ராதா நல்லூர்

 

வைத்தீஸ்வரன்

ஆலயம்

-சாந்திப்பிரியா –

 

ராதாநல்லூர் எனும் சிறு கிராமத்தில் உள்ளது இன்னொரு வைத்தீஸ்வரர் ஆலயம். கிழக்கு நோக்கிப் பார்த்தவாறு அமைந்துள்ள 1200 வருடத்திற்கு முந்தைய இந்த ஆலயம் ராஜராஜ சோழ மன்னர் காலத்தில் கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது. மாயவரத்தில் இருந்து மணல்மேடு பந்தநல்லூர் பாதையில் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம். சீர்காழி அருகில் உள்ள வைத்தீஸ்வரர் ஆலயத்தைப் போலவே இங்கும் ஆலய அமைப்பு இருக்க வைத்தீஸ்வர ஸ்வாமியும், தையல் நாயகியும் அங்குள்ள அதே கோலத்தில் இங்கும் அமர்ந்துள்ளார்கள். இரு மண்டபத் பகுதிகளைக் கொண்ட இந்த ஆலயத்தின் முதல் மண்டபத் பகுதியில் நந்திதேவரும் ஆலயக் கொடி மரமும் காணப்படுகின்றன. இரண்டாம் மண்டபத்தில் ஆலய முதல்வரும், தையல் நாயகியின் சன்னதிகளும் உள்ளன. விநாயகர், முருகன், தக்ஷிணாமூர்த்தி, சந்திரா-சூரியர்கள் மற்றும் பைரவருக்கும் சன்னதிகள் உள்ளன.

இங்குள்ள முருகப் பெருமானையும் முத்துக்குமாரசுவாமி என அழைக்கின்றார்கள். அவர் தனது மனைவிகளான வள்ளி மற்றும் தெய்வானையுடன் காட்சி தருகின்றார். தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் விலகவும், ஜாதகத்தில் செய்வாய் தோஷம் உள்ளவர்களும் சீர்காழி அருகில் உள்ள வைத்தீஸ்வரர் ஆலயத்துக்கு செல்வதை போலவே அவைகளை நிவர்த்தி செய்து கொள்ள இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுகிறார்கள். பாழடைந்த நிலையில் உள்ள இந்த ஆலயத்துக்கு உள்ளூர் மற்றும் அக்கம்பக்கத்து கிராமத்தினர் வந்து வணங்கிச் செல்கின்றார்கள்.கிராம ஆலயம் என்பதினாலோ என்னவோ, இந்த ஆலய குறித்த விவரம் நகர்ப்புறங்களில் அதிகம் பரவவில்லை. 

இந்த ஆலயம் குறித்த ஒரு சுவையான கதை உள்ளது. அது என்ன?

சூரபத்மனுடன் யுத்தம் செய்யக் கிளம்பிய முருகப் பெருமானுக்கு அவருடைய தாயார் பார்வதி தேவி சக்தி வாய்ந்த ஒரு வேலை இந்த ஆலய வளாகத்தில்தான் கொடுத்தாராம். யுத்தம் முடிந்து சூரபத்மனை அழித்துவிட்டு வெற்றிவாகை சூடியபின் முருகப் பெருமான் தனது பெற்றோர்களை சந்தித்து யுத்த விவரத்தைக் குறித்து கூற வந்தாராம். அப்போது  சிவபெருமானும் அவரது துணைவி பார்வதி தேவியும் ராதா நல்லூர் ஆலய பகுதியில்தான் இருந்தார்களாம். யுத்தத்தில் இருந்து வந்ததினால் முதலில் குளித்து விட்டு பெற்றோரை சந்திக்க விரும்பிய முருகப் பெருமான் தனது வேலை பூமியிலே பாய்ச்ச மாயவரம் கும்பகோணப் பகுதிலயில் பெரிய ஆறு வெளியாயிற்று. அதுவே மணிமுத்தாறு என்பது. முதலில் அதன் பெயர் சுப்பிரமணிய ஆறு என்பதாகும். அதில் குளித்தப் பின் தனது பெற்றோர்களை சந்தித்து யுத்த விவரங்களை கூறிக் கொண்டு இருந்தபோது பார்வதி தேவிக்கு தாகம் ஏற்பட அவளுக்கு தண்ணீர் தருவதற்காக மீண்டும் தனது வேலை ஆலய பகுதியில் பூமியில் செலுத்த அங்கு தண்ணீர் குளம் தோன்றியதாம். அதில் இருந்து தண்ணீர் தந்து பார்வதி தேவியின் தாகத்தை முருகப் பெருமான் தணித்தாராம். அந்த தண்ணீர் குளமே இன்றைய ஆலயக் குளம் ஆகும். அதில் வெல்லக் கட்டிகளை போட்டு தமது நோய்கள் தீர பக்தர்கள் பிரார்த்தனை செய்து வைத்தீஸ்வர பெருமானை வேண்டுகிறார்கள்.

