வெள்ளாளக் கவுண்டர்களில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பிரிவினர் உள்ளார்கள். அவர்களில் ஒரு குலத்தவரே முழுக்காதன் என்பவர்களது பிரிவாகும். காடையூரின் பழங்காலத்திய பெயர் நட்டூர் என்பதாகும். காங்கேயத்தை தமது குலதெய்வ  பிரதான பூமியாக கருதும் இவர்கள் காடையூர், நல்லூர், ஊத்துக்குளி, மோரூர், இளம்பிள்ளை, மோழிப்பள்ளி, பொள்ளாச்சி, புதன்சந்தை, ஏழூர், தொழுவூர், தோளூர், போன்ற ஊர்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.
வெள்ளாள கவுண்டர் சமூகத்தில் இந்த சமூகத்தினருக்கு மற்ற பிரிவினரை விட அதிக மரியாதையும், மதிப்பும் உண்டு. காரணம் இவர்கள்தான் கல்யாணங்களில் சீர் செய்வதற்கு முன்னுரிமை பெற்றவர்கள். அது மட்டும் அல்ல அவர்களது முக்கியமான வீட்டு விழா என்பது காது குத்தும் சடங்காகும். அதை அவர்கள் பெரும் விழாவாக கொண்டாடி சீர்வரிசைகளை செய்வதினால்தான் அவர்களை முழுமையான காதைக் கொண்டவர்கள் எனக் கருதி அவர்களை முழுக் காதன் என்பார்கள். காங்கயம் அருகில் உள்ள காடையூரில் முழுக்காதவர்களின் குல தெய்வமான வெள்ளையம்மாவின் சன்னதி   புகழ் பெற்ற காடையீஸ்வரர் கோவிலில்  உள்ளது.  காடையூர் என்ற பெயர் ஏற்பட்டதின் காரணமும் ஒரு அதிசய நிகழ்வுதான்.
முன்னொரு காலத்தில் நட்டூர் எனப்பட்ட தற்போதைய காடையூரில் ஆட்சி செய்து வந்த குறுநில மன்னன் பாண்டிய நாட்டு அரசனுக்கு யுத்தத்தில் உதவி செய்ய முன் வந்தான். பாண்டிய நாட்டு அரசன் மீது படையெடுத்து வந்த வடநாட்டு மன்னன் பெரும் படையுடன் யானைப் படையையும் அழைத்துக் கொண்டு வந்து தாக்குதலை நடத்தினான். அந்த கால யுத்தங்களில் யானைப் படையே வலிமையான படையாகும் என்பார்கள். ஆனால் நட்டூரில் இருந்த மன்னனிடம் அதிக படை பலம் இல்லை. அவர் நாட்டில் நிறைய காடைக் குருவிகள் இருந்தன. நட்டூர் மன்னன் சிவ பக்தர். ஆகவே பெரும் படையுடன் வந்த வடநாட்டு மன்னனை தோற்கடிக்க சிவபெருமான் தனக்கு உதவ வேண்டும் என்று அவன் சிவபெருமானிடம் வேண்டிக் கொள்ள அவரும் ஒரு காடைக் குருவியாக உருவெடுத்து பல காடைக் குருவிகளுடன் சேர்ந்து வந்து அந்த யானைகளை தாக்கலானார்.
யானைகளை காரைக் 
குருவிகள் தாக்கலாயின. அவற்றில் ஒரு 
குருவியாக சிவபெருமானும் இருந்தார் 
சாதாரணமாக யானைகள் தமக்கிட்ட பணியில் கவனமாக இருக்கும். ஆனால் தம்முடைய கண்களையும், காதுகளையும் கொத்திக் கொத்தி நூற்றுக்கணக்கான காரைக் குருவிகள் காயப்படுத்தியதைக் கண்டு கோபமுற்ற யானைகள் செய்வதறியாமல் பிளிரத் துவங்கி மதம் பிடித்து தம்மை அழைத்து வந்த படையினரையே திருப்பித் தாக்கத் துவங்க, படையெடுத்து வந்த வெளிநாட்டு மன்னன் பயந்துபோய்  எஞ்சி நின்ற படையினருடன் ஓட்டம்  பிடித்தானாம். இதனால் மன்னனைக் காத்த காரைக் குருவிகள் பெருமை பெறும் வகையில் நட்டூர் என்பது  காடையூர் என்ற பெயராயிற்று  என்பதாக கர்ண வழிப் பரம்பரைக் கதை உண்டு.
