யமதர்மராஜர்

சாந்திப்பிரியா

நீதியைக் காக்கும் கடவுள், நியாயத்தைத் தரும் கடவுள் அல்லது மரணத்தின் கடவுள் என்று யமதர்மராஜரைக் குறித்து கூறுவார்கள். கருமை  நிறத்துடன் பயங்கரமான உருவைக் கொண்டவரே யம பெருமான் ஆவார். அவருக்கு வேத காலத்தில் ஆலயங்களில் ஆராதனை இருந்ததில்லை என்பார்கள் என்றாலும் இறந்தவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக சில ஆலயங்களில் யமதர்மராஜனுக்கு வழிபாடு செய்வார்கள். வேத நம்பிக்கையின்படி இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட போது முதன் முதலில் மரணம் அடைந்தவர் யமராஜன் என்பதினால் அவரையே இறந்தவர்களைக் காக்கும் பொறுப்பிற்கான அதிபதியாக நியமித்தார்கள் என்பதான கதை உள்ளது.  ஆனால் தேவலோகத்தில் மரணம் சம்பவிப்பது நம்ப முடியாத கூற்று என்பதினால் வேத பண்டிதர்களின் கூற்றின்படி யமன் இறந்ததாக கூறப்படுவது மனிதர்கள் இறப்பது போன்ற நிலை அல்ல என்றும், தமது சாந்தமான  தேவலோக உடலை  அகோர உருவமாக மாற்றிக் கொண்ட நிலை என்றும் அந்த  நிலை பூமியிலே மனித இயக்கங்கள் துவங்குவதற்கு முன்னர் ஏற்பட்டது என்று கூறுகிறார்கள். 

புராண  கூற்றின்படி மூன்று யுகங்கள்  யமதர்மர்  இல்லாத யுகங்களாக இருந்துள்ளனவாம்.  கிரேதா யுகத்தில்  யமதர்மராஜர்  படைக்கப்படவில்லை. ஆகவே அந்த யுகத்தில் மரணமே நிகழவில்லை என்பதினால் மேலும் மேலும் பெருகிய உயிர் இனங்களின் பாரத்தினால் பூமி நதிக்குக் கீழ் புதைந்து போகத் துவங்கியது. ஆகவே பூமாதேவி தன்னைக் காப்பாற்றுமாறு மகாவிஷ்ணுவிடம் வேண்டிக் கொள்ள அவரும் வராஹ  அவதாரம் எடுத்து வந்து பூமியை உயரத்தில் தூக்கிப் பிடித்துக் கொண்டாராம். அப்போதுதான் மரணத்தை சம்பவிக்கும் ஒருவரின் ஜனனம் தேவைப்பட்டது. அதற்காக யமதர்மர் படைக்கப்பட்டார்.  யமதர்மராஜர் இல்லாத இரண்டாவது காலம் மார்க்கண்டேயர் உயிர் பிழைத்த சம்பவ யுகம் ஆகும்.  அந்த யுகத்தில் யமபெருமான்  சிவபெருமானால் அழிக்கப்பட்டார் . அதன் பிறகு மீண்டும் யமராஜர்  படைக்கப்பட்டாராம்.

யமதர்மராஜர் முதலில் படைக்கப்பட்டபோது மிகவும் சாந்தமான முகபாவத்துடன்தான் படைக்கப்பட்டாராம். ஆனால் சாந்தமான முகபாவத்துடன் யமராஜர் தேவலோகத்தில் படைக்கப்பட்ட பிறகு அவர் பயங்கரமான உருவைக் கொண்டவராக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதான தேவ விதியை கடைப்பிடிக்க வேண்டும் என  பிரும்மாவிடம்  சிவபெருமான் கூறினாராம். யமதர்மராஜர் பயங்கரமான உருவை எடுத்தப் பின்னர் தேவலோகத்தின் தென்புறத்தில் உள்ள பயங்கர நகரத்துக்கு அவர் அதிபதியாக்கப்படுவார் என்றும், அந்த லோகத்துக்குத்தான் பூமியிலே இறந்தவர்களின் ஆத்மா செல்லும் என்றும் அங்கு பூமியிலே அவை செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சித்திரவதைகளை அனுபவித்தப் பின் யமதர்மராஜரின் உத்தரவின்படி  அவை அடுத்த  உருவை எடுத்துக் கொள்ள மீண்டும் பூமிக்கு செல்லும் என்றும், அந்தந்த ஆத்மாக்களின்  மரணமும் பிறப்பும் அந்தந்த  ஆத்மாக்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த  கால அளவின்படி தொடர்ந்து கொண்டு இருக்கும் என்றும் கூறினாராம். 

