அத்தியாயம் – 21

‘இறந்து கிடந்த மகனை மார்போடு அணைத்துக்  கொண்டு   கதறி அழுது கொண்டு  அமர்ந்திருந்த பெண்மணியிடம் அந்த சன்யாசி சென்று  ‘தாயே, நீங்கள் ஏன் அழுது கொண்டு இருக்கிறீர்கள்?’ என்று அன்புடன் கேட்டார்.  அவளும் அவரிடம் ‘என் மகன்’ எனக் கூற ஆரம்பிக்க அவர் அவளை பேச விடாமால் தானே பேசத் துவங்கினார் ‘தாயே என் மகன்  என்கிறாயே, அவன் உன் உடலின் எந்தப் பகுதியை சேர்ந்தவன்?  அவன் உன்னுடைய இதயமா, கையா, காலா இல்லை உன்னுடைய ஆத்மாவா? நீயோ உயர்ந்த பண்டிதரின் மனைவி.  நான் கேட்டதற்கு உன்னால் பதில் தர முடியுமா? நான் கூறுவதைக் கவனமாகக் கேள்.   அதன் பின் நடந்தவைக்கான காரணம் உனக்கே புரியும். நம்மை சுற்றி உள்ளது மாயை என்பது. அதுவே நாம் அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது என்பதையும் பண்டிதரின் மனைவியான நீயும் அறிவாய் அல்லவா. நம்மால் மற்றவர்களுக்கு துன்பம் ஏற்படலாமா? இறந்தவனை உன்னோடு வைத்துக் கொண்டு தகனம் செய்யாமல் இருப்பதினால் இந்த கிராமத்தில் உள்ள அனைவருமே விரதம் போல சாப்பிடாமல் பசியோடு இருப்பதை உன் மனது ஏற்றுக் கொள்கிறதா? மற்றவரை பட்டினி போட்ட பாவமும் உன்னை வந்து சேராதா?  ஒரு குருவின் வார்த்தையும் விதியும் உன் வாழ்க்கையில் எப்படி எல்லாம் விளையாடுகிறது பார்த்தாயா? அழுது புலம்பி நீ நேரத்தை வீணடிக்கலாமா? இந்த உலகில் அழிவு இல்லாதது எது என்று உன்னால் கூற முடியுமா? பிறப்பும் இறப்பும் வண்டியின் சக்கரம் போன்றதே. அது சுழலும்போது ஒன்று மேலே செல்லும், இன்னொன்று கீழே இறங்கும். அது போலத்தான் இறப்பும் பிறப்பும் ஆகும். இந்த உண்மைகளைப் புரிந்து கொண்டு இந்தக் குழந்தையை தகனம் செய்’
அதைக் கேட்ட அந்தப் பெண்மணி கூறினால் ‘ஐயா, நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் கூறிய அறிவுரையையும் என்னால் முழுமையாக  ஏற்க முடியவில்லை. நாங்கள் எங்களுடைய மழலை செல்வங்கள் தொடர்ந்து இறந்து கொண்டே இருக்கிறதே என்பதற்காக இங்கு வந்து அந்த துயரத்தைப் போக்குமாறு குருநாதரை வேண்டித் துதித்தபோது  அவர் எங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்க வரம் தந்தார்.   நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வோம் என உறுதியாக கூறினார். ஆனால் நடந்தது என்ன ? நீங்களே பாருங்கள் என்ன ஆயிற்று என்று.  நாங்கள் அவரை வேண்டிக் கொண்டபோது அவர் ஏன் எங்களை ஏமாற்றி அப்படிக் கூறி அனுப்பினார்? அதனால்தான் நியாயம் கேட்க  ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளிடமே வந்தோம்’ என்று கூற அவரும் ‘அப்படி என்றால் அவர் உங்களுக்கு எந்த இடத்தில் தரிசனம் கொடுத்தாரோ அங்கே சென்று அமர்ந்து கொள்ளுங்கள். விடிவதற்குள்   ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள்  உங்கள் முன் வந்து நிச்சயம் உங்களுக்கு அருள் புரிவார்’ என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
அவர் கூறியதைப் போலவே தன்னுடைய இறந்த மகனை எடுத்துக் கொண்டு ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் தமக்கு தரிசனம் கொடுத்த கருநெல்லி மரத்தடியில் சென்று அமர்ந்து கொண்டார்கள். களைப்பினால் அப்படியே உறங்கி விட்டார்கள். அவர்கள் கனவில் கையில் திரிசூலத்தை ஏந்தி, நெற்றியில் பட்டையாக வீபுதியை இட்டுக் கொண்டு ஒரு புலியின் மீது அமர்ந்து கொண்டு இருந்த ஒருவர் அவர்களிடம் வந்தார். நடந்ததைக் கூறி அவரிடம்  அழுதவளிடம் அவர் கேட்டார் ‘எதற்காக நடக்காததை நினைத்து  அழுகிறாய்? உன் மகன் உறங்குகிறான். அவன் மரணம் அடைந்து விட்டதாக எப்படிக் கூறுகிறாய்’ இப்படியாகக் கூறியவர் இறந்து கிடந்த சிறுவன் நெற்றியில் வீபுதியை இட்டு அவன் வாயிலும் சிறிது வீபுதியை இட்டு விட்டு மறைந்து விட்டார். அந்தக் கனவைக் கண்டு திடுக்கிட்டு எழுந்தவள் தனது இறந்து போன மகன் பக்கத்தில் படுத்துக் கொண்டு பசி என்று அழுவதைக் கண்டாள். அப்படியே அவனை எடுத்து மீண்டும் தன் மார்போடு அணைத்துக்  கொண்டு அவன் வாயில் தனது  மார்பகங்களை வைக்க அதில் இருந்து பெருகி வந்த பாலைக் குடித்தவன் அடுத்தகணம்  துடிப்போடு எழுந்தான். அதற்குள் விடிந்து விட இறந்தவனை தகனம் செய்யுமாறு கட்டாயப்படுத்த திரண்டு கிராமத்தினர் அவள் கனவில் கண்டதையும், இறந்து கிடந்த சிறுவன் விளையாடிக் கொண்டு  இருந்ததையும் கண்டு  நடந்ததைக் கேள்விப்பட்டு அதிசயித்து நின்றார்கள்.
மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய பெற்றோர்  தாமதிக்காமல் அங்கிருந்த நதியில் குளித்தப் பின் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமியின்  பாதுகைகளுக்கு பூஜை செய்து  வணங்கினார்கள். கிராமத்தினர் அனைவரும் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் பாதுகையின் மகிமையைக் கண்டு  மன மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர் பெருமையை எங்கெங்கும் பரப்பி வந்தார்கள்” இப்படியாக சித்த முனிவர் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் பெருமையையும் மகிமையையும் நமத்ஹராவுக்கு கூறினார் (இத்துடன் அத்தியாயம் -21 முடிவடைந்தது).
………….தொடரும்