இதனால்தான் காடையூர் சிவபெருமான் ஆலயத்தில் முழுக்காதன் வெள்ளாள கவுண்டர் சமூகத்தினர் வழிபடும் பங்கசாக்ஷி சமேத காடையீஸ்வரர் மற்றும் அவர்களது குலதெய்வமான வெள்ளையம்மாள் சன்னதியும் உள்ளது.  காடையீஸ்வரரே  மன்னனுக்கு யுத்தத்தில் குருவி உருவில் வந்து உதவிய சிவபெருமான் ஆவார் என்ற நம்பிக்கையும் உண்டு. பங்கசாக்ஷி சிவபெருமானின் மனைவியான பார்வதியே.  இனி அந்த ஆலயத்தில் உள்ள  வெள்ளையம்மாள் தெய்வமான கதையைப் படியுங்கள் .
முன்னொரு காலத்தில் காக்கேயம் எனும் ஊருக்கு பக்கத்தில் இருந்த கிராமத்தில் ஒரு விவசாயி வாழ்ந்திருந்தார். அவருக்கு சில நிலபுலங்கள் உண்டு. அவருக்கு ஒரு பெண்ணும், நான்கு மகன்களும் இருந்தார்கள். பிறக்கும்போதே பெண் குழந்தையின்  சரீரம் வெள்ளை வெளீர் என இருந்ததினால் அவளுக்கு வெள்ளையம்மாள்  எனப் பெயரிட்டார்கள். நான்கு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். வெள்ளையம்மாள் திருமண வயதை எட்டினாள். ஆனால் அவர்கள் அவளை யாருக்கு மணமுடித்துத் தருவது என்ற கவலையில் இருந்தபோது பக்கத்து நிலங்களில் மாடுகளை மேயவிட்டுக் கொண்டு இருந்த ஏழை இளைஞன் ஒருவரைக் கண்டார்கள். அவர்கள் பார்த்தவரை அந்த இளைஞன் நல்ல குணம் கொண்டிருந்தான். தான் உண்டு தன்  வேலை உண்டு என வாழ்ந்து வந்திருந்தான். அவனும் அவர்களது இனத்தவரே ஆகும். ஆகவே அவனைக் கண்டவர்கள் அவனிடம் பேசி அவனுக்கே ஊரார் சம்மதத்துடன் வெள்ளையம்மாவை திருமணம் செய்து வைத்தார்கள். அதன் பின் அனைவருமே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்.  காலம் கடந்தது.
வெள்ளையம்மாளின் கணவர் மாடு 
மேய்த்துக் கொண்டு இருந்தவன்
சில காலத்திலேயே வெள்ளையம்மாவுக்கு  மூன்று குழந்தைகள் பிறந்து வளர்ந்தன. சில காலத்திலேயே வெள்ளையம்மாளின்  தந்தை  வயதாகி மரணம் அடைந்தார். மரணம் அடையும் முன்னால் தனது மகன்களையும், வெள்ளையம்மாளின் குடும்பத்தையும் அழைத்து, தனது மரணத்துக்குப் பின்னால் தன்னுடைய சொத்துக்களில் நிலபுலங்களில் ஒரு காணி நிலத்தை வெள்ளையம்மாளுக்கு  தரவேண்டும் என்று மகன்களிடம் கூறிவிட்டு மரணம் அடைந்தார்.
தந்தையின் மரணத்துக்குப் பின்னால் அவருடைய மகன்கள் அவரவர்களுடைய மனைவிகளின் துர்போதனையைக் கேட்டு வெள்ளையம்மாளுக்கு சொத்தில்  காணி நிலத்தை தந்து விட்டால் தத்தம்  பங்கு குறைந்து விடுமே என எண்ணிக் கொண்டு  அவளுக்கு சொத்தில் எந்தப் பங்கையும் கொடுக்கக் கூடாது என முடிவு செய்தார்கள். வெள்ளையம்மாளின்  பலமே அவளது கணவன்தானே என்பதினால் வெள்ளையம்மாளுக்கு தெரியாமல்  அவனை தனியாக ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று அவனைக் கொன்று புதைத்து விட்டார்கள். ஆனால் அவர்களுடன் தனது கணவர் சென்றதையோ அல்லது அவர்கள் அவனைக் கொன்று விட்டதையோ அறிந்திடாத வெள்ளையம்மாளிடம் அவர்கள் வெள்ளையம்மாளின் நடத்தையில் சந்தேகம் கொண்டுதான்   அவளது கணவன் அவளை தவிக்க விட்டுச் சென்று விட்டான் எனக் கூறியதும் அல்லாமல் தாங்களும் அவளை சந்தேகிப்பதாகக் கூறினார்கள். அது முதல் தொடர்ந்து சில நாட்கள் அவளது நடத்தையைக் குறைக் கூறிக்கொண்டு இருந்தவர்கள் ஒருநாள் அவளையும் வீட்டை விட்டுத் துரத்தி விட்டார்கள். அவளை அவர்கள் வீட்டை விட்டுத் துரத்தியபோது அவள் தனது  மூன்று குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.  போதாததற்கு அவள் நான்காம் முறையாக அப்போது கர்பிணியாக வேறு  இருந்தாள்.

