சாந்திப்பிரியா

5

76) அதன் பின் முன்போல மீண்டும் மண் குடத்தை இடதுபுற தோளில் வைத்துக் கொண்டு ஒரு  சந்தனக் கட்டையை பின்பக்கமாக ஏந்திய வண்ணம் சவத்தை இடப்புறமாக மூன்று முறை சுற்றி வருவார். ஒவ்வொரு சுற்றின் போதும் அவர் பின்னால் செல்பவர் சிறு கல்லினால் மண் குடத்தில் ஒரு சின்ன ஓட்டை இட அந்த ஓட்டை வழியே விழும் தண்ணீர் சவத்தின் மீது விழும். அதையும் இறந்தவரது உடலுக்கு செய்யும் கடைசி அபிஷேகம் என்பார்கள். அந்த இரு   சடங்குகளின்  தத்துவம்  என்ன?

77) முதலாவது  தத்துவம் என்ன என்றால், அந்த ஜீவன் தீயில் எரிந்து போனாலும், அதன் ஆத்மா தாகத்தோடும் பசியோடும் இருக்கக் கூடாது என்பதற்காக அடுத்த பன்னிரண்டு நாட்களும் அந்த குடத்தில் சமையல் செய்து ஜீவனின் பசியைப் போக்கி (பிண்டம்), குடிப்பதற்கு தண்ணீரும் தருகிறோம் என்பதை எடுத்துக் காட்டும் சம்பிரதாய செயல் அது.   அது மட்டும் அல்ல  அந்த மயானத்தில்  இறந்தவரது உடலை தொடர்ந்து வந்திருந்த ஜீவாத்மா  அந்த பிண்ட தண்ணீரை மானசீகமாக பருகத் துவங்கி தனது தாகத்தை தீர்த்துக் கொள்ளத் துவங்குமாம். அதாவது கர்த்தா படைக்கும் பிண்ட தர்ப்பணத்தை மரணம் அடைந்தவரது ஜீவன் ஏற்றுக் கொள்ளத் துவங்கும் முதல் நிலை அது. அந்த காலங்களில் மண் சட்டியில்தான் அரிசியை வேக வைத்து சமையல் செய்வார்கள். எனவேதான் தண்ணீரையும் மண் குடத்தில் எடுத்து வருவார்கள். ஆகவே இரண்டுக்குமே மண் குடமே பிரதானமாக உள்ளது. தனது தாகத்தை தீர்க்க செய்யப்படும் அந்த செயலை மயானத்தில் செய்யும்போது அதைக் காணும் ஜீவனின் மனதில் மகிழ்ச்சி ஏற்படுமாம். அது மனமார தனது சந்ததியினரை ஆசிர்வதிக்குமாம்.

சிதையை சுற்றி வருகையில் குடத்தில் 
போடப்பட்ட சிறு ஓட்டையில் இருந்து
வெளியேறும் நீர் சவத்தின் மீது விழுகிறது

78) குடம் என்பது உடலைக் குறிப்பது. மண் குடம் நிலையற்ற தன்மையைக் கொண்டது. அது கீழே விழுந்தால் பிற உலோகப் பொருட்களைப் போல நசுங்காமல்,  முற்றிலும் உடைந்து போகக் கூடிய பொருளாகும். அந்த மண் குடத்தைப்  போன்றதே இந்த உலக வாழ்கையும் உள்ளது. பிறந்தவருக்கு வாழ்வு நிரந்தரம் அல்ல. குடத்தை ஒருவர் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அதன் பயன்பாடும் இருக்கும் என்பதைப் போலவேதான் நாம் ஒவ்வொருவரும் இந்த வாழ்க்கையில் பிறருக்கு எந்த விதத்தில் பயனுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டு வாழ வேண்டும். ‘இதோ உடைந்து போன இந்த மண் குடத்தில் இருந்து நீர் வெளியேறுகிறதே அதைப் போலவேதான் ஜடமற்ற உடலில் உள்ள ஜீவன்களும் மண் குடம் போன்ற  உடலை விட்டு வெளியேறும். ஆகவே உள்ளவரை பிறருக்கு பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும் ‘ என்று அந்த ஆத்மா அங்குள்ளவர்களுக்கு எடுத்துக் காட்டுவதை உணர்த்துவதே அதன் இரண்டாவது  தத்துவம்.

79) குடம் என்பது மனித உடலைக் குறிப்பது. மண் குடத்தில் நிறப்பப்பட்டு உள்ள தண்ணீர் என்பது உடலின் உள்ளே உள்ள ஆத்மாவாகும்.  மூன்று முறை குடத்தை துளையிட்டு தண்ணீரை வெளியேற்ற வைப்பது  உடலை விட்டு வெளியேறும் ஆத்மா மூன்று சங்கல்பங்களை  எடுத்துக் கொண்டு  வெளியேறுவதைக் குறிக்கும் சடங்காம்.  அந்த மூன்று சங்கல்பங்கள் என்னென்ன?

80) இந்த மண்ணுலகில் ஒரு ஆத்மாவானது பிறப்பு எடுத்ததும் மண் ஆசை, பெண் ஆசை மற்றும் பொருளாசையுடன் அலைந்து திரிகிறது. அதனால்தான்  ஆத்மாவானது உடலை விட்டு வெளியேறும்போது  அந்த மூன்று ஆசைகளையும் அங்கேயே அழித்துக் கொண்டு, ‘இனி மண் உலகில் உள்ளவர்களுக்கும்,  ஆத்மாவான எனக்கும் எந்த பந்தமும் கிடையாது, நான் சுதந்திரமானவன், எங்கு வேண்டுமானாலும் சென்று பிறப்பேன்.  எப்படி உடைந்து போன மண் குடத்தை மீண்டும் ஓட்ட வைக்க இயலாதோ அப்படித்தான் இப்போது நான் வெளியேறிய உடலுடன் என்னை மீண்டும் ஓட்ட வைக்க இயலாது’ என்ற சங்கல்பத்துடன்  உடலை விட்டு வெளியேறும். அது போலவேதான் வாழ்கையில் அனைத்து சுகங்களையும் அனுபவித்தப் பின் வயதான காலத்தில் மரணத்தை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்க வேண்டிய கட்டத்தில் ஒவ்வொருவரும் காம, குரோத மற்றும் இச்சைகளை குறைத்துக் கொள்ளத் துவங்க வேண்டும் என்பதை அனைவருக்கும் உணர்த்தவே  அதை  ஒரு போதனையாக வைத்துள்ளார்களாம்.

81)  உடைந்த ஓட்டையில் இருந்து வெளியேறிய நீர் உடலின் மீது விழுந்து அந்த உடலின் மீதிருந்து  பூமியிலே சிந்தும் என்பது  அந்த ஜீவன்  பூமாதேவி மீது ஆணை இட்டு அந்த சங்கல்பத்தை  எடுத்துக் கொள்வதைக் காட்டுவதான  ஐதீகம். ஆகவே மண் குடத்தை ஓட்டை இட்டு தண்ணீரை உடல் மீது விழ வைப்பது பக்தி மார்கத்தை வலுப்படுத்த செய்யப்பட்ட ஆன்மீக போதனை ஆகும். இதற்கு எந்த விதமான விஞ்ஞானபூர்வமான  காரணமும்  கிடையாது. இனி கர்மாவை தொடர்வோம்.

