–சாந்திப்பிரியா —

9

 

கருட  புராணக்  கதை  தொடர்கிறது ………

144.16) அப்போது யமதூதர்கள் அவன் கன்னத்தில் அறைந்து ‘மனைவி மக்களே அழிவற்றவர்கள்  என்று  நீ  நடத்திய அதர்ம வாழ்க்கை என்ன ஆயிற்று? நீ செய்த புண்ணிய பாவமே உனக்கு இவ்வுலகில் இன்பம் அல்லது துன்பத்தைத் தரவல்லது. பிறர் பொருளை அபகரித்தல் போன்ற அதர்மங்களை செய்யாமல் தர்மம் செய்து வாழ்ந்திருந்தால் இப்போது இக்கேடு வராதல்லவா?’  என்று பலவாறு இடித்துக் கூறி, அந்த ஜீவனை வழி நெடுக நையப் புடைத்துக் கொண்டே செல்வார்கள். சூறாவளி வீசும் காற்று நிறைந்த வழியில், அடர்ந்த காட்டின் நடுவே கடும் புலிகள் நிறைந்த பாதையில் யமகிங்கரர்களுடன் சென்று ஓரிடத்தில் தங்கி, இறந்தவரின் கர்த்தாவால் இருபத்தெட்டாம் நாளில் செய்யப்படும் ஊனமாச சிரார்த்த பிண்டத்தை உண்டு முப்பதாம் நாளன்று யாமியம் என்ற நகரத்தை அடைவார்கள்.

144.17) அங்கு இன்னும் அதிகமாக பிரேதக் கூட்டங்கள் இருக்கும். வழியில்  பத்திரை என்ற நதியும், வட விருக்ஷமும் உள்ளன. சிறிது நேரச் சிரம பரிகாரத்துக்காக யமகிங்கரர்களுக்கு அஞ்சி அவ்யாமியம் என்ற நகரில் தங்கி, இரண்டாவது மாசிய பிண்டத்தை உண்டு, தொடர்ந்து யமகிங்கரர்களால் காடுகளின் வழியே இழுத்துச் செல்லப்பட்டு துன்புற்று, அரசன் சங்கமனின் கௌரி நகரை அடைந்து அங்கு தனது கர்தாவினால் செய்யப்படும் மூன்றாம் மாசிக பிண்டத்தைப் புசித்து அப்பால் சென்று வழியில் கடுங் குளிரால் வருந்தும்.

144.18) யமகிங்கரர்கள் எறியும் கல் மழையால் வருத்தமுற்று குரூரன் என்ற அரசனின் குரூரபுரம் அடைந்து ஐந்தாவது பிண்டத்தைப் பெறும். அடுத்து கிரௌஞ்சம் என்ற ஊரை அடைந்து ஆறாவது மாசிகப் பிண்டத்தை உண்ணும். அங்கு அரை முகூர்த்த காலம் ஒய்வு எடுத்துக் கொண்டு பயங்கரப் பாதையில் செல்கையில் பூவுலக வாழ்வை எண்ணி புலம்ப, யம கிங்கரர்கள் அதன் வாய் மீதே அடிப்பார்கள்.

144.19)  அடுத்து இரத்தம், சீழ், சிறுநீர், மலங்கள் நிறைந்த வைதாரணி ஆறு வரும். கோதானம் செய்திருந்தால் படகோட்டி ஒருவனின்  ஜீவன் வந்து அந்த நதியைக் கடக்க உதவிடும். கோதானம் செய்யாதவர் அந்த ஆற்றில் நெடுங்காலம் மூழ்கித் தவிக்க வேண்டும். ஆகவே ஒவ்வொரு மனிதரும் தமது வாழ்நாளில் வைதரணி கோதானம் செய்ய வேண்டும். அல்லது அவன் மரணம் அடைந்தப் பிறகு அவனுடைய வாரிசுகளாவது அதை  செய்து இருக்க வேண்டும்.

144.20)  அடுத்த நமனுக்கு இளையோனான விசித்திரனது நகரை அடைந்து ஊனஷானி மாசிகப் பிண்டத்தை உண்டு, பிறகு அவ்விடம் விட்டுப் புறப்படுகையில், ஏழாம் மாதம் பிண்டத்தை உண்ணும்போது பிசாசுகள் தோன்றி நம்பினவரைக் கெடுத்த ஜீவன் அந்த அன்னத்தை உண்ணத் தகுதியற்றவன் என்று கூறி பலவந்தமாக அந்த பிண்டத்தை பறித்துக் கொண்டு போகும். அதைக் கண்டு ஒன்றும் செய்ய முடியாமல் அந்த ஜீவன்  அலறித் துடிக்கும்.

