முன் ஒரு காலத்தில் உயர் ஜாதியை சேர்ந்த பலரும் அன்னை மாரியம்மன் கிராம தேவதை எனவும், அந்தணர்கள் அல்லாதவர்கள் மட்டுமே, அதாவது கிராமங்களில் வசித்து வந்த கீழ் குடி மக்கள் வணங்கும் தெய்வம் எனக் கருதி அன்னை மாரியம்மன் வழிபாட்டை தவிர்த்தார்கள். அதே சமயம் கிராம மக்கள் அன்னை மாரியம்மனை மழை பொழிய வைக்கும் சக்தி கொண்டவள் என்று நம்பியதினால் அவளை வணங்கினார்கள். வறண்டு போன தம் நிலங்களுக்கும், நீர் நிலைகளுக்கும், ஆறுகளிலும் நீர் கிடைக்க அவளை வேண்டியவர்கள் அன்னை மாரியம்மனுக்கு ஆடுகளை வெட்டியும், கோழிகளை பலி தந்தும் அவற்றின் ரத்தத்தை கொண்டு அபிஷேகம் செய்தும் வந்தார்கள். கிராம மக்கள் பெரும்பான்மையோர் விவசாயத்தில் ஈடுபட்டவர்கள். நிலங்களில் விளைச்சல் இல்லாமல் போனால் பஞ்சமும் பட்டினியினாலும் மரணம் அடைய வேண்டும் என்பதினால் மழை பொழிவிக்க அன்னை மாரியம்மனிடம் தஞ்சம் அடைந்திருந்தார்கள். மாரியம்மனின் கோபம் மிகக் கொடுமையானது, அவளை தக்க முறையில் ஆராதிக்காவிடில் அவள் தமக்கு கேடு விளைவிப்பாள் என்ற பயம் இருந்ததினால் அவளை பய பக்தியோடு வணங்கி வந்தார்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் மாரியம்மன் கீழ்நிலை மக்கள் வணங்கிய தெய்வம் என்பதினால் அவளை அந்தணர்கள் வணங்கவில்லை என்ற பிளவு வெகு காலத்துக்கு நீடித்து இருந்தது. இதன் அடிப்படைக் காரணம் காரணம் அன்னை மாரியம்மனை வணங்கியவர்கள் அவளுக்கு நெய்வித்தியமாக அசைவ உணவான மிருக பலி கொடுத்ததை அந்தணர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது மட்டும் அல்ல, அன்னை மாரியம்மனை வணங்கியவர்கள் திராவிடர் என்றும், அவர்களை விட பின்னர் இங்கு வந்த ஆரியர்கள் உயர்ந்தவர்கள் என்றும், தாம் ஆரியர் பிரிவை சார்ந்தவர்கள் என்ற எண்ணமும் அந்தணர்களிடம் மேலோங்கி இருந்தது. அதனால் அந்தணர்கள் அல்லாதவர்கள் வணங்கி வந்திருந்த தெய்வங்களை தாம் வணங்கக் கூடாது, அவர்கள் சென்று வழிபடும் ஆலயங்களுக்குள் நுழையக் கூடாது என்ற தடையை அந்தணர்கள் தமக்கு தாமே ஏற்படுத்திக் கொண்டு இருந்தார்கள். இந்த கருத்து வேறுபாடும் வெகு காலம் நிலைத்து வந்தது.

