சாந்திப்பிரியா

6

108) ஒவ்வொருவர் உடலுக்குள்ளும் பத்து விதமான காற்று வெளியேற்ற மண்டலங்கள் உள்ளன. அந்த மண்டலங்கள் வழியேதான் ஒருவரது ஆத்மா உடலை விட்டு வெளியேறும் என்கிறார்கள். இதிலும், அதாவது உயிர் வெளியேறும் ஓட்டைகள் எத்தனை என்பதைப் பற்றி – சில கருத்து வேறுபாடுகள் உள்ளன என்றாலும் பத்து மண்டலங்கள் என்பதே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன.

109) சாஸ்திரங்களின்படி இறந்தவர்களது ஆத்மா இரண்டு கண்களின் வழியாகவோ, இல்லை வாயின் வழியாகவோ, உச்சிமண்டை வழியாகவோ, ஆசன துவாரத்தின் வழியாகவோ, மூத்திர வாசல் அல்லது இரண்டு காதின் வழியாகவோ அல்லது இரண்டு நாசி துவாரத்தின் வழியாகவோ வெளியேறும் என்பார்கள். இதுவே பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியாகும்.

110) ஆனால் புலிப்பாணி முனிவர் மற்றும் போக முனிவருக்கு உயிர் எந்த விதங்களில் மனித உடல்களில் இருந்து வெளியேறுகிறது என்பதை குறித்து விளக்கிய அகஸ்திய முனிவர் இந்த பத்து மண்டலங்களைத் தவிர ஜீவன்கள் வெளியேற உடலில் ஆயிரக்கணக்கான ஓட்டைகள் உள்ளன என்றும், அந்த இடங்கள் கை, கால் விரல்கள், மற்றும் அவற்றின் இடைப் பகுதியில் உள்ள ஓட்டைகள் என்றும், அவற்றைத் தவிர உடலில் உள்ள பல்லாயிரக்கணக்கான மயிர்க் கால்களின் அடியில் உள்ள ஓட்டைகளின் வழியாகவும் ஜீவன் வெளியேறும் என்றும், அந்த வழிகளில் வெளியேறும் ஜீவன் என்னென்ன பிறவிகள் எடுக்கின்றன என்பதையும் அவர்களுக்கு எடுத்துரைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

111) தாயின் வயிற்றில் செல்லும் ஜீவனானது அங்கு வளரும் கருவின் உச்சி மண்டையின் வழியாகவே அதனுள் உள்ளே நுழைகிறது என்பது ஆன்மீக நம்பிக்கையாகும். அந்த உச்சி மண்டையைக் கபாலம் என்பா். உச்சி மண்டையில் புகுந்த அந்த உயிர் உச்சந்தலை வழியாக வெளியேறுவதுதான் சிறப்பு. அதுவே சரியான மரணம், அது புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டுமே கிடைக்கும், அதன் பின் ஆத்மா வேறு எந்த பிறவியும் எடுப்பதில்லை என்றும் புராணங்களில் கூறப்படுவதினால் ஜீவன் வெளியேறும் இடங்கள் பொதுவான பத்து இடங்கள் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டி உள்ளது.

112) கபாலம் வழியே வெளியேறும் ஜீவனானது பூமியிலே பிறப்பு எடுக்காமல் அவர்கள் வாழ்ந்திருந்த இடத்தின் வான் வெளியிலேயே தெய்வ ஆத்மாவாக தங்கி இருந்து விடுகிறது என்பதும் நம்பிக்கை ஆகும். அதனால்தான் அப்படிப்பட்ட புண்ணிய ஆத்மாக்களை உண்மையான தெய்வம் எனக் கருதி அவர்களுடைய உடலை எரிக்காமல் புதைத்து வைத்து அதன் மீது சமாதியும் கட்டி வைத்து பூஜிக்கிறார்கள்.

