சண்டி சப்த சதி

சாந்திப்பிரியா

சண்டி சப்த சதி என்பது என்ன?  சண்டி சப்த சதிக்கு துர்கா சப்த சதி என்று பொருள். தேவி மாகாத்ம்யம் அல்லது துர்கா சப்த சதி என்றும் அழைக்கப்படும் இந்த நூல் இந்த உலகில் இருந்த அசுரர்களை அழித்து உலகைக் காக்க வந்த சண்டிகா தேவியின் பெருமையை கூறுவதால் இதை சண்டீ எனவும், 700 ஸ்லோகங்களோடு விளங்குவதால் இதை ஸப்தஸதீ (700 ) என்றும் அழைக்கின்றார்கள். சப்த சதி என்பது ஏழு  தேவதைகளை குறிக்கும் என்பதாக நம்பப்படுகின்றது. அந்த ஏழு தேவிகள் யார் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஒரு சாரர் அந்த ஏழு தேவதைகள் நந்தா, சாகாம்பரி, பீமா, ரத்த தந்திகா, துர்கா, பிராம்மரி மற்றும் சதாக்ஷி என்று கூற, இன்னும் சில பண்டிதர்கள் அந்த தேவதைகளை பிராம்மி, வராஹி, வைஷ்ணவி, சாமுண்டா, மகேஸ்வரி, கௌமாரி மற்றும் இந்திராணி என்பதாக கூறுகின்றார்கள்.

துர்க்கா தேவியை சண்டி தேவி என்றும் சண்டிகா தேவி என்றும் அழைக்கின்றார்கள். துர்கா பரமேஸ்வரியின் இன்னொரு திருநாமம் சண்டிகா பரமேஸ்வரி தேவி என்பதாகும். தேவர்களுக்கு அருள் புரியும் பொருட்டு ஒன்பது நாட்கள் ஊசி மீது தவத்தில் இருந்த பராசத்தியானவள் நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில் மஹிஷாசுரமர்தினியாகவும் அடுத்த மூன்று நாட்கள் மகாலஷ்மியாகவும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் இருந்து தவம் புரிந்து அசுரர்களைக் கொன்று அழித்தாள். அப்படிப்பட்ட சண்டி தேவியின் பெருமையை கூறுவதே தேவி மாஹாத்மியம் எனும் நூல் ஆகும். தேவியின் பெருமையை கூறும் நூல்களில் தேவி மஹாத்மியம் என்பது மேன்மையானதும், மிக  பழமையானதும் ஆகும்.

இந்த நூல் 13 அத்தியாயங்கள், 700 மந்திரங்களுடன் கூடியது. தேவி உபாசனைகளைக் குறிக்கும் தேவி மகாத்மியம் ஒரு சக்தி வாய்ந்த மந்திர நூலாகும். இந்த நூலில் காணப்படும் 700 மந்திரங்களால் தான் சண்டி ஹோமம் செய்யப்படுகின்றது. 400 அல்லது 500 ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டு உள்ள இந்த மகாத்மியம் மார்கண்டேய முனிவரால் இயற்றப்பட்டது. தேவி உபாசகர்களுக்கு, தேவி பாகவத புராணம் மற்றும் தேவி உபநிடதங்கள் எத்தனை முக்கியமானோதோ  தேவி மஹாதமியமும் அத்தனை முக்கியம் வாய்ந்த நூலாக உள்ளது.

இதனை பாராயணம் செய்து பூஜைகளை செய்ய வேண்டும் எனில்  அதை நல்ல குருவிடம் இருந்தே முறைப்படி தீக்ஷை எடுத்துக் கொண்டு துவங்க வேண்டும். ஏன் என்றால் துர்கா சப்த  சதி மந்திர சக்தியைக் கொண்டது. தேவி மஹாதமியத்தின் பெருமை என்ன என்றால் அதை தினசரி அல்லது முக்கியமாக நவராத்ரி காலத்தின் ஒன்பது நாட்களிலும் பூஜைகள் இல்லாத பாராயணம்   செய்து வந்தால் சகல காரிய சித்தியும் உண்டாகும். சண்டி தேவியின் அருள் பெற்றவன் மட்டுமே இதை பாராயணம் செய்ய முடியும் என்பது ஐதீகம்.