ஏழைகளாக இருந்தாலும், தெய்வ பக்தி கொண்டிருந்த கிராம மக்கள் கிராமங்களில் அங்காங்கே திறந்த வெளியில், மேற்கூறை மட்டுமே போடப்பட்டு இருந்த வழிபாட்டு தலங்களை அமைத்துக் கொண்டு அங்கு சென்று உருவம் தெரியாத, பல்வேறு ரூபங்களில் இருந்த சிலைகளை கிராம தெய்வமாக பூசித்து பிரார்த்தனைகளையும், வேண்டுகோட்களையும் வைத்து வந்தார்கள். அதன் காரணம் தங்களுக்கு இனம் தெரியாத, உருவமற்ற பேய், பிசாசு போன்றவற்றினால் எந்த துன்பமும் வரக்கூடாது என்ற பயமே. பெரும்பாலான கீழ்நிலை கிராம மக்கள் வயல்களில் கூலி வேலை பார்த்து பிழைப்புக்கு வழி தேடியவர்கள். கீழ் நிலையில் இருந்த ஏழ்மையான கிராம மக்கள் உயர் ஜாதி எனும் பிரிவை சேர்ந்தவர்கள் சென்ற ஆலயங்களில் நுழைய முடியாத நிலை இருந்தது மட்டும் அல்ல ஆகம விதிப்படி பூஜிக்கப்படும் எந்த ஆலயங்களுக்குள்ளும் நுழைய தடை செய்யப்பட்டு இருந்தது என்பதினால் இப்படிப்பட்ட கிராம வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அதையும் அந்தணர்களினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கிராம தெய்வங்கள் தாம் வணங்கி வந்திருந்த ஆகம தெய்வங்களின் சேவகர்கள் என்றே கருதினார்கள். இதனால்தான் அன்னை மாரியம்மனையும் சக்தி வாய்ந்த ஒரு தெய்வம் என அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தணர்கள் வேதங்களைப் படித்தவர்கள், ஆழ்ந்த அறிவு மிக்கவர்கள் என்ற நினைப்பினால் அரசாங்க ஆதரவும் அவர்களுக்கு கிடைத்து வந்தது. ஆனால் கால ஓட்டத்தினால் மெல்ல மெல்ல அந்தணர்களின் மன நிலையில் மாற்றம் தோன்றத் துவங்கியது. அதன் காரணம் அங்காங்கே இந்துக் கடவுட்களின் அருமை பெருமைகளையும் சக்திகளையும் பரப்பத் துவங்க வெளிவந்திருந்த ஆன்மீக மகான்களேயாகும். புராணங்களை மேற்கோள் காட்டி பல்வேறு தெய்வீக அவதாரங்களின் காரண காரியங்களையும், தெய்வீக லீலைகளையும், அவற்றின் சக்திகளையும் எடுத்துரைக்கத் துவங்கினார்கள். அன்னை மாரியம்மன் சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவியின் சக்தியே என்பதை ஆழமாக எடுத்துக் கூறியதினால் அன்னை மாரியம்மன் மீதான வெறுப்பு மேல்குடி மக்கள் மனதில் இருந்து மெல்லச் மெல்ல அழியத் துவங்கியது.

அன்னை மாரியம்மனின் வழிபாடு கிராமங்களில் இருந்துதான் நகரங்களுக்கும் பரவியது என்பது தெளிவு. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் முதலில் கிராமங்களில் பரவத் துவங்கிய அம்மை மற்றும் பிளேக் போன்ற கொடிய நோய் நகரங்களுக்கும் பரவலாயிற்று. எந்த மருத்துவமும் அதை குணப்படுத்த முடியவில்லை, கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அன்னை மாரியம்மனே அம்மை மற்றும் பிளேக் போன்ற கொடிய நோய்களைக் கட்டுப்படுத்தும் சக்தியைக் கொண்டவள் என்ற கிராம மக்களின் நம்பிக்கை பரவலாக பரவத் துவங்கின. அம்மை மற்றும் பிளேக் போன்ற கொடிய நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்க அன்னை மாரியம்மனை வேண்டிய கிராம மக்களின் நோயும் குணம் அடையத் துவங்கியதைக் கண்டவர்கள் அன்னை மாரியம்மன் சக்தி வாய்ந்த தெய்வம் என்பதை உணரத் துவங்கினார்கள். கிராம மக்கள் அன்னை மாரியம்மனிடம் கொண்டிருந்த இப்படிப்பட்ட நம்பிக்கை தோன்றியதின் காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆகவே பல உயிர்களை பலி கொண்ட அந்த நோயின் தாக்கத்தைக் கண்டு மிரண்டு போன மேல்குடி மக்கள் வேறு வழி கிடைக்காமல் கிராம மக்களைப் போலவே அன்னை மாரியம்மனின் ஆலயங்களுக்கு சென்று அம்மை மற்றும் பிளேக் போன்ற கொடிய நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கவேண்டுதல் செய்யலானார்கள். இப்படியாக அன்னை மாரியம்மன் வழிபாடு அந்தணர் மற்றும் அந்தணர்கள் அல்லாதவர்கள் வழிபடும் தெய்வம் எனும் வேறுபாட்டை பிளந்து அனைவரும் வழிபடும் தெய்வம் ஆயிற்று.