113) ஒன்பது காற்று மண்டலமும் அடைபட்டு, அவயங்களும் அவற்றின் துடிப்பை நிறுத்திக் கொள்ளும்போது, அந்த உடலின் விதிக்கேற்ப எந்த ஓட்டையின் (மண்டலம்) வழியாக உடலின் ஆத்மா உடலை துறந்து வெளியேற வேண்டுமோ அந்த பத்தாவது மண்டலத்தில் இருந்து ஆத்மா வெளியேறும். அப்போது அந்த உடலை சுற்றிக் கொண்டிருக்கும் காற்று ஆத்மாவை தன்னுடன் அழைத்துச் சென்று விடும். அப்படி  ஆத்மாவை சுமந்து கொண்டு செல்லும் காற்றானது அந்த ஆத்மாவை மேலுலகில் உள்ள வஸுக்களிடம் சேர்ப்பித்து விட்டு விட்டு அங்கிருந்து வந்து விடும். அந்த பத்து மணி நேரத்தில் அந்த குறிப்பிட்ட ஆத்மாவை சுற்றி உள்ள குறிப்பிட்ட காற்று மண்டலத்துக்குள் வேறு எந்த ஆவிகளாலும் நுழைய முடியாது. பத்து மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டால் அந்த காற்று மண்டலத்தில் சில ஆவிகளால் நுழைய முடியுமாம். அதனால்தான் பத்து மணி நேரத்துக்குள் தகனம் செய்து விட வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறி உள்ளார்கள். மேலும் பத்து மணி நேரத்திற்குள் தகனம் செய்ய முடியாதவர்கள், அந்த தோஷத்திற்கான குறிப்பிட்ட பரிகாரத்தை செய்யும்போது, அதில் உச்சாடனைகள் செய்யப்படும் மந்திர சக்திகள் அந்த குறிப்பிட்ட காற்று மண்டலத்திற்குள் பிற ஆவிகளை நுழைய விடாமல் தடுத்து விடுமாம். அந்த சடங்கை பத்து மணி நேர அளவிற்கும் அதிக கால கட்டத்தில் செய்தாலும் தீய ஆவிகளிடம் ஒருவேளை மரணம் அடைந்தவரது ஆத்மா பிடிபட்டு இருந்தாலும் அவற்றை மீட்டுக் கொண்டு வந்து விடுமாம். காற்று என்பது நமது கண்களுக்கு தெரியாது என்றாலும், அது உணரக் கூடியது என்பதின் காரணம் அதுவும் வாயு பகவானின் பல லட்சக்கணக்கான உயிர் கணங்களைக் கொண்டு இயங்குவதுதான். இறந்தவர் உடலில் இருந்து வெளியேறும் ஆத்மாவை மேலுலகில் உள்ள வஸுக்களிடம் கொண்டு செல்லும் கடமை வாயுதேவருக்கு விதிக்கப்பட்டு உள்ள நியதியாகும் என்பதாக தன்னிடம் வந்து சந்தேகம் கேட்ட நாசிகேதனுக்கு யமதர்ம தேவர் எடுத்துரைத்தாராம். இறந்தவர் உடலில் இருந்து வெளியேறும் ஆத்மாவை மேலுலகில் உள்ள வஸுக்களிடம் கொண்டு செல்லும் இந்த குறிப்பிட்ட செயல் வாயுதேவருக்கு விதிக்கப்பட்டு உள்ள நியதியாகும் என்பதாக தன்னிடம் வந்து சந்தேகம் கேட்ட நாசிகேதனுக்கு யமதர்ம தேவர் எடுத்துரைத்தாராம்.

115) அப்படி அந்தப் பத்து மணி நேரத்துக்குள் வஸுக்களிடம் கொண்டு சேர்க்கப்படாத ஆத்மாவை பிரபஞ்சத்தில் சுற்றித் திரியும் பல தீய கணங்கள் சூழ்ந்து கொண்டு அவற்றை தம்மிடம் பிடித்து வைத்துக் கொண்டு நற்கதி அடைய விடாமல் தடுக்க முயலுமாம். தீய ஆவிகள் அந்த தூய ஆத்மாவை தம் வசம் முற்றிலுமாகக் கைகொள்ள பத்து நாட்கள் பிடிக்கின்றன. ஒருவர் இறந்தப் பின் அடுத்த பத்து மணி நேரத்துக்குள்ளாக கர்மாவை செய்யத் துவங்கியதும், அந்த கர்மாவில் ஓதப்படும் மந்திர சக்திகள் மூலம் காற்றானது அந்த ஆத்மாவை வஸுக்களிடம் கொண்டு சேர்க்கிறதாம். அதே சமயம் அடுத்த பத்து நாட்களும் செய்யப்படும் சடங்குகளின் மந்திரங்களினால் தீய ஆவிகளின் சக்தி அடக்கப்பட்டு விடும். அதனால்தான் பத்து மணி நேரத்துக்குள் இறந்தவருக்கு கர்மாவை செய்யத் துவங்கி தகனமும் செய்ய வேண்டும் என்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதைத் தொடர்ந்து அடுத்த பத்து நாட்களும் கர்மாக்களை செய்ய வேண்டும் என்ற விதியான பத்து மணி நேரக் கணக்கு அமைந்து உள்ளது. இதில் பத்தாவது நாளான காரியமே மிகவும் முக்கியமான சடங்காகும்.