82) மூன்றாவது சுற்று முடிவில் கர்மாவை செய்பவர் சிதையை பார்க்காமல் சிதையின் எதிர் திசையைப் பார்த்து  நின்றபடி ‘ஓம்’ எனக் கூறிக் கொண்டே சந்தனக் கட்டையை (அதில் சிதையை எரிக்க நெருப்பு இருக்கும்) சிதையின் தலைப் பகுதியில் வைத்தப் பின் குடம் உடையும் வகையில் முன்புறமாக கீழே போடுவார். இந்த சடங்கும் குடும்பத்துக்கு குடும்பம் மாறுபட்டு இருக்கும். சில குடும்பங்களில் கர்த்தா சிதையை பார்த்தபடி நின்றவாறு சந்தனக் கட்டை கொள்ளியை சிதை மீது வைக்கும் பழக்கமும் உண்டு. உடலை சிதையில் வைத்த பின் நெய்யை வாய், வலது கண்,இடது கண், வலது மூக்கு, இடது மூக்கு, வலது மற்றும் இடது காது ஆகிய ஏழு இடங்களில் சிறிது விட வேண்டும்,  பண்டை காலத்தில் அந்த இடங்களில் சின்ன தங்கம் வைக்க வேண்டும் என்பதாக எழுதி இருக்கிறார்கள். ஆனால் காலம் மாற மாற தங்கத்திற்கு பதில் நெய் விடத் துவங்கினார்கள். இப்படியாக அந்த ஏழு துவாரங்களில் நெய் விடுவதின் காரணம் அந்த ஏழு துவாரங்களும் உடலில் இருந்து வெளியேறும்  ஜீவாத்மா வெளியேறிச் செல்லும் புனித வழிகள் மற்றும்  உடலில் உள்ள ஏழு சிறிய ஹோம குண்டங்கள் என்பதாகும். பிறகு  பிரேதத்தின் மீதோ அதன் வாயிலோ எள்ளுடன் கலந்த அரிசியை (வாய்க்கரிசி) அங்குள்ள பந்துக்கள் போட வேண்டும். அதன் பின்னர் கர்த்தா சிதைக்கு தர்பை மூலம் கொள்ளி வைத்து விட்டு பிரேதத்தின் பாதங்கள் உள்ள பகுதிக்குச் சென்று தன் விரலில் அணிந்திருந்த தர்பைப் புல்லினால் ஆன பவித்திரம், பூணூல் போன்றவற்றை கழற்றி சிதையில் போட்டு வணங்கிய பின் உடல் முழுவதும்  எரியும் வரை அங்கேயே நின்று கொண்டு இருப்பார்கள். தர்ப்பைகளால் செய்த ஐந்து தர்பை கொத்துக்களை ஆவாஹனம் செய்து பூஜித்து தஹன சமயத்தில் பிரேதத்தின் தலை, கண், வயிறு, நாபி, கால் ஆகிய இடங்களில் வைத்து ஹோமம் செய்து அதையும் பிரேதத்துடன் எரிக்க வேண்டும்.

  • சிதைக்கு தீ மூட்டுவதற்காக பல்வேறு விதமான அக்னியை உண்டு பண்ணி பயன்படுத்துகின்றார்கள். அவற்றை சடங்கை செய்து தரும் புரோகிதர் கூறுவார்.
  • உத்தபனாக்னி என்பது மும்முறை தர்பை கொத்தை  ( ஒரு கொத்து தர்பையை முஷ்டி என்பார்கள்) கொளுத்தி அதிலிருந்து  ஏற்படுத்தப்படும் அக்னி ஆகும்.   முதலில் ஒரு கொத்து தர்பையை அக்னியில்  காட்டி,  அந்த தர்பையில் உண்டாகும்  அக்னியில் இருந்து இரண்டாவது  தர்பை கட்டில் அக்னியை மூட்டி,  அதில் இருந்து வெளியாகும் அக்னியில் மூன்றாவது தர்பைக் கட்டில் தீ மூட்டி, அந்த அக்னி தர்பையை சிதையில் வைத்து சிதைக்கு தீ மூட்டுவார்கள். இந்த வழிமுறையை பயன்படுத்தியே மனைவியை இழந்த கணவனுக்கும், கணவனை இழந்த மனைவிக்கும் தஹன ஸம்ஸ்காரம் செய்வார்கள்.
  • பிரும்மச்சாரிகளை தகனம் செய்யும்போது மண் பாத்திரத்தை அக்னியில் வைத்து நன்றாக சூடாக்கி , அதில் கொஞ்சம் வரட்டி தூளை போட்டு தீ பிடிக்க வைத்து அதை தகனத்துக்கு பயன்படுத்துவார்கள். அதை கபாலாக்னி என்பார்கள்.
  • துஷாக்னி என்பது ஒரு  மண் பாத்திரத்தை தீயில்  நன்றாக சூடாக்கி அதில் கொஞ்சம் உமியை போட்டு அக்னியை  உண்டு பண்ணி அந்த அக்னியை சிதையில் வைக்கப்பட்டு உள்ள உபநயனம் ஆகாத ஆணுக்கும் திருமணம் ஆகாத  பெண்ணின் தகனத்துக்கும் பயன்படுத்துவார்கள்.  
  • தம்பதிகளில் ஒருவர் இறந்தால் ஒளபாசனாக்னி எனும் அக்னியை உபயோகிக்க வேண்டும்.

83) முன் காலங்களில் விறகுகளை அடுக்கி அதன் மீது பிணத்தை வைத்து எரித்தது போல் இல்லாமல் இந்த காலத்தில் மின்சாரத்தில் இயங்கும் மின்னடுப்பில் பிணங்களை எரித்து விடுவதினால் சிதை பீடத்தில் வைத்த சவத்திற்கான சடங்குகளை முடித்தப் பின் பாடையுடன் கூடிய உடலை எடுத்து வந்து மின்சார யந்திரத்தின் மேடை மீது வைத்தப் பின் சம்பிரதாயமாக கொள்ளிக் கட்டையை அதில் வைப்பார்கள்.  அதன் பின் அங்குள்ள தொழிலாளி பாடையுடன் உள்ள உடலை யந்திரத்தின் உள்ளே தள்ளி கதவை மூடிவிடுவார். உடல் சற்று நேரத்திலேயே எரிந்து சாம்பலாகி விடும். இந்த முறையில் செய்யப்படும் கர்மா சாஸ்திர விதிப்படி சரியா அல்லது தவறா என்ற விவாதம் தேவை அற்றது. காரணம் மின் அடுப்பிலும் உள்ளே எரியும் நெருப்பே உடலை பஸ்பமாக்கி  விடுகிறது என்பதினால் சாஸ்திர விதிப்படி இது தவறல்ல.

