்கு அவரவர்களுடைய கஷ்டங்களும், மனக்  குறைகளும் தீரத்  துவங்க  அதிக அளவிலான பக்தர்கள் அங்கு வந்தார்கள். அவருடைய புகழும் மெல்ல மெல்ல பரவாத துவங்கியது. மேலும் சில வருடங்கள் கடந்தன. தெய்வீக அன்னை சிவம்மா தாயீ அதீத தெய்வீக சக்தியையும்  அடைந்திருந்தார். வெளி இடங்களில் இருந்து அங்கு வந்த  பல பக்தர்கள் தெய்வீக அன்னை சிவம்மா தாயீயை தாம் வசித்த பகுதியில் வந்து வளமான வீட்டில் தங்குமாறும்,  வேறு பெரிய வீட்டில் சென்று வசிக்குமாறும் கூறினார்கள். அவருடைய புகழ் பரவியதும், அவரை தேடித் கொண்டு இருந்த அவருடைய சில உறவினர்களும் அவர் தங்கி இருந்த இடத்துக்கு வந்து அவரை தம்முடன் ஊருக்கே திரும்பி வந்து விடுமாறு அழைத்தாலும் அனைவரது அன்புக்கு கோரிக்கைகளையும் தெய்வீக அன்னை சிவம்மா தாயீ நிராகரித்து விட்டார். தன்னை அங்குதான் வசிக்க வேண்டும் என தன்னுடைய குருநாதர் ஷீரடி ஸ்ரீ சாயிபாபா கட்டளை இட்டு உள்ளதினால் அங்கிருந்து செல்ல மாட்டேன் என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் கூறினார். தன்னிடம் நிவாரணம் கேட்டு  வந்த பக்தர்களின் குறையைக் கேட்டதும், நீண்ட பெருமூச்சு விட்டு காற்றை உள்ளே இழுத்து  ஸ்ரீ ஸாயிநாதரை நினைக்க அவரும் அவர் முன் பிறர் கண்களுக்கு தெரியாத  நிலையில் வந்து நின்று கொண்டு, அவர்களுக்கான நிவாரணத்தைக் கூற, அந்த அன்னையும் அந்த பக்தர்களுக்கு அதை தெரிவிக்க அவர்களுடைய குறைகள் தீரலாயின. வந்தவர்கள் அந்த தெய்வீக அன்னைக்கு நன்றி கூறினால் அந்த நன்றிக்கு உரியவர் தான் அல்ல என்றும், அது தன்னுடைய குருநாதரான ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவுக்கே காணிக்கையாகும் என்று கூறி விடுவாராம்.

இந்த நேரத்தில் இங்கு ஒரு உண்மையைக் கூற வேண்டும். ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் வாழ்க்கை சரித்திரத்தில் அவர் எந்த ஒரு பெண்மணிக்கும்  மந்திர உபதேசம் செய்ததாக செய்தி காணப்படவில்லை.  ராஜம்மா என அன்று அழைக்கப்பட்ட அதே தெய்வீக அன்னை சிவம்மா தாயீ அவர்களுடைய செய்தியும் அவர் சரித்திரத்தில் காணப்படவில்லை. அதன் காரணம் தமிழ் மொழி மட்டுமே அறிந்திருந்த அந்த தெய்வீக அன்னை பல முறை ஷீரடிக்கு சென்று இருந்தாலும் அவர் யாருடனும் பேசியது இல்லை. பழகியதும் இல்லை.  வட இந்திய மொழிகளில் பேசி வந்த ஓர் குறிப்பிட்ட குழுவினர் மட்டுமே ஷீரடி சாயிபாபாவின் அருகில் இருந்து வந்தார்கள் என்பதினால் அவர்களோடு அன்றைய ராஜம்மா பழகவில்லை, ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவுடனான தனது தொடர்ப்பையும் கூற  முடியவில்லை. இந்த உண்மையினால்தான் ஷீரடி சாயிபாபாவின் அருகில் இருந்து வந்த குழுவினரில் அதிகாரபூர்வமாக ஸ்ரீ பாபாவின் சரித்திரத்தை எழுதிய ஹேம சந்த் பந்த் என்பவர்  தெய்வீக அன்னையான சிவம்மா தாயீயின் சாயி அனுபவங்களை அதில் குறிப்பிடவில்லை என்றே நினைக்க வேண்டி உள்ளது.

