-4-

 ஸ்ரீ பைரவ சித்தாந்த ஸ்வாமிகள் 

மற்ற எந்த ஆலயத்திலும் காணப்படாத ஒரு வழிபாட்டு முறை இந்த ஆலயத்தில் காணப்படுகிறது. அதுவே இந்த ஆலயத்தின் அதிசயம் ஆகும். இந்த ஆலயத்துக்கு செல்பவர்கள் தமது வீட்டில் எத்தனை நபர்கள் உள்ளனரோ அவர்கள் கையினால் வீட்டில் சமைக்க வைத்துள்ள அரிசி பாத்திரத்தில் இருந்து ஒவ்வொரு பிடி அரிசியை வாங்கி ஒரு பாத்திரத்திலோ அல்லது மூட்டையாக  கட்டியோ கொண்டு வர வேண்டும். அதைக் கையில் வைத்துக் கொண்டு காலபைரவர் முன் நமக்கு தேவையான வேண்டுதலை வைத்து அவரை வணங்கிய பின் அதை அந்த அரிசியை கொடுக்க வேண்டிய அறைக்கு எடுத்துச் சென்று அங்கு அதை சமர்பிக்க வேண்டும். அதை அங்குள்ள ஒரு பீப்பாயில் கொட்ட வேண்டும். அதைக் கொண்டு அவர்கள் உணவு தயாரித்து அன்னதானம் செய்கிறார்கள். இந்த அரிசியைதான் வாய்க்கரிசி என்கிறார்கள். அதன் தாத்பர்யம் பாகம் -1 ல் தரப்பட்டு உள்ளது. இதில் உள்ள முக்கியமான விதியே வீட்டில் வைத்து உள்ள அரிசியைத்தான் கொண்டு வர வேண்டும். வீட்டில் அரிசி இல்லை என்றால் கடையில் இருந்து அரிசியை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து அதில் இருந்து ஒரு கவளமாவது  உணவை தயாரித்தப் பின் மீதம் உள்ள அரிசியில் இருந்து ஒரு பிடி கொண்டு வர வேண்டும். இது எதனால் என்றால் எவர் வீட்டில் இருந்து அரிசியைக் கொண்டு வருகிறோமோ அந்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரின் ஜீவ அணுக்களும் அதோடு கலந்திருக்கும் என்பதினால் இந்த விதி முறை உள்ளது. அந்த அரிசியை வாய்க்கரிசியாகப் போடும்போது கிடைக்கும் பலன் கடையில் இருந்து வாங்கி நேராக கொண்டு வந்தும் அரிசிக்குக் கிடையாது. அந்தப் பலன் அந்த கடைக்காரருக்குப் போய் விடுகிறது.

உஜ்ஜயினியில் எனக்குத் தெரிந்து ஒரு ஆலயத்தில் ஆரூடம் சொல்லும் ஸ்வாமிகள் ஒருவர் அவரிடம் செல்பவர்களின் வீட்டில் இருந்து ஒரு பிடி அரிசியை கொண்டு சென்றால் மட்டுமே அதை அவர் முன் உள்ள பீடத்தில் போடச் சொல்லி விட்டு ஆரூடம் கூறுவார். வெளியில் இருந்து வாங்கிக் கொண்டு வீட்டில் வைத்திருக்காமல் நேரடியாக அவரிடம் கொண்டு சென்றால் அவரால் வந்தவருக்கு எந்த ஆரூடமும் கூற இயலாது. அதைப் பார்த்த உடனேயே இது உங்கள் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது அல்ல, இதில் உங்கள் வீட்டின் ஜீவன்கள் இல்லை என்பதினால் உங்களுக்கு என்னால் ஆரூடம் கூற முடியாது என்று திருப்பி அனுப்பி விடுவார். அதற்கு அவர் கூறிய அதே காரணமே இந்த ஆலயத்தின் விதி முறைக்கும் பொருந்தி உள்ளது  என்பதினால் இந்த தத்துவம்  மிக முக்கியமானதே என்பதை இங்கு குறிப்பிட வேண்டி உள்ளது.