சாதாரண முறையில் செய்யப்படும் தகனம் 

மின்அடுப்பு  யந்திரத்தில் செய்யப்படும் தகனம்

84) அதன் பின் பூதவுடல் எரிந்து போன அரை மணி நேரத்திலேயே அங்குள்ள தொழிலாளி யந்திரத்தில் இருந்து சாம்பலையும் எலும்பையும் எடுத்து கர்த்தா செய்பவரிடம் தருவார்கள்.  அங்கு சில சடங்குகளை செய்தபின் அவற்றை எடுத்து  அவர் பால் நிறப்பிய மண் குடத்தில் போட்டு கடற்கரை அல்லது நதிக்கு கொண்டு சென்று அதில் அவற்றைக் கரைத்தப் பின்  அங்கேயே அந்த நதி அல்லது கடலில் குளித்து விட்டு வீடு திரும்புவார்கள். இந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்போது புரோகிதர்கள் சில சடங்குகளை செய்ய  மந்திரம் ஓதுவார்கள். எலும்புகளை எடுத்ததும்  கர்த்தா முக சவரம் செய்து கொண்டு தாடி மீசைகளை எடுத்து விடுவார்கள். சிலர் மொட்டை அடித்துக் கொள்வார்கள். அதன் பின் அங்கேயே குளித்தப் பின் குடத்தில் போடப்பட்ட எலும்பை நதிக்கு எடுத்துச் செல்வார்கள். இந்த பழக்கமும் குடும்பங்களில் மாறுபட்டு இருக்கும்.

85) மயானத்தில் மின் அடுப்பில் உடலை எரிக்காமல் விறகுக் கட்டை மீது வைத்து மயான பூமியிலேயே சாதாரண முறையில் தகனம் செய்பவர்கள் பிணத்தை தகனம் செய்த மறுநாள் மயானத்துக்குப் போய் பிணம் எரிக்கப்பட்ட இடத்தில் சாம்பல் மீது பாலை ஊற்றி அதில் கிடக்கும் எலும்புகளை பொறுக்கி எடுத்து, அவற்றை பால் நிரப்பிய மண் குடத்தில் போட்டு கடற்கரை அல்லது நதிக்கு கொண்டு சென்று அங்கு அவற்றைக் கரைத்தப் பின் அங்கேயே அந்த நதி அல்லது கடலில் குளித்தப் பின் வீடு திரும்புவார்கள். இவை அனைத்தும் முதல் நாள் சடங்கு என்றாலும், பிணத்தை எடுத்த அடுத்த நாள் வரை தொடர்கிறது. அதன் காரணம் மின் அடுப்பில் உடனடியாக உடல் எரிந்து விடுவதைப் போல விறகுக் கட்டையில் அத்தனை விரைவாக உடல் எரிந்து விடாது. ஆகவே மறுநாள்தான் எலும்பை எடுக்க மயானத்துக்கு செல்ல வேண்டும். சில வீடுகளில் அந்த சடங்கு முடிந்தப் பின்னரே, மூன்றாம் நாள் கல் ஊன்றி கர்மாவின் பிற காரியங்களைத் தொடர்வார்கள்.

எறிந்த இடத்தில் இருந்து எலும்புகளை
பொறுக்கி  எடுப்பார்கள்

86) அதற்குள் சுத்தம் செய்து வைத்திருந்த வீட்டிற்குள் ஒரு புரோகிதர் சென்று  பிரேதம் கிடந்த அறையிலும், வீட்டிலும் முதல் நாளைய புன்யாஜனம்   செய்து வைத்து இருப்பார். அன்றைய உணவு ஏற்பாடு அந்த வீட்டு சம்மந்தியின் பொறுப்பாகும். இப்படியாக எலும்பை கடலிலோ நதியிலோ கரைக்கும் சடங்கை சஞ்சயனம் என்று கூறுவார்கள். இந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்போது புரோகிதர்கள் சில சடங்கு மந்திரம் ஓதுவார்கள். சுடுகாட்டில் இருந்தா அல்லது மின் அடுப்பில் இருந்தா என எந்த இடத்தில் இருந்து எலும்புகளை எடுத்து நதியில் அல்லது கடலில் கரைப்பார்களோ அதன் பின்னர் கர்த்தா முக சவரம் செய்து கொண்டு தாடி மீசைகளை எடுத்து விடுவார்கள். சிலர் மொட்டை அடித்துக் கொள்வார்கள்.  இந்த பழக்கமும் ஒவ்வொரு குடும்பங்களிலும் மாறுபட்டு இருக்கும்.

எலும்புகளையும், சாம்பலையும் நதியில்
அல்லது நீர் நிலையில் கரைப்பார்கள்

87) சுடுகாட்டில் தலை முடி மற்றும் முக ஷவரம் செய்து கொள்வது இறந்தவர்களுக்காக செய்யும் அடுத்த 13 நாட்களுக்கான காரியங்களை இனி முக மலர்ச்சியோடு செய்வேன் என்பதைக் எடுத்துக் காட்டும் ஒரு பாவனை ஆகும். இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. தீய ஆவிகள் ரோம துவாரங்கள் வழியே சென்று உடலில் அமர்ந்து கொண்டு விடும். சுடுகாட்டில் சடங்குகள் செய்யப் போகும்போது இறந்து போனவர்களின் ஆத்மாக்கள், வஸுக்களிடம் இருந்து தப்பி ஓடி அவர்களது ரத்த சம்மந்தம் உள்ளவர்களது, அதாவது அவர்கள் மீது அதிக அளவு பாசம் வைத்துள்ளவர்களது முடியில் சென்று அமர்ந்து கொண்டு வீடு திரும்ப முயலுமாம். அதனுடன் சுடுகாட்டில் உள்ள பிற ஆத்மாக்களும் சேர்ந்து அமர்ந்து கொண்டு விடும். இதனால்தான் அந்த காலங்களில் மயானங்களில் சென்று திரும்பும் அனைத்து உறவினர்களும் அங்கேயே மொட்டை அடித்துக் கொள்வது வழக்கமாக இருந்துள்ளது. இன்னமும் சில கிராமங்களில் அந்த ஊரில் உள்ள அனைவருமே ஒருவரது இறப்பில் மொட்டை அடித்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது என்பதன் காரணம் ஒருவர் மரணம் அடைந்தாள் கிராமத்தினர் அனைவருமே சடங்குகளில் பங்கு கொள்வார்கள் என்பதே .

