வேலூர் மாவட்ட பள்ளிகொண்டா 
உத்தர ஸ்ரீ ரங்கநாதர்  ஆலயம்
சாந்திப்பிரியா
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டான் எனப்படும் இடத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலத்தை சேர்ந்த பள்ளிகொண்டேஸ்வரர் ஆலயம் மிகப் பிரசித்தமானது. இங்கு எம்பெருமான் எனப்படும் விஷ்ணு பகவான் பள்ளி கொண்ட நிலையில் தனது மனைவிகளுடன் காட்சி தருகிறார். இந்த ஆலயம் உள்ள கிராமம் வேலூர் மற்றும் பெங்களூருக்கு இடைப் பகுதியில் உள்ளது. எம்பெருமான் இங்கு வந்து ஏன் பள்ளி கொண்டார்? அவருக்கு ஆலயம் இங்கு வந்ததின் காரணம் என்ன?. இங்கு ஆலயம் வரக் காரணமான கதையைக் காணலாம்.
இந்த பிரதேசத்தை அம்பராஜா என்ற மன்னன் ஆண்டு வந்தார். அவர் தன் வாழ்நாளில் அனைத்து சுகபோகங்களையும் அடைந்து விட்டாலும் பகவான் விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற வேண்டும். அவர் தமது ராஜ்யத்தில் எழுந்தருளி மக்களுக்கு அருள் புரிந்து கொண்டு இருக்க வேண்டும் என ஆசைக் கொண்டு இந்த ஆலயம் உள்ள இடத்தின் அருகில் வந்து விஷ்ணுவை நோக்கி தவம் செய்தார். அப்போது இந்த இடம் வனப் பகுதியாக இருந்தது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்த அவர் முயற்சி வெற்றி பெற முடியவில்லை. சரி நமக்கு அந்த அதிருஷ்டம் கிடையாது என எண்ணிக் கொண்டு வருத்தத்துடன் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது ஆகாயத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. ‘மன்னா…உன் வேண்டுகோளை விரைவில் நிறைவேற்ற நான் இங்கு வந்து பள்ளி கொள்வேன். ஆகவே மன மகிழ்ச்சியோடு வீடு செல் ‘. அதைக் கேட்ட மன்னன் ஆனந்தத்துடன் வீடு திரும்பினார்.
அதே சமயத்தில் பிரும்ம லோகத்தில் பிரும்மா அஸ்வமேத யாகத்துக்கு இணையான ஒரு யாகம் செய்யத் துவங்கினார். அதன் காரணம் அவர் எம்பெருமானை அவர் சுய உருவில் தரிசனம் செய்ய வேண்டும் என்பதே. எந்தக் கடவுட்களாக இருந்தாலும் சிவபெருமான் மற்றும் விஷ்ணுவை அனைவரையும் விடப் மகிமை வாய்ந்தவர்களாகவே மதித்தார்கள். அவ்வப்போது எளிதில் காண முடியாத அவர்களுடைய யோக சக்தியுடன் கூடிய தரிசனம் பெற அவர்கள் முயற்சிப்பார்கள். அதன் மூலம் தத்தம் சக்திகளைப் பெருக்கிக் கொள்வார்கள். மும்மூர்த்திகளில் ஒருவரான பிரும்மாவும் அதில் விதி விலக்கு அல்ல.
பல நாட்கள் தொடர்ந்து கொண்டு இருந்த அந்த யாகத்தில் ஒருநாள் தனது மனைவிகளுடன் அமர்ந்து இருந்த பிரும்மாவுக்கும் அவர் மனைவிகளுக்கும் ஒரு விவாதம் நடந்தது. அப்போது பிரும்மாவின் மனைவியான சரஸ்வதி தேவி பிரும்மாவிடம் கேட்டாள் ‘எங்களை விட இந்த லோகத்தில் உயர்ந்தவர்கள் வேறு யாரும் உண்டா?’. பிரும்மா நிதானமாக பதில் கூறினார் ‘ஏன் இல்லாமல், உங்கள் இருவரையும் விட மேலானவள் விஷ்ணுவின் மனைவியான லஷ்மி தேவிதான்’. அதைக் கேட்ட சரஸ்வதி கோபம் அடைந்தாள். விறுக்கென அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டாள். பிரும்மாவும் அது குறித்து அதிகம் கவலைப்படவில்லை. இந்த மாதிரியான சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதுதானே என பேசாமல் இருந்து விட்டார்.
