மரத்தின் அடியில் ஸ்வாமிகள் அமர்ந்திருந்த 
அதே காட்சியில் வரையப்பட்ட படம். அதன் 
அடியில் உள்ள படம் ஸ்வாமிகள் அமர்ந்து
 கொண்டு இருந்த நிலையில் சமாதியில் 
அடக்கம் செய்யப்பட்டபோது எடுத்த படம்

இந்த உலகில் கடந்த பல நூற்றாண்டுகளில் பல்வேறு இடங்களிலும் மாபெரும் ஆன்மீக மகான்களும் தெய்வீகப் பிறவிகளும் தோன்றி மறைந்து உள்ளனர். அப்படி அவதரித்த தெய்வீகப் பிறவிகளில் ஆதி சங்கரர், இரமண மகரிஷி, சேஷாத்ரி மகான், சீரடி சாயிபாபா போன்றவர்கள் உண்டு. ஆனால் சில தெய்வீக அவதாரங்கள் மட்டும் பலருக்கும் தெரியாத வகையில் சிலருக்கு மட்டுமே தெரியும்படி இருந்து விட்டு மறைவது ஏன் என்பது தெரியவில்லை. அப்படிப்பட்ட அவதாரங்களைக் குறித்து அவர்கள் மறைவுக்குப் பின்னரே வெளி உலகிற்கு தெரியவரத் துவங்குகின்றது. அந்த வழியில் தோன்றி மறைந்த  அவதாரப் புருஷர்களில் ஒருவரே ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டவர். அவருடைய இளமைக் கால வரலாறு குறித்து அதிகம் தெரியவில்லை. அது பற்றி அவருடன் சம காலத்தில் பழகிய சிலர் மூலமே அங்கொன்றும், இங்கொன்றுமாக செய்திகள் கிடைத்து உள்ளன. ஆனால் அவர் செய்து காட்டி உள்ள அற்புதங்களையும், மகிமைகளையும் நேரடியாக கண்டு களித்து அனுபவித்தவர்கள் மூலம் அவருடைய பிற்கால வரலாறு தெரிய வந்துள்ளது. அந்த மகானுடைய சுவையான வரலாற்று செய்திகளை அவருடனே இருந்து, வாழ்ந்து அவர் சமாதி அடைந்தப் பின் தானும்  சமாதி அடைந்த சீடர் ஒருவர் மூலம் வெளி உலகுக்கு தெரிய வந்தது. அந்த சீடரின் சமாதியும் ஒடுக்கத்தூர் ஆலய மடத்தின் உள்ளேயே  அமைந்து  உள்ளது.

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திராவில் உள்ள இரத்னகிரி என்ற சிற்றூரில் ஆங்கிலேய அரசாங்கத்தின் இராணுவப் பிரிவில் பணி ஆற்றி வந்த திரு லோகையா நாயுடு மற்றும் அவர் மனைவி திருமதி பாலாம்பிகைக்கும் பிறந்தவரே ஆன்மீகத்தில் பெரும் பெருமையும், புகழும் பெற்றவரான தெய்வப் பிறவி ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள் எனப்படுபவர். ஷத்ரிய குலத்தை சார்ந்த திரு லோகையா நாயுடு இராணுவத்தில் பணி புரிந்ததினால் கட்டுப்பாடு மிக்கவர். ஒழுக்க சீலர். கடவுள் பக்தி கொண்டவர். அவருடைய மனைவியும் அவரும் அனைத்திலுமே ஒரு மெத்த கருத்துடையவர்கள். இணைபிரியா தம்பதிகள். அவர்களுக்குத் திருமணம் ஆகி பல ஆண்டுகளாகக் குழந்தை பாக்கியம் இல்லை என்பதினால் ஷேத்திராடனங்கள் சென்று பலவிதமான விரதங்கள் பூண்டு புத்திர பாக்கியம் பெற்றனர். அவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பெரும் மகிழ்ச்சி அடைந்த தம்பதியினர் அந்தக் குழந்தைக்கு ஷேசய்யா எனப் பெயரிட்டு வளர்த்தனர்.

