சாந்திப்பிரியா
(1931 ஆம் ஆண்டு பீகார் மானிலத்தில் ஆசாரமான குடும்பத்தில் பிறந்து 1953 ஆம் ஆண்டு சன்யாச தீட்சை பெற்றவர் ஸ்வாமி ஜோதிர்மயா நந்தா அவர்கள். அமெரிக்காவில் மியாமி என்ற மானிலத்தில் 1969 ஆம் ஆண்டு யோக ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஆசிரமம் ஒன்றை நிறுவி யோக வழி முறைகளைக் கற்றுக் கொடுக்கும் அவர் பல்வேறு புத்தகங்கள் எழுதி உள்ளார். அவர் எழுதிய சிறு கதைகள் மனதை சிந்திக்க வைப்பவை. அதில் ஒன்றுதான் செப்டம்பர் 2009 ஆண்டில் வெளியான இந்தக் கதை. அவர் எழுதி உள்ள அனைத்தையும் பிரசுரித்துக் கொள்ள எனக்கு முழு அனுமதி தந்துள்ளார்)
அஷ்டவாக்கரர் யார்? முன்னொரு காலத்தில் உதலாக்கா என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மகள் சுஜாதா என்பவளை கஹோட் என்ற முனிவருக்கு மணம் செய்து வைத்தார். அப்பொழுது அவள் கர்பவதியான பொழுது அவள் வயிற்றில் இருந்த குழந்தையான அஷ்டவாக்கரா தன்னுடைய தந்தை வேதம் ஓதும் பொழுது செய்யும் பிழைகளை எடுத்துரைக்குமாம். ஆனால் அந்த புத்திசாலித்தனத்தை விரும்பாத முனிவர் அந்த குழந்தைக்கு சாபமிட்டார். அது அங்ககீனமாக, உடம்பு எட்டு கோணலாக பிறக்கட்டும் என சாபமிட்டு விட அந்த குழந்தையும் எட்டு கோணலான உடம்புடன் பிறந்ததினால் அதற்கு அஷ்ட(எட்டு) வாக்கரா (உடல் கோணல்கள்) எனப் பெயர் ஏற்பட்டது.
அந்த குழந்தை பிறக்கும் முன் தன்னுடைய குடும்பம் செழிப்பாக இருக்க வேண்டும் என நினைத்த முனிவர் தன்னுடைய வாதத் திறமையை சபையில் காட்டி சன்மானம் பெற்று வர வேண்டும் என ஜனக மன்னனிடம் சென்றதும் அங்கு நடைபெற்ற வாதப் போட்டியில் அரச பண்டிதரிடம் தோற்றுப் போனார். ஆந்த அரசவை பண்டிதரின் நிபந்தனைப்படி தோற்பவர்கள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு மரணத்தை அடைவார்கள். அதனால் கஹோட் முனிவரும் அந்த தண்டனைப் பெற்று மரணம் அடைய வேண்டி இருந்தது.
குழந்தை அஷ்டவாக்கரா வளரத் துவங்கிதும் கூட அவனுடைய தாய் அவனுக்கு தந்தை மரணம் அடைந்த செய்தியை கூறவில்லை. ஆனால் பின்னர் எப்படியோ அதைத் தெரிந்து கொண்ட அஷ்டவாக்கரா தன்னுடைய தாய் மாமனான சிறுவன் ஸ்வேதகேது என்பவருடன் ஜனகர் அரண்மணைக்குச் சென்று அரச பண்டிதர் பாண்டியை சந்திக்க அனுமதி கோரினார். போகும் வழி நெடுக அந்த இரண்டு சிறுவர்களும் காட்டிய திறமை குறித்த செய்தி மன்னனின் காதில் எட்ட அவர் அந்த இரு சிறுவர்களையும் அரச சபைக்கு அழைத்தார்.