எங்கு செல்வது எனத் தெரியாமல்  பதுங்கி
இருந்த வெள்ளையம்மாளை  சர்தார் பார்த்தார்

எங்கு செல்வது எனத் தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு சென்றபடி இருந்தவள் ஒரு காட்டுப் பகுதியில் சென்று பயத்தில்  ஒதுக்குப் புறமாக ஒரு இடத்தில் அமர்ந்து  இருந்தாள். அப்போது அந்த வழியே வந்து கொண்டு இருந்த அரசாங்கத்தை சேர்ந்த உயர் அதிகாரி பயத்துடன் அமர்ந்திருந்த அவளை கவனித்து விட்டார்.  அப்படிப்பட்ட அதிகாரிகளை  அந்த காலத்தில் சர்தார் என்றே அழைப்பார்கள். குதிரையில்  இருந்து  இறங்கி  அவள் அருகில் சென்று  அவளிடம் பேசி நடந்த அனைத்தையும் அந்த சர்தார் கேட்டறிந்து கொண்டார். அவள் கதையைக் கேட்டு மனம் இறக்கப்பட்டவர் அவளை அரண்மனைக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு இடத்தில் பத்திரமாக தங்க ஏற்பாடு செய்தபின் தான், தான் அரசாங்க வேலையாக பல இடங்களுக்கும் செல்ல வேண்டி உள்ளதால் அவளை அங்கேயே தைரியமாக தங்கி இருக்குமாறும் தான்  திரும்பி வந்து அவளது குறையை தீர்ப்பதாக வாக்கு கொடுத்தார்.
சர்தார்  வேலை விஷயமாக சென்று விட்டு திரும்ப சில காலம் ஆயிற்று. அதற்குள் வெள்ளையம்மாளுக்கு  நான்காம் குழந்தையும் பிறந்து விட்டது.  சர்தார் திரும்பி வந்ததும் வெள்ளையம்மாளின்  சகோதரர்களை ஊரார் முன்னால்  வரவழைத்தார்.  வெள்ளையம்மாளை  வீட்டை விட்டு துரத்தியதின் காரணத்தையும், அவளுக்கு சேரவேண்டிய சொத்தை தராததின் காரணத்தையும் விளக்குமாறு கடுமையாக கேட்டு விசாரிக்கத் துவங்கியதும் அவர்கள் தத்தம் மனைவிகளுடன் சேர்ந்து தமது தவற்றை மறைத்துக் கொள்ளும் விதமாக அவள் நடத்தைக் குறித்து மீண்டும் சந்தேகத்தை எழுப்பினார்கள். ஆனால் அவர்கள் தம் மீது சுமத்திய அத்தனை அவதூறுகளையும் வெள்ளையம்மாள்  மறுத்ததும் அல்லாமல் கடவுள் மீது ஆணையாக தான் எந்த தவறையும் செய்யாத பதிவிரதை என சத்தியமும் செய்தாள்.
தான் எந்த தவற்றையும் செய்யாத பத்தினி 
என்று வள்ளியம்மாள் சத்தியம் செய்தாள் 
அதைக் கேட்ட அண்ணன்மார்கள் எங்கே அவளது வார்த்தைகளை சர்தார் நம்பி அவளுக்கு சாதகமாக தீர்ப்பை தந்து விடுவாரோ என பயந்துபோய் அவளால் செய்யமுடியாத சில நிபந்தனைகளைக் கூறி அவற்றை அவள் நிறைவேற்றினால் மட்டுமே அவள் கற்புக்கரசி என தாம் நம்புவோம் என்றும், அப்படி அவள் செய்து காட்டினால் அவளுக்கு சேர வேண்டிய சொத்தைத் தர சம்மதிப்போம் என்றும் கூறினார்கள்.  அவர்கள் விதித்த நிபந்தனைகள் என்ன தெரியுமா?