குழந்தைக்கு ஐந்து வயதானபோது பிள்ளையை பள்ளியில் சேர்த்தனர். ஆனால் அவருக்கு படிப்பில் நாட்டம் இல்லை. எதோ படித்தார் அவ்வளவே. அடுத்து அவருக்கு ஒரு வேலை தேடவேண்டிய அவசியம் வந்தது. வேலையிலும் சேர்ந்தார். ஆனால் தினமும் வேலையில் இருந்து வீடு திரும்பியதும் எங்காவது சென்று தனிமையில் ஏதாவது ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு யோசனையில் ஆழ்ந்து விடுவார் என்பதை கவனித்து வந்த பெற்றோர் எப்போதுமே தனிமையை விரும்பி, குடும்ப வாழ்க்கையில் அக்கறை இல்லாமல் இருப்பதைக் கண்டு கவலை அடைந்தனர். அவருடைய உறவினர்கள் அவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டால் அந்தக் குறை போய்விடும் என்று கூற அவருக்கு மும்முரமாக திருமணத்துக்கு பெண் பார்க்கத் துவங்கினார்கள். அது விஷயமாக அவர்கள் அவருக்காக பெண் பார்க்க ஹைதிராபாத்துக்குச் சென்று இருந்த போது திருமணத்தை விரும்பாத ஷேசய்யா எவரிடமும் கூறாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

வீட்டை விட்டு வெளியேறியவரின் மனம் முழுதும் கடவுள் பக்தியிலேயே நிறைந்து இருந்தது. பல இடங்களுக்கும் சென்று கொண்டு ஆலய தரிசனம் செய்தவர் காளஹஸ்தி, திருச்சி, காஞ்சீபுரம், மதுரை, சிதம்பரம் போன்ற இடங்களுக்கும் சென்று ஆலய தரிசனம் செய்தார். கடைசியாக வேலூருக்கு அருகில் இருந்த அடர்ந்த காட்டின் உள்ளே சென்று அங்கிருந்த மலைக் குன்றின் மீது அமர்ந்து கொண்டு தியானத்தில் ஆழ்ந்து விட்டார். அவர் அமர்ந்து இருந்த இடமோ யாரும் எளிதில் செல்ல முடியாத இடமாக அமைந்து இருந்தது. தியானத்தில் அமர்ந்திருந்தவரின் பக்கத்தில் விலங்குகள் வந்து அமர்ந்தன. ஆனால் அவை எதுவுமே அவரை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. அந்தக் காட்டில் விறகு வெட்ட வந்தவர்கள் மற்றும் ஆட்டு இடையர்கள் அந்தக் காட்சியைப் பார்த்து வியந்தனர். அப்போது சேஷையா எனப்பட்ட ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள் அங்கு சென்று தவத்தில் இருக்கும் முன்னர் அங்கு பல தபஸ்விக்கள் வந்து தவத்தில் இருந்து உள்ளார்கள். அதன் பின் அவர்கள் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்று உள்ளார்கள். அதனால் அவர்கள் சேஷையா அங்கு வந்து தவத்தில் அமர்ந்து கொண்டதற்கு முக்கியத்துவம்  கொடுக்கவில்லை.

அப்படிப்பட்ட ரிஷி முனிவர்களுக்கு மாறாக ஷேசய்யா அனைவரும் தன்னைப் பார்க்கும் வகையில் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு தவத்தில் இருந்துள்ளார். சில நேரங்களில் மட்டும் அங்கிருந்து எழுவார். அருகில் இருந்த ஓடைக்குச் சென்று தண்ணீர் பருகிய பின் திரும்பி வந்து தான் தவத்தில் இருந்த இடத்திலேயே அமர்ந்து கொள்வார். அப்படி எழுந்திருக்கும்போது ஆர்வத்தோடு தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கும் கிராமத்தினரையும், தன்னை பின்தொடர்ந்து வந்து கண்காணித்தவர்களையும் லட்க்ஷியம் செய்யாமல் அவர்களோடு எதுவுமே பேசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்பதை போல தண்ணீர்  குடித்து விட்டு வருவார். அதே இடத்துக்கு மீண்டும் வந்து அமர்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் அமர்ந்து விடுவார். நாட்கள் செல்லச் செல்ல அவர் தண்ணீர் அருந்தக் கூடப் போகவில்லை. ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் அமர்ந்து கிடந்தவரை சுற்றி கரையான்கள் புற்று எழுப்பின. அவர் சில நேரத்தில் சட்டையைக் கயற்றிப் போடுவது போல புற்றைத் தள்ளிவிட்டு எழுந்து சென்று தண்ணீர் பருகியபின் அதே இடத்தில் வந்து  அமர்வார். சில நாட்களில் மீண்டும் பாம்புப் புற்று அவரை மூடிக்கொள்ளும். ஆனாலும் அவர் எத்தனை முறை எழுந்து சென்றாலும், அவர் தியானம் செய்து கொண்டு இருந்த குறிப்பிட்ட இடத்தை மட்டும் மாற்றிக் கொள்ளவே இல்லை.

