சண்டி சப்த சதி -2

சாந்திப்பிரியா 

சண்டி சப்த சதிக்கு துர்கா சப்த சதி என்று பொருள். துர்கா என்றால் அணுகுவதற்கு அறியவள் என்பதும் ஒரு பொருள் ஆகும். துர்கா என்றால் துர்கதி அடையாமல் நம்மை காப்பாற்றுபவள் என்றும் அர்த்தம். தேவி சூக்தத்தில் அம்பிகை கூறுகிறாள் ”எவன் என்னை தியானிப்பானோ, எவன் என்னிடம் சரண் அடைகிறானோ அவனை நான் ரிஷியாகவும், பெரும் மேதையாகவும் ஆக்கிடுவேன்”
அதனால்தான் கூறுவார்கள் இந்த உலகம் என்ற மாயையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும். அன்னை கூறுவாள் ” இந்த உலகில் நான் ஒருவளே இருக்கிறேன். என்னைத் தவிர என்னைப் போன்ற இரண்டாமவர் கிடையாது. அனைத்தையுமே படைத்தவள் நான். ஒன்றாகி இருந்த பிரும்மமான  நான் இரண்டாகி என்னைப் பெருக்கிக் கொண்டேன் என்பதின் காரணம் உங்களைக் காக்கவே”.
ஆக்குவதும், காப்பதும் மற்றும் அழிப்பதும் தன் முக்குணத்திலான சத்வ, ரஜஸ், தமஸ் என்றவற்றால் நடத்தி வைக்கும் மகா சக்தி அவள். மகா காளி, மகா லஷ்மி மற்றும் மகா சரஸ்வதி  என மூன்று ரூபங்களை மும்மூர்த்திகளைப் போல  எடுத்து உலகைக் காத்தவள் அவளே நம்மையும் இந்த உலகின் மாயையில் இருந்து விடுதலைப் பெற உதவ வேண்டும். அக்ஞானத்திற்கு  ஆதாரமாக மாயையை ஒழித்து  ஞானத்தை தர வந்தவளின் மகிமையை எடுத்துரைக்க எழுதப்பட்டதே சண்டி சப்த சதி எனும் நூல். தமது பரப்பிரும்ம  ரூபத்தை அம்பிகை எப்படி வெளிப்படுத்தி போதிக்கிறாள் என்பதைக் கூறுவதே  தேவி மகாத்மியம் என்ற இந்த  மகாத்மியம்.
சண்டி சப்த சதியில் வரும் ஒரு கதையில் சுரதன் என்ற அரசன் மற்றும் சமாதி எனும் வைசியன் என்ற இருவரும் தமது இல்லங்களில் இருந்து விரட்டப்பட்டவர்கள். வனத்திலே சந்தித்த அவர்கள் சுமேதஸ் என்ற மஹரிஷியிடம் தமது மனக் குறைகளைக் கூறி அழுதபோது அவர் அவர்களுக்கு அறிவுரை செய்தார்.
அரசன் கேட்டான்  ‘ மகா முனிவரே, நான் செய்யாத தர்மம் இல்லை. செய்யாத நற்காரியங்கள் இல்லை. என்னை சுற்றி இருந்தவர்கள் என்னை விரட்டி விட்டு வேதனைப் படுத்தினார்கள். இதற்கு என்னக் காரணம் ?” என்று கேட்டபோது அந்த ரிஷியானவர் அவனிடம் கூறினார்:

” மன்னா, நீ நல்லவை பலவற்றையும் செய்தாய். ஆனால் நீ செய்த பெரும் குற்றம் உன்னை வளர்த்தவர்களை, உனக்கு உதவி செய்து உன்னை முன்னேற்றம் அடைய வைத்தவர்களை, உன்னை சேர்ந்தவர்களை ஒரு கட்டத்தில்  உதாசீனப்படுத்தினாய். அவர்களது மனதை நோக வைத்தாய். மனதிலே தூய்மையானவன் செய்யும் காரியம் அல்ல அவை. தேவியை ஆராதிப்பவனின் மனது தூய்மையுடன் இருந்தால்தான் அவன் நல்ல பலனைப் பெற இயலும்.
நீ நல்லவனாக இருந்தபோது தேவியை ஆராதித்ததினால் உனக்கு அருள் கிடைத்தது. அப்படி கிடைத்த அருளினால் நீயும் அரசனானாய். ஆனால் அகங்காரத்தினால் ஒரு கட்டத்திலே அந்த தேவியே  உன்னிடமே சரண் அடைந்து விட்டவளைப் போல  ஒரு பிரமையை உலகிற்கு  காட்ட நினைத்தாய். மற்றவர்களைத் தூற்றிக் கொண்டே உன்னை  நல்லவனாக, வல்லவனாக, தேவிக்கு பிரியமனானவனாக காட்டிக் கொள்ள நினைத்து அதை அனைவருக்கும் கூறத் துவங்கினாய்.  அந்த தேவி உனக்கு மட்டுமே விசேஷமான அருள் புரிந்தது போலக் காட்டிக் கொண்டாயே, அதுவே நீ செய்த அற்பத்தனம்.  நீ யார், என்ன நிலையில்  இருந்தாய் என்பதை எண்ணிப் பார்க்காமல் திடீர் எனக் கிடைத்த ஆடம்பர வாழ்வில்  மதி இழந்து  அகங்காரம் கொண்டு, உண்மைகளை மறைத்து பொய்யை பரப்பிய அந்த ஈனச் செயல்களை கண்டு உன் சுக துக்கங்களில் பங்கு கொண்டு உன் வாழ்க்கையில் நீ முன்னேற உதவியவர்கள், உன்னுடன் தோளோடு தோளாக நின்றவர்கள்  மனம் வெதும்பினார்கள். அவர்களது வெந்த மனம் உன் வாழ்கையை வேக வைத்து விட்டது. முன் ஜென்மத்தின் உன் பெற்றோர்கள் செய்த புண்ணியத்தினால் உனக்கு இந்த ஜென்மத்தில் உனக்கு கடவுள் கொடுத்த அருளை தவறாகப் புரிந்து கொண்டு உனக்கு மட்டுமே அந்தக் கடவுள்  மிகப் பெரிய அளவில் அருள் புரிந்துள்ளதாக கருதிய மூடனே நீ  என்பதினால் நீயும் ராஜ்யத்தை இழந்தாய். இங்கு வந்து  நாதியற்று நிற்கிறாய்.  மன நிம்மதியே இன்றி இருக்கிறதாய். இதில் இருந்து நீ செய்த அற்பத்தனம் உனக்கு விளங்கவில்லையா? உண்மையிலேயே நீ அந்த தேவி உன்னிடம்  ஆத்மார்த்தமான அன்பு கொண்டு இருந்தால் உன் மன நிம்மதிக்காவது அருள் புரிந்து இருக்க மாட்டாளா?  இது உனக்கு ஆரம்பம்தான். ஆகவே இன்னமும் பழிவாங்குதல் என்ற உன் ஈனத்தனமான  எண்ணங்களை விட்டு  ஒழிக்காமல்  அதே எண்ணத்துடன் நீ இருந்தால்  இன்னமும் அவதிப்படுவாய் . இதற்குக் காரணம் நீயேதான்.

அன்னையின் தத்துவம் என்ன தெரியுமா? ‘ முழு மனதுடன் அவளை மட்டுமே துதி. ஆனால் அதை செய்யும்போது  அதை நல்ல மனதுடன் செய். அவளை  மட்டுமே முழுமையாக  நம்பு.  ஆனால் உன்னிடம் அன்பு செலுத்தியவர்களை, உனக்கு நல்லது செய்தவர்களை  பழித்துக் கொண்டே அவளை மட்டுமே துதித்தால் அதை அவள் உன்னிடம் மட்டுமே கருணைக் காட்டுவதாக எண்ணிக் கொண்டு மாயை தோற்றத்தை நீ உணரலாம். அது உன் அறியாமை. ஆனால் களங்கமுள்ள மனதுடன் செய்யப்படும்  துதியை அவள்  ஏற்பதில்லை. தேவியை எதற்கு துதிக்கிறாய்? மற்றவர்களை தூஷித்துக் கொண்டே இருக்கவா? ஒருவனுக்கு  தேவை இந்த உலகின்  மாயையில் இருந்து விடுபட வேண்டும்.

ஆனால்  அந்த மாயையிலேயே உழன்று கொண்டு,  நல்லவன் போல காட்டும் பிரமையை ஏற்படுத்திக் கொண்டு அவளிடம் சென்று பிரார்த்தித்தால் அவள் உனக்கு அருள் புரிவாளா என்ன?  அவளிடம் சரண் அடைய வேண்டும் என்றால் முதலில் உன் மனதை தூய்மையாக வைத்துக் கொண்டு அவளை துதிப்பாய். அப்போதுதான்  அதை அவள்  ஏற்று உனக்கு மாயையில் இருந்து விடுதலை தருவாள் ‘.

இதையெல்லாம் மனதில் கொண்டு தூய மனதுடன் நவராத்திரியில் சப்த சதியை  நீ  துதித்தால் இழந்த அனைத்தையும் மீண்டும் பெறுவாய்”. அதைக் கேட்ட மன்னன் தான் செய்த தவறுகளை எண்ணிப் பார்த்தான். தான் செய்துள்ள தவறுகளே தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது என்பதை உணர்ந்தான்.  இனியாவது திருந்தி வாழலாம்  என எண்ணியவன்  சப்த சதியை ஜெபிக்கும் முறையைக் கேட்க அவரும் அதை  கூறலானார்.

…………தொடரும்