88) எதற்காக பாலில் எலும்புக்களைப் போட்டு எடுத்துச் செல்கின்றார்கள்? பிறந்த குழந்தையின் முதலில் உணவு அதை பெற்று எடுத்த தாயின் தாய்பால் ஆகும். இறந்தவர்களது ஆத்மாவும் அதனதன் விதிப்படி எங்கோ சென்று குழந்தையாக பிறப்பு எடுக்கும். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைவருமே, மனிதர் முதல் அனைத்து ஜீவராசிகளுக்கும் மூல மற்றும் முதல் தாய் சக்தி தேவியே என்பதினால் அவளது குழந்தையாகவே பிறப்பு எடுத்து மரணம் அடைந்து விட்ட ஆத்மாவும், அடுத்த பிறவி எடுக்கும்வரை பசி தாகம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அதை பிரபஞ்சத்திலே படைத்த சிவ சக்தியின் அமுத பாலை உடலை விட்டு வெளியேறி விட்ட அந்த ஆத்மா குடித்து விட்டு, அடுத்து ஒரு வருட காலம் தமது உறவினர் செய்யும் காரியங்களை ஏற்றுக் கொண்டு தனது பயணத்தை துவக்குவதான தாத்பர்யம் ஆகும். மயானத்தில் எலும்புகளை எடுத்து மண் குடத்தில் உள்ள பானையில் போட்டதுமே அந்த மயானத்தில் கர்த்தாக்களுடன் வந்திருந்த அந்த எலும்பின் சொந்தக்காரரான ஜீவாத்மா, அந்த பாலை மானசீகமாக ஆவாகித்துக் கொள்ளுமாம். இறந்தவரது உடல் தகனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் வேளையில் மயானம்வரை உடலில் இருந்து வெளியேறிய ஜீவனும் அதன் மீதே பயணித்துக் கொண்டு இருக்கும். அதன் காரணம் உடலுக்குள் உள்ள ஆத்மா அதுவரை தான் தங்கி இருந்த உடல் அழிக்கப்படுவதை நேரடியாகக் கண்ட பின்னரே திருப்தி அடைந்து வஸுக்களிடம் செல்லுமாம். மயானத்தை அடைந்ததும் அது வாழ்ந்திருந்த உடல் எரிந்து சாம்பலாகிப் போனதும் அந்த ஆத்மா வஸுக்களுடன் வான்வெளிக்குச் சென்று விடும். சாம்பலாகி விட்ட அந்த ஜீவனின் உடல் (பிரேத உணர்வுகள் என்பார்கள்) சிவபெருமானின் பாதங்களில் கலந்து விடுமாம். இதனால்தான் மரணம் அடைந்தவர்களுக்கு செய்யப்படும் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. கால ஓட்டத்தில் அவற்றை யாரும் புரிந்து கொள்ளாமல் ஒரு யந்திரம் போல அனைத்தையும் செய்கின்றார்கள்.

89) மேலே தொடரும் முன் தகனம் மற்றும் சஞ்சயனம் குறித்த சின்ன விளக்கம். உடலை எரிப்பதை எதற்காக செய்கிறார்கள் என்பதை ஆன்மீக கண்ணோட்டத்தில் எத்தனை அழகாக கூறி உள்ளார்கள். மயானத்தில் வசிப்பவர் சிவபெருமான். அவர் தனது உடலில் பூசிக் கொள்வது சாம்பல். ஆரம்பமும் அவரே (பரபிரும்மன்), முடிவும் அவரே என்பதைப் போல படைப்பையும், அழிக்கும் செயலையும் தன்னுள் அடக்கி வைத்து உள்ளவர். ஆகவே அவர் இயக்கத்தில், பிரும்மாவினால் படைக்கப்பட்ட உயிரானது முடிவாக மயானத்தில் சிவபெருமான் பூசிக்கொள்ளும் சாம்பலாக உருமாறுவதின் மூலம் ஜீவன் முடிந்தப் பின் சாம்பலாகி சிவனையே சென்று அடைந்து விடுகிறது என்பதையே காட்டுகின்றது. சாம்பல் என்பதில் உள்ள வார்த்தையில் உள்ள சாம்ப என்பது சாம்பசிவன் எனும் பரமசிவனையும், பல் என்பது சமஸ்கிருதத்தில் பழம் என்பதையும் குறிக்கும் . ஒரு விதை பல நிலைகளை அடைந்து காயாகி பழமாகி இறைவனுக்கு படைக்கும் நெய்வித்தியம் (படையல்) ஆகி விடுவதை போல, மனிதர்களும் பிறப்பு எடுத்து பல்வேறு நிலைகளை அடைந்து, பிறருக்கும் சேவை செய்து முதிர்ச்சி பெற்றதும், முற்றிய மனத்தைக் கொண்ட தம் உடலையே சிவபெருமான் எனும் இறைவனுக்கு நெய்வித்தயம் போல சமர்ப்பித்து விடும் இறுதி நிலையே அது. ஜீவன் உடலை விட்டு பிரிந்த பின்னர் எவருக்கும் பலனின்றி போகும் உடல் அடுத்த பிறவி எடுக்கும்வரை, சாம்பலாகி அந்த சாம்பசிவனின் பாதங்களையாவது தழுவிக் கொண்டு இருக்கட்டும் என்பதற்காகவே உடலை தகனம் செய்து சாம்பலாக்குகிறார்கள் என்பதே அதன் ஐதீகம்.

90) அதை போலவே இறந்தவருக்கு செய்யப்படும் முக்கியமான ஒரு சடங்கு அக்னியில் அழிக்கப்பட்ட உடலில் இருந்த எலும்புகளை கடலில் கரைக்கும் சஞ்சயனம் என்பதாகும். இறந்தபின் பிரேதத்தை எரித்து அதன் அஸ்தியை கடலிலோ அல்லது நதிகளிலோ கரைத்து விட வேண்டும் என்கிறது வேதம். எந்த ஒரு பிரேதத்திற்கு சரியான முறையில் அந்திம கிரியை எனும் பிரேத ஸம்ஸ்காரங்கள் சரியாக செய்யப்படவில்லையோ அந்த ஆன்மா அஸ்தி எனும் தன்னுடைய எலும்பை சுற்றி, சுற்றி வரும். ஆகவே எம லோகத்துக்கு செல்லும் வழியில் அது பசியாலும் தாக்கத்தாலும் அவதிப்படும் என்பதினால் சடங்குகளை முறைப்படி செய்துவிட்டு அதன் எலும்புகளை நதிகளில் கரைத்து விடுவார்கள். உடலுக்குள் உள்ள ஜீவனானது எங்கிருந்து வந்ததென யாருக்கும் தெரியாது, அது எங்கே போகும் என்பதும் புரியாது. நீர் இல்லாமல் இந்த உலக வாழ்க்கை இயங்க முடியாது. வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவை நீரே ஆகும். ஆகவே உடலை விட்டு வெளியேறிய ஜீவன் எங்கு சென்றாலும், யாராக பிறந்தாலும், வாழ்க்கையின் அத்தியாவசிய தேவையான தண்ணீரைப் போல அனைவருக்கும் பயனுள்ளவாறு இருக்க வேண்டும் என புனிதமான கங்கா தேவி எனும் பார்வதி தேவியிடம் வேண்டிக் கொண்டு புனித நதியில் கரைக்கப்பட்டது. அதனால்தான் அஸ்தியை காசிக்கு கொண்டு சென்று கங்கை நதியில் கலப்பது வழக்கம். கங்கை நீரின் அதிபதி தேவியே கங்கை தேவி எனும் பார்வதி தேவி அல்லவா. கங்கைக்கு செல்ல முடியாதவர்கள் எந்த ஒரு புனித நதியிலாவது அஸ்தியை கரைப்பார்கள். இந்த உலகில் ஓடும் அனைத்து நதிகளின் தெய்வங்களும் கங்கா தேவியின் தெய்வீக கணங்களே, நிழல் அவதாரங்களே என்பதினால், புண்ணிய நதிகளில் ஓடும் நீரை கங்கா தேவியாக பாவித்து எந்த புனித நதியில் அஸ்தியை கரைத்தாலும் அந்த பிரார்த்தனை கங்கா தேவியிடம் சென்றடைந்து விடும் என்பதினால், தற்காலத்தில் நீர் நிலைகள் எங்கிருந்தாலும் அவற்றில் அஸ்தியைக் கரைப்பது ஒரு சடங்காகி விட்டாலும், தத்துவம் என்னவோ ஒன்றுதான். மேலே கூறப்பட்ட இரண்டுமே ஆன்மீக போதனையின் அடிப்படையில் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சடங்கு முறைகள் ஆகும்.