பலமுறை கிராமவாசிகள் ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள் ஆற்று மணலில் புதைந்து கிடப்பதை கண்டு உள்ளார்கள். ஆற்றில் வெள்ளம் வரும்போது அவர் புதைந்து உள்ள இடத்தின் மீது தண்ணீர் பாய்ந்து அவர் அதில் முழுகிக் கிடைக்கும் இடத்தைக் காட்டும். ஒருமுறை நல்ல மழைக் காலம் வந்தபோது ஸ்வாமிகளைக் காணவில்லை. அனைத்து இடங்களிலும் தேடி அலைந்த பின் அவர் ஆற்று மண்ணில் ஒருவார காலம் புதைந்து இருப்பதைக் கண்ட கிராமத்தினர் அவரை மீட்டு வந்தார்கள். அவரை வெளியில் இழுத்து வந்தபோதும் அவர் யோக சமாதி நிலையிலேயே இருந்தாராம்.

சில காலம் அப்படிப்பட்ட நிலையில் இருந்தவர் ஒரு நாள் அந்த இடத்தை விட்டு எழுந்து எங்கோ சென்று விட்டார். ஊர் ஊராக சுற்றி அலையத் துவங்கி  பல இடங்களுக்கும் சென்று கொண்டு இருந்தவர் ஒரு முறை அகரம் செல்லும் வழியில் இருந்த ஒடுக்கத்தூரில் இருந்த பாதையின் நடுவில் அமர்ந்து கொண்டு தியானத்தில் ஆழ்ந்து விட்டார். அந்த ஒற்றை வழிப் பாதையே இரண்டு கிராமங்களை இணைக்கும் சாலைப் பகுதியாக இருந்தது. அப்போது அந்த பக்கமாக ஒரு வண்டி வந்து கொண்டு இருந்தது. வண்டிக்காரன் அவரை தள்ளி அமர்ந்து கொள்ளுமாறு குரல் கொடுத்தான். எத்தனை கூவியும் நகராததினால் வண்டியில் இருந்து இறங்கி அவர் அருகில் வந்து அவரை தட்டி எழுப்ப முயன்றான். ஆனாலும் மனிதர் கண் திறக்கவில்லை. வண்டி ஓட்டுபவனால் இரவை அங்கேயே கழிக்க முடியாது.  வழிப்பறி திருடர்கள் அதிகம் இருந்த ஊர் அது. ஆகவே கோபத்துடன் அவரைக் கீழே தள்ளினான். வண்டியில் ஏறிக் கொண்டு அந்த வண்டியையே அவர் மீது ஏற்றி வண்டியை ஓட்டினான். அந்தோ பரிதாபம், ஒரு பாறாங்கல்லின் மீது மோதியது போல வண்டி கவிழ்ந்தது. வண்டிக்காரனும் வண்டியில் பூட்டப்பட்டு இருந்த இரண்டு மாடுகளும் மயக்கம் அடைந்து விழுந்தனர்.  மறுநாள் மயக்கம் தெளிந்து எழுந்த வண்டிக்காரன் முதல் நாள் நடந்ததை எண்ணிப் பார்த்தான். சாலையில் விழுந்திருந்த ஷேசய்யா இன்னமும் அந்த இடத்திலேயே அசையாமல் தியானத்தில் விழுந்து கிடந்தார். அதைக் கண்ட வண்டிக்காரன் தான் அவரை கீழே தள்ளி விட்டதினால்  அவர் இறந்து விட்டதாகக் கருதினான்.   அவர் இறந்து விட்டதாக நினைத்து  ஊருக்குள் ஓடிச் சென்று கிராமத்தினரை அழைத்து வந்தான். அவர்கள் அடிக்கடி சேஷையா அங்கு தியானத்தில்  இருப்பதை பார்த்து உள்ளார்கள். ஆகவே ஓடி வந்த கிராமத்தினர் சேஷையா அங்கு காணப்படவில்லை என்பதைக் கண்டதும் ஷேசய்யாவைத் தேடினார்கள். தேடலுக்குப் பின்னர் அவரை காட்டுப் பகுதியில்  கண்டு பிடித்து ஊருக்குள் அழைத்து வந்தனர். அவர் உடலில் சிறு கீறல் கூட காணப்படவில்லை. அவர் மாபெரும் மகானாகவே இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டவர்கள் அன்று முதல் அவரை ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள் என அழைக்கத் துவங்கினார்கள்.

