சாந்திப்பிரியா
சிதம்பரத்துக்கு வடமொழியில் அநேக மான்மியங்கள் உண்டு. அவற்றில் ஒன்றே சிதம்பர மான்மியம் என்பது. சிதம்பரத்தின் மற்றொரு பெயராக அதை கோவில் என்றும் கூறுவார்கள். திருச்சிற்றம்பலம் எனக் கூறப்படும் சிதம்பரம் இந்த பூமியிலே முதன் முதலில் ஏற்பட்ட கோவிலாகவேஇருந்திருக்கக் கூடும் என்பது ஆன்மீக ரஹசியம் என்பார்கள்.
பண்டிதமணி திரு கணபதி பிள்ளை என்பவர் சிதம்பர மான்மியத்தை 1979 ஆம் ஆண்டில் கோவில் என்ற தலைப்பில் ஒரு நூலினை, 1955 ஆம் ஆண்டு ஒரு பத்திரிகையில் வெளியாகி இருந்த ஆறு பாக கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதி உள்ளார். ஆக தற்போது நான் எழுதி உள்ள இந்த மான்மியம் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் எழுதப்பட்டு இருந்த புராணக் கதையின் சாயல் ஆகும். ஆனால் பண்டிதமணி திரு கணபதி பிள்ளை என்பவரால் எழுதப்பட்டு உள்ள கோவில் எனும் நூலைத் தழுவி எழுதப்பட்டது என்னுடைய இந்த சிதம்பர மான்மியம். இதில் ஒன்றை கூற வேண்டி உள்ளது. அந்த நூலில் காணப்படும் விஷயங்களைக் கொண்டே இது எழுதப்பட்டாலும், அவற்றில் உள்ள அதே நடையில் இது எழுதப்படவில்லை. அதில் உள்ளதை அப்படியே காப்பி அடித்தும் எழுதவில்லை. காலத்துக்கு ஏற்ப சிலவற்றை அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்திலும், வேறு சில கதைகளில் காணப்படும் சில சம்பவங்களைக் கொண்டும், இதில் சில மாற்றங்களை செய்துள்ளேன் என்றாலும் கோவில் எனும் நூலில் அவர் கொடுத்துள்ள அடிப்படை விஷயங்களை மாற்றி எழுதவில்லை.
சிதம்பர ஆலய வரலாற்றை குறித்து பல்வேறு வரலாற்று செய்திகளும், கதைகளும் இருந்தாலும் சிதம்பர ஆலய நூல்களில் காணப்படாத பல அறிய செய்திகள் இவற்றில் இடம் பெற்று உள்ளன. ஆகவேதான் என் மனதுக்கு நிறைவாக இருந்த கோவில் எனும் நூலை என் கட்டுரைக்கு மூலமாக எடுத்துக் கொண்டேன். பண்டிதமணி திரு கணபதி பிள்ளை எங்கிருக்கிறார் அல்லது அவர் நிலை என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் யாழ்ப்பாணத்திலே வாழ்ந்து கொண்டு இருந்தவர் என்பது மட்டுமே தெரிந்தது. ஆகவே அவர் எங்கிருந்தாலும், அவருக்கு என் மனதார்ந்த நன்றியை இதன் மூலம் கூறுகிறேன்.