மாடுகள் இழுத்துச் செல்லும் மாட்டு வண்டியில் மாடுகளை கட்டிவைக்க நுகத்தடி எனும் கட்டையை அதன் கழுத்தில் கட்டுவார்கள். அந்தக் கட்டை விசேஷ  மரத்தை வெட்டி நன்கு காயவைத்து அதன் கட்டையில் செய்தது. அது வேறு எதற்கும் பயன்படாது.  ஆகவே ஒரு நுகத்தடியை ஒரு இடத்தில் நட்டு வைத்து அதற்கு நீர் ஊற்றி வளர்க்க வேண்டும்.  நட்டு வைக்கப்பட்ட அந்தக் கட்டை துளிர்விட்டு செடியாக வளர வேண்டும். அது முதல் நிபந்தனை.
அடுத்த நிபந்தனை அந்த கிராமத்தில் உள்ள மண் குதிரையின்  மீது அவள் ஒரு குடம் நீர் ஊற்றவேண்டும். அப்போது அந்த குதிரை சற்று நேரம் உயிர் பிழைத்து எழுவது போல எழுந்து நின்று கனைக்க வேண்டும்.
மூன்றாவது நிபந்தனை என்ன என்றால் நுகத்தடிக்கு நீர் ஊற்றவும், குதிரை மீது நீர் ஊற்றவும் எடுத்து வரப்படும் பானை காய வைத்து பக்குவப்படுத்தி வைக்கப்படாத பானையாக இருக்க வேண்டும். அவள் பத்தினியாக இருந்தால் அந்த மண் குடம் தண்ணீரில் கரையாது.
அதைக் கேட்ட சர்தார் திகைத்தார். அவளை ஏமாற்ற அவர்கள் அவளால் செய்ய முடியாத நிபந்தனையை வேண்டும் என்றே விதிக்கிறார்கள். அவளுக்கு நீதி கிடைக்காவிடில் அவளையும் அவளது கணவரைக் கொன்றது போலவே அவர்கள் சதி செய்து கொன்று விடுவார்கள் என்பதை அறிந்து கொண்டதினால் அவளை அந்த நிபந்தனைகளை ஏற்க மறுக்குமாறு கூறினார். ஆனால் வெள்ளையம்மாளோ தான் ஒரு பதிவிரதை என்பது சத்தியமானதினால்  அவர்கள் நிபந்தனையை ஏற்றுக் கொண்டு அவற்றை செய்வதாகவும், கடவுள் இருந்தால் சத்தியவாதியான  தன்னைக் காப்பாற்றுவார் என தீர்மானமாக கூறி விட ஊர் ஜனங்கள் முன்னால் மண்குதிரை இருந்த  இடத்தின் அருகில் ஒரு நுகத்தடியை எடுத்து வந்து நட்டார்கள். ஒரு குயவனிடம் இருந்து பக்குவப்படுத்தாத பானையையும் கொண்டுவந்து வெள்ளையம்மாவிடம் தந்தார்கள்.

வெள்ளையம்மாளோ அதை சர்வசாதாரணமாக தனது தலையில் வைத்து கிணற்றருகில் எடுத்துச் சென்று அதில் நீரை நிறப்பி மீண்டும் தனது தலையில் வைத்துக் கொண்டு வந்தாள். மண் குடம் நீரில் கரையாமல் இருந்தது. நட்டு வைக்கப்பட்டு இருந்த நுகத்தடி மீது குடத்து நீரை ஊற்ற சற்று நேரத்திலேயே அதில் சின்ன சின்ன இலைகள் தோன்றின.  அடுத்து மண் குதிரை மீது நீரை ஊற்ற சட்டென எழுந்த குதிரையும் கனைத்து விட்டு அமர்ந்தது.  அத்தனை சம்பவங்களையும் பார்த்த அவளது சகோதரர்கள் பயந்து போனார்கள். தாம் செய்த தவறை உணர்ந்தார்கள். தமது சகோதரி தெய்வப்பிறவியாக இருக்க வேண்டும் என உணர்ந்தவர்கள் அவளுக்கே தமது தந்தையின் அனைத்து சொத்தையும் தந்துவிட்டு அங்கிருந்து கிளம்பி வேறு ஊருக்கு சென்று விட்டார்கள்.

 வெள்ளையம்மாள்

அதன் பின் வெள்ளையம்மாள் பலகாலம் அந்த ஊரில் வாழ்ந்து வந்திருந்தப் பின் ஒருகட்டத்தில் தெய்வமாகி விட்டாள். அவளை அந்த ஊரில் இருந்த அனைவருமே வணங்கி வழிபடலானார்கள். அவள் வழிவந்த இனத்தவரே முழுக்காதன் சமூகத்தினர் என்கிறார்கள்.