 யம தூதர் ஆத்மாவை  எட்டு கோஷ்டியான

வஸுக்களிடம் கொண்டு சேர்க்கிறார் 

116) வஸுக்கள் கர்மாவில் செய்யப்படும் மந்திரங்களுக்கு உரிய தேவதைகள். ஆத்மாவை பிடித்துக் கொள்ள முயலும் தீய ஆவிகளை விரட்டி தம்மை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கும் ஆத்மாவுக்கு பாதுகாப்பு தரும் தேவதைகளே அந்த வஸுக்கள். வஸுக்களின் பாதுகாப்பில் அடுத்த பத்து நாட்களிலும் ருக்கும் ஆத்மா, அந்த பத்து நாட்களிலும் செய்யப்படும் சடங்கினாள் பசி இன்றி இருக்கும். பத்து மணி நேரம், பத்து நாட்கள் என்ற அனைத்துமே பத்து என்ற எண்ணிக்கையில்தான் அடங்கி உள்ளது.

117) ஆனால் அனைத்திற்கும் மேலாக இன்னொரு காரணமும் உள்ளது. மரணம் அடைந்து விட்டவர்களது ஆத்மாவானது வஸுக்களிடம் பாதுகாப்பாக உள்ள நேரத்தில் அந்த ஆத்மாவின் தர்ம, அதர்ம கணக்குகளை ஆராய்ந்து பார்த்து அதற்கான தண்டனைகளையும் முடிவு செய்து கொண்டு வஸுக்களிடம் அவற்றை சமர்ப்பித்து அந்த ஆத்மாவை தம்முடன் அழைத்துக் கொண்டு செல்ல யமதர்ம தேவருக்கும் பத்து நாட்கள் ஆகுமாம். அந்த பத்து நாட்களிலும் இறந்தவர் சந்ததியினர் செய்யும் ஆத்மார்த்தமான கர்மாக்களின் விளைவாக என்னென்ன பாவங்கள் விலக்கப்பட வேண்டும் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அந்த ஆத்மாவின் முடிவான நிலை இதுதான் என பத்தாவது நாளன்று வஸுக்களிடம் கூறிய பின்னர் யமதர்ம தேவர் அந்த ஆத்மாவை தன்னுடன் அழைத்துச் செல்கிறார். இதற்காகவும் பத்து நாட்கள் சடங்கு எனும் கணக்கு வைக்கப்பட்டு உள்ளதாம்.

118) வஸுக்களிடம் இருந்து யமகணங்களின் கட்டுப்பாட்டிற்கு ஆத்மா போய் விட்டாலும் பத்து நாட்களுக்கு மேலாக அடுத்த இரண்டு நாட்களும் அந்த ஆத்மாவை அங்கு இருந்தவாறு மீதமுள்ள சடங்குகளில் பங்கேற்க அனுமதிக்குமாம் அந்த யம கணங்கள். அதனால்தான் பன்னிரண்டு நாட்களும் கல் ஊன்றிய இடத்தில் செய்யப்படும் சடங்குகளில் செய்யப்படுபவற்றை அந்த ஆத்மாவானது ஏற்றுக் கொள்கிறதாம். கல் ஊன்றிய பிறகு தினமும் வாஸோதகம் எனப்படும் துணி பிழிந்த ஜலத்தாலும், திலோதகம் எனப்படும் எள்ளு தண்ணீராலும் தர்ப்பணம் பண்ண வேண்டும். எள்ளும் தண்ணீரும் தர்பைப் புல்லின் மீது பட்டவாறு சமர்பிக்கப்படுகிறது. அதன் பின்னர் சாதத்திலான பிண்டம் சமர்ப்பிக்க வேண்டும். கர்மாவில் அரிசி சாதம், தர்பை, எள் மற்றும் தண்ணீர் என்பன இந்த சடங்கில் முக்கியமானவை ஆகும்.

