சாந்திப்பிரியா                                                        –  15

………..ஹரிசித்தி   ஆலயம் 

எனக்கு நெருக்கமாக இருந்தவர்கள் என நான் நினைத்திருந்த சிலரே எதிராக சிலர் சதி செய்து கொண்டு என் மீது வீணான பழிகளை சுமத்திக் கொண்டு  வாழ்க்கையில் நான் தோற்கடிக்கப்பட வேண்டும், அவமானப்பட வேண்டும் என்றும் நான் வாழ்க்கையில் அழிந்து   விட வேண்டும் எனவும்  ஆசைப்பட்டுக் கொண்டு, அதற்கான காலத்தை எதிர்பார்த்தபடி இருந்தார்கள். என்னை பல விஷயங்களிலும் சிலர் ஏமாற்றிக் கொண்டு இருப்பதையும் (அனைத்திலும் சில உறவினர்களையும் சேர்த்தே என்றாலும் அவர்களைப் பற்றிக் கூற முடியாத சூழ்நிலை)  கூறி விட்டு இனியாவது என்னை அவர்களுடன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறினார் (அவர்கள் யார் என்பதை கோடிட்டுக் காட்டினார்).

என் மனைவியின் நகைகள் திருட்டுப் போனதின் காரணம் அவளது எதோ ஒரு நகையில் தோஷம் உள்ள வைரம் இருந்ததே காரணம் என்று கூறி ஆனால் அது எந்த நகை என்பதை தன்னால் கூற இயலாது என்றும் கூறிய பின்னர் எங்களுடைய  அனைத்துப் பிரச்சனைகளுக்குமான காரணமான இன்னொரு முக்கியமான விஷயத்தையும் அவரே கூறினார்.  அவர் கூறியதைக் கேட்டு நாங்கள் இன்னும் அதிர்ந்து போனோம்.

என் மனைவி ஆசைப்பட்டாள் என்பதினால் எங்கள் வீட்டில் திருட்டுப் போவதற்கு சில மாதங்களுக்கு முன்னால்தான் ஒரு ஆன்மீக வியாபாரியிடம் ஏமார்ந்து போய் வைரத் தோட்டை பிரித்து இன்னொரு வைரம் சேர்த்து பெரியதாக்கிக் கொடுக்குமாறு  கொடுத்தோம். ஆனால் அவரோ பணத்தையும் வாங்கிக் கொண்டு ஒரு தோஷ வைரக் கல்லை தோட்டில் வைத்துக் கட்டி கொடுத்து எங்களை ஏமாற்றி விட்டார். அந்த புதிய தோட்டை அணிந்து கொண்ட பிறகே  எங்களுக்கு செல்வம்  இழப்பு நேரிட்டது மட்டும் அல்ல வேறு சில புதிய தொல்லைகளும் எனக்கு தேவையே இல்லாமல் வந்து சேர்ந்தவண்ணம் இருந்தது.  அலுவலகத்தில் திடீர் என காரணமே இல்லாமல் எனக்கே சம்மந்தம் இல்லாத விஷயங்களிலும் என்னை சில விஷமிகள் வேண்டும் என்றே இழுத்து விட்டு  நான் சற்றுமே எதிர்பாராத விதத்தில் அலுவலகத்திலும் பல்வேறு நெருக்கடிகளை திடீர் எனக் கொடுக்கத் துவங்கினார்கள். சிலர் ஒன்று சேர்ந்து எனக்குக்  கீழே இருந்த ஒருவன் என்னைத் தாண்டி பதவி உயர்வு பெற வேண்டும்  என்பதற்காகவும், என்னுடைய அதிகாரம் குறைக்கப்பட வேண்டும் எனவும் சதி செய்தார்கள். நான் அந்தப் பதவியில் இருந்தது பல விதங்களிலும் அவர்களை பாதித்தது.