அதைப் போலவே அங்காங்கே பெருகிக் கொண்டு வந்திருந்த இந்து மதத்தை சேர்ந்த ஆன்மீக குருமார்களின் போதனைகளும், ஆன்மீகக் கதைகளும் அந்தணர்கள் மற்றும் ஆலய பண்டிதர்களின் மனதில் அன்னை மாரியம்மனைக் குறித்து கொண்டிருந்த தவறான கருத்தை அழித்து அவர்களுக்குள் வேகமாக மாற்றத்தை தோற்றுவிக்கத் துவங்கின. ஒவ்வொரு கடவுளும், கிராமத்தில் உள்ளவையோ அல்லது நகர ஆலயங்களில் இருந்தவையோ அனைவருமே தெய்வங்களே, அவர்கள் அனைவருமே எதோ ஒரு காரணத்துக்காகவே படைக்கப்பட்டு உள்ளார்கள் என்ற தத்துவார்த்த உண்மை புரியலாயிற்று. அன்னை மாரியம்மனும் மழை பொழிவிக்கவல்ல சக்தி படைத்தவள், அம்மை போன்ற கொடிய நோய்களை குணப்படுத்த படைக்கப்பட்டவள் என்பதும் அவள் பார்வதி தேவியின் அவதாரமே எனவும் அனைவருக்கும் புரியத் துவங்க அன்னை மாரியம்மன் வழிபாடு பரவலாயிற்று. அங்காங்கே ஆட்சியில் இருந்த மன்னர்களும் அன்னை மாரியம்மனுக்கு ஆலயங்களை எழுப்பி அவளை வழிபடத் துவங்கினார்கள். இந்த நிலையில் எழுந்ததே புன்னைநல்லூர் அன்னை மாரியம்மன் ஆலயமும்.  அதன் வரலாறு சுவையானது.

முன்னொரு காலத்தில் தென் பகுதியில் ஆட்சி செய்து வந்திருந்த மராத்திய மானிலத்தை சேர்ந்த மன்னர்கள் அன்னை மாரியம்மனை வழிபாட்டு வந்தார்கள். அவர்களில் மராத்திய மாமன்னன் சிவாஜி மகாராஜரின் பரம்பரையை சேர்ந்த வெங்கோஜி ராவ் எனும் மன்னன் 1680 ஆம் ஆண்டில் சமயபுரம் மாரியம்மனை வழிபட வந்திருந்தார். அப்போது ஒருநாள் அவர் கனவில் தோன்றிய புன்னைநல்லூர் அன்னை மாரியம்மன் தாம் தற்போதைய தஞ்சாவூரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த புன்னை காட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் புதைந்து கிடப்பதாகவும், தன்னை வெளியில் எடுத்து அங்கு ஆலயம் அமைத்து வழிபட்டு வந்தால் தான் அவர் நாட்டை காப்பதாகவும், அவர் நாடும் நல்ல வளம் பெறும் என்றும் கூறிவிட்டு மறைந்து விட்டாள். அதைக் கேட்ட மன்னன் சற்றும் தாமதிக்காமல் தனது படைவீரர்களை புன்னைநல்லூர் அன்னை மாரியம்மன் கூறிய இடத்துக்கு சென்று அவளது சிலையை வெளியில் எடுக்குமாறு ஆணையிட்டார். ஆனால் அங்கு சென்றவர்கள் வெண்மை நிறத்தில் இருந்த பாம்புப் புற்றைக் கண்டார்கள். அதுவும் அன்னையின் திருவிளையாடலே என்பதை உணர்ந்த மன்னன் தமது ராஜ குருக்களின் ஆலோசனைப் பெற்று அந்த பாம்புப் புற்றையே புன்னைநல்லூர் அன்னை மாரியம்மன் எனக் கருதி அதை சுற்றி சுவர் எழுப்பி ஆலயம் அமைத்தார். இப்படியாக அமைந்ததே புன்னைநல்லூர் அன்னை மாரியம்மன் ஆலயம் ஆகும்.

