சாந்திப்பிரியா                                                        –  11

பாங்கர் தத்தாத்திரேயர் ஆலயம்

மறுநாள் காலைக் கிளம்பி உஜ்ஜயினிக்கு சென்றோம். வழியில்  பாங்கர் என்ற சிறு கிராமத்தில் இருந்த தத்தாத்திரேயர் ஆலயத்துக்குச் சென்றோம். புதிய ஆலயம் கட்டப்பட்டது  20-25 ஆண்டுகளுக்கு  முன்னர்தான் இருக்கும் என்றாலும் அங்கு பல வருடங்களுக்கு முன்பே மரத்தடியில் சிறு ஆலயம் இருந்துள்ளது. நான் வேலையில் இருந்தபோது உஜ்ஜயினி செல்லும்போதெல்லாம் இந்த ஆலயத்துக்கு செல்லும் பழக்கம் எங்களுக்கு உண்டு. அதற்குக் காரணம் நான் தத்தாத்திரேயரை  அதிகம் நினைப்பவன். அவர் மீது என்னை அறியாமலேயே நான்  தேவாஸில் இருந்தபோது பெரும் பக்தி ஏற்பட்டு இருந்தது. அதற்குக் காரணம் நான் மைசூரில் இருந்த தத்தாத்திரேயர் அவதாரமான கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளைப்  பற்றிப் படித்து இருந்ததுதான். அவரை பின்னர் ஒரு காலத்தில் சந்தித்துள்ளோம். (அவருடைய ஆஸ்ரமத்துக்கு சுமார் 200 பக்கத்திற்கும் மேலான குரு போதனைகள் என்கின்ற ஒரு புத்தகமும் கூட தமிழில் எழுதித் தந்து உள்ளேன். அவரை சந்தித்து நேரடியாக ஆசி பெற்றது இனிமையான தனி அனுபவம். அது குறித்து பின்னர் எழுதுவேன்). பாங்கரில் உள்ள தத்தாத்திரேய  ஆலயத்தில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் கோரிக்கைகள் நிறைவேறுவதாக அங்குள்ள மக்கள் நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள். அங்கு சென்று அடிப் பிரதர்ஷணம் செய்யும் பலரையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். தத்தாத்திரேயர் ஆலயங்களில் கோரிக்கைகள் நிறைவேற தேங்காயைக் கட்டி வைத்து விட்டு கோரிக்கைகள் நிறைவேறியதும் அங்கு வந்து அதை எடுத்துச் செல்வார்கள்.

ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக தள்ளி உள்ள  இந்த ஆலய இடத்தில் தங்கி இருந்த சாது ஒருவர் கனவில் தோன்றிய தத்தாத்திரேயர் தனக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கூறி இருந்ததினால்தான் அவர் இந்த கிராமத்தில் ஆலயம் எழுப்பினார் என்றும் கூறுகிறார்கள். அவர் யார், எங்கிருந்து வந்து அங்கு தங்கினார் போன்ற விவரங்கள் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அவர் பல வருடங்களாக அதே இடத்தில் ஏற்கனவே இருந்த  தத்தாத்திரேயரை பூஜித்து வந்துள்ளார் என்றும் அங்கு ஏற்கனவே இருந்த தத்தாத்திரேயர் அங்கு எந்த காலத்தில் நிறுவப்பட்டு இருந்தார் என்பது யாருக்குமே தெரியாது என்றும் கூறுகிறார்கள்.  ஆகவே இந்த புது ஆலயம் அமைவதற்கு முன்பாகவே இந்த கிராமத்தினர் பல நூற்றாண்டுகளாக தத்தாத்திரேயாரை வழிபட்டு வந்துள்ளார் என்றும் அதனால்தான் அந்த ஆலயம் இத்தனை மகிமை பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாக ஆலய வளாகத்தின்  உள்ளேயே உள்ள பெரிய  மரத்தையும் காட்டுகிறார்கள்.

இந்த ஆலயத்தின் ஒரு விசேஷ காட்சி என்ன என்றால் வேறு எங்குமே இல்லாத வகையில் தத்தாத்திரேயர் படமெடுத்து ஆடும் ஐந்து தலை நாகம் ஒன்றின் கீழ் நின்று கொண்டு இருப்பதும், அவர் சன்னதிக்கு முன்னால் ஒரு மிகப் பெரிய ஆமை வைக்கப்பட்டு உள்ளதும்தான். இங்குள்ள ஆமையின் உருவ அளவில் வேறு எந்த ஆலயத்திலும் நாங்கள் ஆமையின் உருவச் சிலை வைக்கப்பட்டு உள்ளதைப் பார்த்திருக்கவில்லை. தத்தாத்திரேயர் ஒரு நாகத்தின் கீழ் நிற்கும் சிலையும் வேறு எங்குமே கிடையாது. அதற்குக் காரணம் மும்மூர்த்திகளில் ஒருவரான தத்தர் இங்கு விஷ்ணுவாகவும், லஷ்மி தேவி ஆமை அம்சத்தில் உள்ளதாகவும் நம்புகிறார்கள். ஆமை என்பது லஷ்மியை குறிக்கும் சின்னம் ஆகும்.  கூர்ம அவதாரத்தில் விஷ்ணு அவதரித்ததை காட்டும் சின்னமும் இங்குள்ள ஆமையாகும். அங்கு சென்று நாங்கள் வணங்கி துதித்தப் பின் மீண்டும் உஜ்ஜயினிக்கு பயணித்தோம். தத்த  ஆலயத்தின் படங்கள் கீழே உள்ளன.

 தத்தாத்திரேயர் சன்னதியில் படமெடுத்து 
ஆடும் நாகத்தின் கீழ் தத்தர் 
 தத்தாத்திரேயர் சன்னதியின்  முன்னால் காணப்படும் ஆமை. 
இது தாமிரத்தில் செய்யப்பட்டு உள்ளது
 அத்தி மரத்தில் கட்டப்பட்டு உள்ள தேங்காய்கள் 
 ஆலய வளாகத்துக்குள் கட்டப்பட்டு உள்ள தேங்காய்கள் 
 
 
ஆலய சுவற்றில் தத்தாத்திரேயரை வேண்டிக் கொண்டு 
அவர் சன்னதியின் பின்னால் வைக்கப்பட்டு 
உள்ள குங்குமப் பொட்டுக்கள்
……………தொடரும்