அத்தியாயம் -23

அந்த செய்தி காட்டுத் தீயைப் போலப் பரவியது. கனக்கபூர் எனும் அந்த  ஊரில் இருந்த கிராம அதிகாரி ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் மகிமையைக் குறித்துக் கேள்விப்பட்டதும் அவரை சந்திக்க ஆவல் கொண்டான்.
கனக்கபூர் எனும் அந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு வண்டியை இழுத்துச் செல்ல மாடு தேவைப்படும்போது அவர்கள் அந்த பிராமணரிடம் வந்துதான் மாட்டை வாடகைக்கு எடுத்துச் செல்வார்கள். அதன் மூலம் கிடைத்த வருமானத்தையும் பிட்ஷை எடுத்து வருவதையும் கொண்டு குடும்பத்தை ஓட்டி  வந்தார்கள் அந்த பிராமணத் தம்பதியினர். ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள்  அந்த தம்பதியினருக்கு அருள் புரிந்து விட்டுச் சென்றப் பின் மறுநாள் எப்போதும் போல  அந்த பிராமணப் பெண்மணியிடம்  மாட்டை வாடகைக்கு  எடுக்க வந்த கிராமத்தினரிடம் நடந்ததைக் கூறி, அது இனி கறவை மாடு ஆகி விட்டதினால் வாடகைக்கு கொடுப்பதை அன்றுடன் நிறுத்தி விட்டதாகக் கூறியவுடன்தான் அந்த ஊரின் கிராம அதிகாரிக்கு விஷயம் சென்றது. அவன் திகைத்தான். ஒரு மலட்டு மாடு கறவை மாடாக முடியுமா என்ற ஆவலினால் உந்தப்பட்டே அவன் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் சென்று அவரை தரிசிக்க விரும்பினான்.

தன்னுடைய பரிவாரங்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு கருநெல்லி மரத்தடியில் அமர்ந்திருந்த ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் சென்ற அந்த கிராம அதிகாரி அவரை வணங்கினான். அவரிடம் கேட்டார் ‘ஸ்வாமி நாங்கள் அனைவரும் நீங்கள் நிகழ்த்திய மகிமையைக் கேள்விப்பட்டு உங்களிடம் வந்து சேர்ந்துள்ளோம்.  இந்த மனித குலத்தை அழிவில் இருந்து காப்பாற்ற அவதரித்துள்ள நீங்கள்  மோகம், மாயை போன்றவற்றில் விழுந்து கிடக்கும் எங்களையும் காப்பாற்றி ஆன்மீகக் கரையை அடைய வழி காட்ட  வேண்டும். நீங்கள் நிச்சயமாக இந்த பூமியில் மனிதப் பிறவி எடுத்து வந்துள்ள தெய்வமே என்பதை மனபூர்வமாக நம்புகிறோம்.  ஆகவே நீங்கள் இங்கு அமர்ந்து இருப்பதை விட ஊருக்குள் வந்து ஒரு இடத்தில் தங்கி  இருந்தவாறு மக்களை நல்வழிப்படுத்தி வர வேண்டும். நானே உங்களுக்கு ஒரு மடத்தை நிறுவித் தருகிறேன். நீங்கள் அங்கு வந்து தங்கிக் கொள்ள வேண்டும்’ என பவ்வியமாக அழைத்தார்.

அதைக் கேட்ட ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் நினைத்தார் ‘இதுவே நல்ல தருணம். நான் யார் என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆகவே இதை ஏற்றுக் கொண்டு அவருடன் செல்வேன்’. இப்படியாக எண்ணியதும் வேண்டும் என்றே அவரிடம் ஸ்வாமிகள்  கூறினார் ‘மகனே, என்னைப் போன்றவர்கள் நாடோடிகளைப் போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருப்பவர்கள்.  எங்களால் யாருக்கும் உதவிகளை செய்ய முடியாது. யாருக்காவது தெய்வாதீனமாக ஏதாவது நடக்க, அந்த நேரத்தில் என்னைப் போன்றவர்கள் அங்கு இருந்து விட்டால், எங்களால்தான் அது நடந்தது என்று மக்கள் கருதுகிறார்கள். ஆகவே எந்த தெய்வீக சக்தியும் அற்ற நான் எப்போதும் போல இப்படியே தங்கி இருக்கிறேன்’ என்றார். ஆனால் அந்த அதிகாரியோ அவரை விடவில்லை.