யமதர்மராஜனை  குறித்துக் கூறுகையில் அவர் கொடுமையானவர் என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மை அல்ல. அவர் படைக்கப்பட்டத்தின்  காரண காரியத்துக்கு ஏற்ப அவர் பரப்பிரும்மனின் கட்டளையை நிறைவேற்றி, தனது நகரத்துக்கு வரும்  பாவம் செய்த ஆத்மாக்களை தண்டித்து அதன் மூலம் பூமியிலே நியாயங்களும், தர்ம நெறிமுறைகளும் விளங்க வழி வகுக்கிறார். பிராமணீய நூல்களில் நான்கு திசைகளில் ஒன்றான தென் திசையின் அதிபதி யமதர்மராஜர்  என்றும், அந்த தென் திசையிலே தொடர்ந்து பயணித்தால் முடிவாக யமபுரியையே அடைய முடியும் எனக் கூறப்பட்டு உள்ளது.

யம பெருமானின் பிறப்பை குறித்து பல்வேறு சர்ச்சைகள் உள்ளன. சில புராண நூல்களின் கூற்றின்படி அவர் சூரிய பகவானின்   புதல்வர் என்றும், சனி பகவானின் சகோதரர்  என்றும், மகாபாரத நூலின்  செய்தியின்படி  அவர் தக்ஷனின் பத்து மகள்களை மணந்து கொண்டவர் என்றும் தெரிகிறது.  ரிக் வேதத்தின்படி  அவர்  சிறிய கடவுள் அல்லது தெய்வம்  என்பதினால் அவருக்கு வேத காலத்தில் ஆலயங்களில் வழிபாடு இருந்திடவில்லை எனவும் வேத காலத்துக்குப் பிறகு வந்த பிற்காலத்தில்தான் அவருக்கும் சில ஆலயங்களில் வழிபாடு செய்யப்படலாயிற்று என்றும் தெரிகின்றது. பொதுவாக இறந்தவர்களுக்கு செய்யப்படும் சடங்கின்போது  மட்டுமே யமன் வழிபடப்படுகிறார், அதுவும், இறந்தவர்களின் ஆத்மா அமைதியாக இருக்கவும், பசி தாகம் இன்றி இருக்கவும் அவர் வேண்டப்படுவதாக கூறுவார்கள். யமனுக்கு உதவியதாக இருப்பவரே சித்ரகுப்தன். யமனுடைய வாகனம் புண்ரகா எனும் மாடு ஆகும். புண்ரகா எனும் அந்த ஆண் மாடு சிவபெருமானின் அவதாரமான  ருத்ரரின் தொடையில் இருந்து தோன்றியதாக கூறுவார்கள். 

