மாகாளேஸ்வர் ஆலயம்
சாந்திப்பிரியா

மாகாளேஸ்வர் ஆலயம் என்றாலே உஜ்ஜயினியின் நினைவுதான் அனைவருக்கும் வரும். ஆனால் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற பெருமையை கொண்ட இன்னொரு மாகாளேஸ்வர் ஆலயம் பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் உள்ள இரும்பை மாகாளம் என்ற ஊரில் உள்ளது. இந்த இடத்துக்கு செல்ல திண்டிவனத்தில் இருந்து கிளியனூர் வழியே பாண்டிச்சேரி செல்லும் பாதையில் செல்ல வேண்டும்.

இந்த தலம் எழுந்த வரலாறு சுவையானது.  இந்த தலம் எழக்காரணம் காடுவெளிச் சித்தர் என்ற உண்மை பலமாக உள்ளது. காடுவெளி என்பது வெட்ட வெளியைக் குறிக்கும். வெட்டவெளி என்பது சூன்யப் பிரதேசம் ஆகும்.  ஆகவே இந்த முனிவர் இவர் அந்த வெட்ட வெளியான  சூனியத்தையே   தியானித்து சித்தி பெற்றதால் காடுவெளிச் சித்தர் என்று அழைக்கப்பட்டார் என்பது ஒரு நம்பிக்கை. இவர் காஞ்சிபுரத்தில் சமாதியடைந்ததாக சிலர் கூறுகின்றனர். இவருடைய வாழ்கை  வரலாற்றை யாரும் முறையாக எழுதவும் இல்லை. இவரைப் பற்றிய பல செய்திகள் வாய் மொழிக் கதைகளாகவே உள்ளன.
இந்த ஆலயத்தைக் குறித்து சில இடங்களில் கூறப்படும் கதைகள் சற்றே மாறுபட்டு உள்ளன. ஒரு காலத்தில் இந்தப் பகுதி பஞ்சத்தினால் சூழப்பட்டு பலர் மரணம் அடைந்தார்கள். அப்போது அந்தப் பகுதி மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்த காலம் ஆகும்.  இந்தப் பகுதியை அவனால் நியமிக்கப்பட்ட குறுநில மன்னன் ஒருவன் ஆண்டு கொண்டிருந்தான். மழை இல்லை என்பதால் பூமி வறண்டு, எதுவுமே விளையாமல் போயிற்று . எத்தனை யாகம் செய்தும் மழை பொழியவில்லை. பஞ்சத்தினால் நாடே தவிக்க, என்ன செய்வது எனப் புரியாமல் போன மன்னன் தமது அரசவைக் கூட்டி பஞ்சத்தை நிவர்த்திக்க என்ன செய்யலாம் என்ற ஆலோசனையை நடத்தினார். அப்போது அவர்கள் அந்த நாட்டின் ஒரு பகுதியில் கடும் தவத்தில் அமர்ந்திருந்த காடுவெளிச் சித்தர் என்பவருடைய உதவியினால் மட்டுமே அதற்கு தக்க வழி காண முடியும் என்பதை ஜோதிட ரீதியாக அறிந்து கொண்டார்கள்.

ஆனால் தவத்தில் அமர்ந்து உள்ள முனிவருடைய தவத்தைக் கலைத்து யார் அவரை எழுப்ப இயலும் ? அவர் தவம் கலைந்து   சாபமிட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயமும் அவர்களை சூழ்ந்து கொண்டது. ஆகவே நாடு முழுவதும் மன்னனின் பரிதவிப்பையும், பஞ்ச நிலைமையையும் தண்டோரா போட்டு எடுத்துக் கூறி அந்த முனிவருடைய தவத்தைக் கலைத்து அவரை எழுப்ப யாராவது முன் வரத் தயாராக உள்ளார்களா எனக் கேட்டார்கள். ஆனால் இரண்டு மூன்று நாள் ஆகியும் அந்த செயலை செய்ய எவரும் முன்வரவில்லை.  காரணம்  பயம்.

 காடுவெளிச் சித்தர் 

அரசனுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை. அப்போது அகஸ்மாதாக அந்த ஊருக்கு வந்திருந்த ஒரு தேவதாசி நாட்டு நிலைமையைக் கண்டு மனம் உருகி தானே சென்று அந்த முனிவரை எழுப்பி அவர் உதவியை நாட சம்மதித்தாள். அதற்காக அவர் கோபம் கொண்டு தன்னை சபித்தாலும், தான் மக்களின் நலனுக்காக உயிர் இழக்கவும் தயாராக இருப்பதாக கூறிவிட்டு, காடுவெளிச் சித்தர் தவம் இருந்த இடத்துக்குச் சென்றாள். அந்த முனிவரை சுற்றி பல மரங்கள் எழுந்திருந்தன. அந்த மரங்களில் இருந்து அவர் கைகளில் விழும் சில பழங்களை மட்டும் ஒரு நாளைக்கு ஒரு வேளை, இருவேளை என அவருடைய நீண்டு இருந்தக் கைகள்  வாய் வரை கொண்டு செல்ல அவற்றை அவர் உண்டு வாழ்ந்து வருவதைக் கண்டாள். ஆனால் அவருடைய  கண்கள் விழிக்கவோ, வாய் பேசவோ, சுற்றிலும் நடப்பதை உணரவோ இல்லை. ஒரு இறந்த சடலம் போல தவத்தில் இருந்தவர் உண்டதெல்லாம் மரங்களில் இருந்து விழுந்த பழங்கள் மட்டுமே. அவர் முன்னால் சென்று பலவகையான பாடல்களைப் பாடியும், ஆடியும் அவர் தவத்தை கலைக்க முயன்ற தேவதாசி தனது செயல்களில் தோல்வியையே கண்டாள் .