ஆலயம் அமைக்கப்பட்ட வெகு காலத்துக்குப் பிறகு அங்கு வருகை தந்த ஸ்வாமி பிரும்மேந்திரர் எனும் மாபெரும் துறவி தன்னுடைய சக்தியினால் அந்த மண் புற்றை அன்னை புன்னைநல்லூர் மாரியம்மன் உருவில் வடிவமைத்து , அதன் கீழ் மிகவும் சக்தி வாய்ந்த யந்திரத்தையும் பிரதிஷ்டை செய்தாராம். அதுமுதல் பக்தர்கள் அங்கு வந்து புன்னைநல்லூர் மாரியம்மனை வணகித் துதிக்கலானார்கள். ஆலயமும் பெரும் புகழ் அடைந்தது.  ஸ்வாமி பிரும்மேந்திரர் பிறப்பு குறித்தோ அவருடைய பெற்றோர் குறித்தோ, அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்தோ சரியான செய்திகள் இல்லை. ஆனால் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்திருந்த மாபெரும் சித்த முனிவர்களில் அவர் ஒருவர் என்பது மட்டுமே உலகுக்கு தெரிந்தது. அவர் தெய்வங்களை நேரடியாக சந்தித்து வந்ததாகவும், தன்னுடைய சில குறிப்பிட்ட சீடர்களுக்கு மட்டும் உண்மையான தெய்வங்களை நேரடியாக சில நொடிகள் காட்டியதாகவும் தகவல் உண்டு.

அந்த காலங்களில் அம்மை நோய் கண்டவர்கள், அந்த வியாதி விரைவில் குணம் அடைய சூரிய ஒளியில் சூடு செய்த தண்ணீரில் குளிப்பார்கள். ஆனால் இந்த ஆலயம் எழுப்பபட்டவுடன் இங்குள்ள குளத்தில் வந்து குளித்து நிவாரணம் பெறலானார்கள். அதைப் போலவே உடலில் எந்த பாகமாவது வியாதியினால் பீடிக்கப்பட்டு செயல் இழந்தால், அது குணமடைய வேண்டும் என்பதற்காக அந்த பாகத்தைப் போன்ற களிமண் சிலையை செய்து இந்த ஆலய தேவிக்கு அதை காணிக்கையாக செலுத்தி வேண்டுவார்கள். உடலின் பல பாகங்களைப் போன்று வடிவமைக்கப்பட்ட களிமண் சிலைகள் இந்த ஆலயத்திலேயே கிடைக்கின்றன. இங்குள்ள அன்னை புன்னைநல்லூர் மாரியம்மன் எட்டு சக்திகளை உள்ளடக்கி வைத்து உள்ளதினால் அங்கு வந்து வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருகிறாள் என்பதான நம்பிக்கை உள்ளது. தஞ்சாவூரை ஒருமுறை ஆண்டு வந்த துலஜா ராஜா என்ற மன்னனின் மகள் தீராத வியாதியினால் பீடிக்கப்பட்டு கண் பார்வையை இழந்தவுடன் இங்கு வந்து வழிபட அவளது கண் பார்வை மீண்டும் திரும்பியதாம்.

இந்த ஆலய வரலாறு குறித்த இன்னொரு கிராமியக் கதையும் உள்ளது.  தஞ்சா என்ற  தேவ அசுரன் தேவலோகத்தை சேர்ந்தவன். பல அறிய வரங்களைப் பெற்று இருந்தவன். மழையுடன் சேர்ந்த நெருப்பு வளையம் போன்று அமைக்கப்படும் எட்டு சக்திகள் சுற்றி உள்ள இடத்தில் மட்டுமே மரணம் அடைவான் என்பது விதியாக இருந்தது. பார்வதி தேவியின் சக்தியை உள்ளடக்கிய அந்த சக்தி வளையத்தையும் சிவபெருமானால்  ஒரே ஒருமுறை மட்டும் வெளிப்படுத்த முடியும் என்பது நியதியாக இருந்தது. தேவலோகத்தில் அனைத்து தேவர்களையும் துன்புறுத்தி வந்த அவனது அட்டகாசம் அளவுக்கு மீறிச் சென்றதும், மாறு ரூபத்தில் அவனை அழிக்க வந்த சிவபெருமானுடன் யுத்தம் செய்து கொண்டு இருந்தவன் மேலுலகில் இருந்து தற்போதைய தஞ்சாவூரில் வந்து மறைந்து கொண்டான். அவன் குறிப்பிட்ட காலத்தில் அழிக்கப்படாவிடில் மறு உருவைப் பெற்று மேலும் பல சக்திகளை பெற்று விடுவான் என்பது விதி. ஆகவே அவனை இனிமேலும் அழிக்காமல் இருக்கக் கூடாது என்ற முடிவெடுத்த சிவபெருமான் பார்வதி தேவியின் சக்திகளை உள்ளடக்கிய உருவமற்ற நெருப்பு வளையங்களை மழையுடன் சேர்த்து தஞ்சாவூரை சுற்றி அமைத்தார். சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் சக்திகளை உள்ளடக்கி படைக்கப்பட்டிருந்த உருவமற்று படைக்கப்பட்ட அந்த விசேஷமான அஷ்ட சக்திகள் ஆண் மற்றும் பெண் இனத்தை சார்ந்த தெய்வ சக்திகளாக அமைந்தது. அந்த சக்திகளில் ஒன்றே புன்னைநல்லூர் அன்னை மாரியம்மனும் ஆவார்.

