இந்த நேரத்தில் ஒரு விஷயத்தைக் கூற வேண்டும். தம்மிடம் வரும் மனிதர்களைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் சித்தர்களால் அறிந்து கொள்ள முடியும். ஆனால் வேற்று உருவில் வந்திருக்கும் தேவ கணங்களை அவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதுவே தேவ ரகஸியம் ஆகும். அவர்களை எந்த நேரத்தில் வெளிப்படுத்த வேண்டுமோ அப்போது மட்டுமே அவர்களை அடையாளம் காண முடியும். இந்த தேவ ரகஸியத்தினால்தான் சிவகணத்தின் அவதாரமான சிவஞான பாலசித்தரால் கூட அந்த நேரத்தில் அவர்களது உண்மையான நிலையை அறிந்து கொள்ள முடியவில்லை. ஆகவே அவர்கள் இருவரையும் தம்முடைய மகள்களாக ஏற்றுக் கொண்டதும் அல்லாமல் தனது சக்தியைக் கொண்டு தேவ புருஷர்களை வரவழைத்து அந்த இருவரும் தங்கிக் கொள்ள ஒரு மாளிகையையும் அமைத்துக் கொடுத்து அவர்களை அதில் தங்க வைத்தார். அது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு தாமே காவலாக இருக்கலானார்.

இன்னும் காலம் கனிந்தது. சிவஞான பாலசித்தரின் சாப விமோசன காலமும் நெருங்கி வந்தது. அதற்கு தானே ஒரு கருவியாக இருக்க வேண்டி இருந்ததால் முருகனும் ஒரு வேடர் உருவம் கொண்டு அவர்கள் மூவரும் தங்கி இருந்த அந்த வனப் பகுதியில் சுற்றித் திரியலானார். அப்படி சுற்றித் தெரிந்தவர் ஒருமுறை அந்த மாளிகையில் நுழைய முயன்றபோது அவரை ‘பெண்கள் தனியே உள்ள இடத்தில் ஆடவர் நுழையலாகாது’ என சிவஞான பாலசித்தர் தடுத்து நிறுத்தினார்.

அவருக்கு தான் யார் என்பது தெரியக் கூடாது என்பதினால்  போலி வேடத்தில் இருந்த முருகப் பெருமானும் தான் உள்ளே செல்வதை தடுக்க அவர் யார் என அவருடன் வாக்குவாதம் செய்யத் துவங்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரிக்கத்  துவங்க ஒரு கட்டத்தில் இருவரும் அடித்துக் கொண்டு சண்டை இட்டார்கள்.  இருவரும் மல்யுத்தம் செய்வது போல கட்டிப் புரண்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு, கீழே தள்ளி அடித்துக் கொண்டார்கள். அப்போது முருகன் பாலசித்தரை கீழே தள்ளி அவரது மார்பில் உதையும் கொடுக்க அப்போதுதான் பாலசித்தருக்கு அங்கு வந்து தன்னுடன் மற்போர் புரிந்தது முருகப் பெருமானே என்ற உண்மை தெரிய வந்தது. சற்று நேரம் பாலசித்தருடன் திருவிளையாடல் நிகழ்த்திய முருகப் பெருமான் சிவஞான பாலசித்தருக்கும், ஏற்கெனவே அங்கு தவம் செய்து கொண்டிருந்த சூரபத்மனுக்கும் தன் திரு உருவைக்   காட்டினார்.

தம்மோடு போர் புரிந்தவர் ஒரு வேடன் வேடத்தில் வந்துள்ள முருகனே என்பதை தெரிந்து கொண்ட சிவஞான பாலசித்தர், அவரை தான் அடித்து உதைத்ததை எண்ணி வருந்தினார். இரண்டு தேவியர்கள் தம்மிடம் வந்தது முதல் அடுத்தடுத்து நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் அவருக்கு புரிந்தன. உடனடியாக முருகப் பெருமானின் கால்களில் விழுந்து தான் செய்த தவறுக்காக மன்னிப்பைக் கேட்டார். ஆனால் அதைக் கேட்ட முருகப் பெருமானும் நடந்தவை அனைத்துமே விதிப்படி நடந்தவை என்றும், அவருடைய சாப விமோசனனத்துக்கான முதல் படியாகவே தாம் அந்த நிலையை எடுத்ததாகவும் அவருக்கு ஆறுதல் கூறிய பின்னர் அவருக்கு ஞான உபதேசமும் செய்தார். அடுத்து அவருடன் சேர்ந்து மாளிகைக்குள் சென்று அங்கிருந்த சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டார்.

அவரை ஆசனத்தில் அமர்த்தியதும் சிவ ஞான பால சித்தரும் அந்நாள் வரை தமது மகள்களாக வளர்த்து வந்திருந்த இரண்டு தேவியர்களையும் அழைத்து வந்து அவர்களை முருகப் பெருமான் திருமணம் செய்து கொண்டு அந்த தலத்தில் எழுந்தருள வேண்டும் என வேண்டிக் கொண்டார். அதை ஏற்றுக் கொண்ட முருகப் பெருமானும் தமது பெற்றோர்களையும் அங்கு அழைக்க இறைவனும் பார்வதி தேவியோடு அங்கு எழுந்தருளினார். தேவலோகத்தில் இருந்து அனைத்து பூத கணங்களும் தேவர்களும் அங்கு வந்து குமிழ பாலசித்தர் கன்னிகா தானம் செய்து கொடுக்க முருகப் பெருமானும் தம்மை விட்டு விலகி அங்கு வந்து மானிட உருவில் தங்கி இருந்த தேவியர் இருவரையும் அந்த இடத்தில் அனைவர் முன்னிலையிலும் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். அது முதல் சூரபத்மனின் வேண்டுகோளுக்கு அருள் புரியும் வகையில் முருகனும் அந்த இடத்தை தன் வீடாக்கிக் கொண்டு அங்கும்   இருந்து வரலானார்.  பல காலம் பொறுத்து  பொம்மபாலய ஆதீன மடாதிபதி  கட்டிய ஆலயமே   மயிலம் மலை மீது உள்ள ஆலயம் என்கிறார்கள்.

………….தொடரும்