91) தகனம் செய்த அடுத்த நாளில் இருந்து எங்கே சடங்குகளை செய்ய கல் ஊன்றி உள்ளார்களோ அங்கு சென்று இரண்டாம் நாள் சடங்குகளை துவக்குவார்கள். அதைத் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் காரியங்கள் அங்கேயே  நடைபெற்று முடியும். பதிமூன்றாம் நாள் சுபகாரியம் வீட்டில் நடைபெறும். அவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போம். முதல் நாளன்று கல்லை ஊன்றி பாஷாண ஸ்தாபனம் செய்யாவிடில் மூன்றாம் நாளன்று கல்லினால் சம்பிரதாயமாக இரண்டு குண்டம் அமைத்து ஆன்மாவை கல்லில் ஆவாஹனம் செய்வார்கள்.

92) கல் ஊன்றுதல் என்பது என்ன? ஒருவர் இறந்த உடனேயே ஆத்மாவானது உலகை விட்டு வெளியேறிச் சென்று விடுவது இல்லை. அதற்கு வேறு ஒரு உடல் உருவாக்கப்படும் பத்து நாட்கள்வரை அந்த ஆத்மாவானது பூவுலகிலேயே இருக்கும் என்கிறது கருட புராணம். அதனால்தான் பத்து நாட்களும் பூமியிலேயே தங்கி இருக்கும் ஜீவனை பூமியிலே புதைத்த கற்களில் (பாஷாண ஸ்தாபனம்) மந்திர சக்திகள் மூலம் செலுத்தி (ஆவாஹிப்பது என்பார்கள்) அதற்கு தினமும் எள்ளு ஜலமும், சாதமும் (பிண்டம்) கொடுத்து உயிருடனான ஜீவாத்மாவாக பாவித்து அதை ஜீவித்து இருக்க வைப்பார்கள். இப்படியாக கல் ஊன்றி செய்யப்படும் சடங்கை முதல் நாளில் ஆரம்பிக்காவிடில் ஒற்றைப் படையில் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பதாம் நாளன்று துவக்கி அனைத்து முந்தைய நாட்களுக்குமான சடங்கையும் சேர்த்து அன்றே செய்து முடிப்பார்கள். எந்த ஒரு நிகழ்ச்சியிலும், காரியங்களிலும் முதலில் வணங்க வேண்டியது வினாயகப் பெருமானே. அவருக்கு பிறகே மற்ற தெய்வ ஆராதனைகள் துவங்கும். அதை போலவேதான் எண்களில் முதலில் துவங்குவது ஒன்று எனும் ஒற்றைப்படை எண் ஆகும், அதை தொடர்வதே பிற எண்கள். இதனால் ஒன்று என்பது வினாயகப் பெருமானுக்கு இணையான எண் எனக் கருதி, வைதீக காரியங்களில் ஒற்றைப்படை அல்லது அதன் அடிப்படையில் வரும் ஒற்றைப்படை எண் தினங்களில் காரியங்களை துவங்குவார்கள். முன் காலங்களில் முக்கியமாக கர்மாக்களில் இதை கடைபிடித்தார்கள் என்பதாக கருத்து உள்ளது. பாஷாண ஸ்தாபனம் (கல் ஊன்றுதல்) என்பதை செங்கலை வைத்து சதுரமாகவோ, பழைய பூத்தொட்டியை பயன்படுத்தி வட்ட வடிவிலோ இரண்டு குண்டங்களை அமைத்து  மண் நிரப்பி அதையே பயன்படுத்துவார்கள்.

93) முன் காலத்தில் வெளி தோட்டத்தில் அல்லது வீட்டின் பின்புறம் ரேழி எனப்படும் தனி அறையிலோ கல் ஊன்றுவார்கள். ஆனால் இந்த காலங்களில் அப்படி விஸ்தாரமான வீடுகள் இல்லாமல் அடுக்கு மாடி குடியிருப்புக்களில் இருப்பவர்கள் படிக்கட்டுகளுக்கு கீழே உள்ள இடத்தில், அல்லது பின்புறம் தென்னை மரம் இருந்தால் அதன் அடியிலும் மற்றவர்களுக்கு ஆட்ஷேபணை இல்லை என்றால் வைக்கலாம். அதை விட சுலபமானது சடங்குகளை செய்யும் மண்டபங்களில் ஏதாவது ஒன்றை வாடகைக்கு எடுத்து செய்யலாம்.

94) தற்காலத்தில் இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே இட வசதிக்கு ஏற்றார் போல 3,5,7 அல்லது 9 ஆம் நாட்களில் பாசாண ஸ்தாபனம் செய்கிறார்கள். பணவசதி இல்லாதவர்கள் ஒன்பதாம் நாளன்று ஏதாவது ஒரு சடங்கு மண்டபத்தில் இதை ஸ்தாபனம் செய்து ஒன்பது நாட்களுக்குமான காரியங்களை ஒரே நாளில் செய்து விட்டு 10, 11 மற்றும் 12 ஆம் நாள் காரியங்களையும் அங்கேயே செய்து விடுவார்கள். தாய் தந்தை காரியம் ஆரம்பிக்க ஒற்றை படை நாள் பார்க்க தேவையில்லை.

95) கல் ஸ்தாபனம் செய்யப்பட்ட இடமே அந்த சடங்குகள் செய்து முடிக்கப்படும் வரை மந்திர சக்திகளினால் ஆன, தெய்வீகம் நிறைந்திருக்கும் வகையிலான புனித கைலாயம் மற்றும் இந்திர லோகமாக அந்த ஆத்மாக்களுக்கு இருக்கும் என்பது ஐதீகம். இறந்து போனவருடைய ஆத்மா அங்கு கல்லின் உள்ளே அமர்ந்திருக்கும்.  கல் ஊன்றிய இடத்தில் மந்திரங்களை ஓதி அந்த ஆத்மாவை அதில் செலுத்தி வைத்ததும் அந்த இடமே அதன் அரண்மனை போல மாறி விடும்.