மூலப் படம் நன்றி : http://en.wikipedia.org/wiki/Naraka 
நரகத்துக்கு  அழைத்துச்  செல்லப்படும்  பாவத்மாக்கள்  
எப்படி எல்லாம் கொடுமை செய்யப்படுவார்கள்  என்பதைக் 
காட்டும் படம் இது 

144.21) மானிடப் பிறவி பெற்று இருந்த ஜீவன் தன் வாழ்நாளில் தான, தரும, பூசை முதலிய புண்ணிய காரியங்களை செய்து  இருக்க வேண்டும். அந்த  பிறவியில் செய்யப்படும் நல்வினை, தீவினைப் பயன்களையே அது இறந்தப் பின் அடையும். அந்த ஜீவன் தன் வாழ்நாளில்  தண்ணீர் நிரப்பிய குடங்களில் இருந்து நீரை எடுத்து தாகித்து இருந்தவர்களுக்கு தந்து  இருந்தால் வழியில் நீரைப் பருகி தாகத்தை தீர்த்துக் கொள்ளும். ஏழாம் மாதத்தில் மீண்டும் பயணத்தைத் தொடரும். யமபுரிக்கான பாதையில் பாதி தூரம் கடந்து விட்டதால் அவனுக்குரியவர் பூவுலகில் அப்போது அன்னதானம் செய்யவேண்டும்.  பிறகு பக்குவப் பதம் என்ற நகரில் எட்டாவது மாசிக தர்ப்பண பிண்டத்தையும், துக்கதம் என்ற ஊரில் ஒன்பதாவது மாத தர்ப்பண பிண்டத்தையும், நாதாக்கிராந்தம் என்ற நகரில் பத்தாம் மாசிக ஊன தர்ப்பண பிண்டத்தையும் உண்ணும். அதபதம் என்ற ஊரை அடைந்து பதினொன்றாம் மாத தர்ப்பண பிண்டத்தை உண்டு, அடுத்த சீதாபரம் என்ற ஊரை அடைந்து சீதத்தால் வருந்தி, பன்னிரண்டாம் மாத வருஷாப்திக  பிண்டத்தை உண்டு, அடுத்து வைவஸ்வத பட்டணம் சேரும் முன்பே மீண்டும் ஊனமாச தர்ப்பண பிண்டத்தை உண்டு யமபுரியை ஜீவன் அடையும்.

144.22) சித்ரகுப்தனின் உதவியாளர்களான பன்னிரண்டு யம கணங்களான சிரவனர்கள் எனப்படுவோர் அங்குதான் இருப்பர். ஜீவன்கள் அந்தப் பன்னிரெண்டு சிரவணர்களையும் ஆராதித்தால், அவர்கள் ஜீவன் செய்த புண்ணியங்களை மட்டும் யமனுக்கு எடுத்துரைப்பார்கள். எனவே அந்தப் பன்னிரு சிரவணர்களை ஆராதித்தல் மறுபிறவி எடுக்கும்போது நன்மை தரும்.