இந்த நூலை பாராயணம் செய்பவன் கடுமையான துன்பத்தில் மாட்டிக்கொண்டாலும் நொடிப் பொழுதில் அவனை சண்டி தேவி மீட்டு விடுவாள். ஏழ்மையில் இருந்து விடுதலை கிடைக்கும், பகைவர்களை வெல்லும் திறமை உண்டாகும். மனதில் தம்மையே அறியாமல் ஏற்படும் பீதி மற்றும் அச்சம் விலகும். இந்த பாராயண ஸப்தம் கேட்கும் இடங்களில் உள்ள தீய சக்திகள் ஒழிந்து போகும். தேவி மஹாத்மியத்தை பாராயணம் செய்வதின் மூலம் மூன்று வேதங்களான ரிக், யஜுர் மற்றும் சாம வேதத்தை பாராயணம் செய்தப் பலனும் கிடைக்கும் என்பார்கள்.

துர்கா என்றால் அணுகுவதற்கு அரிதானவள் என்பதும் ஒரு பொருள் ஆகும். துர்கா என்றால் துர்கதி அடையாமல் நம்மை காப்பாற்றுபவள் என்றும் அர்த்தம். தேவி சூக்தத்தில் அம்பிகை கூறுகிறாள் ”எவன் என்னை தியானிப்பானோ, எவன் என்னிடம் சரண் அடைகிறானோ அவனை நான் ரிஷியாகவும், பெரும் மேதையாகவும் ஆக்கிடுவேன்”. அதனால்தான் கூறுவார்கள் இந்த உலகம் என்ற மாயையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும்.

அன்னை மேலும் கூறுவாள் ” இந்த உலகில் நான் ஒருவளே இருக்கிறேன். என்னைத் தவிர என்னைப் போன்ற இரண்டாமவர் கிடையாது. அனைத்தையுமே படைத்தவள் நான். ஒன்றாகி இருந்த பிரும்மமான நான் இரண்டாகி என்னைப் பெருக்கிக் கொண்டேன் என்பதின் காரணம் உங்களைக் காக்கவே”.

இந்த நூலின் முதல் பாகத்தில் முதல் அத்தியாயம் (1) மட்டுமே உள்ளது. அது பிரும்மாவினால் படைக்கப்பட்ட இரண்டு அசுரர்களான மதுகைடபர் வதத்துடன் முடிவடைகின்றது. அடுத்த பாகம் அத்தியாயம் இரண்டு முதல் நான்குவரை (2-4) உள்ளது. இதில் மகிஷாசுரமர்தனின் வதம் உள்ளது. அத்தியாயம் ஐந்து முதல் பதிமூன்றுவரை (5-13) உள்ள மூன்றாம் பாகமோ அனைத்து விருப்பங்களும் நிறைவேற பிரார்த்திக்கும் வகையில் அமைந்து உள்ளது.

அக்ஞானத்திற்கு ஆதாரமாக மாயையை ஒழித்து ஞானத்தை தர வந்தவளின் மகிமையை எடுத்துரைக்க எழுதப்பட்டதே சண்டி சப்த சதி எனும் நூல். தமது பரப்பிரும்ம ரூபத்தை அம்பிகை எப்படி வெளிப்படுத்தி போதிக்கிறாள் என்பதைக் கூறுவதே தேவி மகாத்மியம் என்ற இந்த மகாத்மியம்.

பரமாத்மன் மூன்று லோகங்களான ஆகாயம், பூலோகம் மற்றும் பாதாளம் என்பவற்றை படைத்தபோது,  பூலோகத்தின் அதிபதி தெய்வமாக சக்தி தேவி எனப்படும் பார்வதி தேவியின் அவதாரமான துர்கா தேவியை படைத்தாராம். அதனால்தான் பூலோகத்தில் துன்பங்களை தந்து கொண்டு இருந்த  அசுரர்கள் மற்றும் அரக்கர்களையும்  சக்தி தேவதைகள் எனப்படும் பெண் தெய்வங்களே பல்வேறு அவதாரங்களை எடுத்து அழித்தார்கள் என்பதை புராணங்கள் மூலம் அறிய முடியும். அது மட்டும் அல்ல அனைத்து தெய்வங்களின் படை வீரர்களும் பெண் தேவதைகள் மற்றும் யோகினிகள்தான். அதனால்தான் சக்தி தேவதைகளின் பெருமைகளைக் கூறும் பாராயண நூல்களே அதிகம் உள்ளன.  சில நிலைகளில் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்து அசுர சக்திகளை அழித்தபோதும் அவருக்கு அந்த அழிக்கும் மூல சக்தியை தந்தது சக்தி தேவிதான் என்பதாகவும் கூறப்படுகின்றது.

சண்டி சப்த சதியில் வரும் ஒரு கதையில் சுரதன் என்ற அரசன் மற்றும் சமாதி எனும் வைசியன் என்ற இருவரும் தமது இல்லங்களில் இருந்து விரட்டப்பட்டவர்கள். அவர்களது கதையை பார்க்கலாம் .

………தொடரும்