சாந்திப்பிரியா 
பாகம்- 9
 
திருக்கோணீ ஸ்வரர் ஆலயம் முன்னர் திருக்கோணமலை கோணீஸ்வரர் கோவில் என்றுதான் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இலங்கையின் கிழக்கு கோடியில் உள்ள திருகோணமலையில் சுவாமி பாறை (சுவாமி மலை என்றும் கூறுகிறார்கள்) எனும் மலை உச்சியில் திருகோணமலை பிரதேசத்தைப் பார்த்தவாறு கம்பீரமாக அமைக்கப்பட்டு இருந்த இந்த ஆலயம் கிறிஸ்து பிறக்கும் முன் காலத்தை சேர்ந்த 1580 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. ஆறாம் நூற்றாண்டில் இந்த கோவிலே மாபெரும் சிவாலயமாக இருந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சுவாமி மலையில் திருக்கோணீஸ்வரர் ஆலயத்தைத் தவிர இன்னும் இரண்டு ஆலயங்களும் இருந்துள்ளன.
முதல் பராந்தக சோழ மன்னன் என்பவனுக்கு அஞ்சி தன் நாட்டில் இருந்து தப்பி இலங்கைக்கு பாதுகாப்புக்காக வந்திருந்த ஒரு பாண்டிய மன்னன் தம்பலகமத்தில் திருப்பணிகள் செய்ததாக சில வரலாற்றுக் குறிப்புக்கள் உள்ளன. அதன் பின் இந்தியாவில் திருப்பதியில் உள்ள ஆலய கோபுரக் கலசங்களை தங்கத் தகட்டில் அமைத்த ஜடவர்ம வீர பாண்டியன் என்ற அதே மன்னனே திருக்கோணீ ஸ்வரர் ஆலய கோபுரக் கலசங்களையும் தங்கம் மற்றும் வெள்ளித் தகட்டினால் அலங்கரித்தான் என்றும் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன . அவரைத் தவிர வேறு பல்லவ மன்னர்களும் இந்த ஆலயத்தின் மேன்மையை அறிந்து கொண்டு அதற்கு நிறைய நிதி உதவி செய்துள்ளார்கள். இந்த ஆலயத்தில் ஆயிரம் தூண்கள் இருந்தது என்றும் வானளாவிய அளவில் அது கட்டப்பட்டு இருந்தது என்றும் கூறுவார்.
இந்த நிலையில்தான் மேற்கு நாட்டில் இருந்த போர்த்துகீசியர்கள் வர்த்தகம் செய்ய ஆசைக் கொண்டு கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம் செல்லத் துவங்கினார்கள். அந்த காலகட்டத்தில் கிழக்குப் பகுதிகளில் பல நாடுகளில் அரசியல் ஸ்திரத் தன்மை இல்லாமல் இருந்தது. ஆகவே எங்கெல்லாம் அரசியல் ஸ்திரத் தன்மை இல்லாமல் இருந்தனவோ அங்கெல்லாம் இருந்த அந்த நாட்டின் மீது படையெடுத்து அந்த நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டே வந்த போர்த்துகீசியர்கள் இலங்கை மீதும் படையெடுத்து இலங்கையைக் கைப்பற்றினார்கள். அப்போது இந்த திருகோணமலைப் பிரதேசமும் அவர்கள் கையில் விழுந்தது. இந்த ஆலயத்தைக் கண்ட போர்த்துகீசியர் பிரமிப்பு அடைந்தார்கள். வானளவு உயரமான கோணீஸ்வரர் ஆலயம் அவர்களது கண்களை உறுத்தியது.
அது மட்டும் அல்ல அந்த இடத்துக்கு பெருமளவிலான மக்கள் பல பிரதேசத்திலும் இருந்து வந்து வழிபட்டுக் கொண்டு இருந்ததும், பல மன்னர்களின் ஆதரவினால் அந்த ஆலயம் பெரும் செல்வம் நிறைந்த ஆலயமாக இருந்ததையும், பெரும் புகழ் பெற்று இருந்த அந்த இடமே இந்து சமயத்தின் கடற்கரை விளக்கு போல அமைந்து இருந்ததையும் கண்டு பொறாமைக் கொண்டார்கள். இந்த ஆலயம் இருக்கும்வரை தம்முடைய சமயம் அங்கு தழைத்தோங்க முடியாது என்பதையும் உணர்ந்து கொண்டார்கள். ஆகவே அந்த ஆலயத்தின் செல்வத்தைக் கொள்ளையடித்து அந்த ஆலயத்தை தரை மட்டமாக்க முடிவு செய்து அதற்கான நாளையும் குறிப்பிட்டார்கள். ஆனால் அதை நேரடியாக செய்ய முடியாத அளவு ஆலயம் பாதுகாப்பாக இருந்து வந்திருந்தது. ஆலயத்தின் தினசரி பூஜைகளைத் தவிர பல வருட உற்சவங்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.