ஸ்வாமிகள் ஒடுக்கத்தூரில் தங்கி இருந்த போது நாகாபாய் என்ற பெண்மணி ஸ்வாமிகளின் பக்தையாக மாறி இருந்தார். அவரே ஸ்வாமிகளுக்க தேவையான அனைத்துப் பணி விடைகளையும் செய்து வந்தார். ஸ்வாமிகள் கல் என்றும் புல் என்றும் பேதம் பார்க்காமல் அனைத்தின் மீதும் சென்று அமருவார். அவருக்கு ஒன்றும் ஆகாது. தன்னை நாடி வந்த பக்தர்களுடைய பிரச்சனைகளுக்கு முடிவு கட்டியும் வியாதிகளை குணப்படுத்தியும் பல விதத்திலும் அற்புதங்களை செய்து வந்தார். தன்னிடம் பிரச்சனைகளை எடுத்து வருபவர்களை அடிப்பார், உதைப்பார். தலையில் தட்டுவார் அல்லது உடலைத் தட்டுவார். வந்தவர்களுடைய பிரச்சனை தீர்ந்து விடும். இப்படியாக அவரிடம் இருந்த தெய்வீகத்தை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தவருடைய புகழ் மேலும் மேலும் பெருகியது. இத்தனை இருந்தும் அவர் யாரிடம் இருந்தும் சல்லிக் காசைக் கூட தட்ஷணையாக பெற்றுக் கொண்டது இல்லை. அவரிடம் இருந்தது இரண்டு வேஷ்டி மற்றும் இரண்டு துவலைகள் மட்டுமே. அவருடைய முகத்தில் பெரிய தாடி மட்டும் இருந்தது. அதையும் மழிப்பதற்கு அவர் எவரையும் அனுமதித்தது இல்லை. இன்னும் ஒரு அதிசயமான நிகழ்வு என்ன என்றால் அந்த தாடியும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளரவே இல்லை. வாழ்க்கையில் மென்மையான ஒழுக்கத்தைக் கடைபிடித்தவண்ணம் வாழ்ந்து கொண்டு இருந்தார்.

இதனால் அவர் மீது பொறாமை கொண்ட கயவன் ஒருவன் அவர் தியானத்தில் அமர்ந்து இருந்தபோது அவர் தாடிக்கு தீ வைத்து விட்டான். ஆனால் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. தாடிக்கு தீ வைத்தவன் அடுத்தகணமே பித்துப் பிடித்துப் பைத்தியமாகி ஊரெல்லாம் அலைந்தான். அதே நிலையில் மரணம் அடைந்தான்.

இன்னொருமுறை ஓலக்காசி எனும் கிராமத்தில் அவர் நடந்து சென்று கொண்டு இருந்தபோது அவர் மீது பொறாமைக் கொண்ட சிலர் மண்ணையும் கல்லையும் அவர் மீது வீசி எறிந்து அவரை துன்பப்படுத்தினர். அவர் கோபம் கொண்டு சிறிது மண்ணை எடுத்து அவர்கள் மீது வீச, அவர்கள் ஓடினார்கள். வீடு திரும்பியவர்கள் தமது வீடுகள் எரிந்து சாம்பலாகிக்க கிடந்ததைக் கண்டார்கள். அதை எடுத்து விட்டு அந்த இடத்தில் வேறு எந்த வீடும் கட்ட முடியவில்லையாம். இன்னமும் அந்த வீடுகள் குட்டிச்சுவறாகவே உள்ளது எனக் கூறுகிறார்கள்.