அவரிடம் வேண்டினான் ‘ஸ்வாமி உங்களைப் போன்ற தெய்வப் பிறவிகள் தம்மை தெய்வம் என்று கூறிக் கொள்வதில்லை என்பதை நாங்கள் நன்கே அறிவோம். மேலும் பல இடங்களிலும் நீங்கள் நிகழ்த்தி உள்ள மகிமைகளை பலர் மூலம் நாங்கள் முன்னமே அறிந்திருந்தும், நீங்கள் யார் என்றும் தெரியாமல் இருந்தோம். ஆனால் இப்போது  உங்களை சந்தித்தப் பின்னரே நீங்கள்தான் அந்த தெய்வீக அவதாரம் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டது. ஆகவே தயவு செய்து மறுக்காமல் எங்கள் ஊருக்கு வந்து இங்கேயே தங்கி இருந்து மக்களை நல்வழிப்படுத்தி வர வேண்டும்’ என்று கேட்டதும் ஸ்வாமிகள் அவர்  தூய மனதுடன்தான் அழைக்கிறார்  என்பதை உணர்ந்து கொண்டு அவர் அழைப்பை ஏற்றுக் கொண்டு அவருடன் கனக்பூரின் ஊருக்குள் சென்று அங்கு  தங்க முடிவு செய்தார்.

ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளை ஒரு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அமர வைத்து  மேளதாளம் முழங்க அவரை தூக்கிக் கொண்டு ஊருக்குள் ஊர்வலமாகச் சென்றார்கள். ஊரிலே நுழைந்ததும் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கு அவரவர் பாத பூஜை செய்தும், பூர்ண கும்ப மரியாதை செய்தும் அழைத்து  கௌரவித்தார்கள்.

அவர்கள் சென்ற வழியில் பெரிய ஆலமரம் ஒன்றும் இருந்தது. அங்கு பல காலமாக இருட்டிலேயே வசித்து வந்த ஒரு பெண் பேய் அவரைக் கண்டதும் கீழே குதித்து வந்து உருண்டு உருண்டு வந்து அவர் காலடியில் விழுந்து சரண் அடைந்து தன்னுடைய சாபத்தை விலக்குமாறு  வேண்டிக் கொண்டது.  அதைக் கண்ட ஸ்வாமிகள் பூர்வ ஜென்மத்தில் அந்தப் பேய் அந்த ஊரிலேயே யோக வல்லமைப் படைத்தப் பெண்ணாக இருந்துள்ளது. ஆனால் அந்த ஜென்மத்தில் பெரும் கொடுமைகளையும் செய்துள்ளது என்பதினால் இந்த நிலை ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறது.  அதற்கு சாப விமோசனம் தரும் காலமும் கனிந்து வந்து விட்டதினால் கருணைக்  கொண்ட ஸ்வாமிகள் அதன் தலை மீது தாம் கையை வைத்து அதை ஆசிர்வதிக்க அதுவும் சாப விமோசனம் பெற்று மனித உருவை எடுத்தது. அதன் பின் ஸ்வாமிகள்  அந்த பெண்ணிடம்  சங்கத்தில் போய்  குளித்து விட்டு வந்தால் பூர்வ ஜென்ம பாபங்கள் அனைத்துமே விலகி அவள் மோட்ஷம் பெறுவாள் என்றதும் அவளும் சங்கம் நதிக்குச் சென்று அதில் குளித்து விட்டு வந்து அந்த கிராமத்திலேயே வாழ்ந்து இருந்தபடி முடிவாக மோட்ஷம் அடைந்தாள் .

இந்த மகிமையைக் கண்ட ஊர் ஜனங்கள் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள்  சாதாரண மனிதர் அல்ல. அவர் தெய்வப் பிறவிதான் என்பதை தீர்மானமாக உணர்ந்து கொண்டார்கள். அவர் விரும்பியபடியே அந்த கிராம அதிகாரியும் கனக்கபூர் கருநெல்லி மரத்தினடியிலேயே அவருக்கு  தங்கிக் கொள்ள இடத்தை அமைத்துக் கொடுத்தார். பலரும் அங்கு வந்து  ஸ்வாமிகளை தரிசனம் செய்து விட்டுப் போனார்கள். இப்படியாக அதிசயங்களை நிகழ்த்தி வந்த ஸ்வாமிகளின் பெருமை மேலும் பல இடங்களுக்கும் பரவலாயிற்று  (இதனுடன் அத்தியாயம் -23 முடிவடைந்தது). 
………தொடரும்