நமக்கு ஏற்படும் துன்பங்களுக்குக் காரணம் ஊழ்வினைகளின் தொடர்வுதான். அவை நம்மை விட்டு விலகாதவரை நாம் படும் துயரங்களும் வேதனைகளும் நம்மை விட்டு விலகுவது இல்லை. அவற்றில் இருந்து நமக்கு எப்படி விமோசனம் கிடைக்கும் என்பதே நம் முன் எழும் கேள்வி ஆகும். அதன் விடை இங்கே உள்ளது. இந்த பைரவர் ஷேத்திரத்தில்  நாம் காலடி எடுத்து வைத்ததுமே நம்மை சூழ்ந்து நிற்கும் அனைத்து ஊழ்வினை தீய சக்திகளுமே நம்மை விட்டு விலகி ஓடும். அதன் காரணம் பைரவர் உள்ள இடத்தில் தீய சக்திகளோ அல்லது தீமைகளை செய்யும் கணங்களோ நுழையவோ அல்லது உயிரோடு இருக்க முடியாது.

ஸ்ரீ பைரவ சித்தாந்த ஸ்வாமிகள் 

மனிதர்களை ஆட்டிப் படைக்கும் காலக் கோட்கள் (ராசிகளும், நட்ஷத்திரங்களும்) மனிதர்களை   இனம் பிரித்தோ நிறம் பிரித்தோ அவர்களது வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. அவரவர் செய்த பூர்வ மற்றும் நடப்பு வாழ்வின் பாப புண்ணியங்களுக்கு ஏற்ப அவற்றுக்கான தண்டனைகளையோ அல்லது வசந்தத்தையோ இந்த ஜென்மத்தில் அவை தருகின்றன. அதே சமயத்தில் பல நேரங்களில் மனிதர்கள் தம்மை அறியாமலேயே தவறுகளை செய்து அதன் விளைவாக தம்முடைய பாபங்களை பெருக்கிக் கொள்கின்றார்கள். அதன் காரணம் கோள்களின் பாதிப்புக்கள்தான். அதனால்தான் இந்த ஆலயத்தில் வந்து கோள்களினால் ஏற்படும் பாதிப்புக்களை விலக்கிக் கொள்ள முடியும் என்பதாக ஸ்ரீ பைரவ சித்தாந்த ஸ்வாமிகள் கூறுகிறார்கள்.

பொதுவாக நாய்களை தம்முடன் வைத்திருக்கும் நிலையில் காணப்படும் தெய்வங்கள் பைரவர் மற்றும் தத்தாத்திரேயர் போன்றவர்கள் ஆவர்கள். இருவருமே சிவபெருமானின் அவதாரங்கள்.  ஆனால் அந்த இருவரில் பைரவர் மட்டுமே தம்முடைய வாகனமாக நாயை வைத்துள்ளார்.  பொதுவாக எந்த ஒரு தெய்வத்துக்கும் ஒரே ஒரு வாகனம் மட்டுமே இருக்கும். அப்படி அந்த தெய்வம் தமது வாகனத்துடன் காட்சி தந்தால் அவர்களுடைய வாகனம் அவர்கள் பக்கத்தில் காணப்படும், அல்லது அதன் மீது அவர்கள் அமர்ந்திருப்பார்கள். அதே போல அவர்களது வாகனமும் (மிருகங்கள்) அவர்களது சன்னதிக்கு முன்பாக காணப்படும்.  பைரவருடைய வாகனம் நாய் என்பதினால் அவருடைய வாகனமான ஒரு நாயை பக்கத்தில் கொண்டு காட்சி அளிக்கும் பைரவரின் சிலையை பல ஆலய சன்னதிகளில் காணலாம். ஆனால் தனது வாகனமாக ஒன்றுக்கும் மேலான நாய்களை வைத்துக் கொண்டு ஆலயத்தில் காட்சி தரும் பைரவரைப் பார்ப்பது அபூர்வமானது. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட வாகனங்களுடன் காட்சி தரும் தெய்வங்களின் சக்தி பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம் ஆகும். ஆகவேதான் இந்த ஆலயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பைரவரரின் முன் பிராகாரத்தில் காட்சி தருவதின் மூலம் இங்குள்ள பைரவருக்கு மிக அதிகமான சக்தி  இருக்கும் என்பது தெளிவாகிறது.