  • ஊன்றப்பட்டு உள்ள அந்தக் கல் அதனுடைய சிம்மாசனம்  போன்றது ஆகும். அந்த கல்  அதற்கு சிறைசாலை போன்றது அல்ல. அதனால் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். ஆனால் அதற்கு அதை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள வஸுக்களின் அனுமதி தேவை மட்டுமல்ல, அந்த வஸுக்கள் இல்லாமல் எங்கும் தனியே செல்ல முடியாது.  அந்த ஆத்மாக்களை தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ள வஸுக்களும் அடுத்த பன்னிரண்டு நாட்களும் மந்திர சடங்குகளின் ஈர்ப்பினால் மரணம் அடைந்து விட்டவரது ஆத்மாவை கல் குண்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் அந்த தேவலோகத்திற்கு அழைத்து வந்து கர்மாவில் கலந்து கொள்ள வைக்கும். அதனால் அந்த ஆத்மாவும் தமக்கு அந்தஸ்தை தரும் வகையில் செய்யப்படும் சடங்குகளை மனதார ஏற்றுக் கொண்டு தாம் வாழ்ந்திருந்த குடும்பத்துக்கு மனதார ஆசிகளை அளிக்குமாம். இப்படியாகவேதான் வஸுக்கள் அந்த ஆத்மாவை அடுத்த பன்னிரண்டு நாட்களும் அதன் குடும்பத்தினர் வாழும் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு இருந்து விட்டு மீண்டும் இங்கு வர துணை புரியும்.
  • அப்படி என்றால் கல் ஊன்றியதும் அந்தக் கல்லில் இறந்து விட்டவரது ஆத்மாவை மந்திர பூர்வமாக ஆவாஹனம் செய்து வைப்பார்கள் என்ற கூற்று தவறா என்றால் இல்லை என்பதே அதற்கு பதிலாகும். வஸுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆத்மாவை அடுத்த பன்னிரண்டு நாட்களும் அது மரணம் அடைந்திருந்த வீட்டில் இருந்து கல் ஊன்றிய இடத்துக்கு அழைத்து வந்து அந்த கல்லுக்குள் அந்த ஆத்மாவிற்காக வைத்துள்ள சிம்மாசனத்தில் சடங்கு முடியும்வரை அமர வைத்து இருக்கும். சடங்கு முடிந்த பின் ஆத்மாவை மீண்டும் கல்லுக்குள் இருந்து வெளியில் அழைத்து வந்து அது தங்கி இருந்த வீட்டிற்கு அழைத்து செல்லும். அந்த கல்லில் ஆவாஹனம் செய்யப்பட்ட ஆத்மாவானது அந்த கல்லில் இருந்து வெளியேறிச் செல்லும் இடைப்பட்ட காலத்தில் அந்த கல்லுக்குள் வேறு எந்த ஆத்மாவினாலும் புகுந்து கொள்ள முடியாது. ஆவாஹிக்கப்பட்ட அந்தக் கல் அதன் வீடு ஆகும்.

96) இறந்தவர்களுடைய  பெண் அல்லது மருமகள் கல் ஊன்றிய இடத்தில் ஸ்நானம் செய்து விட்டு சொட்ட சொட்ட ஈரத்துடன் அங்கு வைக்கப்பட்டு உள்ள அடுப்பை  மூட்டி பிண்டம் (அரிசி போட்டு பொங்கிய சாதம்)  தயாரித்து, புரோகிதர் கூறியபடி சடங்குகளை செய்துவிட்டு அந்த அடுப்பையும் பாத்திரங்களையும் தேய்த்து அலம்பி அங்கேயே வைக்க வேண்டும்.  பிண்டம் போட்டு முடித்தப் பின்னர் மறுபடியும் ஸ்நானம் செய்து விட்டு தான் வீட்டிற்குள் செல்ல வேண்டும். ஒரு விளக்கு அங்கு பத்து நாட்களும் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்க வேண்டும். நாய், பூனை போன்ற பிராணிகள் அங்கு வராமல் பார்த்து கொள்ள வேண்டும். குண்டத்தின் மீது  இறந்தவரின் பழைய வேட்டியையோ அல்லது புடவையையோ  போட்டு வைக்க வேண்டும்.

97) ஒருவர் இறந்து விட்டால் அவருக்கு செய்ய வேண்டிய கர்மா மற்றும் தகனம் செய்யத் துவங்க எத்தனை மணி நேர அவஹாசம் சாஸ்திரங்களில் தரப்பட்டு உள்ளது என்று கேட்டால் அதற்கான பதில் இதுதான். ஒருவர் இறந்து விட்டால் அவர் இறந்த அடுத்த பத்து மணி நேரத்துக்குள் தகனம் செய்து விட வேண்டும் என்பதே சாஸ்திர விதி முறை என்றாலும் அதே சமயத்தில் தகன காரியத்தை ஒருவர் இறந்த நேரத்தில் இருந்து மூன்றரை மணி நேரத்துக்கு முன்னர் செய்து முடித்து விடக் கூடாது என்பது சாஸ்திர விதியாகும். எதற்காக பத்து மணி நேரம் மற்றும் மூன்றரை மணி நேர கால அவஹாசம் தரப்பட்டு உள்ளது?

98) ஒருவர் இறந்தப் பின் அவருடைய ஆத்மா உடனடியாக யம தூதர்களால் கொண்டு செல்லப்படாதாம். ஒருவரது மூச்சு நின்று விட்டதாக சமிக்கை கிடைத்ததும் உடனடியாக யமகணங்கள் பூமிக்கு வந்து விட்டாலும் இறந்தவரது உடலில் இருந்து வெளியேறிய ஜீவனை தம்முடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள அவர்கள் கண் சிமிட்டும் நேர அளவில் காத்திருப்பார்களாம். அதன் காரணம் இறந்தவருடைய வாழ்க்கையின் கால அளவை ஆராய்ந்து பார்க்கும் சித்ரகுப்தரிடம் இருந்து அவர்களுக்கு அந்த ஆத்மாவின் காலம் முடிந்து விட்டது என்ற ஒப்புதல் கிடைக்க கண் சிமிட்டும் நேரம் ஆகுமாம். அவர்களுக்கு கண் சிமிட்டும் நேரம் என்பது பூமியின் கணக்கின்படி மூன்றரை மணி நேரம் என்பதினால்தான் மூன்றரை மணி நேரத்துக்கு முன்னதாக தகன காரியங்களை செய்யத் துவங்கி தகனமும் செய்து முடிக்க மாட்டார்கள், மூன்றரை மணி நேர காலம் முடியும்வரை யமகணங்கள் அந்த ஜீவனை தம் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதினால் ஏற்பட்டது இந்த விதியாம்.

99) யமதூதர்களுக்கு தரப்பட்டு உள்ள மூணரை மணி நேர அவகாசத்திற்கு இன்னும் சில அடிப்படை காரணங்கள் உள்ளன. உலகில் பல்வேறு மலைகள், குகைகள் மற்றும் யாருமே செல்ல முடியாத நதிக்கரைகளில் தவம் செய்யும் பல சாதுக்களும் சன்யாசிகளும், சித்தர்களும், ராஜ ரிஷிகளும், முனிவர்களும், யோகக் கலையை கைக்கொண்ட ஆன்மீகவாதிகளும் சித்திகளைப் பெற்றிட மூச்சை நிறுத்தி வைத்துக் கொண்டு சமாதி நிலையில் இருப்பார்களாம். அந்த நேரத்தில் அவர்கள் உடலில் இருந்து தமது ஜீவனை தாமே வெளிக் கொண்டு சென்று வான் வெளியில் மிதந்தவாறு தவ நிலையில் இருப்பார்களாம். அந்த நிலையில் அவர்கள் இறந்து விட்டதாகக் கருதி யமகணங்கள் அந்த ஆத்மாவை பிடித்துச் சென்று தவறு இழைத்து விடக் கூடாது என்பதற்காக யமபெருமானின் இந்த நியதி, சாஸ்திர விதிகளில் வைக்கப்பட்டு உள்ளதாம்.