இப்படியாக கூறப்படும் வைத்தீஸ்வரன் கோவில்களை பற்றிய செவி வழிக் கதையில் பார்வதிக்கு தாகம் தணிக்க முருகப் பெருமான் குளம் வெட்டி தண்ணீர் தந்த கதை இந்த ஆலயம் குறித்து மட்டுமே கூறப்பட்டாலும், மற்ற கதைகள் அனைத்தும் வைத்தீஸ்வரன் ஆலயங்களில் ஒன்று போலவே கூறப்படுகின்றது. ராதாநல்லூர் ஆலயத்தைக் குறித்த மேலும் விரிவான செய்திகள் கிடைக்கவில்லை. இந்த ஆலயத்தை நிர்வாகிக்கும் குருக்கள் ஒருவர்  ஆலயத்தின் எதிரிலேயே வசிக்கிறார்.

ஐந்தாவது வைத்தீஸ்வரன் ஆலயம் ஐவா நல்லூர் எனும் கிராமத்தில் உள்ளதாகக் கூறுகின்றார்கள். ஆனால் அந்த ஆலயத்துக்கும் செல்லும் வழி எளிதில் செல்லும் நல்ல சாலையாக இல்லை. ஆலயம் கிராமத்தின் உள்ளேயே பாழடைந்த நிலையில் ஒரு கூரை வீட்டின் அடியில் இருப்பதாகக் கூறுகின்றார்கள். அதை போலவே மயிலாடுதுறை-கும்பகோணம் பகுதியில் வடக்கடை எனும் கிராமத்தில் ஆறாவது வைத்தீஸ்வரர் ஆலயமும்  இருப்பதாகக் கூறுகின்றார்கள். அதன் விவரம் தெரியவில்லை.

ராதாநல்லூர் ஆலய படங்கள்

பின் குறிப்பு

மாயவரம் கும்பகோணப் பகுதியில் ஐந்து அல்லது ஆறு வைத்தீஸ்வரர் ஆலயங்கள் மற்றும் சென்னையின் வெளிப்பகுதியில் ஒரு ஆலயம் இருந்தாலும் கிராமியக் கதையின்படி அந்த ஆலயங்கள் அனைத்திலும் உள்ள சிவலிங்கங்கள் அங்கெல்லாம் தவத்தில் இருந்த அங்காரக பகவான் (செய்வாய் கிரகம்) நிறுவியவை என்று தெரிகின்றது. இந்த ஆலயங்களில் முதலில் அமைந்த ஆலயம் எது என்பதோ, முடிவாக அமைந்த ஆலயம் எது என்றோ உறுதியாக கூற முடியவில்லை. ஆனால் மாயவரம் கும்பகோணப் பகுதியில் உள்ள ஐந்து அல்லது ஆறு ஆலயங்களில் மஹாபாரத மற்றும் ராமாயணத்துடன் சம்மந்தப்பட்ட மண்ணிப்பள்ளம் அல்லது பாண்டூர் வைத்தீஸ்வரர் ஆலயங்களில் உள்ள சிவலிங்கங்கள்தான் அங்காரக பகவானினால் முதலில் அமைக்கப்பட்டு இருக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது.  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மண்ணிப்பள்ளத்தில் மிகப் பெரிய வைத்தீஸ்வர சிவாலயம் ஒன்று இருந்ததாகவும், காலப்போக்கில் அது எந்த காரணத்தினாலோ மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு விட்டதாகவும் ஆதாரபூர்மான தகவலின் அடிப்படையில் கூறுகின்றார்கள்.  அதை போலவேதான் சென்னைப்  பகுதியில் உள்ள ஆலயம் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதாக தெரிகின்றது. ஆகவே வைத்தீஸ்வரரின் ஆறு ஆலயங்களில் எது முதலில் அமைந்த ஆலயம் என்ற சர்ச்சையை தள்ளி வைக்கலாம், அவற்றின் மகிமைகளை மட்டுமே மனதில் கொள்ள வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகின்றது. அதன் காரணம் அனைத்து வைத்தீஸ்வரர் ஆலய சரித்திரங்களிலும் சிவபெருமான் வைத்தீஸ்வர ஸ்வாமியாகவும், பார்வதி தேவி தையல் நாயகியாகவும் அவதாரித்தார்கள் என்றும், அங்காரக பகவானின் தோல் நோயை அவர்கள் குணப்படுத்தினார்கள் என்றும்தான் ஒரே மாதிரியாக கூறப்படுகின்றது. 