இன்னொரு சம்பவம். ஒருமுறை யாரையும் அருகில் இல்லாத நேரத்தில் பொறாமை பிடித்த ஒருவன் அவரைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்து புளியம் கயிற்றினால் அடித்துத் துவைத்தான். ஸ்வாமிகள் உடலில் இருந்து இரத்தம் பீரிட்டது. ஆனால் அவர் மௌனமாகவே இருந்தார். அடித்து அடித்து அலுத்துப் போனவன் வீடு திரும்பினான். அந்தோ பரிதாபம் அவனுடைய வீட்டில் மனைவி குழந்தைகள் என அனைவரும் இறந்து கிடந்தனர். அதைக் கண்ட அவனும் பித்துப் பிடித்துப்போய் காலவாக்கில் மடிந்து போனான். ஆனால் ஸ்வாமிகள் அது குறித்து யாரிடமும் எதுவும் கூறவில்லை.

இப்படியாக அற்புதங்களை செய்து காட்டியவண்ணம் அங்கும் இங்கும் சென்று கொண்டு இருந்த ஸ்வாமிகள் ஆந்திர எல்லையில் மதனப்பள்ளியில் வாழ்ந்து வந்தார். அவரை எப்படியோ கண்டு பிடித்து விட்ட திருமதி நாகாபாய் மற்றும் முனுசாமி நாயுடு, சுப்பா நாயுடு போன்றவர்கள் கஷ்டப்பட்டு அவரை பெங்களூருக்கு அழைத்து வந்து அங்கு தங்க வைத்தனர். அவர் ஒடுக்கத்தூரில் சென்று தங்க மறுத்து விட்டதினால் அவரை பெங்களூருக்கு அழைத்து வர வேண்டியதாயிற்று.

பெங்களூரில் ஸ்வாமிகள் தங்கி இருந்தபோது அங்கிருந்த அருணாசலம் பிள்ளை என்பவருக்கு வந்திருந்த பெருநோய் ஸ்வாமிகளின் ஸ்பரிசத்தினால் முற்றிலும் குணமாயிற்று. முன்னதாக அருணாச்சலம் பிள்ளையின் நோயை குணப்படுத்தவே முடியாது என மருத்துவர்கள் கைவிட்டிருந்தார்கள். அதுபோல ஸ்வாமிகளின் பக்தையான மீனாட்ஷியம்மாள் என்பவரின் மகன் கண்பார்வை ஒரு குதிரை எட்டி உதைத்ததினால் போய்விட அனைத்து மருத்துவர்களும் இனி அவனுக்குக் கண் பார்வைக் கிடைக்காது எனக் கைவிட்டு விட அவனது பெற்றோர்கள் ஸ்வாமிகளிடம் சென்று தனது மகனுக்கு கண்பார்வையை திரும்ப வரவழைக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள அவரும் அவர்களை மறுநாள் வருமாறு கூறி அனுப்பினார். என்ன அதிசயம் மறுநாள் அந்த சிறுவன் எழுந்தது முதல் எதுவுமே நடக்காததை போல நல்ல கண்பார்வையுடன்   தனது காரியங்களை தானே செய்து கொண்டு இருந்தான். இப்படியாக ஸ்வாமிகள் பல மகிமைகளை செய்து காட்டியவண்ணம் வாழ்ந்து கொண்டு இருந்தார். ஆனால் அவை எதுவுமே எழுதி வைக்கப்படாமல் பக்தர்களால் வாய் மொழிச் சொல்லாகவே சொல்லப்பட்டு வருகின்றது. இன்றும் அவரது மேன்மை  ஆம்பூர், குடியாத்தம், வேலூர் மற்றும் ஒடுக்கத்தூர் போன்ற இடங்களில் உள்ள பக்தர்கள் மூலம் பலருக்கும் தெரிய வந்துள்ளதாகக் கூறுகின்றார்கள்.