ஆகவே அவள் வேறு வழியைக் கையாள முடிவு செய்தாள். மரங்களில் இருந்து சில பழங்களைப் பறித்தாள். அவற்றை வெட்டி அவற்றுக்குள் உப்பும் காரமும் சேர்த்து அவர் கைகளில் போட்டாள். சில நாட்கள் கழிந்தன. உப்பும், காரமும் தவத்திலோ அமர்ந்து இருந்தவருடைய  உடலில் சேர நாக்கு ருசியை சுவைக்க ஆரம்பித்தது. ஒருநாள் அவர்  கையில் தேவதாசி வேண்டும் என்றே உப்பும், காரமும் கலக்காமல் வைத்தப் பழத்தின் சுவை பிடிக்காமல் அவர் கண்கள் தாமாகத் திறந்து கொண்டதும், அதையே எதிர்பார்த்து காத்திருந்த தேவதாசியும் நடந்த அனைத்தையும் கூறி, அவர் தவத்தைக் கலைத்த தன்னை மன்னித்து விடுமாறும், மடிந்து கொண்டு இருக்கும்  மக்களை காக்க அவர் உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தாள். கண் விழித்த முனிவரும் அவள் கூறியதைக் கேட்டப் பின் அவள் மீது கோபப்படாமல் அவளை வாழ்த்தினார். ஆவலுடன் அரண்மனைக்குச் சென்று அரசனை சந்தித்தார். அந்த ஊரில் ஒரு சின்ன சிவன் ஆலயத்தை நிறுவி அங்கு தங்கி அதைப் பூஜிக்கலானார். ஒரு சில நாளிலேயே கடும் மழைப் பொழிந்தது. நாட்டில் பஞ்சம் விலகத் துவங்கியது.

ஆகவே அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட ஆலயத்தில் பெரும் விழா ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். விழாவும் துவங்கியது. அந்த விழாவில் ஆடல்கள், பாடல்கள் நடைபெற்றன. அப்போது அந்த விழாவின் நாட்டிய நிகழ்ச்சியில் காடுவெளிச் சித்தரை தவத்தைக் கலைத்து அழைத்து வந்த தேவதாசியும் நடனம் ஆடிக் கொண்டு இருந்தபோது அவள் கால்களில் இருந்த ஒரு சலங்கை அறுந்து  விழுந்தது.

 தேவதாசி நடனம் 

அதை எடுத்துக் கொண்டு போய் அவள் கால்களில் மாட்டி விட்ட முனிவரின் செய்கையைக் கண்டு அங்கு கூடி இருந்தவர்கள் கேலி செய்தார்கள். அதைக் கண்ட அந்த சித்தர் கோபம் அடைந்து இறைவனை நோக்கிப் பாடத் துவங்க, தனது பக்தனுக்கு நேர்ந்த கதியைக் கண்டு கொதித்துப் போன சிவபெருமானின் ரூபமான சிவலிங்கத்தின் தலை மூன்று பகுதிகளாக வெடித்துச் சிதறியது. அதைக் கண்ட அனைவரும் பயந்து ஓடினார்கள். அங்கு ஓடோடி வந்த மன்னன் முனிவரிடம் தனது மக்களின் அறியாமையினால் நிகழ்ந்த அவமானத்துக்கு தானே மன்னிப்புக் கோரி சிவலிங்கத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டுகோள் விடுத்தார். அதைக் கேட்ட முனிவரும் சினம் தணிந்து மீண்டும் ஒரு பாடலைப் பாட அந்த வெடித்துச் சிதறிய சிவலிங்கத்தின் தலை மீண்டும் ஒன்றாகியது. அதன் மீது அவரே செப்புத் தகட்டை வைத்து பந்தனம் செய்தார். ஆகவே இன்றும் அங்குள்ள சிவலிங்கத்தில் தலையில் வெடித்த இடத்தின் தழும்புகள் உள்ளன. அதன் பின் அந்த இடத்திலேயே அந்த சிவலிங்கத்திற்கு ஒரு ஆலயம் எழுப்பினார்கள். நாடும் செழிப்புற்றது. மாகாளத்தில் இப்படியாக காடுவெளிச்  சித்தரால் உருவான சிவன் ஆலயமே தென் இந்தியாவின் மாகாளீஸ்வரர்  ஆலயம் எனப்படுகிறது.