அவர்கள் அரச சபைக்குள் நுழைந்ததுமே அவருடைய அங்கஹீனத்தைக் கண்டு அங்கிருந்த அனைவரும் பெரியதாக சிரித்து கேலி செய்ய கோபமடைந்த அஷ்டவாக்கரா மன்னனைப் பார்த்துக் கூறினார் “அரசே, நான் இந்நாள் வரை உங்கள் அரச சபையில் படித்த மேதாவிகள்தான் உள்ளனர் என நினைத்திருந்தேன். இங்கு வந்ததும் தெரிகின்றது இந்த அவையில் செருப்பு தைப்பவர்கள்தான் உள்ளனர். ஏன் எனில் அவர்களுக்குத்தானே தோலின் மீது நாட்டம் இருக்கும். எந்த ஒருவனுடைய உருவத்தையும் கொண்டு அவனை எடை போடக் கூடாது அவனுடைய திறமையைதான் சோதித்துப் பார்த்து அவனைப் பற்றிய முடிவு எடுக்க வேண்டும்.”
அந்த சிறுவன் கூறியதைக் கேட்ட அனைவரும் வாயடைத்து நின்றனர். சற்றே சங்கடம் அடைந்த மன்னனும் அஷ்டவாக்கராவிடம் அவன் வந்த காரணத்தைக் கேட்க அஷ்டவாக்கரா சற்றும் தயக்கம் இன்றி தான் அரச பண்டிதர் பாண்டியுடன் ஆன்மீகத்தில் வாதம் செய்ய வந்துள்ளதாகக் கூறினார். நீண்ட வாதங்களுக்குப் பிறகு அரசன் அந்த போட்டிக்கு சம்மதித்தார். காரணம் போட்டியின் விதி. போட்டி நடந்தது அரச பண்டிதர் தோற்றுப் போனார். அவருக்கு என்ன தண்டனை தரவேண்டும் என மன்னன் கேட்கவும் அஷ்டவாக்கரா கூறினார் “என் தந்தை மரணம் அடைந்தது போலவே பண்டிதரும் நீரில் மூழ்கடிக்கப்பட்டு மரணம் அடைய வேண்டும்”
பூண்டி கூறினார் “ நான் வருண பகவானின் மகன். ஆகவே நீரில் மூழ்கடித்தாலும் எனக்கு மரணம் கிட்டாது. மேலும் உன் தந்தையின் மரணத்துக்கோ அல்லது மற்றும் பல தோற்றுப் போனவர்களின் மரணத்திற்கோ நான் காரணம் அல்ல. உண்மையில் என் தந்தை ஒரு பெரிய யாகம் செய்து கொண்டு உள்ளார். அதில் பல பண்டிதர்கள் தேவையாக இருந்ததினால்தான் என்னிடம் தோற்றவர்களை அங்கு அனுப்பினேன் ” எனக் கூறியவர் அஷ்டவாக்கராவின் தந்தையை மேலுலகத்தில் இருந்து வரவழிக்க அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் அவருடைய தந்தை சபையில் வந்து நின்றார்.
துன்னுடைய மகனுடைய வாதத் திறமையைப் பற்றிக் கேள்விப்பட்ட அவருடைய தந்தை கஹோட் மிக்க மகிழ்ச்சி அடைந்து தன் மகனிடம் சாமங்கா என்ற நதியில் குளித்துவிட்டு வருமாறு கூறினார். அவரும் அந்த நதியில் சென்று குளித்துவிட்டு நீரில் இருந்து எழுந்த பொழுது அங்கஹீனம் மறைந்து போய்விட்டிருந்தது. அதைக் கண்டு அனைவரும் மகிழ்ந்து போக ஜனகரும் அஷ்டவாக்கராவையே தன்னுடைய குருவாக ஏற்றுக் கொண்டார். அந்த அஷ்டவாக்கரர் தந்த போதனைகளினால் ஜனகர் மனத் தெளிவு பெற்று ஞானம் அடைந்தாராம்.