நடு இரவிலும் என்னைத் தூங்க விடாமல் குடிகாரர்கள் மூலம் பல மிரட்டல் தொலைபேசிகள் வரத் துவங்கின. முதலில் அவை அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொண்ட நான் நாளடைவில் அவை அதிகரிப்பதைக் கண்டு அதனால் என் மனைவிக்கும் ஆபத்து ஏற்படலாம்  என்பதை உணர்ந்தேன். அப்படி ஏற்பட்ட திடீர்  சூழ்நிலை என்னை நிலை குலைய வைத்தது. நான் சற்றுமே சம்மந்தப்படாத விஷயங்களில் கூட என்னை வேண்டும் என்றே போலியாக சிக்க வைத்து என் மனோதிடத்தை குலைக்க முயன்றார்கள். நான் ஒருவனை கொலை செய்ய முயன்றதாக பொய் குற்றம் சாட்டி  காவல் நிலையத்தில் புகார் செய்து என்னை ஜெயிலில் தள்ள முயற்சி  செய்தார்கள். அந்த சூழ்நிலை  என் மனைவியின் உடல் நிலையை பெரிதும் பாதித்தது.  அவை அனைத்துமே ஜாதி சங்கம் மற்றும் தொழில் சங்கங்களுடன் சம்மந்தப்பட்டது என்பதினால் அன்று இருந்த அரசியல் சூழ்நிலைக் காரணமாக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்த என் மேலதிகாரிகள் எனக்கு அலுவலகத்தில் தக்க ஆதரவு கொடுக்காமல்  இரண்டும் கெட்டான் நிலையில் இருந்தார்கள்.

நல்லவேளையாக என் மீது சுமத்தப்பட்டு இருந்த பொய்யான குற்றச் சாட்டுக்களை விசாரிக்க மத்திய நிதி அமைச்சகம் அமைத்த விசாரணைக் குழு, என்மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களும் ஜோடிக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்கள் என கண்டறிந்து அறிக்கை தந்தது.  என் மீது பொய்யான புகாரை தந்தவன் மீதே இன்னும் அதிக நடவடிக்கை எடுத்தார்கள்.  அதற்குள்  என் மன உறுதியே ஆட்டம் கண்டுவிட்டது. அத்தனை மன உளைச்சல். அந்த நேரத்தில் பல மாதங்கள் நான் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். அன்று எனக்கு உதவி செய்யவும் ஆறுதல் கூறி என்னை தைரியப்படுத்தவும் இருந்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே.  ஆனால் அந்த வேளையில் அனாதைப் போல தனியே நின்றிருந்தபோது ஆறுதலுக்காக நான் மிகவும் நம்பி இருந்த சில பெரிய மனிதர்கள் என்னுடன்  பேசுவதைக் கூட தவிர்த்து ஓடி ஒளிந்து   கொண்டது மீண்டும்  பெரிய இடியாகவே இருந்தது !!! அப்போதுதான் வாழ்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.  நம்மிடம்  கை நிறைய பணம் இருந்தால் மட்டுமே  நம்மையும்  மதிப்பார்கள் என்பதையும் கண்கூடாக புரிந்து கொண்டேன். என் மனதில் இப்போது இந்த எண்ணம் ஓடுகிறது ‘இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான், அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்துட்டான்’ என்ற தத்துவப் பாடலின் அர்த்தத்தைப் போலவே  செல்வம் வரும், போகும், ஆனால் பணத்தினால் பெறும்  அல்ப சுகங்கள் நிலையானது அல்ல, மனித நேயமே காலத்துக்கும் நினைக்கப்படும் என்பதே உண்மை .

அது மட்டுமா ?  நாங்கள் அமெரிக்கா  செல்வதற்காக விசா வாங்க மும்பைக்கு சென்றபோது ரயிலில் எங்கள் பெட்டியில் எடுத்துச் சென்ற 35000 ரூபாய் மற்றும் நண்பர்களுக்கு கொடுக்க எடுத்துச் சென்று இருந்த வேறு பல பரிசுப் பொருட்களும் திருட்டுப் போய்  விட்டன. மும்பை சென்றப் பின் ஹோட்டலில் இறங்கி பையை திறந்தபோது அதில்  ஒரு பைசா கூட இல்லை.  காபி சாப்பிடக் கூட பணம் இல்லை. அப்படியே அதிர்ந்து போனோம். நாங்கள் சென்ற நாளும் ஞாயிற்றுக் கிழமை. யாரை எந்த அலுவலகத்தில் அணுகுவது? ஹோட்டலிலேயே  மனைவியின் கழுத்தில் இருந்த ஏதாவது ஒரு நகையை விற்று பணத்தைப் பெற்றுக் கொண்டு உடனடியாக தேவாஸ் திரும்பிச் சென்று விடலாம் என்ற அளவில் எண்ண  வேண்டியதாயிற்று.