மெல்ல மெல்ல தெய்வீக அன்னை நிறுவிய கீழ் நிலை பள்ளிக்கூடம் உயர் நிலை பள்ளியாகவும் மாறியது. அதைத்  தொடர்ந்து அனாதை பெண்கள் வந்து இலவசமாக தங்கும் அளவிலான சிறு இடத்தையும் அன்னை கட்டினார்கள். ஆனால் சில காரணங்களினால் சமீப காலத்தில் அதை மூடி விட்டார்கள். அவரது குருநாதர் ஸ்ரீ சாயி பாபா ஆணையிட்டபடி அங்கிருந்த ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு ஆலயங்களையும் நிறுவினார்.  அவற்றில் முதலாவதானது கருப்பு கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட ஷீரடி  ஸ்ரீ சாயிபாபாவின் சிலையை கருவறையில் கொண்டது. ஒருநாள் ஷீரடி  ஸ்ரீ சாயிபாபா தெய்வீக அன்னை முன் தோன்றி அங்குள்ள ஆலய சன்னிதானத்தில் அனைத்து ஆலயங்களிலும் காணப்படும் வெண்மை நிற பளிங்குக் கல் சிலைக்கு மாறாக தன்னுடைய சிலையை கருப்பு நிற பளிங்கு கல்லில் செதுக்கி வைக்க வேண்டும் என ஆணையிட அந்த அன்னையும் அப்படியே அதை செய்து பிரதிஷ்டை செய்தார்கள். இப்படியாக உலகில் முதன் முறையாக கருப்பு நிற பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்ட ஸ்ரீ பாபாவின் சிலை 20-05-1970 ஆம் ஆண்டில் அந்த அன்னையினால்  கட்டப்பட்ட இந்த ஆலயத்தில்தான் முதன் முதலில் அமைந்துள்ளது.  அதன் பின் தான் சமாதி அடைய வேண்டிய இடமாக இருக்கும் வகையில் அந்த சன்னிதானத்தின் அடிப்பகுதியிலேயே சிறு அறை  ஒன்றையும் அந்த  அன்னை அமைத்தார்.  தான் மரணம் அடைந்ததும், தனது  பூத உடலை அந்த சிறிய அறைக்குள் சமாதி அமைத்து புதைத்து விட வேண்டும் என்ற  ஏற்பாடுகள் செய்தார்.  இப்படியாக தெய்வீக அன்னை சிவம்மா தாயீயின் சமாதி ஆலயமும் அந்த முதல் ஆலயத்தில் எழுந்தது.

அதை போலவே ஷீரடி  ஸ்ரீ சாயிபாபா தெய்வீக அன்னையின் கனவில் தோன்றி உலகில் எங்குமே இல்லாத வகையில் தான் பகீராக காட்சி அளிக்கும் தோற்றத்தைக் கொண்ட சிலையை வடிவமைத்து அதை அவள் கட்ட  இருந்த இரண்டாம் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யுமாறு ஆணையிட்டாராம்.  ஷீரடி ஸ்ரீ சாயிபாபா பகீராக காட்சி அளிக்கும் கோலத்தில் இந்த ஆலயத்தைத் தவிர வேறு எந்த ஆலயத்திலும் கருவறையில் ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் சிலை காணப்படவில்லை. ஆனால் இப்போது சில ஆலயங்களில் பகீர் கோலத்தில் ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் சிலை காணப்படுகின்றது. குருநாதரின்  கட்டளையை ஏற்றுக் கொண்ட தெய்வீக அன்னையும் ராஜஸ்தானில் இருந்து சிலை வடிவமைப்பவரை அழைத்து வந்து ஷீரடி  ஸ்ரீ சாயிபாபா பகீராக நிற்கும் கோலத்தில் சிலையை வடிவமைக்கச் செய்து இரண்டாம் ஆலயத்தில் நிறுவினார். ஆனால் அந்த இரண்டாம் ஆலயம் கட்டப்பட்ட கால விவரம் தெரியவில்லை என்றாலும் ஒரு சிலர் அந்த ஆலயம் 1989 ஆம் ஆண்டு கட்டப்பட்டு உள்ளது என்பதாகக் கூறுகின்றார்கள். துரதிஷ்டவசமாக அந்த  இரண்டாவது ஆலயம் நிதி இல்லாத காரணத்தினாலும், எவரும் புனரமைக்க வராத நிலையில் உள்ளதினாலும் கேட்பார் அற்ற நிலையில், பாழடைந்த ஆலயமாகவே காணப்படுகின்றது. நிச்சயமாக விரைவில் யாராவது நிதி உதவி செய்து அந்த ஆலயத்தை புதுப்பிப்பார்கள் என நம்பலாம்.