  • முதல் நாளில் மூன்று தடவை, அடுத்த நாள் நான்கு தடவை, அதற்கு அடுத்த நாள் ஐந்து தடவை எனப் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே போய் பத்தாம் நாளன்று பன்னிரண்டு முறை செய்யப்படும் ஏகோத்ர விருத்தி ஸ்ரார்தம் எனப்படும் சடங்கில் எள் கலந்த தண்ணீரையும் பிண்டத்தையும் தரும் தர்ப்பணமும் செய்வார்கள். இதுவும் சிலர் குடும்பங்களில் மாறுபட்டு இருக்கும். அதையும் புரோகிதர் கூறுவார்கள்.

வஸுக்களிடம் இருந்து ஆத்மாவை அழைத்துக் 

கொண்டு  செல்லும் யமதூதர்கள்  

119) யமராஜரின் அனுமதியோடு மீண்டும் வஸுக்கள் மூலம் பூமிக்கு வரும் ஆத்மா அது வாழ்ந்த இடத்திற்கே திரும்ப அழைத்து செல்லப்படும். அங்கு அது அடுத்த இரண்டு நாட்களை கழிக்க வேண்டும். பாஷண ஸ்தாபனம் எனும் பெயரில் என்றைக்கு கல் ஊன்றுகின்றார்களோ அன்றைக்கு அந்த ஆத்மா அந்த கல்லுக்குள் குடி புகுந்து கொள்ள, கர்மாவைத் துவக்கிய முதல் நாள் முதல் அடுத்த பத்து நாட்களும் அதன் குடும்பத்தினரால் போடப்படும் எள்ளும் தண்ணீரையும், பிண்டத்தையும் அங்கிருந்தவாறே அது பெற்றுக் கொண்டு மெல்ல மெல்ல முழுமையான பிண்ட உடலைப் பெற்றுக் கொள்ளத் துவங்கும். பிண்ட உடல் என்பது மனித உடல் அல்ல. நமது கண்களுக்கு தெரியாத சூஷ்ம உடல் ஆகும்.

120) மனித உடலைப் போன்ற அந்த சூஷ்ம (பிரேத) உடல் முழுமை அடைந்தப் பின்னரே பன்னிரண்டாம் நாள் கர்மா முடிந்த பின் யமலோகத்துக்கு அந்த ஜீவன் அழைத்துச் செல்லப்படும். அந்த ஜீவன் பிரேத உடலை முழுமையாக அடையும்வரை ஏன் காத்திருப்பார்கள் என்றால் சொர்க்க நரகங்களில் அவை தமக்கு தரப்படும் தண்டனைகளையும் சுகபோகங்களையும் மனித உடல் அனுபவிக்கும் அதே உணர்வுகளுடன் இருந்தவாறு அனுபவிக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டு உள்ள நியதி ஆகுமாம் (அந்த பிரேத உடல் அனுபவிக்கும் நன்மை தீமைகளை பின் வரும் பாகங்களில் படங்களுடன் விளக்கி உள்ளேன்).

121) அந்த ஜீவன் எப்படி முழுமையாக வளர்ச்சி அடைகிறது? முறைப்படியான சடங்குகள் செய்யப்பட்ட ஆவிகளுக்குச் சொந்த வடிவம் எப்படி வந்தமைகிறது என்பதை கருட புராணம் அழகாகக் கூறுகிறது. இறந்தவர் கர்த்தாவினால் (சடங்கு செய்பவர்) முதல்நாள் வைக்கும் பிண்டத்தால் ஆவிக்குத் தலை உண்டாகிறது. இரண்டாம் நாள் போடும் பிண்டத்தால் கழுத்தும், தோளும் உண்டாகும். மூன்றாம் நாள் போடப்படும் பிண்டத்தால் கைகளும் மார்பும், நான்காம் நாள் போடப்படும் பிண்டத்தால் வயிறும், ஐந்தாம் நாள் போடப்படும் பிண்டத்தால் உந்தியும் (தொப்புள்), ஆறாம் நாள் பிண்டத்தினால் பின்புறம் உள்ள பித்தமும் (பிருஷ்டம் என்பார்கள்), ஏழாம் நாள் பிண்டத்தினால் சமஸ்கிருதத்தில் குய்யம் எனப்படும் ஆண் மற்றும் பெண் குறிகளும், எட்டாவது நாள் பிண்டத்தினால் தொடைகளும் ஒன்பதாம் நாள் பிண்டத்தினால் கால்களும் ஏற்பட்டு பத்தாவது நாள் போடப்படும் பிண்டத்தினால் பூரண சரீரம் உருவாகின்றன.

