
சாந்திப்பிரியா
ஆதி காலத்தில் ஸ்ரீலங்கா என்று இன்று அழைக்கப்படும் அன்றைய இலங்கை, தென் இந்தியாவுடன் சேர்ந்திருந்த ஒரு நிலப் பகுதியாக இணைந்தே இருந்துள்ளது. ஆனால் காலப் போக்கில் இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட கடல் வெள்ளத்தினால் இலங்கையின் தற்போதைய நிலப்பரப்பு தென் இந்தியப் பகுதியில் இருந்து வெட்டுப்பட்டு தனி நிலப்பரப்பாகி தென் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே ஓடிய கடல் நீரினால் ஒரு தனித் தீவு ஆகி விட்டது. அந்த நிலை ஏற்படும் வரை நிலப்பரப்பு வழி மூலம் இரு நாடுகளுக்கும் இடையே இருந்த மக்கள் ஒருவருக்கொருவருடன் தொடர்ப்பு கொண்டு இருந்தார்கள். அதனால் அந்த காலத்தில் இரு பகுதிகளிலும் இருந்த ஆலயங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களுக்கு இரு நாட்டு மக்களாலும் தாராளமாக சென்று கொண்டு வர முடிந்தது.
ஸ்ரீலங்காவில் கிடைத்த சில கல்வெட்டு செய்திகளின்படி கிருஸ்துவர்கள் இந்த தீபகற்பத்துக்கு வருவதற்கு முன்னரே முருகப் பெருமான் ஸ்ரீலங்காவில் ஸ்கந்தன் என்றும் கதிர்காமன் என்றும் வழிபடப்பட்டு வந்துள்ளார். பத்தாம் நூற்றாண்டுகளில் இருந்த இலங்கை அரசாட்சியினர் ஸ்கந்த முருகனை தமது நாட்டை காக்கும் கடவுளாகவே ஆராதித்து வந்துள்ளனர். அதனால்தான் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஆலயம் என நம்பப்படும் கதிர்காமனுக்கு நிலப்பரப்பு மூலம் வந்து மக்கள் முருக வழிபாடு செய்துள்ளார்கள்.
கதிர்காமம் என்பது இலங்கையில் கொழும்பு நகரில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடம். ஸ்ரீ லங்காவின் தென்பகுதியில் அம்பான்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது கதிர்காமம் எனும் வனப் பிரதேசம். கதிர்+ காமம் என்பதே கதிர்காமனாயிற்று. கதிர் என்றால் சூரியன் என்றும் காமம் என்றால் அன்பு என்றும் கூறுகிறார்கள். ஆகவே சூரிய பகவான் விரும்பிய இடம் என்பதால் இது கதிர்காமம் என ஆயிற்று என்றும், காமம் என்றால் கிராமம் என்று அர்த்தம் வருவதினால் நெல் கதிர் போன்ற பயிர்கள் விளைந்த கிராமம் என்பதினால் கதிர்காமம் என ஆயிற்று என்றும் கூறுகிறார்கள்.
கதிர்காமத்தில் உள்ள கதிர்காமன் எனும் முருகன் ஆலயம் புகழ் பெற்ற, மெத்த மகிமை வாய்ந்த ஆலயம் என்றாலும் அது குறித்து உலகெங்கும் உள்ள மக்களுக்கு அதிகம் தெரியவில்லை. அந்த காலத்தில் இருந்து வந்த சாஸ்திர முறை வழிபாடுகளும் சமூகத்தில் விளங்கி வந்த பிராமணர்களின் ஆதிக்கமும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். ஏன் என்றால் அந்த காலங்களில் முருகனை பிராமணர்கள் தமது கடவுளாக ஏற்றது இல்லை என்பது உண்மை. முருகன் பிராமணர்கள் அல்லாதவர்களின் அதாவது திராவிட மக்களின் கடவுள் எனக் கருதப்பட்டு வந்திருந்தார். காலப்போக்கில் அந்த எண்ணம் மாறி அனைத்து சமூகத்தினராலும் ஏற்கப்பட்டவர் முருகன் என்றாலும் அந்த காலத்தில் இருந்த உண்மை நிலையைக் கூறாமல் இருக்க முடியாது. அந்த காரணத்தைத் தவிர இலங்கை தனி தீபகற்பம் ஆனபின் கடல் கடந்து செல்வது சாஸ்திர முறைக்கு மாறானது என நம்பிய அந்தணர்கள் முருகனை இந்தியாவில் இருந்த ஆறுபடை வீடுகளில் மட்டுமே ஆராதிக்கத் துவங்கி அதிகபட்சமாக திருச்செந்தூர் முருக ஆலயம் இருந்த கடல் பகுதிவரை மட்டுமே சென்று வந்துள்ளார்கள். அதனாலும் கதிர்காம யாத்திரை குறையத் துவங்கி அந்த ஆலயம் மக்களால் அதிகம் அறியப்படாமல் இருந்துள்ளது.
ஸ்ரீ லங்காவின் முருக வழிபாட்டு முறைகளை ஆராய்ந்தோம் எனில் ஸகந்த-முருகன் ஆலயங்களில் புகழ் மிக்கதும் புனிதமான ஆலயம் என்ற பெருமையையும் கதிர்காமன் ஆலயமே பெறுகின்றது. கதிர்காமனைப் பற்றிய பல பக்தித் தோத்திர நூல்களும் தலப்புராண புத்தகங்களும் தமிழில் உள்ளன. அவற்றில் பல புத்தகங்கள் முறையாக எழுதப்படவில்லை என்பதினால் கதிர்காமனை பற்றிய வரலாற்று செய்திகளை முழுமையாகவும் சரியாகவும் தமிழ் மக்களினால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்படி எழுதப்பட்ட நூல்களில் மிகப் பழமையானதும், 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகவும் கூறப்படும் அருணகிரிநாதர் பாடல்கள் மூலமே சைவ தமிழர்கள் கதிர்காமனை அறிந்து இருந்தார்கள் என்பதையும் அது ஒரு முருக வழிபாட்டுத் தலமாக இருந்தது என்ற உண்மை நிலையும் தெரிய வருகின்றது. அருணகிரிநாதர் ‘திருப்புகழில்’ கதிர்காமனைப் போற்றும் பதினாறு பாடல்கள் (செய்யுட்கள்) உள்ளன. கதிர்காம முதுர் என்று அழைக்கப்பட்ட கதிர்காமம் மிகப் பழமையானது. அந்த காலத்தில் முருக வழிபாட்டுத் தலத்தின் யாத்திரையை மேற் கொண்ட பக்தர்கள் இந்தியாவின் மற்ற இடங்களில் இருந்த ஆலயங்களுக்கு சென்ற பின் மிக முக்கியமான ஆலயம் என கருதப்பட்ட கதிர்காமனுக்கும் சென்றுள்ளனர்.