144.23) இப்படியாக பயணித்துக் கொண்டு இருந்த ஜீவன் கட்டைவிரல் அளவிலான  கர்ம சரீரம் பெற்று சித்திர குப்தனது பட்டணத்தின் வழியாக யமலோகத்தில் நுழையும். யமலோகமோ புண்ணியம் செய்தோர்க்கு மிகவும் அழகாகக் காணப்படும். வாழ்க்கையில் ஈமகாரியங்களில் இரும்பு, உப்பு, பருத்தி, எள்ளுடன் பாத்திரம் ஆகியவற்றை தானம் செய்திருந்தால் யமலோகத்தில் உள்ள யம கணங்கள் காலதாமதம் செய்யாமல் அந்த ஜீவன் வந்திருப்பதை யமதர்மனுக்குத் தெரிவிப்பார்கள். எப்போதும் யமராஜரின் அருகிலேயே இருந்து கொண்டிருக்கும் தர்மத்துவஜன் என்பவர் சித்ரகுப்தர் அனுப்பி வைத்த அந்த ஜீவனின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்து  அதில் நல்லவை அதிகம் இருந்தால் அவற்றை யமதர்மருக்கு எடுத்துரைப்பார்.  அந்த ஜீவன் பூமியிலே இருந்தபோது கோதுமை, கடலை, மொச்சை, எள், கொள்ளு, பயறு ஆகிய ஏழு வகைத் தானியங்களைப் பாத்திரங்களில் வைத்துத் தானம் செய்திருந்தால் தர்மத்துவஜன் திருப்தியடைந்து ‘இந்த ஜீவன் நல்லவன். புண்ணியம் செய்த புனிதன்’ என்று யமராஜரிடம் எடுத்துரைப்பார். பாபம் செய்த ஜீவனுக்கோ அந்த யமபுரியே பயங்கரமாகத் தோன்றும்.

படம் நன்றி : http://en.wikipedia.org/wiki/Naraka 

144.24) பாவம் செய்தவனுக்கு யமனும், யமதூதர்களும் அஞ்சத்தக்க பயங்கர ரூபத்தோடு  காட்சி தருவார்கள். அதைக் கண்டு பாவி பயங்கரமாக ஓலமிடுவான்.  புண்ணியம் செய்தவன் யம தூதர்களால் துன்புறுத்தப்படாமல் யமன் முன் சென்றதும்  தேவனாக மாறி தேவருலகம் செல்வான். பாவம் செய்தவனை யமகிங்கரர்கள் யமதர்மராஜன் கட்டளைப்படி நரகத்துக்கு அழைத்துச் சென்று கொடுமைகளை செய்வார்கள். அதன் பின் அந்த ஜீவன் கிருமி புழு முதலியவற்றின் ஜென்மத்தை அடைவார்கள்.  அந்த ஜீவன் புண்ணியம் அதிகம் செய்திருந்தால் முன்பு போல் மீண்டும் மானிடப் பிறவியை பெறுவான். தான தருமங்களைச் செய்தவன் யாராயினும், எந்த ஜென்மத்தை அடைந்தாலும் அவன் செய்த தான தர்ம பயன்களை அந்த ஜென்மத்தில் அடைவான்.

144.25) பூர்வ ஜென்மத்தில் மகாபாவம் செய்தவனே பிரேத ஜென்மத்தை அடைவான். ஒருவன் பெருவழிகளில் கிணறு, தடாகம், குளம், தண்ணீர்பந்தல், சத்திரம், தேவாலயம் பலருக்கும் பயன்படும்படியான தருமத்தைச் செய்து  இருந்தாலும் அவனது குலத்தில் பிறந்த எவராவது ஒருவன் அவைகளை விற்று தனதாக்கிக் கொண்டிருந்தாலும்  அப்படி ஒரு பாவத்தை செய்தவர்கள்  மரணம் அடைந்த பின்  பிரேத சரீரத்தை அடைவார்கள் .

144.26) பிறருக்கு சொந்தமான பூமியை அபகரித்தவனும், தற்கொலை செய்து கொண்டு இறந்தவனும், மிருகங்களால் தாக்கி இறந்தவனும், ஈமக்கிரியைகள்  செய்ய தன் குலத்தில் ஒருவரும் இல்லாமல் இருக்க வைத்தவனும், தனது  தாய் தந்தையருக்குச் சிரார்த்தம் செய்யாமல் இருந்து இறந்தவனும் பிரேத ஜென்மத்தை (சரீரத்தை) பெறுவார்கள். அது போலவே பிறருடைய பொருளையும் மனைவியையும் அபகரிப்பவன் எவனோ அவர்களும் இறந்த பின் காற்று ரூபமாக பிரேத சரீரத்தை  பெற்று  பசியோடும்  தாகத்தோடும்  தவித்து  திரிவான். அவர்கள் யமலோகத்தில் இருந்து வெளியே துரத்தப்பட்டு பசியோடும், தாகத்தோடும், வெயிலிலும் மழையிலும், கடும் குளிரிலும் அவதிப்படுமாறு அலைய  விடப்படுவார்கள். பிரேத ரூபத்தில் யாரையும் நிம்மதியாக இருக்க விடமாட்டான். பித்ருக்களின் தினத்தில் பித்ருக்களை அவர்களது  வீட்டுக்குள்ளே போக விடாமல் தடுத்து துரத்துவான். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எதையும் அனுபவிக்க விடமாட்டான். தன் புத்திரன் முதலியோருக்கு சந்ததி உண்டாகாமல் வம்சம் நாசமடையும்படி இருக்க சாபமிட்டுக் கொண்டே அலைவார்கள். பிரேத சரீரத்தை  அடைந்தவன் பயங்கரமான முகத்தோடும் வாள் போன்ற பற்களோடும் தன் குடும்பத்தாரின் கனவில் தோன்றி, அயோ! என்னைக் காப்பாற்றுவோர் யாருமில்லையா? பசி தாகத்தோடு இருக்கிறேனே, என் பிரேத சரீரம்  நீங்கவில்லையே என்று கதறுவான்.