அந்த தேவ அசுரனான தஞ்சா என்பவன் அந்த இடத்தை தாண்டிச் செல்லும்போது அப்படியே எரிந்து போய் விடுவான் என்பதும் நியதியாக இருந்தது. ஆகவே அந்த தேவ அசுரனான் அங்கிருந்து தப்பிக்க முடியாமல் எரிந்து போனான். அவன் அழிந்து போனதும் சிவபெருமான் வெளிப்படுத்திய அந்த சக்திகள் பல்வேறு இடங்களுக்குச் சென்று பூமிக்குள் மறைந்து போயின. இதனால்தான் மழையுடன் சேர்ந்த நெருப்பு வளையங்களாக இருந்த பெண் சக்திகள் அனைத்தும் பல்வேறு இடங்களில் அன்னை மாரியம்மன்களாக மாறின என்று  ஒரு கருத்தை  பண்டிதர்கள் கூறுவார்கள்.

இந்த நிலையை புரிந்து கொண்டதினாலோ என்னவோ ஸ்வாமி சதாசிவ பிரும்மேந்திரர் புன்னைனல்லுரில் பூமியில் மறைந்து இருந்த அஷ்ட சக்திகளில் ஒருவளான மாரியம்மனை வெளிப்படுத்தி அவளுக்கு ஆலயம் அமைத்தாராம். மழையுடன் சேர்ந்த நெருப்பு வளையமாக அன்னை மாரியம்மன் இருந்ததினால் புன்னைநல்லூர் அன்னை மாரியம்மனுக்கு மழை பொழிவிக்கும் விசேஷ  சக்திகள் கிடைத்ததாம். இந்த பிரபஞ்சத்தைப் படைத்த பராசக்தியின் ஒரு சக்தியான பார்வதியின் கட்டளையை மழை பொழிவிக்கும் வருண பகவான் கூட மீற முடியாது என்பதினால் பார்வதி தேவியின் சக்தி கணமான அன்னை மாரியம்மன் எந்த இடத்தில் மழை பொழிவிக்க வேண்டும் என கூறும்போது அவரால் அதை செய்ய வேண்டி உள்ளது என்பதான ஐதீகம் உள்ளது.

புன்னைநல்லூர் அன்னை மாரியம்மன் புகழ், மன பலம், செல்வம் மற்றும்  குழந்தைபேறு போன்றவற்றை தனது பக்தர்களுக்கு அளிக்கின்றாள். அவள் சன்னதியின் நுழை வாயிலில் பச்சைக் காளி மற்றும் பவளக் காளி என்ற துவாரகாபாலகிகள் காவலுக்கு நிற்கின்றார்கள். ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகைக்கு அடுத்த நாள் ஆலய உற்சவ மூர்த்தியை சுமார் 42 நாட்கள் கும்பகோணம் மற்றும் புன்னைநல்லூர் போன்ற இடங்களின் அனைத்து பகுதிக்கும் ஊர்வலமாக எடுத்துச் சென்றுவிட்டு ஆலயத்துக்கு மீண்டும் கொண்டு வருவார்கள்.

இந்த ஆலய தேவி மண்ணினால் செய்யப்பட்டவள் என்பதினால் பால் மற்றும் தண்ணீர் சம்மந்தப்பட்ட எந்த பொருளைக் கொண்டும் அபிஷேகம் செய்வதில்லை. மாறாக அங்கு இன்னொரு சன்னதியில் உள்ள விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது. இந்த ஆலயத்தின் பெரிய அதிசயம் வெயில் காலத்தில் ஆலய தேவியின் உடல் மீது வியர்வை வழியுமாம். அதை பல பக்தர்கள் கண்டு களிப்பார்கள். ஆனால் அந்த வியர்வையினால் அந்த சிலை பழுதடையவில்லையாம்.