அருணகிரிநாதரின் திருப்புகழ் என்ற நூலில் முருகப் பெருமான் கதிர்காமனில் மலை உச்சியில் வசிப்பதாக எழுதப்பட்டு இருந்ததில் ‘கதிரமலை’ என்ற புகழ் மிக்கத் தலமாக இருந்து இருக்கின்றது என்பது புரியும். திருப்புகழ் இயற்றப்பட்ட காலத்தின் பொழுது முருகன் வேடர் குலப் பெண்ணுடன் அந்த மலையில் இருந்ததாக நம்பப்பட்டது. கதிர்காமனில் உள்ள முருகனின் ஆலயம் எழுந்த கதையும், வழிபாட்டு முறையும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
முருகப் பெருமான் பிறந்த கதை அனைவரும் அறிந்ததே.
சிவபெருமானின் முகத்தில் இருந்து வெளியான ஆறு தீப்பொறிகளை வாயு பகவான் ஏந்திக் கொண்டு போய் கங்கை நதியில் போட, கங்கையோ அதைக் கொண்டு போய் சரவணப் பொய்கை எனும் குளத்தில் தள்ளி விட, முருகன் ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாகப் பிறந்தார். அவரை ஆறு கிருத்திகை தேவதைகள் எடுத்து வளர்த்து பார்வதியிடம் கொண்டு சென்று கொடுக்க, அவள் அந்த ஆறு குழந்தைகளையும் தன்னுடன் அணைத்துக் கொள்ள அவை அனைத்தும் ஒன்றாகி ஆறு முகத்தைக் கொண்ட ஒரு குழந்தை ஆயிற்று. அதுவே முருகன் அவதரித்த வரலாறு.
அதன் பின் நாரதர் கொண்டு வந்து கொடுத்த மாம்பழத்தை உலகை மூன்று முறை சுற்றி விட்டு யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கே கொடுப்பேன் என்று கூறிய சிவபெருமானையும் பார்வதியையும் மூன்று முறை சுற்றி விட்டு வந்த விநாயகர், தாய் தந்தையை சுற்றுவது உலகை சுற்றியதற்கு சமம் ஆகும் என்று விளக்கி விட்டு தான் வெற்றி பெற்றதாகக் கூறி பழத்தைப் பெற்றுக் கொள்ள, அதனால் தான் ஏமாற்றப்பட்டதாக எண்ணிய முருகன் கோபமுற்று சிவன் பார்வதியை பிரிந்து சென்றார். அதன் பின் கோபம் தணிந்தவர் தனது பெற்றோர்களுடன் ஒன்று சேர்ந்தாலும் தனக்கென பூமியில் ஒரு இடம் வேண்டும் என்பதற்காக ஆறு இடங்களில் சென்று தங்கினார் (ஆறுபடை வீடுகள்) .
அதன் பின் அவர் எதற்காக அவதரித்தாரோ அந்தக் கடமையான சூரபத்மனை அழிக்க ஸ்ரீலங்காவிற்கு சென்று அவனை வதம் செய்தார். (அந்த காலத்தில் அதன் பெயர் ஸ்ரீலங்கா என்று இல்லை. ஆகவே முருகன் சூரனை அழிக்கச் சென்ற இடத்தைக் குறிப்பிடுவதற்காக சூரன் இருந்த அன்றைய இலங்கையின் பகுதியைக் குறிக்க ஸ்ரீலங்கா என்றே இதில் குறிப்பிட்டு உள்ளேன்). அதனால் மனம் மகிழ்ந்த தேவர்கள் முருகப் பெருமானை அங்கேயே தங்கி இருக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். அவர் அங்கு தங்குவதற்காக தேவர்களின் கட்டிடக் கலைஞரான விஸ்வகர்மாவிடம் தமக்கு மிகப் பெரிய மாளிகை அங்கு கட்டித் தருமாறு அங்கு அனுப்ப, விஸ்வகர்மாவும் கதிர்காமன் என்ற வனப் பகுதில் அவருக்கு பெரிய மாளிகைக் கட்டி முடிக்க, முருகன் அங்கேயே ஸ்கந்தனாக தங்கினார் என்பது இங்குள்ள வரலாறு. அதனுடன் சேர்த்து விஸ்வகர்மா அங்கு கட்டிய தற்போது உள்ள அதே ஆலயத்தின் அன்றைய பெயர் சிந்தாமணி ஆலயம் என்கிறார்கள். முருகன் அங்கு இருந்தபோது அந்த வனப் பகுதியில் இருந்த வேத்தாக்கள் எனப்படும் வேட இனத்தவர் வளர்த்த வள்ளியையும் அவர் காதலித்து மணந்து கொண்ட நிகழ்ச்சியும் நடந்தது.
