குரு சரித்திரம் – சில விவரங்கள் 

சாந்திப்பிரியா

குரு பரம்பரை என்பது  தத்தாத்திரேயரின் அவதாரத்துக்குப் பிறகே தோன்றின. அவரே குரு பரம்பரை என்பது துவங்க வழி வகுத்தார். திருமூர்த்திகளின் அவதாரமான அவரே குருக்களுக்கு எல்லாம் குருவான சத்குரு ஆவார்.  இந்த பூமியில் குரு மற்றும் சிஷ்யர்களுக்கு இடையே எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும், ஒரு குருவின் மூலமே மக்களின் மன நிலையை ஆன்மீக வழியில் செலுத்தி கலிகாலத்தில் கலியின் தாக்கத்தினால் விளையும் தீமையை எப்படி அழிக்க வேண்டும் போன்றவற்றை  நடைமுறையில் எடுத்துக் காட்டவே தத்தாத்திரேயர் தாமே ஒரு குருவாகவும் அவருடைய சிஷ்யராகவும் பல அவதாரங்களை எடுத்துக் காட்டி உள்ளார். அதன் விளைவாகவே தத்தாத்திரேய குரு பரம்பரை உருவாகி மேலும் பல குரு பரம்பரைகள் துவங்குவதற்குக் காரணம் ஆயிற்று.  தத்தாத்திரேயரே தத்தாத்திரேயராகவும், ஸ்ரீ வல்லபாவாகவும், ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளாகவும், ஸமர்த்த ஸ்வாமிகளாகவும், ஷீரடி சாயிபாபா, மானிக் பிரபு போன்ற பல ரூபங்களில் தோன்றி முதல் குரு பரம்பரையை உருவாக்கினார். இவர்களில் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளே ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகளாக பிறப்பை எடுத்தார் என்றும் சிலர் நம்புகிறார்கள்.

வெகு காலத்துக்குப் பிறகே குரு பரம்பரை என்ற நியமம் பிற மடங்களுக்கும் பரவியது. விஷ்ணுவான நாராயணர் என்பதில் ஆரம்பித்து பிரும்மா, வசிஷ்டர், சக்தி, பராசர, வியாசா, சுகா, கௌதபாதா, கோவிந்த பாகவத்பாதா மற்றும் சங்கர பாகவத்பாதா எனும் ஸ்ரீ ஆதி சங்கரர் போன்றவர்கள் மூலம்  அத்வைத்த குரு பரம்பரை என்பது தென் பகுதிகளுக்கும் பரவியது. அத்வைத்த குரு பரம்பரை என்பது நாராயணர் மற்றும் பிரும்மா எனும் தெய்வ பரம்பரையில் துவங்கி வசிஷ்டர், சக்தி, பராசர, வியாசா, சுகா என்பவர்களின் ரிஷி பரம்பரையின் வழியே வந்து கௌதபாதா, கோவிந்த பாகவத்பாதா மற்றும் சங்கர பாகவத்பாதா எனும் ஸ்ரீ ஆதி சங்கரர் போன்றவர்களைக் கொண்ட ஆச்சார்யா எனும் மனித பரம்பரையாக தொடர்ந்தது. வட நாட்டில் ஆதி நாத், மச்யேன்ரநாத் மற்றும் கோரக்சனாத்  என்பவர்கள் மூலம் நாத பரம்பரை தோன்றி அது பன்னிரண்டு பிரிவுகளாகி ஒவ்வொன்றும் ஒவ்வொரு குரு மூலம் ஒரு குரு பரம்பரையை கொண்டதாயிற்று. காசி மடத்தை சார்ந்த கவுட் சரஸ்வத் பிராமணர்கள் மூலம்  குரு பரம்பரையான விஷ்ணு பரம்பரையும், மாதவா பிராமணர்கள் மூலம் மாதவ குரு பரம்பரையும், ராகவேந்திர ஸ்வாமிகளின் குரு பரம்பரையும் காலப் போக்கில் தோன்றின. அவை அனைத்துமே மனித குல மேம்பாட்டின் நன்மைக்காகவே தோன்றின. வழி முறைகள் வெவ்வேறாக இருந்தாலும் முடிவு ஆன்மீக முக்தி அல்லது ஞானத்தை அடைவதே.