100) இது நடக்கக் கூடிய காரியமா என்ற சந்தேகம் எழத் தேவை இல்லை. தமது ஜீவாத்மனை தனது உடலில் இருந்து வெளியில் வைத்துக் கொண்டு எவராலும் இருக்க முடியுமா என்றால் முடியும் என்பதே பதில். இந்த காரியத்தை நமது நாட்டிலேயே பல சித்த முனிவர்களும், மகான்களும் ஏன் மந்திரவாதிகளும் கூட செய்துள்ளார்கள் என்பது வரலாற்றுக் கதைகள் மூலம் தெரிய வரும். கூடு விட்டு கூடு பாய்ந்து செல்லும் கலை என்பது தனது உடலில் உள்ள ஜீவனை வெளியேற்றி தற்காலிகமாக மற்றொரு சடலத்தில் வைத்துக் கொண்டு இருக்கும் நிலை ஆகும். இந்தக் கலை பண்டைக் காலத்தில் பல சாதுக்கள், முனிவர்கள், ரிஷி மற்றும் சித்தர்களால் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.

101) ஆதி சங்கரரின் வாழ்க்கையில் கூட அவருக்கு விடப்பட்ட சவால் ஒன்றில் தாம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக தாம்பத்தியம் என்பது என்ன என்பதைக் கண்டறிய தன் உடலில் இருந்த ஆத்மாவை வெளியேற்றி, இன்னொருவர் உடலில் புகுந்து கொண்ட அதாவது கூடு விட்டு கூடு பாய்ந்து சென்ற கதை உள்ளது. அருணகிரிநாதர் கூடு விட்டு கூடு பாய்ந்து கிளி உருவில் சென்றபோது அவர் உடலை அவரது எதிரி அழித்த கதையும் உண்டு. அதனால் அருணகிரிநாதர் கிளியாக வாழ வேண்டி இருந்ததாம். இவை அனைத்துமே மேன்மையான மூச்சை அடக்கிக் கொள்ளும் யோகக் கலையை அபாரமாக கற்றறிந்திருந்தவர்களால் மட்டுமே செய்ய இயலும், இதை அனைவராலும் செய்ய முடியாது. அதற்கு அவர்கள் தெய்வீக ஆற்றலும், அருளும் பெற்று இருக்க வேண்டும்.

102) இறந்து போனவர்களை மீண்டும் உயிர் பிழைத்து எழ வைத்த சம்பவங்கள் நவீன கால தத்தாத்திரேயர் அவதாரமான ஸமர்த்த ஸ்வாமிகள், சீரடி சாயிபாபா, மானிக் பிரபு போன்ற பல மகான்களுடைய வாழ்க்கை வரலாற்றில் காணப்படுகின்றன. இறந்து போனவர்களை மீண்டும் உயிர் பிழைத்து எழ வைத்த சம்பவங்கள் பல மகான்களுடைய வாழ்க்கை வரலாற்றில் காணப்படுகின்றன. உஜ்ஜயினியை ஆண்டுவந்த விக்ரமாதித்தன் கூட இந்தக் கலையை பயன்படுத்தி உள்ளதாக அவர் வரலாற்றில் கதை உண்டு. சிவபாலயோகி போன்ற பிற்கால மகான்கள் கூட தமது ஆஸ்ரமங்களில் இருந்து தேவலோகத்துக்கு சென்றுவிட்டு திரும்பிய கதைகள் ஏராளமாக உள்ளன.

103) மேலே கொடுத்துள்ள உதாரணங்கள் மேன்மையான ஆன்மீகவாதிகளினால் நடத்தப்பட்டது என்றாலும் விஞ்ஞான முன்னேற்றம் அடைந்துள்ள காலத்திலும் அப்படிப்பட்ட அதிசயங்கள் நடைபெற்று வந்துள்ளன. சில நேரங்களில் இறந்து விட்டதாக கருதப்பட்டு தகனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட சவங்கள் நடு வழியில் உயிர் பிழைத்து எழுந்தான உண்மைக் செய்திகள் உள்ளன. அது போல மருத்துவர்கள் நின்று போன மூச்சை உடனடியாக செயற்கை ஸ்வாசம் செலுத்தி மீண்டும் உயிர் பிழைக்க வைத்த சம்பவங்களும் நிறையவே உள்ளன. ஆனால் குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள், அவர்கள் உடல் நிலையின் ஒத்துழைப்பைப் பொறுத்து அதை செய்ய வேண்டி இருந்தது. ஆகவே ஒருவர் இறந்து விட்டால் அடுத்த மூன்றரை மணி நேரத்துக்குள் (யமலோகக் கணக்கின்படி கண்சிமிட்டும் நேரம்) தகன காரியங்களை செய்து முடித்து விடக் கூடாது என்று வைக்கப்பட்டு உள்ள நியதிக்கு விஞ்ஞான அடிப்படை உள்ளதாகவும், நியாயமானதாகவும் நமக்கு தோன்றுகிறது.

104) இறந்து போனவர்களின் மிக நெருங்கிய உறவினர்கள் வெளியூர்களில் இருந்தால் வெளி ஊர்களில் உள்ள மரணம் அடைந்தவருடைய புத்திரன் அல்லது முக்கிய உறவினர்கள் வந்தே ஆக வேண்டும். அதற்கு முன் காரியங்களை துவக்கக் கூடாது என்கின்ற நிலை. வெளி ஊர்களில் வசிக்கும் அவர்கள் வந்து சேர குறைந்தபட்ஷம் இருபது மணி நேரம் ஆகும். அவர்கள் வரும்வரை அந்த பூத உடலை உரிய மருந்துகள் இட்டு அல்லது ஐஸ் கட்டிகள் மீது பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். பூச்சிகள், ஈக்களிடம் இருந்து இறந்தவர் உடலைப் பாதுகாக்க கண்ணாடிப் பெட்டியால் மூடி வைத்து இருப்பார்கள். உதாரணமாக காலையில் ஆறு மணி அளவில் ஒருவர் மரணம் அடைந்து விட்டாலும் முக்கியமானவர்கள் வந்து சேரும்வரை இறந்தவர் உடலை தகனம் செய்ய முடியாமல் நேரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. மாலை ஐந்து மணிக்கு மேல்தான், அல்லது மறுநாள் காலையில்தான் தகனம் செய்ய முடியும் என்ற நிலைமை. ஒருவர் இறந்து போனதும் அடுத்த பத்து மணி நேரத்துக்குள் கர்மாக்களை துவங்க முடியவில்லை. அது பத்து மணி நேரத்துக்கும் அதிகமாகி விடுகிறது அல்லவா. அப்படி என்றால் என்ன செய்வது? பத்து மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டால் சாஸ்திர நம்பிக்கையின்படி உடலில் இருந்து வெளியேறிய ஆத்மாவை தீய ஆத்மாக்கள் சூழ்ந்து கொள்ளாதா என்ற கேள்வி எழலாம். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைகளில் காரிய தாமதம் ஏற்பட்டதினால் வரும் தோஷங்களை களைந்து கொண்டு கர்மாக்களை நடத்த சாஸ்திரங்களில் சில பரிகாரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