மத்திய நூற்றாண்டில் எழுதப்பட்டு இருந்த ஸ்ரீலங்காவின் நூல்களில் உள்ள முருகனைக் குறித்த கதை தென் இந்தியாவில் கந்த புராணத்தில் எழுதப்பட்டிருந்த முருகக் கதைகளை விட சிறிது மாறுபட்டே உள்ளன. ஸ்கந்த முருகனின் புராணக் கதைகளை உள்ளடக்கி இந்தத் தீபகற்பத்தில் எழுதப்பட்டுள்ள சமஸ்கிருத நூலான ‘தஷிண கைலாச மான்மியம் ‘ (Daksina-kailasa manmiyam) என்பதில் எழுதி உள்ளது என்ன எனில் ”குருன்சா மலையை இரண்டாகப் பிளந்து அசுரன் ‘தாருகனை’ தன் வேலால் குத்தி அழித்த பின் ‘தேவகிரிக்கு’ சென்ற ‘முருகன்’ , அங்கிருந்துக் கிளம்பி ‘திருச்சைநல்லுர்’ மற்றும் பிற புனித இடங்களுக்கும் சென்றார். அதற்குப் பிறகு ‘குரு’ பகவான் மூலம் ‘சூரன்’ மற்றும் அவன் சகோதரர்கள் செய்து வந்த அக்கிரமங்களைப் பற்றிக் கேட்டறிந்தவற்றை ‘வீரவாகு தேவர்’ தலைமையில் பெரும் படையுடனும், எண்ணற்ற பூத கணங்களுடனும் கதிர்காமனை வந்து அடைந்தார். ‘எம கூடம்’ என்ற இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஆலயத்தில் முருகன் தங்கி இருக்க அவருடன் சென்றவர்கள் அக்கம் பக்கத்தில் இருந்த இடங்களில் தங்கினார்கள். அங்கிருந்து ‘மகேந்திரபுரி’ என்ற இடத்தில் இருந்த ‘சூரபத்மனிடம்’ தூதராக ‘வீரபாகு தேவர்’ சென்றார். முருகன் சார்பில் சூரன் திருந்துவதற்கு விடுத்த எச்சரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்கு போலாகி விட, அந்த முயற்சி தோல்வி அடைந்ததும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே நடந்த போரில் கதிர்காமனில் தங்கி இருந்த முருகனும் அவர் படை வீரர்களும் அதையே தங்களுடைய படை வீடாக மாற்றிக் கொண்டு யுத்தம் செய்தனர். மகேந்திரபுரிக்குச் சென்று சூரனை வெற்றி கொண்டதும் மீண்டும் கதிர்காமனுக்கு திரும்பிய முருகன் அதையே தன்னுடைய தங்கும் இடமாக மாற்றிக் கொண்டார். சூரனைக் கொன்றப் பின் அங்கு வந்து தங்கிய முருகனிடம் தேவர்கள் வேண்டிக் கொண்டபடி அவர் அங்கு ஒன்பது தீர்த்தங்கள் எனப்படும் நீர் நிலைகளை அமைத்தார். அந்த நீர் நிலைகள் இன்றும் அங்குள்ள மலைப் பிரதேசத்தில் உள்ளன என்றாலும் மேனிக் கங்கா எனும் நதியே மிகப் புனிதமான நதியாக கதிர்காமனில் கருதப்படுகிறது.
அன்றைய ‘ஜாப்னா பட்டினம்’ என்ற அழைக்கப்பட்ட வன்னி பகுதியில் உள்ள நகரில் 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘கதிரமலைப் பல்லு’ என்ற நூல் வள்ளியுடனான முருகனின் காதல் திருமணத்தைப் பாடலாகப் பாடி உள்ளது. கொத்தடிமைகளாக நிலங்களில் வேலை செய்து வந்த ‘பள்ளர்களின்’ வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் அமைந்துள்ள பாடலில் ஒரு கணவருடன் ஒன்றிணைந்து வாழும் இரு மனைவிகளின் சம்பாஷணையைப் போல அமைந்து உள்ளது அந்தப் பாடல். அதில் ஒருவள் இலங்கையை சேர்ந்தவள், இன்னொருவள் இந்திய நாட்டை சேர்ந்தவள். இருவரும் தங்களுடைய தாய் நாட்டின் பெருமையைக் கூறும் விதத்தில் அமைந்து உள்ளது அதில் காணப்படும் பாடல்கள் . ஸ்ரீலங்காவைப் பற்றி எழுதப்பட்டுள்ள உள்ள பாடலில் எல்லா இடங்களை விட சிறப்பானதும் புனிதமுமான இடம் கதிர்காமம் எனவும் அதைத் தொடர்ந்து அமைந்துள்ளவை ‘திருகேட்டீஸ்வரம்’ மற்றும் ‘திருக்கோணம்’ எனவும் கூறப்பட்டு உள்ளது (அவை இரண்டுமே ஸ்ரீலங்காவில் உள்ளன). கதிர்காமத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் அதை ‘கதிராபுரி’ என்றும் ‘கதிரை’ என்றும் கூறி உள்ளது. ‘கதிரை’ என்றால் தென் பகுதியில் வாழும் வேலன் என்ற பொருளில் ‘தென்கதிர் வேலன்’ என எழுதப்பட்டு உள்ளது. ‘கதிர்காமப் பாட்டு’ என்ற நூலில் ஸ்கந்த முருகனைப் போன்றே அனைத்து சக்திகளையும் கொண்டவர் கதிர்காமன் என்றும் அவரை ‘சங்கரியின் மகன்’ எனவும், ‘வள்ளியின் நாயகன்’ எனவும், மரங்கள் மீதும் பூங்காக்களிலும் வசிக்கும் தோகை விரித்தாடும் மயில் மீது அமர்ந்து உள்ளவர் எனவும் எழுதப்பட்டு உள்ளது. இவற்றில் இருந்து கதிர்காமன் ஆலயம் எத்தனை பெருமை பெற்று இருந்துள்ளது என்பது புரியும்.
உலகிலேயே விக்ரஹ ஆராதனை இல்லாமல், முருகனை வேல் வடிவிலும், ஜ்யோதி ஸ்வரூபமாகவும் வழிபடுவது இந்த ஆலயத்தின் விசேஷம் என்பது மட்டும் அல்ல, அங்குள்ள கதிர்காமனின் சன்னதியின் உள்ளே உள்ளதை வருடத்துக்கு ஒரு முறைதான் நமது கண்களினால் பார்க்கவே முடியும் என்பதும் ஆச்சர்யமூட்டும் செய்தியாகும். இந்த ஆலயத்தின் இன்னொரு அற்புதம் என்ன என்றால் கதிர்காம முருகனை தமிழர்கள் முருகன் என்று வழிபட, சிங்களவர்கள் மற்றும் புத்த மதத்தினர் அவரை கதிர்காம தேவியோ என்ற பெயரில் வழிபடுகிறார்கள். ஆகவே மூன்று சமூகத்தினரும் -தமிழர்கள், சிங்களவர் மற்றும் புத்த மதத்தினர்- ஒன்றிணைந்து போற்றும் கடவுளாக கதிர்காமன் உள்ளார். கதிர்காமனில் உள்ள முருகனை கலியுக வரதன் என்றும் கதிர்காமர் என்றும் கூறுவார்கள். மேலும் கதிர்காமனைப் பொறுத்தவரை அந்த ஆலயத்தில் வள்ளி தேவிக்கே அதிக முக்கியத்துவத்தையும் பெருமையும் கொடுக்கிறார்கள். காரணம் வள்ளியை கதிர்காமனில் இருந்த வேத்தா என்ற வேடுவ குலத்தவர்கள் வளர்த்து முருகனுக்கு மணமுடித்துக் கொடுத்ததினால் வள்ளி தேவியை உள்ளூரை சேர்ந்தப் பெண் என்று போற்றுகிறார்கள்.