உபநிஷத்துக்களில் ஒன்றான, சுமார் 120 ஸ்லோகங்களை உள்ளடக்கிய  கடோபனிஷட் எனும் உபநிஷத்தில் யமதர்மராஜரை ஒரு ஆசிரியர் அல்லது ஆன்மீக குருவாக காட்டி உள்ளார்கள். அதே நேரத்தில் பிற புராணங்களில் யமராஜர் ஆன்மாக்களை தண்டிக்கும் கொடியவராகவே காட்டப்பட்டுள்ளார். கருட புராணத்தைத் தவிர பிற புராணங்களில் யமதர்மராஜரை  குறித்து எந்த செய்தியும் விவரமாக காணப்படவில்லை. கருட புராணத்தில் மட்டும் யமனைக் குறித்த விரிவான செய்திகள் உள்ளன. கடோபனிஷட் எனும் உபநிஷத்தில் ஆத்மா என்பது என்ன, மரணத்துக்குப் பிறகு பிறப்பும், பிறப்பின் பின் இறப்பும் என்ன என்பதைக் குறித்த உபதேசங்கள் காணப்படுகின்றன.  தனது தந்தை  செய்த பெரும் யாகத்தில் தானம் எனும் பெயரில் வந்தவர்களுக்கு வலிமை இழந்த, முடமான, வாழத்   தகுதி இல்லாத பசுக்களை தனது தந்தை தானம் செய்ததைக் கண்டு மனம் வருந்திய அவரது புதல்வர் நாசிகேடா ‘அந்த பசுக்களுக்குப் பதிலாக என்னை  யாருக்கு தானமாக  கொடுக்கப் போகிறாய்’ என்று கேட்டதும் இல்லாமல், தொடர்ந்து அதே கேள்வியை எழுப்பி தனது தந்தையை நச்சரிக்க கோபம் அடைந்த அவரது தந்தையும்  இறுதியில் நாசிகேடாவை  யமனுக்கு தானம் செய்ய உள்ளதாகக் கூறினார்.

ஆனால் தொடர்ந்து அந்த சிறுவன் மரணம் பற்றிய உண்மைகளைக் கூறுமாறு கேட்க அவனுக்கு பதில் கூற முடியாமல் போன அவனது தந்தை தனது யோக வலிமையினால் அவனை யமதர்மராஜனிடமே அனுப்புகிறார்.  யமனிடம் சென்ற சிறுவனும் விடாமல் மூன்று நாட்கள் யமதர்மராஜருடன் தங்கி தனக்கு பிறப்பு மற்றும் மரணம் குறித்த மர்மத்தை விளக்குமாறு கேட்டப் பின் அவரிடம் மூன்று வரங்களையும் கேட்டுப் பெற்றான். அந்த வரங்களைக் கொடுப்பதற்கு முன் யமதர்மராஜர் அவனுக்கு பல்வேறு சுகபோகங்களையும், செல்வம், ராஜ்ஜியம், பதவி, பவிசு என பலவாறு தருவதாக ஆசை காட்டியும் அந்த சிறுவன் எதற்குமே மசியாமல் தனது கேள்வியிலேயே உறுதியாக இருந்ததைக் கண்ட யமதர்மராஜரும், நாசிகேடாவே தனக்கு கிடைத்த உண்மையான சிஷ்யன் என மகிழ்ந்து மூன்று நாட்கள் தொடர்ந்து அவனுக்கு பிறப்பு மற்றும் இறப்பின் இரகசியங்களை எடுத்துரைப்பதாகவும், ஒரு சிஷ்யனுக்கு ஆசான் கூறுவது போல இந்த உலகுக்கே யமதர்மராஜர்  ஒரு குருவாக இருந்து வெளிப்படுத்துகிறார் என்று கடோபநிஷத் கூறி உள்ளது.

யமதர்மராஜனை சந்தித்ததும் நாசிகேடா  கேட்டார் ‘யமதர்மராஜாவே அனைவருமே கூறுவது என்னவென்றால் ஒருவர் இறந்த பின் ‘அது’ இறப்பது இல்லை’ என்றும் ‘அது’ இறந்து விடுகிறது என்றும் கூறி ‘அது’, ‘அது’ என்கிறார்கள். அப்படி என்றால்  ‘அது’ என்பதின் ரகசியம்  என்ன?  

அதற்கு பதிலாக யமதர்மராஜர்  ‘இதைக் கேள் மகனே, எதற்கு ஆரம்பமும், முடிவும் இல்லையோ, எதற்கு அழிவு என்பதில்லையோ, ஓசை அற்றதோ, ஆசையற்றதோ, வாசனை மற்றும் உணர்ச்சி அற்றதோ அதுவே ‘அது’வாகும். ‘அது’ இறப்பில் இருந்து விடுதலைப் பெற்று உலவும்போது, அனைத்து வேதங்களும் கூறுவது போல ‘அது’ அடைய நினைப்பது ஓம் எனும் தத்துவத்தையே’ என்கிறார். இப்படியாக யமதர்மராஜர் ஒரு ஞான குருவாக இருந்து இறப்பு மற்றும் பிறப்பைப் பற்றிய பல உண்மைகளை நாசிகேடா மூலம் விளக்குகிறார்.