மூலப் படம் நன்றி : http://en.wikipedia.org/wiki/Naraka 
நரகத்துக்கு  அழைத்துச்  செல்லப்படும்  பாவத்மாக்கள்  
எப்படி எல்லாம் கொடுமை செய்யப்படுவார்கள்  என்பதைக் 
காட்டும்  இன்னொரு படம் இது

144.27) இப்படியாக இறந்தவர்கள் தவறுகளையே செய்து பாதிக்கப்பட இருந்தாலும், இவை அனைத்தும் இல்லாமல் யமகணங்கள் அந்த ஆத்மாவை நல்ல முறையில் அழைத்துக் கொள்ள யமராஜரை வேண்டிக் கொண்டு திருப்திபடுத்தவே  ஒருவர் இறந்தப் பின் அவர்களுக்கு  நாம் பதிமூன்று  நாட்கள் நல்ல சிரத்தையுடன் கர்மாக்களை செய்ய வேண்டும். அதனால் யமராஜர் மனம் இளகி பாவம் செய்திருந்தாலும் தண்டனை கொடுக்காமல் மன்னித்து விடுவார். நித்ய விதியையும் மற்ற கர்மாவையும், பிண்ட தானத்தையும் எள்ளும் தண்ணீரும் கலந்து முறையோடு தர வேண்டும். அந்த கர்மாவில் முக்கியமானது சபிண்டீகரணம் ஆகும். சபிண்டீகரணமும் செய்து அவன் குலத்தில் முன்னமே மாண்டவருடைய பிண்டத்தோடு இறந்தவனுக்குரிய பிண்டத்தையும் சேர்த்தல் வேண்டும். அவ்வாறு செய்தால் இறந்தவன் பிரேதத்துவம் நீங்கி பிதுர் தேவர்களோடு சேர்ந்து கொள்வான். இறந்த பன்னிரண்டாம் நாள், மூன்றாவது பக்ஷம் அல்லது ஆறாவது மாதத்திலும் சபிண்டீகரணம் செய்யலாம். சபிண்டீ கரணம் செய்யும் வரையிலும் மரித்தவன் பிரேத தத்துவத்துடனேயே இருப்பான். ஓராண்டு வரையிலும் ஒருவனே கர்மம் செய்ய வேண்டும். நித்திய சிரார்த்தத்தோடு ஒரு குடத்தில் ஜலம் நிரப்பி உதக கும்பதானம் செய்ய வேண்டும்.  கர்மங்களைத் தவறாமல் செய்தால் இறந்தவன் விமானம் ஏறி நல்லுலகடைவான்.

144.28) கருமங்களைச் செய்வதற்கு முன் அந்த  இடத்தை துடைத்து பசுவின் சாணத்தால் மெழுகி வைக்க வேண்டும். அவ்வாறு தூய்மையான இடத்தில் கருமம் செய்யத் துவங்கினால் தேவர்கள் அங்கு வந்து அமர்ந்து கொண்டு அக்கருமங்களை நிறைவேறச் செய்வார்கள். இல்லாவிடில் அவ்விடத்தை அசுரரும், பூதங்களும், பிரேதங்களும், பைசாசங்களும் ஆக்ரமித்துக் கொண்டு கருமங்களைத் தடுத்து  நிறுத்தி  இறந்தவன் நரகத்தை அடைய வழி வகுப்பார்கள்.  எள் மிகவும் தூய்மையான ஒரு தானியம். கருப்பு எள், வெள்ளை எள் எதுவானாலும் தானத்துடன் கொடுத்தால் அதிகப் பயன் உண்டாகும். சிரார்த்த காலத்தில் கருப்பு எள்ளைச் சேர்த்தால் பிதுர்  தேவர்கள் மிகவும் திருப்தியடைவார்கள்.  …….கருட  புராணக்  கதை முடிவடைந்தது

