ஒரு காலத்தில் இந்தியாவும் ஸ்ரீலங்காவும் ஒரே பகுதியாக இணைந்து இருந்தன. அதனால் இந்துக்களின் பல பிரசித்தி பெற்ற ஆலயங்களைப் போல ஸ்ரீ லங்கா பகுதியிலும் பல புகழ் பெற்ற ஆலயங்கள் இருந்துள்ளன. ஒரு விதத்தில் கூறுவது என்றால் ஸ்ரீலங்காவை  சிவபூமி என்று கூறினாலும் கூட  சரியாகவே இருக்கும். அதற்குக் காரணம் பல சக்தி வாய்ந்த சிவாலயங்களும், முருகன் ஆலயங்களும் அந்த நாட்டில் பல உண்டு.  ஸ்ரீலங்காவில் உள்ள புகழ் மிக்க பல ஆலயங்கள் ராமாயணக் காலத்துடன், அதன் கதையுடன் சம்மந்தப்பட்ட இடமாகும். ஸ்ரீலங்காவை ஆண்ட பெரும் சிவபக்தனான ராவணன் இந்த தீவு நாட்டின் பல சிவாலயங்களில் சென்று வணங்கி பூஜித்து உள்ளார் என்பது பல கதைகள் மூலம் தெரிய வருகிறது. அதனால் சிவாலயங்கள் பெருமளவில் அங்கு தோன்றி உள்ளது. இலங்கையில் ஐந்து மகிமை வாய்ந்த  சிவாலயங்கள் உண்டு.  அவற்றை ‘பஞ்ச ஈஸ்வரங்கள்’ என்று குறிப்பிடுகிறார்கள். அந்த ஐந்து சிவன் ஆலயங்கள் நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம்  மற்றும் தொண்டீஸ்வரம் என்று  கூறப்படுகின்றது.

ஒரு காலத்தில் இலங்கையை ஆண்ட போத்துக்கீசியரால் ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்கள் சிதைக்கப்பட்டன, சூறையாடப்பட்டு அங்கிருந்த ஆலயங்களின் செல்வங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. ஆலயங்கள் சிதைக்கப்பட்டன.  அது போலவே டட்ச் ஆட்சியினர் ஆண்ட காலத்திலும் இந்த நிலை இருந்தது.  ஆகவே பக்தர்கள் விரைவாக செயல்பட்டு பல ஆலயங்களில் இருந்த மூல விக்ரகங்களையும் சிலைகளையும் அங்காங்கே இருந்த குளங்களிலும் ஆலய கிணறுகளிலும்  மறைத்து வைத்து விட்டார்கள். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தபோது அவற்றில் பல ஆலயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு  சீரமைக்கப்பட்டன.  பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஆலய விக்ரகங்கள் கண்டெடுக்கப்பட்டு ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டன.

ஒரு காலத்தில்  இலங்கை மிகப் பெரிய பூமியாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் அங்கு ஏற்பட்ட மூன்று கடல் கொந்தளிப்பில்  தற்போது உள்ள இலங்கையின் அளவை விட மூன்று மடங்கு பூமியானது  நீரில் மூழ்கி  அழிந்து விட்டதாகக் கூறுகிறார்கள். அந்த அழிந்து விட்ட பெரும் பகுதிகளே ராவணன் ஆண்டு வந்த இலங்கை என்றும், அவன்  ராஜ்யத்திற்குப் போகும் முன்னால் தற்போது உள்ள இலங்கையின் பகுதிகள் வழியேதான் செல்ல வேண்டி இருந்ததாகவும், இந்தப் பகுதிகளில் நிறைய ஆலயங்கள் முக்கியமாக பஞ்ச சிவாலயங்கள்  இருந்துள்ளது என்றும் நம்பிக்கை உள்ளது.  அந்த காலக் கட்டத்தில்தான் தனது மனைவி சீதையை ராவணன் கடத்திக் கொண்டு இலங்கைக்குச் சென்றதும் அங்கு சென்று ராவணனுடன் போர் புரிந்து சீதையை  மீட்டுக் கொண்டு  வந்த ராமபிரான்  அந்த வெற்றி கிடைக்க அருள் புரிந்த  சிவபெருமானுக்கு நன்றி கூற  ஸ்ரீ ராமபிரான் இந்த முன்னேஸ்வரம் ஆலயத்திலும் வந்து வழிபட்டதான காலம் காலமாக நம்பப்பட்டு வரும் கதையும் இந்த நாட்டில் உள்ளது.

ஆலயத்திற்குள் உள்ள சிவலிங்கம்

ஆகவே இன்றைய ஸ்ரீலங்கா நாட்டின் யாழ் பகுதியில் உள்ள சாவக்கச்சேரி எனும் இடத்தில் உள்ள   முன்னேஸ்வரம்  ஆலயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட  ஆலயம் ஆகும் என்று கூறப்பட்டாலும், கர்ண பரம்பரைக் கதைகளை நோக்கும்  போதும், ராமாயண காலத்துடன் இணைத்துப் பேசப்பட்டதில் இருந்தும்  இந்த ஆலயம் எழுந்த காலத்தைக் கணக்கிட்டுக் கூற முடியாது என்று கூறுவதே உண்மையாக இருக்கும். பல ஆண்டுகளாக நடைபெற்று வந்திருந்த உள்நாட்டு யுத்தத்தினால் ஆலயம் சற்றே சேதம் அடைந்து இருந்தாலும், அந்த சேதங்கள் ஆலய கட்டிடங்களுக்கு ஏற்பட்டதே அன்றி  அந்த ஆலயத்தின் மகத்துவத்திற்கோ அல்லது மகிமைக்கோ அல்ல.  அந்த ஆலயம் மகத்தானது. சக்தி வாய்ந்த சுயம்பு லிங்கம் தோன்றிய ஆலயம் ஆகும். போர்த்துகீசியர்களும் டச் (பறங்கியர் எனப்பட்டவர்கள்) நாட்டவர்களும் இந்துக்களின் பல ஆலயங்களை ஸ்ரீலங்காவில் நாசப்படுத்தி இருந்தார்கள். அவற்றில் பலவும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புதுப்பிக்கப்பட்டன.

இந்த ஆலய மகிமையை நைமிசாரண்யா வனத்தில் அமர்ந்து கொண்டு இருந்த முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும்  பல்வேறு புராண மகிமைகளைக் கூறி வந்திருந்த சூதக முனிவர்  முன்னேஸ்வரம்  சிவாலயத்தின் கதையைக் கூறத் துவங்கினார். சூதக முனிவர் கூறலானார்……..

……….தொடரும்