யாகம் தொடர்ந்தது. ஆனால் அதில் நிறைவு தெரியவில்லை. ஒவ்வொரு யாகத்தின் முடிவிலும், அந்தந்த யாகங்களினால் ஏற்பட வேண்டிய நிகழ்ச்சிகள் ஏதாவது ஒரு காரணத்தினால் தடைப் பட்டன. அதன் காரணம் புரியாமல் பிரும்மா திகைத்தார். எத்தனைக் கஷ்டப்பட்டு செய்யும் யாகத்தில் யாஎன் எதோ இனம் புரியாத தடங்கல்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது? ஆகவே அந்த யாகத்தில் கலந்து கொண்டு இருந்த அத்தனை குருக்களுடன் கூடி அதற்கான காரணங்களை ஆராய்ந்தபோது, பிருமாவின் கர்ம விசேஷம் எனப்பட்ட அலை பாய்ந்து கொண்டு இருந்த உள் மன எண்ணங்கள் அவருடைய பிரயாசைகளை தடுத்துக் கொண்டு இருந்தன என்பது தெரிய வந்தது. அதன் இன்னொரு காரணம் யாகத்தில் அவர் பக்கத்தில் இருக்க வேண்டிய பத்தினிகளில் ஒருவர் இல்லை . அதன் காரணமாகவே அவருடைய உள் மனதில் அவள் தடுமாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே யாகத்தை நிறைவாக செய்ய விடாமல் தடுத்து வருகிறாள். ஆகவே யாகத்தை நிறைவாக செய்து முடிக்க வேண்டுமானால் கோபமுற்று சென்றுவிட்ட சரஸ்வதியை அழைத்து வரவேண்டும். எத்தனை முயன்றும் அவளை திரும்ப அழைத்து வர முடியவில்லை. யாகத்துக்கு வர மறுத்து விட்டாள். அவளுக்குத் தெரியும் தான் இல்லை என்றால் யாகம் நிறைவு பெறாது என்பது. ஆனால் மனைவிகளில் ஒரு மனைவி இல்லாமலும் அதே யாகத்தை செய்ய வேறு மார்க்கமும் இருந்தது. ஆகவே மீண்டும் புதியதாக அதைத் துவக்குவதைவிட ஏற்கனவே பாதி நடந்து முடிந்து விட்ட, மனைவிகளில் ஒருவள் இல்லாமல் நடத்தும் யாகத்தை, தனது கர்ம விசேஷத்தை அடக்கி செய்தால்தான் எண்ணிய பலன் கிடைக்கும் என்று தெரியவர சரஸ்வதி தேவி வரவில்லை அவள் இல்லாமல் அதை , எப்படி செய்வது என்ற விவாதம் வந்தது.
அதற்கு மாற்று வழி ஆயிரம் முறை அஸ்வமேத யாகம் செய்வதுதான். ஆனால் ஆயிரம் முறை அஸ்வமேத யாகம் செய்து முடிக்க எத்தனை யுகங்கள் ஆகும் என கணகிட்ட போது அவர்களுக்கு பிரமிப்பாக இருந்தது. ஆகவே அவர் அதற்கும் வழி கேட்டு விஷ்ணுவையே வேண்டி நின்றபோது அந்த யாகசாலையில் அசரீரியாக ஒரு குரல் ஒலித்தது. ‘ கவலைப்பட வேண்டாம். சத்ய வ்ரத ஷேத்திரத்தின் மூன்று இடங்களில் சென்று மூன்று கட்டமாக எதே யாகத்தை தொடர்ந்து செய்தால் அதற்கு ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்தப் பலன் கிடைக்கும். மனமும் சஞ்சலப்படாது. யாகமும் பூர்த்தி ஆகும். அதன் முடிவில் அங்கு உங்களுக்குக் காட்சி தருவேன்’. தற்போதைய காஞ்சீபுரமே சத்ய வ்ரத ஷேத்திரத்திரமாகும். ஆகவே அசரீரியின் ஆணையை ஏற்று அவர்கள் உடனே அங்கிருந்து கிளம்பி அந்த ஷேத்திரத்தை அடைந்து யாகத்தைத் துவக்கினார்கள். அதை அறிந்து கொண்ட சரஸ்வதி தேவி அந்த யாகத்தை நடைபெற முடியாமல் தடுக்க உறுதி கொண்டாள்.