அந்த மலைப் பிரதேசம் அமைதியான சூழ்நிலையில் இருப்பதினால் அங்கு இன்னமும் பல ரிஷி முனிவர்கள்- இறந்து விட்டவர்கள் மற்றும் உயிருடன் உள்ளவர்கள் – நமது கண்களுக்குத் புலப்படாமல் தவத்தில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை பரவலாகவே உள்ளது. அது மட்டும் அல்லாமல் பல நேரங்களில் அங்கு சென்ற யாத்ரீகர்களுக்கு அவர்கள் காட்டு விலங்குகளினாலும், இயற்கை சீற்றங்களினாலும் அபாயங்களில் சிக்கியபோது அவர்களுக்கு இனம் தெரியாதவர்கள் வந்து உதவி விட்டு வந்த சுவடு தெரியாமல் மறைந்து போய் விட்டார்கள் என்பதையும் அங்கு சென்று விட்டு வந்துள்ளவர்கள் கூறுவதுண்டு. அவர்கள் இது ஒன்றே அந்த பிரதேசத்தின் தெய்வீக நிலைக்கு எடுத்துக் காட்டாக உள்ளது.
ஆறுபடை வீடுகளுக்கும் விஜயம் செய்து விட்டு கதிர்காமனுக்கு வந்து தங்கிய முருகனுடன் அவருக்கு சேவகம் செய்து வந்த வேறு சிலரும் அவரைத் தொடர்ந்து வந்தார்கள். அவர்களும் முருகனுடனேயே வந்து கதிர்காமனில் தங்கி விட்டார்கள். அப்படி வந்தவர்களே பரம்பரை பரம்பரையாக கதிர்காம ஆலயத்தின் பண்டிதர்களாக உள்ளார்கள். ஸ்கந்தன் என்ற முருகனை ( வட நாட்டில் முருகனை ஸ்கந்தன் மற்றும் கார்த்திகேயர் என்ற பெயரில் அழைக்கிறார்கள்) பெண்கள் வணங்கக் கூடாது என்று அந்த காலத்தில் வட இந்தியாவின் சில பகுதிகளில் இருந்த ஆலயங்களில் கட்டுப்பாடு இருந்துள்ளது. அது கதிர்காமனிலும் ஓரளவு எதிரொலித்துள்ளது என்பது போல ஆண்களுடன் பெண்களும் இந்த ஆலயத்திற்குள் செல்லலாம் என்றாலும் கதிர்காமர் எனும் முருகனை நேரடியாக தரிசிக்கக் கூடாது என்பதற்காக இந்த ஆலயத்தில் உள்ள சன்னதி திரை சீலையினால் மூடப்பட்டே உள்ளது. கதிர்காம ஆலயத்துக்கு செல்பவர்கள் சன்னதியில் உள்ள கதிர்காமரை நேரடியாக தரிசிக்க முடியாது. அனைத்து பூஜைகளையும் மூடிய திரைக்குப் பின்னால் நின்றபடி உள்ள பூஜாரிகளே செய்வார்கள். இன்றைக்கு வள்ளி அம்மையின் வழித் தோன்றல்கள் என்று கூறிக் கொள்ளும் கபூரலாக்கள் என்கிற சிங்கள இனத்தவர்களே தமது வாய்களைக் கட்டிக் கொண்டு திரைக்குப் பின்னால் முருகனுக்கு பூஜை செய்கிறார்கள். அவர்களால் திரைக்குப் பின் வைக்கப்பட்டு உள்ள ஒரு பெட்டிக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. பெட்டியில் இருப்பது என்ன என்று இது வரை பரம ரகசியமாகவே இருக்கிறது என்றாலும் அதற்குள் உள்ளது முருகனின் யந்திரமே என்றும், இல்லை அதற்குள் சிவந்த சந்தனக் கட்டையில் செதுக்கப்பட்ட முருகனின் சிலை உள்ளாதாகவும் பலவாறு நம்பிக்கைகள் உள்ளன. திரையினால் மூடப்பட்டுள்ள அந்த அறைக்குள் பூஜாரிகளைத் தவிர வேறு எந்த பக்தரும் செல்ல முடியாது. மேலும் அந்த சன்னதி காற்றோ, வெளிச்சமோ உட்புகாத முறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் அந்த சன்னதிக்கு முன்னால் உள்ள அறை வரை மட்டுமே சென்று காணிக்கைகளைத் தர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதற்கும் சன்னதிக்கும் இடையே சிறு கதவையும் அமைத்து உள்ளார்கள்.
இந்த பழக்கம் இலங்கையில் உள்ள அனைத்து கதிர்காமர் ஆலயங்களிலும் இன்றும் கடை பிடிக்கப்படுகிறது. இதற்கான வலுவான காரணம் தெரியவில்லை. ஸ்கந்தன் என்கின்ற கதிர்காமன் அங்கு வள்ளியுடன் ஏகாந்தமாக இருப்பதாகவும், அவருக்கு மக்களால் எந்த தொந்தரவும் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் அந்தப் பழக்கத்தை பண்டைய கால பண்டிதர்கள் ஒரு ஐதீகமாக கடை பிடித்து வைத்திருக்கலாம்.