அதுவும் பைரவரே இன்ன தோற்றத்தில்  தான் வடிவமைக்கப்பட  வேண்டும் என்று ஸ்ரீ பைரவ  சித்தாந்த ஸ்வாமிகளிடம்  எடுத்துக் எடுத்துக் காட்டி அதே நிலையில் தான் மூன்று வாகனங்களுடன் அமர்ந்திருப்பத்தின் மூலம் மூன்று நிலைகளிலும் (நீர், நிலம் மற்றும் ஆகாயம்) தான் வியாபித்திருப்பதை  எடுத்துக் காட்டுகிறார். அதனால்தான் ஒன்றுக்கும் மேற்பபட்ட வாகனங்களுடன் வீற்று இருக்கும் ஸ்ரீ மஹா ஷேத்திர ருத்ர பால பைரவர் அதீத சக்தி கொண்டவராக விளங்குகிறார்.

ஆலயத்துக்கு வந்திருந்த ஒருவர் கூறினார் ‘சாதாரணமாகவே ஏவல், பில்லி சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய, வாழ்வில் வளம் பெற, திருமணத் தடைகள் அகல, பித்ரு தோஷம், சனி தோஷம் போன்ற அனைத்து தோஷங்களும் பூரணமாக விலகிட பைரவரை வழிபட வேண்டும் என்பதாக பண்டிதர்கள் கூறுவார்கள். ஆனால் ஸ்ரீ பைரவ சித்தாந்த ஸ்வாமிகளோ இந்த ஆலயத்துக்கு வந்து ராசிப் படிகளின் வழியே ஏறி ஸ்ரீ மஹா ஷேத்திர ருத்ர பால பைரவரை தரிசித்தால் மட்டும் போதும், அனைத்து தோஷங்களும் விலகி ஓடும் என்கிறார்கள். உற்சவங்களில் ஸ்ரீ பைரவ சித்தாந்த ஸ்வாமிகளே அக்னிப் பூ சட்டி எனும் பெயரில் அக்னியாக எரிந்து கொண்டிருக்கும்  முப்பதுக்கும் மேற்பட்ட பெரியப் பெரிய  நெய் விளக்குகளை தம் உடலில் ஏந்தியவண்ணம், அதன் உஷ்ணத்தையும் தாங்கிக் கொண்டு பவனி வந்து பைரவரை ஆராதிப்பதைக் காண்பது மயிர்க்கூச்சல் எரிய வைக்கும்.  அந்த அற்புதத்தை என்னவென்று கூறுவது?’

எரிந்து கொண்டிருக்கும் நெய் விளக்குகளான 
அக்னிப் பூ சட்டியை தம் உடலில் 
ஏந்தியவண்ணம் ஸ்வாமிகள் செல்லும் ஊர்வலம் 

ஆமாம், அந்த ஆலயத்துக்கு சென்னையில் இருந்து எப்படி செல்வது?

அந்த ஆலயத்துக்குச் செல்ல வேண்டும் எனில் சென்னையைத் தாண்டி செங்கல்பட்டு செல்லும் தேசிய நெடும்சாலை NH -45 ல் பயணித்து சென்னையில் இருந்து சுமார் 54 கிலோ தொலைவில் உள்ள  மறைமலை நகரை தாண்டி உள்ள மகேந்திர சிட்டி எனும் தொழில் கூடத்தில் நுழைய வேண்டும். மகேந்திர சிட்டியில் பல பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலங்கள் உள்ளன. முக்கியமாக கணினி சம்மந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் நிறையவே உள்ளன. சென்னையில் இருந்து செல்பவர்கள் மகேந்திர சிட்டியில் உள்ளே நுழைந்ததும்  நுழைந்த சாலையிலேயே எங்கும் திரும்பாமல் நேராக சென்று கொண்டு இருக்க வேண்டும். 4th அவென்யூ மற்றும் Central அவென்யூ வழியே சென்று கொண்டே இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு சென்றால் அந்த தொழில்பேட்டையின் எட்டாவது அவென்யூ அதாவது கடைசி பகுதியை அடையலாம். அந்த சாலையின் இடதுபக்கத்தில் SWAAP, Mind Tree,  Renault Nissan, Capgemini,  Sundaram federal, Mohal, போன்ற பல நிறுவனங்கள் காணப்படும். நாம் செல்லும் பாதை சரியானதே என்பதைக் காட்டும் அவற்றை அடையாளமாகக் கொண்டு அவை அனைத்தையும் கடந்து சென்றால் இடது பக்கத்திலேயே Parkar எனும் நிறுவனத்தைக் காணலாம். அதை ஒட்டி இடப்புறம் செல்லும் சாலையில் நுழைந்து இன்னும் சில மீட்டர் தூரம் பயணித்தால் தொழில் கூடத்தின் பின்புற வாயிலை  காணலாம்.