தன்னை தெய்வீக சேவையில் இப்படியாக ஈடுபடுத்திக் கொண்டு இருந்த அன்னை 105 வயது ஆனபோது தன்னுடைய இறுதி காலம் வந்துவிட்டதை உணர்ந்தார்.  முதல் ஆலயத்தில் கருவறையின் கீழ் தான் அமைத்து இருந்த சிறு அறையில் தனக்கு சமாதி அமைத்து, தான் இறந்ததும் அதில் புதைத்து விடுமாறு கூறி இருந்ததை போலவே அவர் சமாதி அடைந்ததும் அவரை அந்த அறைக்குள்  புதைத்தப் பின் அவருடைய சமாதியையும் எழுப்பி உள்ளார்கள். அவர் சமாதி அடைந்த தேதி 11-07-1994 ஆகும்.

இந்த ஆலய மகிமை குறித்து சிலருடைய அனுபவங்களை பார்க்கும்போது தெய்வீக அன்னை சிவம்மா தாயீயின் தெய்வீகம் புரிகின்றது. 

இந்த ஆலயத்தில் இரண்டு பூஜாரிகள் உள்ளனர். அவர்கள் குடும்பம் வேறு இடத்தில் குடி இருந்தது.  அந்த இரண்டு பூஜாரிகள் மற்றும் அவர்களுடைய ஒரு சகோதரிக்கு தீர்க்க முடியாத தோல் வியாதி வந்திருந்தது. அதை குணப்படுத்தவே முடியவில்லை. அது குணப்படுத்த முடியாத வியாதி என மருத்துவர்  கைவிட்டு விட்டாராம். யாரோ கூறினார்கள் என்பதினால் அந்த மூன்று சிறுவர்களையும் அவர்களுடைய தந்தை தெய்வீக அன்னை சிவம்மா தாயீயிடம் அழைத்து வந்தார்கள். அந்த அன்னையும் சிறிது வீபூதி தந்து அவர்களை ஆசிர்வதித்தார். அங்கேயே இருக்குமாறு கூறி உள்ளார். அடுத்த சில நாட்களிலேயே தீர்க்க முடியாது என மருத்துவர்கள் கைவிட்டு விட்டிருந்த தோல் வியாதி பூரணமாக குணமாகிவிட்டது. அதுமுதல் சுமார் ஏழு வயது முதல் அந்த பூஜாரி இருவரும் தெய்வீக அன்னை சிவம்மா தாயீக்கு சேவை செய்தபடி  இந்த ஆலயத்திலேயே இருந்து விட்டார்கள். வேறு தொழில் செய்து கொண்டு இருக்கும் சுமார் நாற்பது வயதை எட்டி விட்ட அவர்கள் தமது தொழிலையும் கைவிடாமல், அதே சமயத்தில் தடங்கல் இன்றி காலை மற்றும் மாலையில்  குறிப்பிட்ட நேரத்தில் ஆலயம் திறந்திடவும், நான்கு கால ஆரத்தி நடைபெறவும் இன்றும் இந்த ஆலயத்தில் பூஜாரிகளாக அன்னைக்கு சேவை செய்தபடி இருக்கின்றார்கள். 