ஆனால் ஹோட்டலில் இருந்தே உடனடியாக அமெரிக்காவில் இருந்த என் மகனுடன் தொடர்ப்பு கொண்டு நடந்ததை விவரிக்க அவன் எங்களை சமாதானப்படுத்தி கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறி,  என்னிடம் அவன் ஒருமுறை அவன் கொடுத்து இருந்த வங்கிக் கார்டை பயன்படுத்தி எத்தனைப் பணம் வேண்டுமோ தயங்காமல் அதை எடுத்துக் கொள்ளுமாறு கூறினான்.  அது அவனுடைய வங்கிக் கணக்கில் இருந்து பணம் பெறும்  கார்ட் ஆகும். அப்போதுதான் எங்களுக்கு நினைவுக்கு வந்தது அவன் கொடுத்து இருந்த ஒரு வங்கிக் கார்ட்! அது என்னுடைய பர்ஸ்சில் பல வருடங்களாக பயன்படுத்தாமல் அப்படியே இருந்துள்ளது. அதுவரை நான் எந்த ஒரு வங்கியின் கார்டையும்  பயன்படுத்தியதே இல்லை என்பதினால் அதை எப்படி பயன்படுத்துவது என்பது கூடத் தெரியவில்லை. உடனடியாக அருகில் இருந்த வங்கிக்குச் சென்று அங்கிருந்த காவலாளியின் உதவியுடன் ATMமில் இருந்து பணத்தை எடுத்தோம். அதன் பின்னரே நிம்மதி ஆயிற்று. அவன்தான் எங்களை அன்று கடவுள் போல எங்களைக் காப்பாற்றினான்.

சில வருடங்களாக இந்த மாதிரி தொடர்ந்து எங்களுக்கு நடைபெற்றுக் கொண்டு வந்திருந்த பல்வேறு  துயரமான நிலைமைகளுக்கெல்லாம் மூலமாக  இருந்த சில முக்கியமான காரணங்களைக் கூறிய திரு வியாஸ்  நாங்கள் உடனடியாக செய்ய வேண்டிய  மேலும் சில அறிவுரைகளைக் கூறி எங்களுக்கு தொடர்ந்து ஏற்பட்டு வந்து கொண்டிருந்த தொல்லைகளை ஒழிக்க ஹர்சித்தி ஆலயத்துக்கு சென்று அங்குள்ள கார்கோடனின் சன்னதியில் ஒரு பூஜை செய்யுமாறு கூறினார். நாங்களும் நாட்களைக் கடத்தாமல் உடனடியாக அவரை  முற்றிலும்  நம்பி அவர் மூலமே அந்த பூஜையை செய்து முடித்தோம். அது முதல் எங்களுக்கு இருந்த மறைமுக தொல்லைகள் மெல்ல மெல்ல மறையத் துவங்கியதை நாங்கள் உணரத் துவங்கினோம்.   நாங்கள் விரைவில் அழிந்து விடுவோம் என இலவு காத்த கிளிபோல ஆவலுடன் காத்திருந்த சிலருடைய ஆசையில் மண் விழுந்தது என்பது ஹரிசித்தி ஆலய கார்கோடனின் பூஜையின் மகிமையே என்றே நினைக்கிறோம்.

நாங்கள் ஹரிசித்தி ஆலயத்தில் நாக பூஜை செய்து முடித்தப் பின்னர் சில நாட்களிலேயே அடுத்தடுத்து விரைவாக சில வியக்கத்தக்க நிகழ்ச்சிகள் நடைபெறத் துவங்கியது. நான் சிக்கலில் இருந்தபோது எனக்கு ஆதரவு கொடுக்கத் தவறிய மேலதிகாரி  பல விதமான பிரச்சனைகளில் மூழ்கி உயர் பதவியைப் பெறாமலேயே பெரும் துக்கத்துடன் ஒய்வு பெற்றார். அலுவலகத்தில் புதிய தலைமை அதிகாரியும் (General Manager) வந்தார். அவர் வந்ததும் ஒரு சில வாரங்களிலேயே எனக்குத் தனித் தன்மை வாய்ந்த முக்கியமான பெரும் அதிகாரப் பொறுப்புடன் கூடிய  பதவி தரப்பட்டது. என்னைத் தொல்லைப்படுத்தி வந்தவர்கள் என்னிடமே வந்து தஞ்சம் அடையும் வகையில் என் பதவியின் அதிகாரம் அமைந்தது.  அலுவலகத்தில் தலைமை அதிகாரியின் மிக முக்கியமான அதிகாரியாக  நான்  ஆயினேன்.  அது முதல் நான் ஒய்வு பெறும் வரை அலுவலகத்தைப் பொருத்தவரை  என்னுடைய அதிகார வரம்பு ஏறு முகமாயிற்று என்றாலும்  முட்டாள்தனத்தினால் எனக்கு  கிடைத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திய தவறியதினால் மேலும் கிடைக்க இருந்த உயர் பதவியை அடைய முடியாத முட்டுக்கட்டையில் அகப்பட்டுக் கொண்டு வேலையில் இருந்து ஒய்வு  பெற்றேன் என்பது வாழ்க்கையில் ஒரு பெரிய அடியாகவே மனதை நெருடியது. எத்தனை முயன்றும் நடந்தேறிய துயர நிகழ்சிகள் என்  மனதில் இருந்து மறையவில்லை. இதயத்தில் பட்ட அடியின் வலி அதிகமாகவே உள்ளது. காலம் அதை மாற்றும் என்றே நினைக்கிறேன். தொடர்ந்து அவமானங்களை மட்டுமே சந்தித்து வந்தவர்களுக்கு மட்டுமே அதன் வலி தெரியும் என்பது உண்மை.