முதலில் இன்றைய பள்ளிகொண்டான் எனப்படும் ஷேத்திரத்தில் பூர்வாங்க யாகம் துவங்க அதைத் தடுக்க சரஸ்வதி தேவியானவள் ‘யாக சாலையை மூழ்க அடிப்பேன்’ என சபதம் செய்து கொண்டு வேகவதி எனும் நதியாய் உருவெடுத்து சீறிப் பாய்ந்து வந்தாள். திகைத்த பிரும்ம தேவர் மீண்டும் விஷ்ணுவை வணங்கித் துதிக்க எம்பெருமானோ அந்த நதி அங்கிருந்த யாகசாலையை தாக்காமல் இருக்க தாமே பெரும் உருவெடுத்து அந்த நதி பாய்ந்து வந்த பாதையில் ஆதிசேஷன் மீது படுத்துக் கொள்ள பாய்ந்து வந்த நதி அவர் மீது மோதாமல் கால் பகுதின் கீழ் வழியாய் அடுத்த யாகசாலைகளை நோக்கி பாய்ந்து செல்லத் துவங்கியது. அந்த யாக சாலைகள் திருப்பாற்கடல் மற்றும் திருவேக்கா என்ற ஆலயங்கள் உள்ள இடங்கள். அந்த இரண்டிலும் பாய வந்த நதியை தடுத்து நிறுத்தும் வகையில் மீண்டும் அந்த நதி பாய்ந்து வந்த பாதையில் விஷ்ணு பகவான் ஆதிசேஷன் மீது படுத்துக் கொண்டார். கடைசி இடத்தில் விஷ்ணுவை பார்த்த சரஸ்வதிக்கு கோபத்தினால் தான் செய்ய இருந்த தவறு புரிந்தது. அவரிடம் மன்னிப்புக் கேட்டு யாகசாலைக்குச் சென்று திருமாலுடன் சேர்ந்து யாகத்தில் கலந்து கொள்ள, யாகம் நிறைவு பெற்றதும் விஷ்ணு பகவான் திருமாலுக்கு யோக சக்தியுடன் காட்சி தந்து அவர் வேண்டுகோளை நிறைவேற்றினார்.

அப்போது தான் ஒருநாள் அம்பாராஜா அந்த இடத்துக்கு மீண்டும் ஏதேர்சையாக பள்ளிகொண்டானுக்கு வந்தபோது எம்பெருமான் அவருக்கு அங்கு பள்ளி கொண்ட ஸ்ரீ ரங்கநாதராக காட்சி தந்து அவரை ஆசிர்வதித்தார். அதன் பின் அந்த மன்னன் அங்கு நதிக்கரையில் ஸ்வயம்புவாக எழுந்தருளிய விஷ்ணுவை தரிசித்தபடி இருந்து வந்தாராம். ஆனால் அதன் பின் விஜயநகர மன்னர்கள் ஆட்சி காலத்தில் இந்த இடத்தில் இருந்த நதிக் கரையில் எம்பெருமானின் பள்ளி கொண்டக் காட்சியில் ஸ்வயம்புவாக இருந்த சிலை பூமியில் இருந்து கிடைக்க அதை பிரதிஷ்டை செய்து அங்கு ஆலயம் அமைத்தார்கள் என்று தெரிகின்றது. அந்த சிலை ஸ்வயம்புவாக வந்துள்ளது என்றே நம்புகிறார்கள். அதன் பின் வந்த மன்னர்கள் பிற கடவுட்களின் சிலைகளையும் அந்த ஆலயத்தில் வெவ்வேறு காலங்களில் நிறுவி உள்ளதாக கூறுகிறார்கள்.