யமதர்மராஜனைக் குறித்து உள்ள இன்னொரு கிராமியக் கதை மூலம் யமதர்மராஜர்  எந்த அளவு நியாயமானவர் என்பது விளங்கும். ஒருமுறை இறந்து போன ஒரு வண்ணானின் ஆத்மாவை அவர் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி விட்டுச் செல்கிறார்கள். ஆனால் அப்போது  யமதர்மராஜர் அவரது அறையில் இல்லை. வெளியில் சென்று இருந்திருந்தார். அவர் அமர்ந்திருந்த தங்க சிம்மாசனம் காலியாகக் கிடந்தது. அதைக் கண்ட வண்ணானுக்கு ஆசை வந்து விடுகிறது. அமைதியாக அதில் சென்று அமர்ந்து கொள்ள சற்று நேரத்தில் உறக்கம் வந்து அதிலேயே உறங்கி விடுகிறான். அப்போது அவனுக்கு ஒரு கனவு. அந்த கனவில் வந்த எவனோ ஒருவன் அந்த வண்ணானின் சட்டையில் இருந்து பணத்தைத் திருட முயலுகிறான். அதைக் கண்ட வண்ணான் தனது நிலையை மறந்து, தான் காண்பது கனவு என்பதை உணராமல்  தான் அமர்ந்திருந்த ஆசனத்தை எடுத்து அவன் மீது வீச அந்த நாற்காலியும் ஒரு மூலையில் போய் விழுந்து உடைந்தது. அப்போது யமராஜர் அங்கு வருகிறார். அங்கு வந்தவர் தனது ஆசனம் ஒரு மூலையில் உடைந்து கிடந்ததைக் கண்டு நடந்த உண்மைகளை அறிந்து கொள்கிறார். அதற்குப் பிறகு அந்த வண்ணானிடம் யமதர்மராஜர் கேட்கிறார் ‘அப்பனே, நீ எத்தனைமுறை உன்னிடம் ஆடைகளை சலவை செய்யக் கொடுத்தவர்களின் உடையில் இருந்த பணங்களை அவர்களுக்கு திருப்பித தராமல் களவாடிக் கொண்டாய். அவர்கள் ஒவ்வொருவரும் உன்மீது நாற்காலிகளை வீசி எறிந்து இருந்தால் எத்தனை நாற்காலிகள் உன்மீது விழுந்திருக்கும் தெரியுமா என கேட்டதும் இல்லாமல் அவனிடம் அவன் அப்படி செய்த தவறுகளின்  பட்டியலைக் காட்டினார். அதன் பின் அந்த வண்ணானை அவர் சொர்கத்துக்கே அனுப்பி விடுகிறார். அதன் காரணம் அந்த வண்ணான் யமதர்மராஜர் அமர்ந்திருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த நேரத்தில் அவனது அனைத்து பாபங்களும் அழிந்து விட்டன என்பதினால் இதை செய்ய வேண்டி இருந்தது. தனது நாற்காலியில் அந்த வண்ணான் அமர்ந்து விட்டானே என ஆத்திரப்படாமல் அதில் அமர்ந்த தவறுக்கு தண்டனை தராமல், யமதர்மராஜனும் கருணைக் காட்டி அவனை சொர்கத்துக்கு அனுப்பியதின் மூலம் அவர் நியாயத்துக்கு கட்டுப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தினார். இதன் மூலம் அனைவரும் நினைப்பது போல யமதர்மராஜர் கொடுமைக்காரர் அல்ல என்பதும், அவர் தனக்கு தரப்பட்டுள்ள கடமையை மட்டுமே நிதானம் தவறாமல் ஒரு ஒழுக்கமான சிப்பாயைப் போல செய்து வருகிறார் என்பதும் விளங்கும்.

இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டபோதுதான் யமபெருமான்  பிறப்பிக்கப்பட்டாலும் தனக்கு மனிதர்கள் மனதில் உயர்ந்த அல்லது நல்ல எண்ணம் இல்லை, அவர்கள் தம்மை தண்டிப்பவராகவே கருதுவதினால்தான் அவர்கள் தம்மை பயத்தினால் வணங்குகிறார்கள், மனதில் உண்மையான அன்பு கொண்டு வணங்கவில்லை என்பதாக எண்ணிய யமபெருமான் மனதில் துக்கம் பீறிட்டது. தான் செய்யும் தொழினால்தானே  இந்த நிலை தமக்கும் வந்துள்ளது என்பதினால் தன்னுடைய தொழிலைத் துறந்து விட்டு மோட்ஷத்தை சென்றடைய  வேண்டும் என்றும் விரும்பி சிவபெருமானை வேண்டி தவம் செய்யலானார். ஆகவே தமது தொழிலை தன்னுடைய உதவியாளரான சித்ரகுப்தரிடம் தந்து விட்டு, யமபுரிக்கு வருபவர்களை கடமை தவறாமல் அங்குள்ள விதிமுறைப் புத்தகத்தில் கூறப்பட்டு உள்ளதைப் போல அவரவர் பாப புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனை தந்து அனுப்பி வரவேண்டும் என்று அறிவுறுத்திவிட்டு பல இடங்களுக்கும் சென்று தனக்கு மோட்ஷம் கிடைக்க தவம் செய்யலானார். இப்படியாக சுமார் 150 இடங்களுக்கும் மேலாக  சென்று தவத்தில் அமர்ந்தாலும் அவருக்கு சிவபெருமான் காட்சி தரவில்லை.  தொடர்ந்து 151 ஆவது இடத்தில் தவத்தில் அமர ஒரு அசீரி வானத்தில் இருந்து குரல் கொடுத்தது. ‘யமபெருமானே, நீங்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தாலும் எந்த பயனும் கிடைக்கப் போவது இல்லை. ஆகவே நீ இங்கிருந்து ஸ்ரீ வாஞ்சியத்துக்கு கிளம்பிச் சென்று அங்கு தவத்தில் இருந்தால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும். நீ விரும்பிய வரமும் கிடைக்கும்’ என்று கூறிவிட்டு மறைந்தது.

அதைக் கேட்ட யமதர்மராஜரும் உடனடியாக கிளம்பி ஸ்ரீ வாஞ்சியத்துக்குச் சென்றார். அங்கு சென்று  கடுமையான தவத்தில் அமர்ந்தார். அவர் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவர் முன்னால் தோன்றினார். அவரைக் கண்ட யமதர்மராஜர் சிவபெருமானிடம் கூறினார் ‘அனைத்து கடவுட்களுக்கும் மேலான சிவபெருமானே, இந்த உலகையே படைத்தவரே, நான் தீராத மனத் துயரில் உள்ளேன். எனக்கு இந்த பூலோகத்தில் யாரிடமும் மதிப்பில்லை. நான் செய்யும் தொழிலினால் என்னை ஒரு கொடியவனாகவே பார்க்கிறார்கள். அனைத்து கடவுட்களையும் பயபக்தியோடு வணங்கும் மனிதர்கள் மனதில் என் மீது வெறுப்பே காணப்படுகிறது. எந்த ஆலயத்திலும் எனக்கு மதிப்பே கிடைப்பதில்லை. எங்கு சென்றாலும் முதலில் அங்குள்ள விநாயகரை வணங்கிய பின்னரே மற்ற கடவுட்களை வணங்குகின்றார்கள். ஆலயத்துக்கு செல்பவர்கள் விநாயகரை வணங்காமல் வேறு சன்னதிக்கு சென்று வணங்கினால் அவர்களுக்கு தெய்வ அருள் கிடைப்பதில்லை. எனக்கு மதிப்பு கிடைக்கவில்லை என்றாலும் யமபுரிக்கு வருபவர்கள் நான் கொடுக்கும் தண்டனையைக் கேட்டு எனக்கு சாபமும் தருகிறார்கள், அலறித் துடிக்கின்றார்கள். அந்த அவலங்களை என்னால் காணவும் முடியவில்லை, அவர்கள் வயிறெரிந்து தரும் சாபத்தை ஏற்கவும் முடியாமல் தவிக்கின்றேன். மேலும் உங்களுடைய பக்தரான மார்க்கண்டேயர் விஷயத்திலும், காலம் முடிந்து விட்ட அவரைக் கொண்டு செல்ல முயன்றபோது, அவர் உம்மிடம் வந்து உம்மைக் கட்டிக் கொண்டு அழுதபோது அவருக்கு நீங்கள் உயிர் பிச்சைத் தந்து காப்பாற்றியதினால் நான் தீராத அவமானத்தை சுமக்க வேண்டி வந்தது. ஆகவே சிவபெருமானே, என்னை என் தொழிலில் இருந்து விலக்கி விட்டு எனக்கு மோட்ஷம் தந்து விடுங்கள்’ என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.  அது மட்டும் அல்லாமல் தானே சிவபெருமானுக்கு வாகனமாக இருக்க வேண்டும் என்றும் வேண்டினார். ஆனால் அதை சிவபெருமான் ஏற்கவில்லை.

