பண விரயங்கள் நீங்கி செல்வம் 
நிலைக்க ஒரு சிறிய பூஜை முறை  
சாந்திப்பிரியா 

ஒவ்வொருவருக்கும் வரவுக்கு மீறிய செலவும் ஏற்படுகிறது. அதுவும் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கும் விலைவாசிகள், குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச் செலவு என அனைத்திற்கும் பணம் செலவு ஆகிக் கொண்டே இருக்கும்போது நமக்கு லஷ்மி தேவி ஏன் தங்குவது இல்லை என்ற விரக்தி ஏற்படுவது இயற்கையாக இருக்கும். ஆகவே லஷ்மி தேவியை திருப்திப்படுத்தி நம் கையில் நாலு காசு  தங்க வேண்டும் என நினைப்பவர்கள் செய்ய வேண்டிய மிக சாதாரண பூஜை இது. இது பூஜை என்று  கூற முடியாதது. ஒரு விதமான விரதம் அல்லது வேண்டுதல் என்று கூடக் கூறலாம். இதெல்லாம் பாட்டி வைத்தியம் போல நம் முன்னோர்கள் அந்த காலத்திலே செய்து வந்தவை. இந்த வழிமுறை இப்போது மிக சாதாரணமாக தோன்றக் கூடும். ஆனால் அந்த காலத்து வழிமுறைகள் காலத்தால் அழியாதவை. உண்மையில் நன்மை தரக்கூடியவை என்பதை மட்டுமே நம்மால் கூற இயலும்.

அதற்கு ஒருவர் செய்யக் கூடிய சின்ன வழிமுறை இது.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று காலையில் குளித்தப் பின்னர் இரண்டு வெற்றிலையை ஸ்வாமிக்கு முன்னால்  வைத்து அதன்  மீது ஒரு ரூபாய் நாணயம் மற்றும் இரண்டு கொட்டைப்பாக்கு அல்லது களிப்பாக்கு போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து விட்டு ஸ்வாமிக்கு எப்போதும்போல விளக்கு ஏற்ற வேண்டும். அதற்குப் பிறகு இரண்டு வெற்றிலையையும் ஒன்றாக சேர்த்து மடித்து மகாலஷ்மியை வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்தப் பின் மறுநாள் அந்த நாணயத்தை  எடுத்து தாங்கள் பணத்தை வைத்திருக்கும் அலமாரி அல்லது தினசரி பயன்படுத்தும் பர்ஸ் போன்ற ஏதாவது ஒன்றில் தனியாக அதை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். என்ன வேண்டிக் கொள்ள  வேண்டும்? ‘அம்மா, தாயே, எங்களுக்கு பணம் நிலைத்திருந்து எங்கள் கஷ்டங்கள் விலக வேண்டும். அனாவசியமாக விரயம் ஆகும் எங்கள் பணம் விரயம் ஆகாமல் எங்களிடமே நிலைத்து இருக்க வேண்டும்’ ஒவ்வொரு வார வெள்ளிக் கிழமையிலும் இதை மறக்காமல் செய்ய வேண்டும். இப்படி செய்வதினால் அனாவசியமாக விரயமாகிக் கொண்டு இருக்கும் பணம்  விரயம் ஆகாது என்ற திடமான நம்பிக்கை உண்டு.

ஒருமுறை பயன்படுத்திய வெற்றிலைப் பாக்கை மறுவாரம் மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அந்த வெற்றிலைப் பாக்கை தின்று விடவும் கூடாது. அதே சமயம் அந்த வெற்றிலைப் பாக்கை நீர்நிலைகள் எதிலாவது அதாவது ஓடும் நீர் நிலைகளில்- வாயல்களில் உள்ள தண்ணீர் ஓடும் வாய்க்கால், நதி, ஆறு, ஏரிகள், குளம் மற்றும் கடல் போன்றவற்றில் போட்டு விட வேண்டும்.ஓடும் தண்ணீர் உள்ள இடத்தில் மட்டுமே விட வேண்டும். அதாவது நீர் ஓடிக்கொண்டே கொண்டே இருக்கும் இடமாகப் பார்த்துப் போட வேண்டும்.  அப்படிப்பட்ட நீர் நிலைகள்  எதுவும் பக்கத்தில் இல்லை என்றால் வெற்றிலையும் பாக்கையும் சேர்த்து வைத்து எப்போது சந்தர்ப்பம் வருமோ அப்போது அவற்றைப் போடலாம். வெற்றிலை வாடிக் கிடந்தாலும் ஒன்றும்  இல்லை.  சாக்கடையிலோ, அல்லது வீட்டுக் கிணற்றிலோ போடக் கூடாது.

அது போலவே ஒவ்வொரு வாரமும் அந்த வெற்றிலைப் பாக்குடன் வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயத்தையும் பத்திரமாக சேர்த்து வைத்து எப்போது குலதெய்வ ஆலயத்துக்கு செல்வோமோ அப்போது தங்கள் குலதெய்வத்திற்கு அந்த நாணயங்களை காணிக்கையாகப் போட்டு விட வேண்டும். குல தெய்வம் மட்டுமே அந்த நாணயத்துக்கு அதிபதியாவார். அது மட்டும் அல்ல அந்த நாணயத்திற்கு பதிலாக ரூபாய் நோட்டைப் போட்டு விட்டு அந்த நாணயங்களை உபயோகத்திற்காக எடுத்துக் கொள்ளவும் கூடாது. வெற்றிலையில் வைத்த நாணயத்தை வேறு எந்த உபயோகத்துக்கும் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் இப்படி செய்து கொண்டே வந்தால் நிச்சயமாக பணத்தட்டுப்பாடு விலகி, பண விரயங்களும் தடுக்கப்பட்டு செல்வம் நிலைக்கும் என்பது உறுதி.