செவி வழியே கூறப்படும் இன்னொரு கிராமியக் கதையின்படி, தனது பிணியை நீக்குமாறு சிவபெருமானை வேண்டி அங்காரக பகவான் தவத்தில் அமர்ந்த இடத்தில் உருவமற்ற நிலையில்  தோன்றிய சிவபெருமான் அவருக்கு மேலும் சில இடங்களைக் கூறி (தற்போது வைத்தீஸ்வரன் ஆலயங்கள் உள்ள இடங்கள்) அங்கெல்லாம் சென்று அமர்ந்து தவத்தில் இருந்தால் தக்க நேரத்தில் தான் அவருக்கு காட்சி தந்து அவரது நோயை தீர்ப்பேன் எனக் கூறினாராம். அதே நேரத்தில் சிவபெருமான் அவருக்கு உறுதி அளித்தபடி  அங்காரக பகவான்  தவம் இருந்தபோது அவரது  தவத்தை மெச்சி அவருக்கு உருவமற்ற முறையில் காட்சி தந்ததும் அல்லாமல்  அடுத்த இடத்துக்கு செல்லவும் வழிகாட்டினாராம். இப்படியாக சிவபெருமான் தன்னை நோக்கி தவத்தில் இருந்த அங்காரக பகவானுக்கு அவர் தவம் இருந்த அனைத்து இடங்களிலும்  உருவமற்ற நிலையில் காட்சி தந்து அருள் புரிந்தாராம்.

முடிவாக அங்காரக பகவான் தவம் இருந்த இடத்தில் வைத்தீஸ்வர பெருமானாக சிவபெருமான் காட்சி தந்தார். முதலில் தான் யார் என்பதைக் கூறாமல் மருத்துவர் உருவில் மானிடராக  வந்த சிவபெருமான் தன்னுடன் தனது மனைவியையும் மருத்துவச்சியாக அழைத்து வந்திருந்தார். அதே நேரத்தில் மனித உருவெடுத்து தவத்தில் அமர்ந்திருந்த அங்காரக பகவானின் பிணியும் தீர்ந்தது. அதற்குப் பின்னர்தான் சிவபெருமான் அவருக்கு வைத்தியநாத ஸ்வாமியாக காட்சி தர அந்த நேரத்தில்தான்  அங்காரக பகவான் சிவபெருமானிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதாவது தான் தவம் இருந்த இடங்களில் தான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்த சிவலிங்கங்களில்  சிவபெருமான் வைத்தீஸ்வரக் கடவுளாக அமர்ந்து கொள்ள வேண்டும். அவருடன் பார்வதி தேவியும் தைல நாயகியாக அமர்ந்து கொள்ள வேண்டும். அந்த ஆலயத்தில் தானும் ஒரு சன்னதியில் அமர்ந்து கொண்டு அங்கு வந்து வைத்தீஸ்வரரை வேண்டித் துதித்தப் பின் தன்னையும் வேண்டி பூஜிக்கும் பக்தர்களுடைய செய்வாய் தோஷத்தை  விலக்கும் வகையில் தனக்கும் விசேஷ சக்தி தர வேண்டும் என்பதே கோரிக்கை.  அதையும் சிவபெருமானும் ஏற்றுக் கொண்டார்.

வாசகர்களின் சந்தேகங்கள்

என்னுடைய கட்டுரைகளை படித்தப் பின் என்னை  தொடர்பு கொண்ட சிலர் கேட்ட கேள்வி இதுதான். ”பல இடங்களிலும் உள்ள வைத்தியநாதஸ்வாமியின் ஆலயங்கள் அனைத்து  வரலாற்று செய்திகளும் எப்படி  ஒன்றாகவே இருக்க முடியும்?  ஒவ்வொரு ஆலயமும் ஒன்றுடன் ஒன்று அருகில் இல்லாமல்  பல மைல் தொலைவில் உள்ளபோது அதெப்படி வைத்தியநாத பெருமானாக சிவபெருமான் அனைத்து ஆலயங்களிலும் அவதரித்து அங்காரகப் பெருமானின் நோயை தீர்த்திருக்க முடியும்?” நான் ஆன்மீகத்தில் புலமைக்கு கொண்டவர் என்று கருதிக்கொண்டு  அனைத்திற்கும் விடைகளை தர முடியாது. ஆனால் நான் கேட்டறிந்தவற்றையே மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துகிறேன்.  ஆகவே கீழுள்ளதை படித்தால் வைத்தியநாத ஸ்வாமியின் ஆலயங்களைக் குறித்த வரலாற்றுக்  கதைகள் பொய்யானவை அல்ல என்பது புரியும்.