ஸ்வாமிகளுடைய வாழ்க்கையில் முக்கியமாக சிலவற்றைக் கடைபிடித்தார். யாரிடம் இருந்தும், முக்கியமாக பக்தர்களிடம் இருந்து ஒரு சல்லிக் காசு கூட பெற்றது இல்லை, ஆடம்பரமான பங்களாக்களில் தங்கவில்லை, சொகுசான வாழ்க்கை வேண்டும் என நினைக்கவில்லை. அவரை சுற்றி பந்தா மற்றும் படோபகாரம் இல்லை. தன்னுடைய பக்தர்கள் மூலம் போலியான புகழைப் பரப்பிக் கொள்ளவில்லை. மாபெரும் தெய்வீகப் பிறவியாக ஸ்வாமிகள் இருந்தாலும் சுகபோகம் இல்லாத எளிமையான வாழ்க்கையில், அனைவரும் தம்மை எளிதில் சந்திக்கும் வகையில் ஆலய வளாகத்துக்குள் உள்ள மரத்தடியில் அமர்ந்து இருப்பார். ஸ்வாமிகளுடைய மேன்மையே அதுதான். அதனால்தானோ என்னவோ ஸ்வாமிகளுடைய சமாதி சன்னதிக்கு முன் சென்று நிற்கும்போதே நம்மை அறியாமலேயே மனஅமைதி நிலவுவதைக் காண முடியும்.

ஸ்வாமிகளை சுற்றி சில சிஷ்யர்களே எப்போதும் இருந்து வந்தார்கள். அவர்களில் ஸ்வாமிகளுடன் இளமைக் காலத்திலிருந்தே பழகி வந்திருந்த  பழனிவேலு என்பவர்   ஒருநாள் ஸ்வாமிகள் ஒரு புதர் அருகில் தன்னை மறந்த நிலையில் இருந்த பொழுது ஒரு புகைப்படம் எடுத்தார். அதுவே ஸ்வாமிகளின் முதலும் முடிவுமான ஒரே ஒரு புகைப்படம். அவரை வேறு எவராலும் புகைப்படம் எடுக்கவே முடியவில்லை. அவர் அதை அனுமதிக்கவும் இல்லை. இது கூட அந்த மகானின் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தும் குணங்களில் ஒன்றாகும்.

இப்படியாக வாழ்ந்து வந்தவர் 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி சமாதி அடைந்தார். அவர் தங்கி இருந்த அல்சூர் ஏரிக்கரையின் அருகில் இருந்த இடத்திலேயே அவருக்கு சமாதி எழுப்பி சிவலிங்கத்தை அதன் மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அந்த இடம் ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள் மடம் எனப் பெயர் பெற்றது. அங்கு ஸ்வாமிகளுக்கு அடிக்கடி காட்சி தந்து கொண்டிருந்த முருகப் பெருமானுக்கும் தண்டாயுதபாணி எனும் பெயரில் அங்கேயே ஒரு சன்னதியும், சற்று தள்ளி தனி ஆலயமும் எழுப்பி உள்ளனர். அந்த ஆலயத்தில் காமாட்சி அம்மன், முருகன், வினாயகர் மற்றும் சிவபெருமானின் சன்னதிகள் தனித்தனியே உள்ளன. மேலும் அவருடைய சில சிஷ்யர்களின் சமாதிகளும் உள்ளன. அவற்றில் ஒருவர் திரு நித்யானந்தா ஸ்வாமிகள் என்பவர். அவரே மடத்திற்கான நிலத்தை தானமாக வழங்கியவர். இன்னொரு சமாதியில் உள்ளவர் திரு மௌன ஸ்வாமிகள் என்பவர் ஆவார்.

 

ஸ்வாமிகளின் சமாதி 
 ஆலயத்தின்  நுழை வாயில் மற்றும் மண்டபம் 
கருவறையில்  ஸ்வாமிகளின் சமாதியும் 
அதன் மீது பிரதிஷ்டை செய்யப்பட்டு 
உள்ள சிவலிங்கமும்
 ஸ்வாமிகளின் சமாதிக்கு அடுத்து 
உள்ள தண்டாயுதபாணி ஸ்வாமி  சன்னதி 
 நவகிரக சன்னதியில் 
காணப்படும்  ஸ்லோகம்
ஸ்வாமிகளின் சீடரான மௌன 
ஸ்வாமிகளின் சமாதி.
மேலே உள்ள இரண்டு படங்களிலும்  
காணப்படுவது ஒரே சிலையின் இரு பக்கங்கள்.  
ஸ்வாமிகளின் இன்னொரு சீடரான நித்யானந்த
ஸ்வாமிகளின் சமாதி.
முனீஸ்வரர் மற்றும் நாகராஜர் சன்னதி 
 மேலே உள்ள மரத்தின் அடியில்தான் ஸ்வாமிகள் 
முட்டி போட்டுக்  கொண்டு அமர்ந்திருப்பார்