இந்த ஆலயத்தில் கதிர்காமரை ஜ்யோதி வடிவத்தில் வணங்குகிறார்கள். சன்னதியின் உள்ளே முருகனைக் குறிக்கும் எந்த சிலையுமே வைக்கப்படவில்லை. ஆனால் அதற்கு பதிலாக அங்கு சட்கோண யந்திரம் ஒன்று ஒரு பேழையில் வைக்கப்பட்டு உள்ளது. அது முருகனின் மந்திரமான சடாக்ஷர என்ற மந்திரத்தினால் ஆவாகிக்கப்பட்டது என்றும், அந்த யந்திரமே மிக சக்தி வாய்ந்த யந்திரம் என்றும், அதில் இருந்து வெளியாகும் கதிர் அலைகளே அங்கு அவரை தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு ஆன்மீக பலத்தையும், அனைத்து நன்மைகளையும் தருகிறது என்றும் நம்புகிறார்கள். எது எப்படி இருந்தாலும், கதிர்காமத்தில் ஏதோ ஒரு அபரிமிதமான சக்தி பரவியிருப்பதைக் அங்கு செல்லும் அனைத்து பக்தர்களும் உணர்கிறார்கள். அந்த யந்திரம் என்ன?
கல்யாணகிரி*** என்பவர் இந்தியாவின் வடநாட்டில் இருந்து கதிர்காமனுக்கு வந்த பெரும் தபஸ்வி. அவர் இந்தியாவின் வட பகுதியில் இருந்த பத்து சன்யாச வம்சத்தினர்களில் ஒருவர். தன்னை தவிக்க விட்டு கதிர்காமத்துக்குச் சென்று வள்ளியுடன் தங்கி இருந்த ஸ்கந்தன் எனும் முருகனை திரும்பவும் தன்னிடம் (இந்தியாவுக்கு) அழைத்து வர வேண்டும் என்று முருகப் பெருமானின் மனைவியான தெய்வானை, கல்யாணகிரி எனும் அந்த தபஸ்வியை கேட்டுக் கொண்டதினால் அவர் அவளுடைய தூதுவராக முருகனை தேடிக் கொண்டு இங்கு வந்தார் என்று கூறுகிறார்கள். ஆகவே தெய்வானையின் தூதுவராக கதிர்காமனுக்கு வந்தவர் எங்கு தேடியும் முருகனை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆகவே ஸ்கந்தனை வேண்டிக் கொண்டு அவரை நேரில் காண வேண்டும் என்பதற்காக சட்கோண யந்திரம் ஒன்றை அமைத்து சடாக்ஷரா என்ற மந்திரத்தை பிரயோஹித்து ஸ்கந்தனை வேண்டிக் கொண்டு பன்னிரண்டு ஆண்டு காலம் பெரும் தவத்தில் அந்த வனத்தில் அமர்ந்திருந்தார். சட்கோண யந்திரம் என்பது முருகப் பெருமான் பிறப்புக்கு காரணமாக சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு பொறிகளை ஆவாஹிக்கும் விதத்தில் அமைந்த யந்திரமாகும். அவர் அந்த யந்திரத்தில் மந்திரத்தை ஓதி ஆவாஹிக்க அந்த யந்திரமும் சக்தி மிக்க யந்திரமாகி விட்டது.
கல்யாணகிரி தவம் செய்து கொண்டு அங்கிருந்த சமயத்தில் வேத்தா எனும் வேடர்களின் இனத்தை சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் அங்கு வந்து அமர்ந்திருப்பார்களாம். பன்னிரண்டு ஆண்டுகள் ஆகியும், இரவும் பகலும் ஆராதனை தொடர்ந்து செய்தவண்ணம் இருந்தும் கூட ஸ்கந்தனைக் பார்க்க முடியவில்லை என்பதினால் ஒருநாள் மனம் தளர்ந்து போன கல்யாணகிரி தான் தவத்தில் இருந்த மரத்தடியிலேயே படுத்து உறங்கி விட்டார். அப்போது அந்த சிறுவன் வந்து அவரை தட்டி எழுப்பினான். அவரை தட்டி எழுப்பிய பையன் அவர் தூக்கத்தைக் கலைத்து விட்டதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு உடனடியாக தன்னுடன் வருமாறு செய்கையும் காட்டி விட்டு அங்கிருந்து மேனிக் கங்கை நதிப் பகுதியை நோக்கி ஓடினான். அவனை துரத்திக் கொண்டு சென்ற கல்யாணகிரி தன்னையும் அறியாமல் அந்த நதியின் மத்தியப் பகுதியை சென்று அடைய அங்கு முருகனும் வள்ளியும் அவருக்குக் காட்சி தந்தார்கள். அவர் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார். அவர் ஸ்கந்தனை தன்னுடன் அழைத்து வருமாறு தெய்வானை வேண்டிக் கொண்டதினால் தான் அங்கு வந்ததாகவும், ஆகவே தன்னுடன் கிளம்பி தெய்வானை இருந்த இடத்துக்கு (இந்தியாவுக்கு) வருமாறு அவரை அழைத்தார். ஆனால் வள்ளியோ தன்னை தவிக்க விட்டு விட்டு ஸ்கந்தனை அங்கிருந்து அழைத்துப் போகக் கூடாது என்று அவரிடம் கேட்டுக் கொள்ள கல்யாணகிரியும் வேறு வழி இன்றி தாமும் அங்கேயே தங்கிக் கொண்டு தெய்வானையும் அங்கு வந்து அவர்களுடன் தங்கிக் கொள்ள அவளுக்கும் ஒரு ஆலயத்தை அங்கேயே அமைப்பதாக வள்ளியிடம் உறுதி மொழி கூறி விட்டு நாளடைவில் தெய்வானைக்கும் ஒரு ஆலயத்தை அங்கேயே அமைத்தார். தெய்வானையும் அங்கு அழைத்து வந்து தங்க வைத்தார். அவர் ஆவாஹித்து ஏற்படுத்திய யந்திரமே இந்த ஆலயத்தில் வைக்கப்பட்டு உள்ள யந்திரம் ஆகும். அதன் பின்னர் கல்யாணகிரி வள்ளிக்கும், தெய்வானைக்கும் தனித் தனி ஆலயங்களை எழுப்பினார்.