முதலாவதாக அந்த காலத்தில் அனைத்து ஆலயங்களும் இருந்த இடங்கள் ஒரே நிலப்பரப்பாகவே இருந்தன. அடர்ந்த காடுகளும், ஆறுகளும் மட்டுமே பல இடங்களாக பல பகுதிகளாக அவற்றை பிரித்து வைத்து இருந்துள்ளன.  நாம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புராண இதிகாச வரலாற்று செய்திகளை படித்தால் தெய்வங்கள் பூமியில் இருந்து தேவ லோகத்துக்கு தாம் விரும்பிய நேரத்தில் சர்வ சாதாரணமாக கிளம்பிச் சென்று அடுத்த சில கணங்களில் மீண்டும் திரும்ப வந்து உள்ளார்கள் என்பது தெளிவாகப் புரியும். ஆகவே பூமியில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கான தொலைவைக் கடப்பது அவர்களுக்கு பெரிய விஷயம் அல்ல. உதாரணமாக கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு இடையிலான தூரத்தை சில நொடிகளில், சில அடிகள் எடுத்து வைத்து கடந்து விடமுடியும் என்பதினால் பலவேறு இடங்களில் இருந்த வைத்தீஸ்வரன் ஆலயங்களிலும் சிவபெருமான் வைத்தீஸ்வரராக தோன்றி இருந்தது வியப்பில்லை.

எந்த ஒரு வைத்தீஸ்வரர் ஆலயக் கதையிலும் சிவபெருமான் வைத்யனாத ஸ்வாமியாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட நாளில் தோற்றம் தந்தார் என்ற விவரம் கூறப்படவில்லை.  ஆகவே அனைத்து வைத்தீஸ்வரன் ஆலயங்களிலும் சிவபெருமான் ஒரே நேரத்தில் அவதரிக்காமல் பல்வேறு நேரங்களில் வைத்தீஸ்வரராக தோற்றம் தந்து இருக்க வாய்ப்பும் உள்ளது.

மூன்றாவதாக சீர்காழி அருகில் உள்ள வைத்தீஸ்வரன் ஆலயம் உட்பட மண்ணிப்பள்ளம், பாண்டூர், ராதாநல்லூர் மற்றும் சென்னையில் உள்ள வைத்தீஸ்வரன் ஆலயங்கள் அனைத்திலும் சிவபெருமானும் பார்வதி தேவியும் வைத்தீஸ்வரர் மற்றும் தையல் நாயகியாக அவதரித்து உள்ளார்கள் என்பது உண்மை இல்லை என்றால் ஒவ்வொரு ஆலயமும் பல மைல் தொலைவில் இருந்த நிலையில்,  பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்த ஆலயங்களின் வரலாற்றுக்  கதைகள் எப்படி ஒரே மாதிரியான கதைகளாக அந்தக் கால மக்களால்  கூறப்பட்டு இருக்க முடியும்?

நான்காவதாக சிவபெருமானும், பார்வதி தேவியும் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் தோற்றம் அளித்து இருக்க முடியுமா எனும் கேள்விக்கு பதில், ஆமாம் அது முடியும் என்பதுதான்.  அதற்கு தெய்வங்களின் உருவ அமைப்பை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தெய்வங்கள் என்பதின் வடிவம் என்ன? அனைத்து தெய்வங்களும் தெய்வீக சக்திக் கதிர்களால் ஆன உருவங்கள். அவர்கள் ஒவ்வொருவரின் உடலிலும் கோடிக்கணக்கான சக்திக் கதிர்கள் புதைந்து உள்ளன. அந்த சக்திக் கதிர்களைத்தான் தெய்வங்கள் தமது பிம்பங்களைக் கொண்ட உருவாக மாற்றி தம்மை வேண்டி தவம் இருப்பவர்கள் முன்னிலையில் அனுப்புகிறார்கள். தாம் எங்கு அவதரிக்க வேண்டுமோ, அந்த இடத்துக்கு தமது உடலில் புதைந்து உள்ள சில சக்திக் கதிர்களை தெய்வங்கள் வெளிப்படுத்தி அனுப்பியதும், அந்த இடத்தை நிறப்பும் வகையில் தாமாகவே அதே அளவிலான சக்திக் கதிர்கள் அந்தந்த தெய்வங்களின் உடலில் தோன்றி விடுகின்றன என்பதும் தெய்வ ரகசியமாகும். அந்த சக்திக் கதிர்கள் அந்தந்த தெய்வங்களின் பிம்பங்கள் என்பதினால் அவர்களை ஆட்டுவிப்பதும் அந்தந்த தெய்வங்களே என்பதினால் பல்வேறு இடங்களிலும் அதே உருவை அந்த சக்திக் கதிர்கள் மூலம் அவர்களால் அனுப்ப இயலும்.