ஹரிசித்தி ஆலயத்துக்குச் சென்றுவிட்டு வந்த பின்னர் நாங்கள் சில முக்கியமான முடிவுகளை எடுத்தோம். அதனால் வீட்டைப் பொருத்தவரை எங்களுடைய வாழ்க்கை அமைதியுடன் ஒரே நிலையாக செல்லத் துவங்கியது. அவை  அனைத்துமே நாங்கள் பகலாமுகி மற்றும் ஹரிசித்தி ஆலயத்துக்குச் சென்றுவிட்டு வந்த பின்னரே நடந்தது  என்பதினால் அவற்றை மனதில் கொண்டிருந்த நாங்கள் இந்த முறை உஜ்ஜயினிக்கு சென்றபோது திரு வியாஸ் அவர்களை மீண்டும் சந்திக்க ஆசைப்பட்டோம். ஆனால் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் மரணம் அடைந்து விட்டார் என்ற தகவலைக் கேட்டு மனம் வருந்தினோம். ஆனால்  அன்று அவர் கூறிய பல விஷயங்கள் இன்று உண்மையாகி உள்ளதைக் கண்டு இன்றும் வியக்கிறோம்.

ஹர்சித்தி மாதா ஆலயத்தில் உள்ள மஹாமாயா எனும் தேவியின் சன்னதியும் சக்தி வாய்ந்தது. தரை மட்டத்துக்கு கீழே ஒரு சிறு அறையில் அமைக்கப்பட்டு உள்ள அவளது சன்னதியில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. பூசாரி மட்டுமே செல்வார். ஆனால் அந்த தேவியை அந்த சன்னதியை சுற்றி மேலே எழுப்பட்டு உள்ள சுவற்றின் துவாரம் வழியேதான் தரிசிக்க முடியும். மஹாமாயா துர்கையின் அம்சம். அவளை அங்கு வணங்கித் துதிப்பதின் மூலம் திருஷ்டி தோஷங்கள் விலகுமாம். அந்த சன்னதியில் இடைவிடாது எரியும் அகண்ட ஜ்யோதியும் வைக்கப்பட்டு உள்ளது. அதன் எதிரில் வினாயகர் சன்னதியும் உள்ளது.

ஆலய சன்னதியின் எதிரில்   உள்ள ஆயிரத்து எட்டு 
ஜ்யோதிகளை  ஏற்றும் ஸ்தம்பம் (இரவு காட்சி)
ஆலய சன்னதியின் எதிரில்   உள்ள ஆயிரத்து எட்டு 
ஜ்யோதிகளை  ஏற்றும் ஸ்தம்பம் (பகல் காட்சி) 
 
1008 விளக்குடன்  ஸ்தம்பம் (இரவு காட்சி) மற்றும் அதன் 
அருகில் உள்ள தூணில் ஒரு காட்சி 
பாதாளத்தில் உள்ள மஹாமாயா 
சன்னதியில் மஹாமாயா


பாதாளத்தில் உள்ள மஹாமாயா சன்னதியில் 
மஹாமாயாவின் அருகில் காணப்படுவது  அகண்ட தீபம் 

 
கார்கோடன் சன்னதி நுழை வாயில் 

 

மேலே உள்ள இரண்டு படங்களும் கார்கோடன் சன்னதியில் 
லிங்க வடிவில் காணப்படும் கார்கோடன்  
மற்றும் கீழே உள்ள படங்கள் சன்னதியில் 
காணப்படும் மற்ற நாக உருவங்கள்

கீழே உள்ளவை  ஆலயத்தின் பிற 
சன்னதிகளில் உள்ள சிற்பங்கள்
வினாயகர் சன்னதியில் வினாயகர் 
…………..தொடரும்