இரண்டாம் ராஜ சிங்கம் என்ற மன்னனின் காலத்தில் அதாவது கி.பி. 1627 – 79 ஆண்டில் கதிர்காம ஆலயத்தில் கல்யாண மண்டபமும் ஹோம குண்டமும் முடிவடைந்த நிலையில் கல்யாண கிரி தமது பூத உடலைத் துறந்தார். கல்யாணகிரி தனது பூத உடலைத் துறந்தப் பின் ஒரு லிங்க உருவாகி விட கதிர்காம ஆலயத்தின் சிவன் கோவிலுக்குள் அதை முத்து லிங்கம் என்ற பெயரில் தனி சன்னதி அமைத்து வைத்துள்ளார்கள். இது சமாதி மடம் எனப்பட்டது. இங்கு குரு பீடமும் எட்டு சமாதிகளும் உள்ளன.
ஆனால் இன்றுவரை அந்தப் பேழையை வைத்தது யார், அதில் யந்திரத்தை வைத்தது யார், எதற்காக அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்பது போன்ற எந்த விவரமும் யாருக்கும் தெரியவில்லை. அதன் காரணமும் எங்குமே எழுதி வைக்கப்படவில்லை. கூறப்படுவது அனைத்துமே வாய்மொழிக் கதைகள்தாம். ஒரு வேளை கல்யாணகிரி ஸ்வாமிக்கு அடுத்தடுத்து வந்த வழித் தோன்றல்கள் அவற்றை அறிந்து இருக்கலாம். அவர்கள் மூலமே வாய்மொழிக் கதைகளும் தொடர்ந்திருக்கலாம். கல்யாணகிரி ஸ்வாமியின் காலம் முதலாகச் சிருங்கேரி பீடத்தைச் சேர்ந்த தசநவமிப் பிரிவிலுள்ள வட இந்தியத் துறவிகளே தெய்வயானை அம்மன் கோயிலைப் பரிபாலனம் செய்கின்றனர். அவருக்குப் பின்பு கேஸபுரி ஸ்வாமிகள், சுராஜ்புரி ஸ்வாமிகள் மற்றும் பாலசுந்தரி என்ற பெண் துறவியும் ஆலயத்தை பரிபாலித்து வந்துள்ளார்கள். அவர்களில் பாலசுந்தரி எனும் பெண் துறவி பற்றிக் கூறப்படும் கதையும் அற்புதமானது.
1814-ம் ஆண்டுகளில் வட இந்திய நாட்டை சேர்ந்த அரசன் ஒருவன் தனக்கு பிள்ளை இல்லாக் குறையைப் நீக்குமாறு கதிர்காமக் கந்தனை வேண்டிக் கொள்ள முருகனின் அருளினால் அவருக்கு குழந்தை பாக்கியம் உண்டாயிற்று. அவன் மன்னனுக்கு பிறந்த முதற் குழந்தையே பாலசுந்தரி என்பவர். குழந்தைப் பிறந்தால் பிறக்கும் மூத்த குழந்தையை கதிர்காமருக்கு சேவை செய்ய அர்ப்பணிப்பதாக வாக்குறுதியைக் கொடுத்திருந்த மன்னன் வேறு வழி இன்றி தன் சத்திய வாக்கை காப்பாற்றினான். பச்சிளங் குழந்தையான பாலசுந்தரியை தக்க பாதுகாப்புடன் கதிர்காமக் கடவுளுக்கு கொடுத்து விட்டுச் சென்றதும் குழந்தை அங்கு அங்கிருந்த பூசாரியால் வளர்க்கப்பட்டாள். வயதுக்கு வந்ததும் ஆத்மீக வாழ்வை மேற்கொண்ட பாலசுந்தரியின் வனப்பும் அழகும் கண்டி மன்னனின் கவனத்தை கவர்ந்தது. தன்னை மணம் புரிந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தான். ஆனால் மன்னனின் வேண்டுகோளை நிராகரித்தாள் என்பதினால் அவளை தூக்கிக் கொண்டு வருமாறு படையை அனுப்ப அவளை படை வீரர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவளை கதிர்காமனே காப்பாற்றினார். அதன் பின்னர் அந்த அம்மையார் ஆலய நிர்வாகத்தை மேற்கொண்டு இருந்தார். 1873 ஆம் ஆண்டு அந்த பெண் துறவி காலமாகும் முன்னர் தனது வாரிசாக மங்களபுரி ஸ்வாமியை நியமித்தார்.
திருவிழாக்களில் கதிர்காமத்தில் திரைக்குப் பின் வைத்துப் பூஜை செய்யப்படும் அந்தப் புனித பெட்டியை நன்கு அலங்கரித்து யானை மீது வைத்து உலாவாக எடுத்து வருகிறார்கள். பரம்பரை நடைமுறைப்படி அந்த பேழைக்கு ‘கபூரலா’ பிரிவினர்தான் பூஜைகளை செய்கிறார்கள். அவர்களை அந்தப் பழக்கத்தைக் கை விடுமாறுக் கூற வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. அனைத்து ஆலயங்களிலும் திருவிழாக்களில் தெய்வானை-வள்ளி சமேத முருகனாகவே பாவித்து முருகனை ஆராதிப்பார்கள். ஆனால் கதிர்காம ஆலயத்தின் முக்கியத் திருவிழாவாக வள்ளியின் திருமண நிகழ்ச்சியே நடைபெறுகிறது. அந்த விழாவில் நடைபெறும் சடங்கு உண்மையில் நடைபெறும் நிகழ்ச்சி போல அமைந்து உள்ளது. வேடுவர் குல ஆடையை அணிந்த பெண்கள் அங்கு வந்து கபூரலா பிரிவினரிடம் வள்ளி- முருகனின் திருமணத்திற்கு சீதனமாக என்ன பொருட்கள் மற்றும் எத்தனை பணம் தரப்படும் என்று பேரம் பேசுவார்கள். ஆலய பிரதான வாயிலில் இந்த நிகழ்ச்சி ஒரு நாடகம் போல நடைபெறும். பேச்சு வார்த்தைகள் நடைபெற்று முடிந்தப் பின் முருகனை அங்கிருந்து ஊர்வலமாக வள்ளியின் ஆலயத்துக்கு அழைத்துச் செல்வார்கள். ஜூலை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் நடைபெறும் கதிர்காம பண்டிகையின்போது கதிர்காமனின் திருவிழா ஊர்வலம் புறப்பட்டு வள்ளி அம்மன் ஆலயத்தை நோக்கிச் செல்லும். அப்போது தெய்வானையின் ஆலயம் சந்தடி இன்றி அமைதியாக இருக்கும். தெய்வானையின் ஆலயத்து பண்டிதர் ஊர்வலம் கிளம்பும் முன் அந்தக் கடவுளை பார்க்கச் சென்றாலும், தெய்வானைக்கு தனது கணவர் வள்ளியிடம் செல்வது பிடிக்காது.