நாம் சமீப நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்திருந்த தத்தாத்திரேயர், மாணிக் பிரபு, சீரடி சாயிபாபா, ஸ்ரீபாதவல்லபா மற்றும் சிவபால யோகி போன்ற மஹான்கள் மற்றும் அவதூதர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்தால் அவர்கள் பலமுறை பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் தோற்றம் தந்து இருந்துள்ளது தெரியும். ஆகவே ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களிலும் ஒரு தெய்வத்தினால் தோற்றம் அழிப்பது கடினம் அல்ல.

எதற்காக தெய்வங்கள் தம்மை வேண்டி தவம் இருப்பவர்கள் முன் தாமே நேரடியாக சென்று அவதரிப்பதில்லை என்பதற்கும் ஒரு முக்கிய தேவ ரகசியமும் உள்ளது. பிரபஞ்சம் படைக்கப்பட்டபோதே, ஒவ்வொரு தெய்வத்திற்கும் சில கடமைகள் தரப்பட்டு, சில நிகழ்வுகளை நடத்த அனுப்பப்பட்டு இருந்துள்ளார்கள். அவர்கள் பல இடங்களிலும் அவதரிக்க வேண்டும் என்பது அதில் ஒன்றாகும். அந்த நிலையில், அந்த தெய்வங்கள் தம்முடைய மூல பீடத்தை துறந்து வேறு இடத்தில் சென்று அமர்ந்துவிட்டால், அவர்களது கடமைகளை யார் செய்வார்கள்? அவர்களை எங்கு சென்று தேடுவது என்பதினால் தெய்வங்களை படைத்தபோதே அவர்களது சக்திகளை கொண்ட மாய பிம்பங்களை, அந்த தெய்வங்கள் எங்கு அவதரிக்க வேண்டுமோ அங்கு சென்று அவதரிக்க வைக்கும் வகையிலான சக்தியும் தரப்பட்டது. அப்படி அவர்கள் அனுப்பும் மாய பிம்பங்கள் சக்திக் கதிர்களினால் உருவானவை என்றாலும், அவை அவர்களது உடலில் இருந்து வெளியேறுவதினால் அதே தெய்வீகத் தன்மைகளைக் கொண்டவை. அவற்றை ஆட்டிப் படைப்பதும் அவற்றை அனுப்பிய மூல தெய்வங்களே என்பதினால்   மாய பிம்பங்கள்தானே என தள்ளிவிடக் கூடாது. மாய பிம்பங்கள் அந்தந்த தெய்வங்களின் உடலில் இருந்து வெளிப்படும் சக்திகள் என்பதினால் மாய பிம்பமும், மூல தெய்வங்களும் ஒன்றேதான் என்பதில் ஐயம் கொள்ளக் கூடாது. இதன் உள் அர்த்தங்களை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள இயலாது. அதை புரிந்து கொள்ள மேலான தத்துவம் சார்ந்த ஆன்மீக நிலையிலான ஞானம் தேவை.

ஆகவே தேவை இன்றி நாம் ஆலய வரலாற்றைக் குறித்து சந்தேகங்கள் கொள்ளாமல் இருப்பதே சிறந்தது. செவி வழியே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கூறப்படும் கதைகளில் சில வேறுபாடுகளும், முரண்பாடுகளும் இருக்கவும் வாய்ப்பு உண்டு. ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த மக்களினால் கூறப்பட்டு வந்திருந்த அந்தக் கதைகள் அவர்களால் திரித்துக் கூறப்பட்டு இருக்க முடியாது. ஏன் எனில் அந்த கால மக்கள் நம்மை விட அதிக ஆன்மீக மேம்பாடு கொண்டவர்கள், ஒழுக்கம் மிக்கவர்கள், உண்மையான பக்தி கொண்டவர்கள்.