அந்த ஆத்மா பத்து நாட்களில் படிப்படியாக எப்படி முகம்,கழுத்து,
தோள் மற்றும் கைகள் மார்பு, வயிறு, தொப்பிள், புட்டம், மலத் துவாரம், 
தொடைகள், கால்கள் என பிரேத உடலின்  அனைத்து பரிசங்களையும் 
தன்னுள் அடக்கிக் கொள்கிறது என்பதைக் காட்டும் படம்

  • பித்ரு காரியங்களும், பிண்டம் போடுதலும் எத்தனை மகிமை வாய்ந்தது  என்பதை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சியே வராஹ பெருமானின் ஒரு கதை ஆகும்.  ஸ்ரீ வராஹ  அவதாரத்தில் பூமியைக் கடலிலிருந்து வெளியே   ஸ்ரீ வராஹர் கொண்டு வந்தபோது மத்திய நேரம். அந்த நேரத்தில் தன்னுடைய உடலுக்கு வேண்டிய கடமைகளைச் செய்ய எண்ணிய பகவானின் வாயிலிருந்து மூன்று பற்கள் மூன்று உருண்டைகளாக பூமிக்குத் தென்புறத்தில் போய் விழுந்தன. அவையே மூன்று தலைமுறை  பித்ருக்கள் ஆகின. அந்த மூன்று தலைமுறைக்கு பிண்டம் வைத்து பித்ரு காரியம் செய்தார் ஸ்ரீ வராஹர். சரீரம் இல்லாதவர்களுக்கும் பிண்டம் தரவேண்டும் என்றும் பித்ருக்களுக்கு தருவது தன்னையே அடைகிறது என்றும் வராஹ பகவான்  நாரத முனிவருக்கு எடுத்துரைத்தார்  என்பதில் இருந்து   தெய்வமே முதன் முதலில்  பித்ரு காரியம் செய்தது என்பது விளங்கும்.  இதை மகாபாரதம் சாந்தி பருவம் 355 ஆவது அத்தியாயத்தில்  தெளிவாகக் கூறுகிறது என்று திரு கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள்  கூறி உள்ளார்.

122) இப்படியாக ஒவ்வொரு அங்கமாக பிரேத சரீரத்தை பெற்றுக் கொள்ளும் ஆத்மாவானது கர்மா துவக்கப்பட்ட முதல் நாள் அன்று தலை பாகத்தில் அமர்ந்து கொண்டு பிண்டத்தை பெற்றுக் கொள்ளும். அடுத்தடுத்த நாட்களில் முகம், கழுத்து, தோள் மற்றும் கைகள், மார்பு, வயிறு, தொப்பிள், புட்டம், மலத் துவாரம், தொடைகள், கால்கள் எனப் படிப்படியாக அனைத்து இடங்களிலும் அமர்ந்தபடி எள் கலந்த தண்ணீரையும் பிண்டத்தையும் பெற்றுக் கொள்ளும் காலத்தில் இறந்தவர் உடலின் அந்தந்த பாகங்களின் அனைத்து பரிசங்களையும் அந்த ஜீவன் பெறுகின்றது. அது மட்டும் அல்லாமல் அந்த சூஷ்ம உடல் அந்த பரிசங்களை தன்னுள் சூஷ்மமாக அடக்கிக் கொள்கின்றது. பதினொன்றாவது நாளன்று முழுமையாக சூஷ்ம சரீரத்துடன் இருக்கும் அந்த ஆத்மா, வஸுக்களிடம் இருந்து விலகி யமகணங்களோடு சேர்ந்து கொண்டு விடும் என்றாலும் பன்னிரண்டாவது நாள்வரை அந்த ஆத்மா மீதமுள்ள எள் கலந்த தண்ணீரையும் பிண்டத்தையும் பெற்றுக் கொண்டப் பின்னரே பதிமூன்றாவது நாளன்று எமதூதர்கள் வந்து அழைத்ததும் துயரத்தோடு அவர்களுடன் செல்லத் துவங்கும்.