105) அதே சமயத்தில் இறந்தவர் உடலை அடுத்த பத்து மணி நேரத்துக்குள் தகனம் செய்து விட வேண்டும் என்கின்ற சாஸ்திர விதி எதற்காக உள்ளது என்பதற்கு விஞ்ஞான ரீதியில் ஒரு காரணம் உள்ளது. பத்து மணி நேரத்துக்கும் அதிகமாக உடலை வைத்திருந்தால் இயற்கையின் விளைவாக அதன் உடலில் தீய கிருமிகள் தோன்ற வாய்ப்பு உள்ளது, அது நோய்களை பரப்பும், அது மட்டும் அல்லாமல் அந்த இடத்தில் துற நாற்றமும் வீசத் துவங்கும் என்பதினால்தான் கர்மாவைத் துவக்க பத்து மணி நேர அவகாசம் மட்டுமே கொடுத்துள்ளார்கள் என்பது விஞ்ஞான அடிப்படையின் ஒரு உண்மையாகும். அதை ஆன்மீக போர்வை போர்த்தி தந்துள்ளார்கள். காரணங்கள் இல்லாமல் இந்த நியதிகளை வைத்திருக்கவில்லை என்பது தெளிவு.

106) சாஸ்திரங்களில்  அறிவுறுத்தப்பட்டு  உள்ளது என்ன என்றால் மூன்று அல்லது  நான்கு மணி நேரத்திற்குள் தகன காரியங்களை செய்யத் துவங்கி அக்கினிக்கு சமர்ப்பணம் செய்து விட வேண்டும் (தகனம்).  எப்படி நாம்  ஹோமத்திற்கென்றே சில மணி நேரங்களுக்கு முன்னர் சமைத்து இருந்த  உணவை ஹோமங்களில் அக்னிக்கு  சமர்ப்பித்து விடுகின்றோமோ, மரணம் அடைந்து விட்டவர் சடலத்தையும்  வெகு நேரம் வைத்திருக்காமல் சில மணி நேரங்களிலேயே அக்னிக்கு கொடுத்து விட வேண்டும். ஆறின கஞ்சி பழைய  கஞ்சி என்பதை போல பழதாகி விட்ட அதாவது மரித்து பல மணி நேரம் ஆகிவிட்ட சரீரத்தையும் அக்கினிக்கு கொடுக்கலாகாது. ஒருவர் மரணம் அடைந்த பின்னர் 6 மணி நேரத்திற்கு பிறகு தஹனம் செய்ய வேண்டுமானால் பர்யுஷித ஹோமம் என்ற ஒரு சடங்கை செய்ய வேண்டும் என்பதாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பர்யுஷிதம் என்றால் பழையதானது என்பது அர்த்தம். ஆகவே ஆறு மணி நேரத்துக்கு மேல் வைத்திருக்கும் உடல் பழையதாகி விட்டது என்பதினால் பரிகாரம் தேவைப்படுகின்றது.   அந்த பரிகாரம் என்ன என்பதை அந்தந்த வீடுகளின் புரோகிதர்கள்தான் சொல்லுவார்கள். சாஸ்திரத்தில் இரவு 9.30 மணிக்கு முன்னால் இறந்தவரை தகனம் செய்து விட வேண்டும் என்பது மட்டுமே விதி. அதே சமயத்தில் பத்து மணி நேரத்துக்கும் அதிகமாகி விட்டது என்ற நிலையில் உள்ளவர்கள் தகனம் செய்யக் கிளம்பும் முன் அந்த சவத்தை பசுவிடம் இருந்து பெறப்படும் ஐந்து புனித திரவ்வியங்களைக் கொண்டு தயாரிக்கும் பஞ்சகவ்யம் எனும் கலவையைக் கொண்ட தண்ணீரால் குளிப்பாட்டிய பின்னரே தகனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விதியும் இருந்தது. சிலர் அதை சவத்தின் மீது புரோஷணம் செய்வார்கள். பஞ்சகவ்யம் என்பது பசுவின் சாணம், மூத்திரம், பால், பாலில் எடுத்த நெய், பாலில் செய்த தயிர் – போன்றவற்றைக் கொண்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கலவை ஆகும்.

தேவலோகப் பசு காமதேனு, அதனுள் வசிக்கும் தேவர்கள்

107 ) பஞ்சகவ்யம் எனும் கலவையைக் கொண்டு குளிப்பாட்டிய பின்னரே தகனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறப்பட்டதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. விஞ்ஞான ஆராய்வில் பஞ்சகவ்யம் கிருமி நாசினி என்றும், இறந்தவர் உடலில் உள்ள கிருமிகளை அவை நாசம் செய்து விடும் என்றும் கூறுகிறார்கள். பசு என்பது காமதேனுப் பசுவின் சந்ததி என்பதினால் பசுக்கள் தெய்வத்துக்கு சமமானவை, அதன் ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு தேவர்கள் அமர்ந்துள்ளனர் என சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளது. பசுவின் மூத்திரத்தில் வருணன் வசிக்கிறார், சாணத்தில் அக்னி வசிக்கிறார், தயிரில் வாயுவும், பாலின் சந்திரனும் மற்றும் நெய்யில் சூரியனும் வசிக்கிறார்கள். அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து பஞ்சகவ்யம் செய்யப்படும்போது காயத்ரி மந்திரத்தை ஓதி ஒன்று சேர்ப்பார்கள். ஆகவே அத்தனை சக்தி வாய்ந்த பஞ்சகவ்யம் கலந்த நீரைக் கொண்டு சவத்தைக் குளிப்பாட்டும்போது அதில் இருந்து வெளிவரும் அந்தந்த தெய்வங்களின் கணங்கள் அங்குள்ள தீய ஆத்மாக்களை விரட்டி அடிக்கும் என்று சாஸ்திரங்கள் அந்த சடங்கை நியாயப்படுத்தி உள்ளார்கள். ஆகவே இறந்தவருக்கு கர்மா செய்ய பத்து மணி நேரத்துக்கும் அதிகமாகி விட்ட நிலையில் பஞ்சகவ்யம் கொண்டு அந்த உடலை குளிக்க வைத்தாலோ அல்லது புரோஷணம் செய்தாலோ தகனத்துக்கு பத்து மணிக்கும் மேலாகி விட்ட நிலையில் அங்குள்ள தீய கணங்களை பஞ்சகவ்யம் துரத்தி விடும் என்பது நம்பிக்கை.

……………தொடரும்