இன்னொரு பக்தையின் அனுபவம் இது. பெரிய வியாதியினால் பீடிக்கப்பட்டு இருந்த ராதா ஸ்ரீதர் எனும் சாயி பக்தைக்கு ஒரு நாள் பெருமளவிலான உடல் நலமில்லை என்பதினால் ஜெயநகரில் (பெங்களுர்) அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து முடித்தார்களாம். அதன் பின் இன்னொரு மருத்துவ சோதனை செல்ல வேண்டி இருந்தது. அனைத்தும் முடிந்ததும் கொடுக்கப்பட்ட மருத்துவ சோதனை அறிக்கையை பிரித்துப் பார்க்கவே பயந்தவர், பாபாவின் ஆலயத்துக்குச் சென்று அந்த அறிக்கையை அவர் முன்னால்தான் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தாராம். ஜெய்சங்கர் பகுதியில் சாயி ஆலயம் ஏதாவது உள்ளதா எனது தேடினார்களாம். அன்று வியாழர் கிழமை. ஆனால் வண்டி ஓட்டி வந்தவருக்கு ஆலயம் உள்ள இடம் தெரியாது என்பதினால் அங்கும் இங்கும் அலைந்து சாயிபாபாவின் ஆலயத்தை தேடினார்கள். ஆனால் எங்குமே ஆலயத்தின் இடத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. சோதனை அறிக்கையைப் பார்க்க வேண்டும் என்பதினால் அவருக்கு கண்ணீரே வந்து விட்டது. அவளும் பெங்களூருக்குப் புதியவள். வண்டியை ஓட்டி வந்தவனுக்கோ அவள் மருத்துவ அறிக்கையை பாபாவின் முன்னால்தான் பிரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்த விவரம் தெரியாது. மணி மதியம் ஒன்று ஆகி விட்டது. திடீர் என அவர் ‘மேடம், ரூபன் ஆக்ரஹாரம் எனும் இடத்தில் உள்ள சாயிபாபாவின் ஆலயத்துக்கு செல்லலாமா? என்று என்று கேட்க அந்த நேரத்தில் எந்த ஆலயம் திறந்து இருக்கும் என சந்தேகப்பட்டாலும் எதோ ஒரு உந்துதலினால் சரி என்று கூறி விட்டார். சாலை சற்று நெரிச்சலாக இருந்ததினால் அங்கு செல்ல சுமார் 20 நிமிடங்கள் ஆயிற்று என்றாலும் ஆலயத்துக்கு சென்றபோது பள்ளி சிறுவர்கள் மதிய ஆரத்தியை பாபாவின் சன்னதியில் பாடிக் கொண்டு இருந்தார்கள். அவர் ஆலயத்துக்குள் போனபோது அந்த ஆலயத்தை மூடிக் கொண்டு இருந்தார்கள். உடனே ஆலய பூசாரியிடம் ஓடிச் சென்று தனது மருத்துவ சோதனை அறிக்கையை பாபாவின் பாதத்தில் வைத்துவிட்டுக் கொடுக்குமாறுக் கேட்க, அவரும் அதை பாபாவின் பாதத்தில் வைத்துவிட்டு எடுத்து வந்து ‘பாருங்கள் அம்மா, நீங்கள் வேண்டிக் கொண்டது வெற்றிகரமாக நடக்கும். பாபா இதன் மீது பூவைப் போட்டுக் கொடுத்துள்ளார்’ என்று சிரித்தவாறு கூறி விட்டு அதை அவரிடம் கொடுக்க அந்த பெண்மணியும் மகிழ்ச்சியால் ஆனந்தக் கண்ணீர் விட்டப் பின் அதை எடுத்துக் கொண்டு போய் சிவம்மா தாயீயின் சமாதியில் வைத்து விட்டு அதை அங்கேயே பிரித்துப் படித்தாராம். வியாதியின் தன்மை நினைவில் வர, மிக அதிகமாக பாதகம் இருக்கும் என எண்ணிக் கொண்டு அறிக்கையை பிரித்துப் பார்க்க, பாதகமாக எதுவும் இல்லை என்பதை அறிந்தவள் அது ரூபன் அக்ராஹார பாபாவின் அருளே என்கின்றார்.

இந்த ஆலயம் ரூபன் அக்ரஹாரா எனப்படும் இடத்தில், அதாவது சில்க் போர்டு மற்றும் பொம்மனஹள்ளி  தாலுக்கா அலுவலகம் இரண்டுக்கும்  இடையே சிறிய சந்து ஒன்றில் அமைந்து உள்ளது.

ஆலய விலாசம்

Sri Sadguru Shirdi Saibaba Mutt,  N.G.R.Layout,  Roopan Agrahara
Off to Hosur Main Road,  Madiwala Post,  Bangalore-560 068

ஆலய பூஜாரிகள் 

Shri.Sampangi (Ramu) / Shri.Venkataraju

தொடர்ப்பு கொள்ள :தொலைபேசி எண் 

98801 33408 (Ramu)/ 99455 31187 and 96206 04359 (Venkataraju)

ஈமெயில்

Venkataraju71@gmail.com

ஆலய

புகைப்படங்கள்