123) பிண்டங்களால் முழுமையான உருவத்தைப் பெற்றிடும் ஜீவாத்மா பதினோறாவது நாள் தான் சரீரத்தோடு வாழ்ந்த வீட்டிற்கு வந்து தான் உயிரோடு இருந்தபோது வீட்டில் நிகழ்ந்த அனைத்து சம்பவங்களையும், நிகழ்வுகளையும் நினைத்துப்பார்த்து அழுது துடிக்குமாம். மீண்டும் நம்மால் இப்படி வாழ முடியாமல் போய்விட்டதே என்று எண்ணி அந்த ஆவி துடிக்குமாம். கடந்த கால வாழ்க்கையை நினைத்து மீண்டும் வாழ ஆசைப்படுவதும், சரீரப் பிரவேசத்தில் மோகம் கொள்வதும் உலகியல் வாழ்க்கையில் வாழ்ந்து, அந்த வாழ்க்கையில் உழன்ற ஜடமாகி விட்ட உடலில் இருந்த அதே ஜீவன்கள்தான். எதற்காக பதினோறாவது நாள் அங்கு ஜீவனை அழைத்து வந்து அழுது துடிக்க வைக்க வேண்டும் என்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. எத்தனை துக்கப்பட்டாலும் மீண்டும் தன்னால் அந்த உடலுக்குள் புகுந்து கொண்டு அந்த வீட்டில் வாழ முடியாது என்கின்ற உண்மையை அந்த சூஷ்ம சரீரத்தில் உள்ள ஆன்மா உணர வேண்டும். அழுதழுது, இனி மீண்டும் எரிந்து போன உடலுக்குள் செல்ல முடியாது, இதற்கு மேல் செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்ற உண்மையை புரிந்து கொண்டு அதன் மனம் வெறுமை அடையும்போது, அந்த ஆத்மாவின் துக்கமும் தன்னால் மறைந்து விடும். உடலின் மீதான பற்றற்ற நிலைக்கு சென்று விடும் ஆத்மாவின் மனமும் சாந்தி அடைந்து, கர்மாக்களின் விளைவுகளை எதிர்கொள்ள யமபுரியை நோக்கி நடக்கும் மனநிலைக்கு சென்று விடும். பதின்மூன்றாவது நாள் எமகிங்கரர்கள் பாசக்கயிற்றால் அந்த ஆத்மாவைக் கட்டி யமபுரிக்கு அழைத்துச் செல்வார்கள்.

124) பன்னிரண்டு நாட்கள் செய்யப்படும் சடங்குகளில் தரப்படும் பிண்டங்களை ஏற்றுக் கொள்ளாமல் முதல் நாளே நேரடியாக அந்த ஆத்மாவை யமலோகத்துக்கு அனுப்பி விட்டால் தினம் தினம் அங்கிருந்து அது மீண்டும் பூமிக்கு திரும்பி வர இயலாது, எள் கலந்த தண்ணீரையும் பிண்டத்தையும் அதனால் ஏற்க முடியாது என்பதினால் சடங்குகளை பத்து நாட்கள் தொடர்ந்து செய்வார்கள். பூமியில் இருந்து யமலோகம் செல்லவே ஒரு வருடகாலம் பிடிக்கும் எனும்போது பன்னிரண்டு நாட்கள் கர்மாக்களில் பங்கு கொள்ள வேண்டும் என்பதற்காகவே பசுக்களிடம் ஒப்படைத்து பூமியின் மேலே தங்க வைக்கப்பட்டு உள்ளார்கள். முதல் பத்து நாட்கள் நடைபெறும் சடங்குகளை வாஸ்சோதகம், திலோதகம் மற்றும் நித்ய விதி என்பார்கள். அந்த நித்ய விதியில் ஏகோத்ர விருத்தி ஸ்ரார்தமும், நவ ஸ்ரார்தம் போன்றவைவையும் அடங்கும். அவற்றை பண்டிதர் செய்து வைப்பார்கள்.

…………….தொடரும்