145) இப்படியாக ஆத்மா செய்யும் பயணத்தையும், கர்மா செய்யும் நோக்கத்தையும் இறந்தவரது குடும்பத்தினருக்கு அனைத்தையும் பண்டிதர்கள் கதைப் போல  எடுத்துரைப்பார்கள். அதன் பின் தானங்கள் முடிந்ததும் உறவினர் அனைவரும் அந்த இடத்தில் நமஸ்கரித்தப் பின் போஜனம் செய்து விட்டு பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு செல்வார்கள்.

146) சாஸ்திரங்களின்படி கர்மாவையும், அவற்றை தொடர்ந்து மாதாந்திர மற்றும் கர்மாக்களை செய்யும் பொது விதிகளில் சில :-

146.1) அரசாங்கத்தினரால்  தண்டனை தரப்பட்டு மரணம் அடைந்தவர்கள் – தூக்கு தண்டனை, வேறு விதத்தில் கொல்லப்பட்டவர்கள் -போன்றவர்களுக்கு அந்த செய்தி கிடைத்த உடனேயே அவர்களது பங்காளிகளில் கர்த்தா செய்ய உரிமை உள்ளவர்கள் மூலம் கர்மா செய்யலாம்.  அவர்களுக்கும் மேற்கூறிய அனைத்து சடங்குகளும் உண்டு.

146.2) தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு ஆறு மாதம் கழித்து  கர்மா செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால் கர்த்தா விரும்பினால் இருபத்தி நான்கு நாட்கள் கழித்து கர்மாவை செய்யலாமாம். அவர்களுக்கும் மேற் கூறிய அனைத்து சடங்குகளும் உண்டு. பொதுவாக ஒரு வருடத்தில் இத்தனை திவசம் கொடுக்கவேண்டும் என்று சாஸ்திரங்களில் இருக்கிறது.

146.3) பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைக் கட்டாயம் செய்ய வேண்டும். இதனால் பித்ருக்களின் ஆசி கிடைக்கும்.

146.4) சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்குப் பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே அம்மாவாசை தினங்களில் இறந்தவர்களின் பசியையும், தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர்களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.

146.5) அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அதனால் அன்றைக்கு தர்ப்பணம் செய்து எள் கலந்த தண்ணீர் தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றடைந்து வருத்தத்துடன் திரும்பிச் செல்கிறார்கள் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளன. தர்ப்பணம் செய்வதற்கு வசதியில்லாத இடத்தில் உள்ளவர்கள் பசுக்களுக்கு புல்லையிட்டு அவற்றைத் திருப்தி செய்தால் போதும் என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

  • வருடத்தில் மூன்று அமாவாசைகள் முக்கியமானவை. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை. இதில் புரட்டாசி அமாவாசை ரொம்பவே மகத்தானது என்கிறார்கள். மகாளய பட்சம் என்று சொல்லப்படும் புரட்டாசியின் மகாளய பட்ச பதினைந்து நாட்களும் முன்னோர்களுக்கான நாட்கள். எனவே இந்த நாட்களில், முன்னோர்கள் நம் வீட்டுக்கு வந்து போவார்கள், ஆசி வழங்குவார்கள் என்பது ஐதீகம். மகாளய அமாவாசை நாளில், இறந்த நம் மூதாதையருக்கு மட்டுமின்றி, நம் மனதுக்குப் பிடித்தவர்கள் யார் இறந்திருந்தாலும் அவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம் என்கின்றது சாஸ்திர விதி.