மாறாக அதைக் கேட்ட சிவபெருமானும் யமனுக்கு ஒரு வரம் கொடுத்தார். அந்த வரத்தின்படி அவர் வாஞ்சியத்தில் பிற்காலத்தில் அமைய உள்ள ஆலயத்தில் விநாயகருக்கு பதிலாக முதல் சன்னதியில் அமர்ந்து கொள்வார் என்றும், அங்கு வருகை தரும் பக்தர்கள், தனி சன்னதியில் அமர்ந்து இருக்கப்போகின்ற யமபெருமானை முதலில் வணங்கிய பின்னரே தன்னை தரிசிப்பார்கள் என்றும், அங்கு வந்து யமபெருமானை தரிசிப்பவர்களுக்கு யம பயம் மற்றும் மனக் கலக்கங்கள் விலக யமதர்மராஜர் அருள் புரிவார் என்றும், தான் மாசி மாதம்  பரணி நட்ஷத்திரத்தில் யமதர்மராஜருக்கு  காட்சி தந்ததினால் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் பரணி நட்ஷத்திரத்தின் அன்று யமதர்மராஜர் சிவபெருமான் மற்றும் பார்வதிக்கு வாகனமாக இருப்பார் என்றும், அன்று நந்தி தேவர் வாகனமாக இருக்க மாட்டார் என்றும் அருள் புரிந்தார். அதனால்தான் ஸ்ரீ வாஞ்சியத்துக்கு செல்பவர்கள் யமதர்மராஜர் சன்னதியில் ஆராதிக்காமல்  நேரடியாக சிவபெருமானின் சன்னதிக்கு சென்று வணங்கினால் அவர்களுக்கு எந்த பலனும் கிட்டாது  என்பது விதியாயிற்று. யமபெருமானின் சன்னதிக்கு எதிரில் நந்தி தேவர் அமர்ந்திருக்க, யமராஜர் பக்கத்தில் சித்ரகுப்தர் நின்று கொண்டுள்ள நிலையில் காட்சி தருகிறார்.  இங்குள்ள யமதர்மராஜனை ஆராதிப்பதின்  மூலம் யம பயம் விலகும், மன சஞ்சலம் நீங்கும் என்பது நம்பிக்கை.

இந்த ஆலயம் த்ரிரேதா யுகத்தில் அமைந்தது என்றும், வழிபாட்டு தலமாக திறந்த வெளியில் இருந்த இதன் மீது பெரிய ஆலயம் சோழ மன்னர்கள் காலத்தில் அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்னால் எழுப்பப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.  இங்குள்ள சிவபெருமானை வாஞ்சிநாதர் என்றும், பார்வதியை மங்களாம்பிகை என்றும், குளத்து நீரை குப்தா கங்கை என்றும் அழைப்பார்கள். ஆலயத்தின் ஸ்தல விருஷமாக சந்தன மரம் உள்ளது.  திருவாரூர் செல்லும் பாதையில் கும்பகோணம் மற்றும் நன்னிலம் சாலையில் முடிகொண்டான் மற்றும் புத்தூர் நதிகளுக்கு இடையே இந்த தலம் அமைந்து உள்ளது.