தத்தாத்திரேய அவதாரங்களாக கூறப்படும் ஸ்ரீ வல்லபா, ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி, ஸமர்த்த ஸ்வாமி, ஷீரடி சாயிபாபா, மானிக் பிரபு போன்ற அனைவரது வரலாற்றிலும் தத்தாத்திரேயரைப் போலவே பல்வேறு ரூபங்களில் பக்தர்களின் வீடுகளுக்கு அவர்கள் சென்ற கதையும், ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் காட்சி தந்த கதையும், உணவு கொடுத்தவர்களில் இருந்த பாத்திரத்தில் வற்றாமல் உணவு வந்து கொண்டே இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் உணவு உண்பதற்கு அவர்கள் அருளிய கதையும் கிட்டத்தக்க ஒரே மாதிரியாகவே கூறப்பட்டு உள்ளன என்பதும் அவர்களிடையே இருந்த அவதார ஒற்றுமையைக் குறிக்கின்றன. இவை அனைத்தையும் பார்க்கும்போது  தத்தாத்திரேயரே ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளாகவும், ஷீரடி சாயிபாபாவாகவும் அவதரித்து உள்ளதாக நம்பப்படுவது இதன் மூலம் மேலும் வலுப்பெறுகிறது.

தத்தாத்திரேயரின் அவதாரமான ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் வாழ்கை வரலாறு (1378−1459) குரு சரித்திரம் எனும் பெயரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஸ்வாமிகள்  நதியில் நடந்து சென்று மறைந்தபோது அவருக்கு சிஷ்யராக இருந்த ஸ்ரீ ஸரஸ்வதி கங்காதர ஸ்வாமி என்பவரால் மராட்டிய மொழியில் எழுதப்பட்டு உள்ளது. அதன் பிறகு 1854-1914 ஆண்டுகளில் வாழ்ந்திருந்த ஸ்ரீ வாசுதேவானந்த ஸரஸ்வதி ஸ்வாமி என்பவரால் சமிஸ்கிருத மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டதாக கூறுகிறார்கள்.

ஆனால் அது ஸ்ரீ ஸரஸ்வதி கங்காதர ஸ்வாமிகளினால்  முதலில் சமிஸ்கிருத மொழியிலே  எழுதப்பட்டு அதுவே பின்னர் மராட்டிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு உள்ளது என்பது இன்னொரு கருத்தாக உள்ளது.  குரு சரித்திரா என்பது மெல்ல மெல்ல பல ஆண்டுகளுக்குப் பிறகே வெளியில் தெரிய வரலாயிற்று. ஒரு காலத்தில் அதை வேதத்தை விட மேலான நூலாகவே கருதி மராட்டிய மானிலத்தின் சில இடங்களிலும் கர்நாடகாவின் சில இடங்களிலும் பாராயணம் செய்து வந்து உள்ளார்கள்.  பின்னர் அது ஆங்கில மொழியிலும், கன்னட மொழியிலும் ஹிந்தியிலும் வெளி வந்துள்ளது .

ஆனால் என்ன காரணத்தினாலோ அதை சாயிபாபாவின் வாழ்கை வரலாற்று புத்தகமான ‘சாயி சரித்திரம்’ போல அனைத்து  மொழிகளிலும் மொழியாக்கம் செய்து வெளியிடாமல் இருந்துள்ளார்கள். அது ஆங்கிலத்தில் பலராலும் வெளியிடப்பட்டு வந்திருந்தாலும் தமிழில் எனக்குத் தெரிந்து அது வெளி வந்துள்ளதாக தெரியவில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் அகில இந்திய சாயி சமாஜம் இதை தமிழில் வெளியிட்டு உள்ளதாக தெரிகிறது.

இந்த புத்தகத்தை சப்தாக பாராயணம் அதாவது ஏழு நாட்கள் பாராயணமாக படிக்க வேண்டும் என்று கூறுவார்கள். இந்த ‘குரு சரிதா’ எனும் குரு சரித்திரத்தைப் போலவே ஷீரடி சாயிபாபாவின் வாழ்கை சரித்திரம் மற்றும் தத்தாத்திரேயரின் வாழ்கை சரித்திரத்தையும் குரு சரித்திரம் என்று சிலர் கூறுகிறார்கள். அவற்றையும் ஏழு நாட்கள் பாராயணமாக படிக்க வேண்டும் என்றும்  கூறுவார்கள். குரு சரித்திரம் என்பது என்ன, அந்த ஏழு நாட்கள்  கணக்கு என்ன என்று நான் ஆராய்ந்தபோது என்னுடைய சில சந்தேகங்கள் தெளிவடைந்தன.