லஷ்மி தேவியானவள் மனம் குளிர்ந்து விட்டால் பொன்  மழையைக் கொட்ட வைப்பாள் என்பதினால் இந்த சின்ன  விரதத்தை அனுஷ்டிக்கலாம். லஷ்மி தேவியின் கருணை எப்படிப்பட்டது என்பதை ஆதி சங்கரரின் வாழ்கை வரலாற்றின் ஒரு சின்ன பகுதி விளக்கும்.

ஆதிசங்கரர் சிறுவராக இருக்கும்போது உஞ்சவிருத்தி எனப்படும் பிட்ஷை எடுத்து உண்ணும் தர்மத்தை கடைபிடித்து வந்தார். சன்யாச தீட்ஷை பெற்றுக் கொண்டு விட்டால் அதன் பின் பிட்ஷை எடுத்ததை மட்டுமே உண்ண  வேண்டும் என்பது வழக்கம். அந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்திருந்த பிட்ஷை தத்துவத்தின்படி நாள் ஒன்றுக்கு ஒருவர் வீட்டில் மட்டுமே சென்று ‘பவதி பிட்ஷான்தேஹி’ என்று குரல் கொடுக்க வேண்டும். அந்தக் குரலைக் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வந்து ஏதாவது பிட்ஷை போட்டால் அதை மட்டுமே உண்ண வேண்டும். அப்படி அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வராமல் பிட்ஷையும் போடாமல் இருந்து விட்டால் மீண்டும் மீண்டும் குரல் தரக் கூடாது. அடுத்த வீட்டிற்கும் சென்று பிட்ஷை கேட்கலாகாது. ஒரு நாளைக்கு ஒரே ஒருமுறை ஒரே ஒரு வீடு மட்டும் சென்று, இரண்டு முறை மட்டுமே குரல் கொடுத்து பிட்ஷை பெறுவதை உத்தமமான பிட்ஷை ஆகும். அப்படி ஏன்றாவது பிட்ஷைக் கேட்டவர் வீட்டில் பிட்ஷை ஏதும் கிடைக்காவிடில் அன்று பட்டினி கிடக்க வேண்டும்.

இப்படியாக வாழ்ந்து வந்திருந்த ஆதிசங்கரர் ஒருநாள் ஒரு ஏழை வீட்டில் சென்று பிட்ஷை கேட்டார். அந்த வீட்டினர் பரம ஏழைகள் என்று அவருக்குத் தெரியாது. அந்த வீட்டிலோ வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடவே ஒன்றும் இல்லை எனும்போது எங்கிருந்து பிட்ஷைப் போடுவார்கள். அவர்கள் வீட்டில் இருந்தப் பெண்மணி ஆதி சங்கரர் வந்து பிட்ஷைக் கேட்டபோது  கொடுக்க ஒன்றும் இல்லையே  என்று வெட்கம் அடைந்தாள். வீட்டில் இருந்த ஒரே ஒரு நெல்லிக் கனியை எடுத்து வந்து கண்களில் கண்ணீர் மல்க அதை அவருக்கு பிட்ஷையாகப்  போட்டாள். அதைக் கண்டதுமே ஆதிசங்கரருக்குப் புரிந்து விட்டது. அவளது நிலையைக் கண்டவர் மனமுருகி லஷ்மி தேவியை வேண்டிக் கொண்டு கனகதார ஸ்தோத்திரத்தை பாடினார். அந்த  துதியினால் மனம் மகிழ்ந்து போன லஷ்மி தேவி அந்த வீட்டில் பொன் மழையைக் கொட்டினாளாம். ஆகவே லஷ்மியிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால் பணப் பிரச்சனை முழுமையாக தீரும் என்பது நம்பிக்கையாகியது. பெரியோர்கள் வாக்கும் ஆனது.

வீட்டில் செல்வம் நிலைத்து இருக்க ஸ்ரீ ஜெயபஞ்சகம் என்ற ஸ்லோகத்தையும் குளித்துவிட்டு ஸ்வாமிக்கு விளக்கு ஏற்றிப் பின்னர் தினமும் பதினொன்று முறை கூறுவார்கள். சுந்தரகாண்டத்தில் கூறப்பட்டு உள்ள அந்த ஸ்லோகம் என்ன என்றால்:

ஜெயத்யதிபலோ ராமலஷ்மணஸ்ச மஹாபலஹா 
 
ராஜாதி ஜயதி சுக்ரீவோ ராகவேன அபி பாலிதஹா
 
தாசோஹம் கோஸலேந்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மணஹா 
 
ஹனுமான் சத்ரு வைத்யானாம் நிஹந்ர மாருதாத்மஜஹா 
 
ராவண சஹஸ்ரம்மே யுத்தே பிரதி பலம் பவேத் ஸலாபிஸ்து ப்ரஹரதஹா  பாத வைச்ச சஹஸ்ரஸஹா