யமபெருமானுக்கு இந்தியாவில் மேலும் சில ஆலயங்கள் அமைந்து உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுக்கோட்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தில் யமதர்மராஜர் ஆலயம் உள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் 7000 அடி உயரத்தில் உள்ள பர்மூர் எனும் இடத்தில்  தர்மேஸ்வரர் மகாதேவ் எனும் இடத்திலும் யமதர்மராஜனுக்கு ஆலயம் உள்ளது. இது சுமார் 1400 ஆண்டுக்கு முற்பட்ட ஆலயம் என்கின்றார்கள்.

திருக்கடையூரில் யமனை எரித்து விட்ட சிவபெருமானிடம் பூமாதேவி சென்று யமனுடைய மரணத்துக்குப் பிறகு பூலோகத்தில் மனித பிறவிகள் மேலும் மேலும் பெருகிக் கொண்டே போகின்றார்கள் என்றும், அந்த பாரத்தை தன்னால் தாங்க முடியவில்லை என்றும், ஆகவே மீண்டும் யமனுக்கு உயிர்பிச்சை தந்து எழுப்ப வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டாள். அதனால் மனம் இளகிய சிவபெருமானும் தனது கோபத்தை தணித்துக்  கொண்டு யமனை சிறு குழந்தையாக பிறவி எடுக்க வைத்தார். திருக்கடையூர் ஆலயத்தின் சிற்பங்களில் சிவபெருமான் மற்றும் பார்வதியின் காலடியில் யமன் சிறு குழந்தை வடிவில் இருப்பதைக் காணலாம்.

தமிழ்நாட்டில் கோயம்பத்தூர் மாவட்டத்திலும் யமனுக்கு ஒரு ஆலயம் உள்ளது.  கோயம்பத்தூரில் இருந்து குருவாயூர் மற்றும் திருச்சூர் செல்லும் பாதையில் இருபது கல் தொலைவில் பழனிசாமி என்பவரது ஏழாவது வம்சத்தை சேர்ந்தவர் யமபெருமானுக்கு ஒரு ஆலயத்தை நிறுவி உள்ளார்.

ஒரு காலத்தில் வெள்ளலூர் எனும் அந்தப் பகுதி நதியின் வெள்ளத்தில் மூழ்கி விட இருந்தபோது உள்ளூரில் இருந்த ஒருவரது கனவில் தோன்றிய யமராஜர் தனக்கு ஒரு ஆலயம் அமைத்தால் அந்த ஊரை தான் வெள்ளத்தில் இருந்து காப்பதாக உறுதி அளித்தாராம்.

அதன்படி அந்த ஊரைக் காத்த யமபெருமானுக்கு ஆலயம் அமைக்க  அலைந்தபோது ஆலயம் தற்போது உள்ள இடத்தை அந்த மனிதர் அடைந்தார். அந்த நிலம் ஒரு அந்தணருக்கு சொந்தமானதாம். அவர் அங்கு சென்றபோது அந்த அந்தணரும் அங்கேயே யாருக்காகவோ காத்துக் கொண்டு இருந்தாராம். அங்கு சென்ற கிராமத்தவர் தனக்கு கனவில் வந்த காட்சியைக் கூறி யமபெருமானுக்கு ஆலயம் அமைக்க இடம் தேடி  அலைவதாகக் கூற, அந்த அந்தணரும் உடனடியாக அந்த நிலத்தை தந்ததோடு மேலும் எத்தனை நிலம் வேண்டுமோ அதையும் எடுத்துக் கொண்டு யமபெருமானுக்கு ஆலயம் அமைக்குமாறு கூறினாராம். அடுத்தடுத்து காரியங்கள் மளமளவென நடந்து முடிய வயலில் யமபெருமானுக்கு ஆலயம் அமைந்தது.  அங்குள்ள யமராஜனும் கையில் அங்குசம் ஏந்தி நின்றவண்ணம், தனது வாகனமான எருதுடனும், சித்ரகுப்தருடனும் காட்சி தருகிறாராம். ஆனால் யமதர்மராஜர் சன்னதிக்குள் நுழைய பெண்களுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.