இந்த நிலையில் 1624ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று எப்போதும் போல ஸ்வாமியை ஊர்வலமாக நகரில் எடுத்துச் சென்று வலம் வரும் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக மாதுமை அம்பாள் (பார்வதி தேவி) சமேத திருக்கோணேச்சரப் பெருமான் திருவுலாவாக அடியார்களுடன் கோயிலிலிருந்து கிளம்பி நகருக்கு எழுந்தருளினார். அந்த தருமனத்தையே எதிர்பார்த்திருந்த போர்த்துக்கேயப் படை வீரர்கள் பிராமணர்கள் போல வேடம் தரித்து ஆலயத்துக்குள் ஸ்வாமி தரிசனம் செய்யப் போவது போல பாசாங்கு காட்டி விட்டு கோவிலுக்குள் புகுந்தார்கள். அதாவது திருகோணேச்சரப் பெருமான் திருவுலாவுக்கு எழுந்தருளிய பின்னரே போர்த்துக்கேயர்  கோவிலுக்குள்  புகுந்தனர்.  அந்த நேரத்தில் கோயிலின் உள்ளே பூசாரிகள் சிலரும் ஆலய வேலையாளரும் மட்டுமே இருந்தார்கள்.
கொன்ஸ்தந்தைன் டீசா என்ற போர்த்துகீசிய தளபதியின் தலைமையில் ஆலயத்துக்கு உள்ளே நுழைந்த படையினர் உள்ளே நுழையும் போது தம்மை எதிர்த்தவர்களை எல்லாம் வெட்டிக் கொன்று விட்டு கோயிலிலிருந்த தங்க வெள்ளி நகைகளையும் விலை மதிப்புமிக்க பிற பொருள்களையும் சூறையாடிக் கொண்டு சென்றனர். அதுமட்டும் இல்லாமல் மீண்டும் பீரங்கிகளுடன் அங்கு வந்த போர்துகீசியப் படையினர் அந்த கோயிலை முற்றிலுமாக இடித்து அழித்தனர்.
அதற்கு சில நாட்களுக்கு முன்னர் அங்கு வந்திருந்த ஒரு போர்துகேசியப் படை தளபதி ஒருவன் அந்த ஆலயக் கட்டுமானத்தின் அழகைக் கண்டு பிரமித்துப் போய் ஒரு ஓவியரை வரவழைத்து அந்த ஆலயத்தின் தரைப் படத்தை வரைந்து கொண்டார் என்றும் அந்தப் படம் போர்த்துகீசிய நாட்டு கலை அரங்கில் உள்ளதாகவும் ஒரு செய்தி உள்ளது. அந்த வரை படத்தின் மூலம்தான் போர்த்துகீசியர் அழித்த கோயிலில் ஆயிரங்கால் மண்டபமும் பெரியதொரு தீர்த்தக்கேணியும் பிற மண்டபங்களும் இருந்தன என்பது தெரிய வந்தது. கொன்ஸ்தந்தைன் டீசா செய்த சிவ துரோகத்துக்காக அவன் 1630ம் ஆண்டு வேறு சிலர் செய்த சூழ்ச்சியில் அகப்பட்டுக் கொல்லப்பட்டான் என்பதும் ஒரு வரலாறு.
ஆனால் அப்படி ஆலயத்தை அவர்கள் சூறையாட உள்ளார்கள் என்பதை அறிந்து கொண்டிருந்த சில சிவ பக்தர்கள் போர்த்துகீசிய  படையினர் உள்ளே நுழையும் முன்னர்  மிகவும் ரகசியமாக வேறு ஒரு காரியத்தை செய்திருந்தார்கள்.
…..தொடரும்