அந்த ஊர்வலத்தில் பரம ரகசியமாக பெட்டியில் வைக்கப்பட்டு உள்ள யந்திரத்தை யானையின் முதுகில் ஏற்றி எடுத்துச் செல்கிறார்கள். அதுவே முருகனாக பாவிக்கப்படுகிறது. பௌர்ணமிக்கு முதல் நாள் அன்று எடுத்துச் செல்லப்படும் அந்தப் பேழை வள்ளி அம்மனின் ஆலயத்தில் இரவு முழுவதும் வைக்கப்படுகிறது. அன்று இரவு முருகப் பெருமான் வள்ளியுடன் கணவன்- மனைவியாக ஆனந்தமாக இருப்பதாக ஐதீகம் உள்ளது. அடுத்த நாள் காலையில் முருகனும் வள்ளியும்- மேனிக் கங்கை நதியில் நீராடுவதான ஐதீக சடங்கு நடத்தப்பட்டு முடிந்தவுடன் வள்ளி ஆலயத்துக்கு மீண்டும் சென்றப் பின் அங்கிருந்து அந்தப் பேழை மீண்டும் கதிர்காமன் ஆலயத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அந்த பிரசித்தி பெற்ற கதிர்காம வருடாந்திர விழாவின் போது, தாமிரத்திலோ தங்கத் தட்டிலோ எழுதப்பட்ட பரம ரகசியமான மந்திர சக்தி வாய்ந்ததாக கூறப்படும் அந்த யந்திரத்தைக் கொண்ட பேழை வெண் வஸ்திரத்தால் மூடப்பட்டு யானையின் மீது வைத்து ஊர்வலம் வரும்போது வழி முழுதும் மக்கள் ஆடிப்பாடி மகிழ்கிறார்கள்.
இந்த கதிர்காம பண்டிகையின் முக்கிய அம்சம் அலாட்டி அம்மாக்களின் பங்குதான். அழாட்டி அம்மாக்கள் என்பவர்கள் வள்ளியின் இனத்தை சேர்ந்தவர்கள். கதிர்காமனை வள்ளி காதலித்தபோது அவளுக்கு துணையாக இருந்தவர்கள் அந்த சமூகத்தினர். ஆகவே அவர்கள் தமது கைகளில் தீப்பந்தத்தை போன்ற விளக்குகளை ஏந்திக் கொண்டு கொண்டு ஊர்வலத்தில் நடந்து செல்வார்கள். புராணக் கதைகளில் இடம் பெற்றுள்ள வள்ளியின் இனத்தை சேர்ந்தவர்களான ‘வேத்தாஸ்’ என்பவர்களுடன் கதிர்காமனுக்கு தொடர்ப்பு இருந்தது. அதனால்தான் வேத்தாஸ் என்ற வேடுவப் பிரிவினர் அவர்களது இனப் வழக்கத்தின்படி கதிர்காமனையும் வணங்கி வந்தவர்கள். முருகனின் இளைய மனைவியான ‘வள்ளி’ அந்த தீபகற்பத்தில் வாழ்ந்து வந்த வேத்தாஸ் என்ற பிரிவினரில் இருந்து வந்தவர் என்பதினால் சூரபத்மனின் வதத்திற்குப் பிறகு வேத்தாஸ் இனத்தினரின் வழிபாட்டுத் தலமாக கதிர்காம ஸ்கந்த முருகனின் ஆலயம் அமைந்தது.
கதிர்காமனில் சிங்கள மற்றும் இந்துக்கள் ஒன்றிணைந்து கதிர்காமரை வழிபடுவதற்கும் ஒரு புராணக் கதை உள்ளது. முருகனைப் போலவே சிங்கள இனத்தை சேர்ந்த புராணக் நாயகரான விஜயா என்பவருக்கும் இரண்டு மனைவிகள் உண்டு. உள்ளூரில் இருந்த இளவரசியான குவேனி என்பவள், அவளுடைய இரண்டு சகோதரர்களின் எதிர்பையும் மீறி, அவருக்கு பாதுகாப்பாக தங்க இடமும் உணவும் கொடுத்து காப்பாற்றி, முடிவாக அவரை மணந்து கொண்டு இரண்டு பிள்ளைகளையும் பெற்றெடுத்தாள். அந்த புராண நாயகனின் மதுரையை சேர்ந்த இன்னொரு மனைவி தன்னுடன் கைவினை தொழிலாளிகளை அழைத்துக் கொண்டு இங்கு வந்து குடியேறினாள்.
அந்த குவேனி பிரிவை சேர்ந்த வம்சாவளியினர் பெரும்பான்மை இனத்தவரான சிங்களத்தவர். கதிர்காமனையும் அவரது இரண்டாவது மனைவியான வள்ளியையும் போற்றி வணங்கி வந்தார்கள். ஆனால் மதுரையை சேர்ந்த முதல் மனைவியின் வம்சாவளியினர் தமது தாயாரின் மொழியான தமிழைப் பேசி, பழங்கால ஆசாரப்படி கதிர்காமனின் முதல் மனைவியான தெய்வானையை மட்டுமே போற்றி வணங்குவார்கள். இப்படியாக கதிர்காமர் எனும் முருகப் பெருமானுக்கு இருந்த இரண்டு மனைவிகளை இரண்டு சமூகத்தினர் வணங்கி வந்துள்ளனர்.