146.6) மறைந்த முன்னோருக்கு நாம் செய்யும் சிராத்தங்கள் நம் குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. ஆகவே தவறாது சிராத்தத்தை செய்ய வேண்டும். சிரார்த்தம் என்பதன் அர்த்தம் சிரத்தையோடு (அக்கறையோடு) செய்யப்படுவது என்பதாகும். அக்கறையின்றி செய்யப்படுவது சிரார்த்தம் ஆகாது. அக்கறையோடு சிரார்த்த ஹோமம் முதலியவை செய்து, மறைந்த தாய், தந்தை, தந்தையின் தந்தை, அவரது தந்தை, மற்றும் அவரது மூதையோர்களை பிரார்த்தனை செய்து கொண்டு பண்டிதருக்கு உணவு மற்றும் தானம் முதலியவற்றைக் கொடுப்பதே சிரார்த்தம் ஆகும். ஒரு வருடத்தில் இத்தனை திவசம் கொடுக்கவேண்டும் என்று சாஸ்திரங்களில் இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை இறந்தவர்களின் திதியைக் கணக்கிட்டு கொடுப்பதுதான் திவசம் என்றாலும், இறந்து போனவர்களுக்கு ஓராண்டுக்குள் 16 முறை திவசம் கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அவற்றை 16 ஏகோதிஷ்டா ஸ்ராதாக்கள் என்பார்கள். ஒரு ஜீவாத்மாவின் அங்கமான 16 அம்சங்களும் சொர்க்கத்தை அடைய செய்யப்படும்  இந்த 16 திவசங்கள் அவர்களை திருப்திப்படுத்தி சாந்தி அடையச் செய்து விடுகிறது. அந்த ஸ்ரார்த்தங்களை ஊன மாசிகம், ஊன ஆப்திக மாசிகம், த்ரைபட்ஷிக மாசிகம் மற்றும் மாதாந்திர மாசிகங்கள் என்றும் கூறுவார்கள்.

146.7) இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிராத்தத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் சிரார்த்த தினத்தன்று இறந்த ஜீவன் காற்று வடிவில் தமது குடும்பத்தினர் வசிக்கும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிராத்தத்தில் தரும் உணவைச் சாப்பிடுவதற்காக காத்துக் கொண்டிருக்குமாம்.

  • சிரார்த்தம் செய்யும்போது பித்ருக்கள் நம்மோடு மூன்று நாட்கள் வந்து தங்கிச் செல்வதாக ஐதீகம் உள்ளது. சிரார்த்தம் செய்வதற்கு முதல் நாள் அவர்கள் வந்து விடுவதாகவும் அதனால்தான் முதல் வருடத்தில் மாதாமாதம் செய்யப்படும் மாஸ்யம் அல்லது ஒரு வருடத்திற்கு பின் செய்யப்படும் சிரார்த்தத்தின் முதல் நாள் அன்று ஊனமாஸ்யம் எனும் சடங்கை அந்த காலங்களில் செய்தார்களாம். சிரார்த்தத்திற்கு மறு நாளும் பித்ருக்கள் நம்மோடு தங்கி இருந்து தமது ஆசீர்வாதங்களை அளித்தப் பின்னரே திரும்பிச் செல்வார்களாம்.

146.8) சிராத்தம் செய்ய வசதி இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாகச் செய்யலாம்.  ஒரு பண்டிதரை அழைத்து வாழக்காயையும், அரிசியையும் தானமாக கொடுத்து அனுப்பலாம். அப்படியும் செய்ய முடியாதவர்கள்  சாஸ்திரிகளை கலந்தாலோசனை செய்து ஹிரண்யம், சங்கல்ப்ப சிரார்த்தம் அல்லது ஆம சிராத்தம் போன்றவற்றை செய்யலாம். அவை நமது பித்ருக்களை சந்தோஷப்படுத்த  செய்யப்படுபவை ஆகும். அவற்றை முறையோடு, சிரத்தையுடன் செய்வதின் மூலம் அந்தக் குடும்பத்தினருக்கு நீண்ட ஆயுள்,  பெரும் புகழ்,  வற்றாத செல்வம் போன்றவை வந்து சேருமாம். சிரார்த்தம் செய்தால் எவ்வளவு பணம் செலவாகுமோ அந்த பணத்தை நான்கு மடங்கு அதிகமாக்கி தட்சணையாக தந்து செய்வது ஹிரண்ய சிராத்தம் எனப்படும்.