படம் நன்றி: தினமலர் 

எம்பெருமான் இந்த நாடகத்தை நிறைவேற்ற பூமிக்கு வந்தபோது அவருக்கு துணையாக வைகுண்டத்தில் இருந்து வந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் முதல்முறையாக எம்பெருமானை தன் மீது சயனிக்க வைத்தார் என்கிறது தலபுராணம். மேலும் இங்கு ஓடிய தூய வெண்மை நிறம் கொண்ட ஆற்றில் (சரஸ்வதி தேவி வெள்ளை தாமரையில் அமர்ந்து கொண்டு வெண்மையான ஆடையையே அணிந்தவள் கொண்டவள் எனப்படுபவள்) பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டதால், இத்தலத்து ஆற்றுக்கு “பாலாறு’ என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஒருநாள் இரவு தங்கி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என பிரமாண்ட புராணம் கூறுகிறது. மூலவரின் திருமேனி சாலிக் கிராமக் கல்லினால் ஆனது என்பது இன்னொரு பெரிய விசேஷம் .

மூன்று ஆலயங்களிலும் பள்ளி கொண்ட
நிலையில் எம்பெருமான் 

இப்படியாக எந்தெந்த மூன்று இடங்களில் பள்ளி கொண்ட நிலையில் பாய்ந்து வந்த நதியின் வேகத்தை தடுத்தாரோ அந்தந்த ஷேத்திரங்களில் எம்பெருமானை அதே கோலத்தில் உள்ள ஆலயம் அமைத்து உள்ளார்கள். அவை வேலூர் மாவட்டத்தில் பள்ளி கொண்டான், காஞ்சீபுரத்தில் திருப்பாற்கடல் மற்றும் திருவேக்கா போன்றவை. மூன்று இடங்களிலும் தலப் புராண கதையாக அநேகமாக ஒரே காரணத்தை கொண்டு ஆலயங்கள் அமைந்து உள்ளன. ஆனால் 107 வது திவ்ய தேசம் என அழைக்கப்படும் திருப்பாற்கடல் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலய மகாத்மியத்தைப் இப்படிக் கூறி உள்ளார்கள். ஒருமுறை விஷ்ணு அனந்த சயனத்தில்- சேஷ நாகம் மீது பாற்கடலில் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அவர் நாபியில் இருந்து எழுந்த நாபித் தண்டில் பிரும்மா பிறப்பு எடுத்து உலகை சிருஷ்டி செய்யத் துவங்கினார். அவர் பூமிக்குச் சென்று காஞ்சீபுரம் பகுதியில் இருந்த இந்த தலத்தில் ஒரு யாகம் செய்யக் கிளம்பி தனது மனைவியான சரஸ்வதியை அதற்கு உடன் அழைத்தார். ஆனால் சரஸ்வதியோ அவருடன் செல்ல மறுக்கவே, வேறு வழியின்றி பிரும்மா தன்னுடன் காயத்ரி மற்றும் சாவித்திரியை அழைத்துக் கொண்டு சென்று யாகத்தைத் துவக்கினார். ஆகவே கோபமுற்ற சரஸ்வதி வேகவதி என்ற ஒரு நதியாய் உருவெடுத்து வந்து யாகத்தை தடுக்க முயன்றபோது அவள் கோபம் தணிந்து திரும்பிச் சென்றாள். கதையின் சாரம் சிறிது மாறுபட்டாலும் மூலக் கதை மூன்றுக்குமே ஒன்றாகவே உள்ளது.

ஆலயம் செல்லும் வழி 
ஆலய விலாசம்
Sri Uthara Ranganatha Swamy Temple,
 Pallikonda ,
Vellore District
Pin Code– 635 809.
Tel: 04171 – 240234 or 94433 09572.