அந்த வாயிலைக் கடந்ததும் கரடுமுரடான சாலையில் செல்லத் துவங்குவோம்.  சுமார் பத்து அல்லது பன்னிரண்டு அடியே அகலமான சாலை வளைந்து வளைந்து சென்றபடி சில குக்கிராமங்கள் (தாலுக்காக்கள்) வழியே செல்லும். வழியில் காந்தளூர், ஆத்தூர், புலிப்பாக்கம், ராஜகுளிப்பேட்டை, அனுமந்தை, குன்னவாக்கம் போன்ற கிராமங்களைக் காணலாம். சாலையின் இருபுறமும் வயல்களே காணப்படும். வழியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில வீடுகள் அந்த குக்கிராமங்களில் காணப்படுகின்றன. அவற்றின் வழியே செல்லும்போது இன்னும் சற்றே கரடு முரடான சிறிய பாதையில் நுழைந்து செல்ல நேரிடும். அந்த சாலைகள் தார் சாலையாக இருந்தாலும் மழைக் காரணமாக அங்காங்கே மேடும் பள்ளமுமாக இருந்தன. இப்படியாக சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு கரடு முரடான சாலையில் பயணித்தால் குன்னவாக்காம் என்ற சிறு தாலுக்காவின் பெயர் பலகையைக் காணலாம். அதே வழியில் இரண்டு இடங்களில் ஆலயம் செல்லும் வழி என்ற பெயர் பலகை காணப்படும்.  சரியான  என்கின்ற நம்பிக்கைக்கு கூற வேண்டும் என்றால் செல்லும் வழியில் ஒரு இடத்தில் சின்ன தேவாலயமும் மற்றும் இன்னொரு இடத்தில் வலது பக்கத்தில் மசூதித் தெருவு என்று சாலையின் பெயர் போடப்பட்டு இருப்பதையும் காணலாம். இவை இரண்டுமே நீங்கள் பயணிக்கும் வழி சரியானதே என்பதை விளக்கும். ஆனால் அவை உள்ள சாலைகள் எதிலும் திரும்பாமல் நாம் சென்று கொண்டு இருக்கும் பாதையிலேயே நேராகவே சென்று கொண்டு இருந்தால் ஆலயம் செல்லும் வழி என இடப்புறத்தில் நோக்கி ஒரு பெயர் பலகை காணப்படும். அந்த பெயர்ப் பலகையை ஒட்டி உள்ள இடதுபக்க சாலையில் திரும்பினால் மலை அடிவாரத்து சாலை காணப்படுகிறது. அதில் சுமார் ஒரு கிலோமீட்டர் பயணித்தால் இடது புறத்தில் காலபைரவர் ஆலயம் உள்ளதைக் காணலாம்.

ஆலய விலாசம்:-
ஸ்ரீ மஹா பைரவர் ருத்ர ஆலயம்,
ஸ்ரீ பைரவர் நகர்,
திருவடிசூலம் சாலை,
ஈச்சாங்கரணை,
செங்கல்பட்டு-  603 003
தொடர்புக்கு தொலைபேசி: 9940392913 மற்றும் 9444460759

– முடிவுற்றது