146.9) ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும் போது,  சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டு தான் சிரார்த்தங்களில் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் சிரார்த்த சடங்குகளை  செய்யும் போது கூறுவார்கள். மந்திர உச்சாடனைகள்  கொண்ட  பெயர்களை அவர்கள் உச்சாடனை செய்யும்போது, அவர்களின் உணர்வுடன் கூடிய ஜீவ சக்திகள்  சிரார்த்த உணவோடு கலந்து விடும்.  இது நம் கண்களுக்கு தெரிவது இல்லை. இதனால்தான் காந்தத்தைப் போன்ற தன்மை கொண்ட ஆயிர ஆயிரம் கோடிக்கணக்கான ஜீவ அணுக்கள் வான்வெளியில் இருந்தாலும்,  கர்மா செய்பவர் மற்றும் பங்காளிகள் ஸ்பரிஸம் பெற்ற சிரார்த்த உணவுகளில் இருந்து வெளியேறும் ஜீவ அணுக்களையும்  மட்டுமே  பித்ருக்களால் ஆவாஹித்துக் கொள்ள  முடியும், அவற்றால் மற்றவர்களுடைய  சிரார்த்த உணவுகளின், கர்மா செய்பவர்களின் உச்சாடனைகளில் இருந்து வெளிப்படும்  ஜீவ அணுக்களை அணுகக் கூட முடியாதாம். இதுவே விசித்திரமான தெய்வ நியதியாகும் .

146.10) வருடாந்திர சிரார்த்தம் என்பது திதியின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது. ஒருவரின் சிரார்த்த திதியை, அவர் இறந்த மாதத்தையும், அம்மாதத்தில் அவர் இறந்த திதியையும், அம்மாதத்தில் அந்த திதி வளர்பிறையில் வந்ததா, தேய்பிறையில் வந்ததா என்பதையும் கணக்கில் கொண்டே நிர்ணயிக்கப்படும். ஆகவே பண்டிதரிடம் ஆலோசனை பெற்றே சிரார்த்த தேதியை அறிந்து கொள்ள வேண்டும். 

  • திதி என்றால் என்ன ? சின்ன விளக்கம். சந்திரன் வளரும்  அடுத்த பதினைந்து நாட்களும் (பௌர்ணமியை நோக்கி) மற்றும் தேயும் (அம்மாவாசையை நோக்கி) அடுத்த பதினைந்து நாட்களும் திதிகள்  எனப்படுகின்றது. 
  • பௌர்ணமிக்குப் பிறகு சந்திரன் தேயத் தொடங்கும் தேய்பிறைக் காலத்தை  ‘அபர பட்சம்’ அல்லது ‘கிருஷ்ண பட்சம்’ என்று சொல்லப்படும்.   சொல்வது வழக்கம். அதுபோலவே அமாவாசைக்குப் பிறகு சந்திரன்  வளரத் தொடங்கும் வளர்பிறைக் காலத்தை  ‘பூர்வ பட்சம்’ அல்லது ‘ஷுக்ல பட்சம்’ என்று சொல்லப்படும். அம்மாவாசை அல்லது  பௌர்ணமிக்குப் பிறகு வரும் முதல் நாளை  ‘பிரதமை’ என்றும், இரண்டாவது நாளை  ‘துதியை’ என்றும், மூன்றாவது நாளை  ‘திருதியை’ என்றும், நான்காவது  நாளை  ‘சதுர்த்தி’ என்றும், ஐந்தாவது  நாளை  ‘பஞ்சமி’ என்றும், ஆறாவது  நாளை  ‘சஷ்டி’ என்றும், ஏழாவது  நாளை  ‘சப்தமி’ என்றும், எட்டாவது  நாளை ‘அட்டமி’ என்றும், ஒன்பதாவது  நாளை  ‘நவமி’ என்றும், பத்தாவது  நாளை  ‘தசமி’ என்றும், பதினோராவது  நாளை  ‘ஏகாதசி’ என்றும், பன்னிரண்டாவது  நாளை  ‘துவாதசி’ என்றும், பதின்மூன்றாவது  நாளை ‘திரயோதசி’ என்றும், பதினான்காவது  நாளை  ‘சதுர்த்தசி’ என்றும் அழைக்கின்றார்கள்.  அந்த திதி நாட்கள் தேய்பிறைக் காலமானால் பதினைந்தாவது நாள் அமாவாசையாகவும், வளர்பிறைக் காலமானால் பதினைந்தாவது நாள் பௌர்ணமியாகவும் அமையும்.
………..தொடரும்