சாந்திப்பிரியா                                                        –  13

சின்ன சின்ன ஆனால் புராணப் பெருமைகளைக் கொண்ட ஆலயங்கள் 

‘சார் தாம்’  ஆலயம்

ஹிந்துக்களாகப் பிறந்தவர்கள் தத்தம் வாழ்க்கையில் ஒருமுறையாவது துவாரகா, பத்ரிநாத், ஜகன்னாத் பூரி மற்றும் ராமேஸ்வரம் என்கின்ற நான்கு முக்கியமான ஆலயங்களுக்குச் சென்று அங்குள்ள தெய்வங்களை தரிசனம் செய்துவிட்டு வர வேண்டும் என்று ஆதி சங்கரர் அறிவுறுத்தி உள்ளதான கதை உண்டு.  அதற்குக் காரணம் நான்கு திசைகளில், வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அமைந்துள்ள பத்ரிநாத் பெருமான் (விஷ்ணு),  பூரி  ஜகன்னாத் (விஷ்ணு அவதாரம்), த்வாரகா (கிருஷ்ணர் பலராமன் ) மற்றும் சிவபெருமானின் ராமேஸ்வரம் உள்ள   அந்த நான்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை அந்த நான்கு இடங்களுக்கும்  சென்று தரிசனம் செய்தால் வாழ்க்கையில் பெற்று இருந்த அனைத்து பாபங்களும் விலகும், மறு பிறப்பு இல்லாத நிலையை அடையலாம் என்று நம்புகிறார்கள். ஆனால் அனைவராலும் அங்கெல்லாம் சென்றுவிட்டு வர முடியாத நிலை உண்டு. அதற்கு பல்வேறு காரணங்களும் இருக்கலாம். ஆகவேதான் அந்த முக்கியமான நான்கு ஆலயங்களையும் ஒரே இடத்தில் சென்று தரிசிக்க அதே தெய்வ உருவிலான சிலைகளை, அதே வழிமுறை கொண்ட பூஜை விதிகளுடன்  இந்தியாவின் சில நகரங்களில் ‘சார் தாம்’ அதாவது ‘நான்கு புனித இடங்கள்’ என்ற பெயரில் வழிபாட்டுத் தலங்களை ஸ்ரீ அகண்ட ஆஷ்ரம் சார்ப்பில் ஸ்ரீ ஸ்வாமி ஸாந்தி ஸ்வரூபானந்த்ஜி அவர்கள் நிறுவி உள்ளார்கள்.  ‘சார் தாம்’  என்ற ஆலயத்தில் சென்று  அந்த நான்கு தெய்வங்களையும் வழிபட்டால் அந்த நான்கு இடங்களையும் தரிசித்த  பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

உஜ்ஜயினியின் சார் தாம் ஆலயத்துக்கு நாங்கள் சென்றபோது சன்னதிகள் மூடப்படும் நேரம் ஆகிவிட்டதினால் ராமேஸ்வரம் சன்னதியைத் தவிர மற்றவை மூடப்பட்டுக் கொண்டு இருந்தன. ராமேஸ்வர சன்னதியில் ஆர்த்தி நடைபெறத் துவங்கியது.  அந்த ஆலயத்தில் குகை போன்ற அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டு அதற்குள் புராணக் கதைகளின் சில சம்பவங்களைக் எடுத்துக் காட்டும் வகையில் உண்மையான மனித உருவத்தில்,  சிலைகளுடன் கூடிய  தத்ரூபமான காட்சிகளை நிறுவி உள்ளார்கள். அந்த ஆலயத்துக்குச் செல்பவர்கள்  கட்டணம் கொடுத்துப் பார்க்க வேண்டியது அங்குள்ள குகை  காட்சிகள்.

ஆலய நுழை வாயில் 

ஆலயத்தில் குகைக்குள் 
உள்ள காட்சிகள் 

க்லீம்  சாமுண்டா ஆலயம் 

உஜ்ஜயினியில் இருந்தபோது நாங்கள்  இன்னும் சில சிறு ஆலயங்களையும் பார்த்தோம்.  அதில் ஒன்று க்லீம் சாமுண்டா ஆலயம். இந்த ஆலயத்துக்கு பராலிசிஸ் எனப்படும் கை கால் விளங்காதவர்கள்  வந்து வேண்டிக் கொண்டு போகிறார்கள். இங்கு வந்து வேண்டிக் கொண்டால் அவர்களது நோயின் கடுமை குறைகிறதாம். மேலும் பல்வேறு வேண்டுதல்களுக்கும் இங்கு வந்து பிரார்த்தனை செய்து விட்டு தத்தம் குறைகளை சன்னதியின் பின்னால் உள்ள சுவற்றில் எழுதி வைத்து விட்டுச் செல்கிறார்கள். ஆலயத்தில் பெருமளவில் பக்தர்கள் வருகிறார்கள்.  இங்குள்ள சன்னதியில் காணப்படும் மூன்று தேவிகளில் க்லீம் சாமுண்டி தேவி நடுவில் இருக்க, இரு புறமும் சாவன் மற்றும் மாத்வா  என்ற தேவிகள் உள்ளனராம்.  வேறு சிலர் அந்த இருவரையும் லஷ்மி மற்றும் சரஸ்வதி என்கிறார்கள்.

மேலே உள்ள படத்தில் ஆலய சன்னதியில் க்லீம் சாமுண்டி 
கீழ் படத்தில் : நடுவில் க்லீம் சாமுண்டி மாதா, 
இருபுறமும் மகாலஷ்மி மற்றும் சரஸ்வதி 
 சன்னதியின் பின்புற சுவற்றில் காணப்படும் 
எழுதி வைக்கப்பட்டு உள்ள வேண்டுதல்கள் 

 குசேர பைரவர் ஆலயம்

ப்ரீ கஞ்ச் எனும் மத்தியப் பகுதியில் கடக்காளி ஆலயத்துக்கு செல்லும் வழியில் இந்த சின்ன ஆலயம் உள்ளது. அபூர்வமான உருவுடன் இருந்த பைரவரின் ஆலயத்தையும் பார்த்தோம். அதை குசேர பைரவர் என்கிறார்கள்.  இவரை இங்கு வந்து வேண்டிக் கொண்டால் நம்மை சுற்றி உள்ள தீய சக்திகளின் ஆதிக்கம் மற்றும் மன பயம் நீங்குமாம்.  அந்த ஆலயத்தில் உள்ள பைரவரின் உருவம் நம்மூரில் உள்ள காவல் தெய்வங்களின் சிலையை ஒத்து உள்ளது. ஆனால் உஜ்ஜயினியில் இப்படித்தான் பல பைரவர் ஆலயங்கள் அங்கும் இங்கும் பல்வேறு உருவங்களில் உள்ளன என்றாலும் அவற்றைப் பற்றிய மகிமைகளை பெருமையோடு கூறுகிறார்கள்.

மேல் படம் : குசேர பைரவர் ஆலயம்.
கீழ் படம் : இரு குசேர பைரவர் சிலைகள் 
………..தொடரும்