14 அல்லது 15 ஆம் நூற்றாண்டில் இந்த குரு சரித்ரா எழுதப்பட்ட வெகு காலத்துக்குப் பிறகே அதைப் பின்பற்றி குரு சரித்திரம் என்று தத்தாத்திரேயர் வரலாறும், ஷீரடி சாயிபாபாவின் குரு சரித்திரமும் வெளியாயின.   இந்த நூல் வெளி வருவதற்கு முன்னால் துன்பங்களையும், துயரங்களையும் நீக்கிக் கொள்ள சப்தாக பாராயணமாக செய்ய வேண்டும் என்று வேறு எந்த பாராயண நூலுமே குறிப்பிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும். வேறு எந்த நூலையுமே  இப்படி எழுத்து வடிவில் அமைத்து பாராயணம் செய்யுமாறு கூறி இருக்கவில்லை. வேதங்கள், ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, குரு கீதை,  பதஞ்சலி யோகம், குரு கோவிந்தம், கந்தர்ஷஷ்டி, கந்தர் அனுபூதி போன்ற பலவும் எழுத்து வடிவில் இருந்திருந்தாலும் குரு சரிதாவைப் போல இத்தனை நாட்கள் பாராயணம் செய்யப்பட வேண்டும் என்ற நியதியோடு மக்களிடையே பரப்பப்படவில்லை.

அடுத்த கேள்வி இந்த நூல்களை ஏன் ஏழு நாட்கள் பாராயணமாக செய்ய வேண்டும்? இந்த உலகில் உள்ள முக்கியமான அனைத்துமே ஏழு எனும் எண்ணை கொண்டு அமைந்து உள்ளது என்பதினால் ஏழு என்பது மகத்துவமான எண்ணாயிற்று. ஒரு வாரம் என்பது ஏழு நாட்கள், கிரகங்கள் ஏழு, கடல்கள் ஏழு, மூல நிறங்கள் ஏழு (வானவில்) ,சப்த கன்னிகைகள் ஏழு , பிரபஞ்சத்தில் உள்ளது ஏழு உலகம், ஆதார அல்லது மூல இசை என்பது ஏழு ஸ்வரங்களைக் கொண்டது, குண்டலியை அடைய கடக்க வேண்டிய நிலைகளும் ஏழு என்று தெய்வீக சம்மந்தப்பட்ட அல்லது இயற்கையின் முக்கியமான அனைத்துமே ஏழு என்ற எண்ணில் அடங்கி உள்ளன. ஆகவே நல்லவை எதை செய்தாலும் அது தெய்வீக எண்ணான ஏழாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையே இதற்கும் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

சித்த முனிவர் கனக்பூருக்கு ஏழு நாட்கள் நடந்து கொண்டே சென்றபோது நமத்ஹரகாவுக்கு ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் கதையை அந்த ஏழு நாட்களும் தொடர்ந்து கூறியதினால்தான் அதை ஏழு நாட்கள் பாராயணம் செய்ய வேண்டும் என்பது ஆயிற்றே தவிர அதற்கு வேறு எந்த மகத்துவமும் இல்லை. தினமும் ஒரு அத்தியாயமாக ஐம்பத்தி ஒரு அத்தியாயங்களை படித்தாலும் ஏழு நாட்கள் பாராயணம் செய்தாலும் ஒரே பலனே கிடைக்கும் என்பது ஐதீகம். ஆகவே இந்த நூலை பாராயணம் செய்வதின் மூலம் துன்பங்களும், ஆபத்துக்களும், வியாதிகளும் விலகும், குறிப்பிட்ட வேண்டுதல் நிறைவேறும் என்று நம்புகிறார்கள். இந்த நூலை எழுத வேண்டும் என கடந்த பல வருடங்களாக யோசனை செய்து வந்தாலும் அதை எழுத முடியவில்லை. சமீபத்தில்தான் இதை திடீர் என எழுதத்  துவங்கினேன். எழுதத் துவங்கியதும்தான் அதை எழுதுவது எத்தனைக் கடினம் என்பதனை உணர்ந்தேன். எழுதி முடிக்க முடியுமா என்ற சந்தேகம் கூட வந்தது. ஆனால் உறுதியோடு எழுத்து துவங்கி அதை முடித்து விட்டேன். இதைப்  படிப்பவர்கள் நல்ல பயன்களை அடைவார்கள் என்று நம்புகிறேன். எல்லாமே ஈசனின் செயல் அல்லவா!!!!