ஆனால் கதிர்காம பண்டிகை இந்த இரண்டு பிரிவினரையும் ஒன்று சேர்க்கும் விதத்தில் அமைந்து உள்ளது. இந்தப் பண்டிகையில் இரண்டு பிரிவினரும் ஒன்று சேர்ந்து இரண்டு வார காலம் நடைபெறும் பண்டிகையில் ஒன்றாக நாட்டியமாடி, பாடல்கள் பாடி, வாத்தியங்களை இசைத்து யானை மீது ஊர்வலமாக வரும் கதிர்காமரை வணங்கி கொண்டாடுவது பார்ப்பவர்களைப் பரவசப்படுத்துகிறது.
கதிர்காமனில் மூன்று ஆலயங்கள் உள்ளன. அவை முருகன், வள்ளி மற்றும் தெய்வானைக்காக அமைந்தவை. ஒவ்வொன்றும் தனித்தனி ஆலயமாக ஒன்றுடன் ஒன்று சுமார் நூறு முதல் நூற்றி ஐம்பது அடி தூரங்களில் உள்ளன. இதுவும் கதிர்காமனில் ஒரு விசேஷமான அம்சமாகவே உள்ளது. உலகில் எங்குமே ஒரே இடத்தில் இப்படி மூவருக்கும் -முருகன், வள்ளி மற்றும் தெய்வானைக்காக- தனித் தனி ஆலயங்கள் உள்ளதைக் காண முடியாது.
ஆனால் இன்னொரு மனைவியான தெய்வானையின் கதி என்ன? சம்பிரதாய முறையில் ஆச்சார மிக்க இந்துக்களினால் பராமரிக்கப்பட்டு உள்ளது கிழக்கு நோக்கிப் பார்த்தபடி உள்ள தெய்வானை ஆலயம். இந்த ஆலயத்தைக் கட்டியவர் வடநாட்டை சேர்ந்த கல்யாணகிரி ஸ்வாமிகள் என்பவரே. திருவிழாவின்போது இச்சா சக்தியை (வள்ளி) தேடிச் செல்லும் கதிர்காமருக்கு தன்னுடைய வருத்ததை தெரிவிப்பது போல அவருக்கு முதுகைக் காட்டிக் கொண்டு அமர்ந்துள்ள நிலையில் கிரியா சக்தியான தெய்வானையின் ஆலயம் அமைந்து உள்ளது. தெய்வானையின் ஆலயத்து சடங்குகள் அனைத்தும் பெரிய அளவில் வடப்பகுதியை சேர்ந்த ஆசாரம் மிக்க பண்டிதர்களினால் செய்யப்படுகின்றது.
ஸ்ரீலங்காவின் புத்த மத வழிபாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பதினாறு புனித இடங்களில் ஒன்றாக கதிர்காமனின் ஆலயமும் கருதப்படுகிறது. ஸ்ரீலங்காவில் தங்களைப் பாதுகாக்கும் கடவுளாக வணங்கப்பட்டு வரும் நாதா, பட்டி மற்றும் விஷ்ணு போன்ற கடவுட்களுடன் சேர்த்து கதிர்காமனும் ஸ்ரீலங்காவின் வணக்கத்துக்கு உரிய கடவுளாக ஏற்கப்பட்டு உள்ளார். அதனால்தான் கண்டியில் நடத்தப்படும் புத்தரின் புனிதப் பல்லை பவனியாக எடுத்துச் செல்லப்படும் புனிதத் திருவிழா ஊர்வலத்தில் கதிர்காமனையும் சேர்த்து நான்கு கடவுட்களும் இடம் பெற்றுள்ளனர். கதிர்காமனின் புராண, இதிகாச வரலாற்று செய்திகளையும் கதைகளையும் காணும் பொழுது சமூக நடை முறைகளில் மாறுபட்ட கருத்துக்கள் கொண்டு வளர்ந்து வந்த இந்து, சிங்கள, புத்த மற்றும் வேத்தாஸ் இனங்களின் வழிபாட்டு முறைகள் அந்த வருடாந்திரத் திருவிழாவின்போது ஒன்றிணைந்து சங்கமித்துள்ளது போலத் தோன்றும்.
கதிர்காமனுக்கு செல்வதற்கு மூன்று பாதைகள் உள்ளன. அவை திரிகோண வீதிகள் எனப்படும். கதிர்காமனுக்கு செல்பவர்கள் அங்குள்ள மேனிக் கங்கை என்ற நதியில் குளித்து விட்டு ஈரத் துணியுடன்தான் ஆலயப் பிரதர்ஷணம் செய்ய வேண்டும். அப்படி குளித்து விட்டு செல்பவர்கள் வாயில் இருந்து ஆரோஹரா என்ற சப்தத்தைத் தவிர வேறு ஆராதனை சொற்கள் வெளிப்படக் கூடாது என்பது ஐதீகம்.
கதிர்காமனில் நடைபெறும் வருடாந்தர கொடியேற்ற விழாவின் போது ஸ்ரீ லங்காவின் ஜாப்னா பிராந்தியத்தில் உள்ள மற்றொரு மிகப் பழைய ஆலயமான செல்வ சன்னதி ஆலயத்தில் இருந்து முருகனை -வேல் வடிவிலானவர்- கதிர்காமனுக்கு எடுத்துச் செல்வார்கள். அங்கு நடைபெறும் கடைசி நாள் விழாவான தீர்த்த விழா முடிவடைந்ததும், அதை மீண்டும் திரும்ப எடுத்துச் செல்வார்கள். கதிர்காமனில் தினை மாவில் தேனைக் கலந்து செய்த மாவைக் கொண்டு மாவிளக்கை படைக்கின்றார்கள். அந்த மாவின் மீது சிறு விளக்கை ஏற்றி வைத்து வழிபட்டப் பின் அந்த விளக்குகள் அணைந்ததும் அந்த மாவை பிரசாதமாக அங்குள்ள பக்தர்களுக்குத் தருவார்கள். தினை மாவை எதற்காக உபயோகிக்கிறார்கள் என்றால் தினை நிலத்தில்தான் வள்ளி அம்மையுடன் முருகப் பெருமானின் காதல் துவங்கி அது திருமணத்தில் முடிந்தது. அதனால்தான் வள்ளி அம்மனின் ஆறுகள் கிடைக்க அதை பயன்படுத்துகிறார்கள். பெரிய அளவிலான விளக்கை ஏற்றினால் அது பன்னிரண்டு திரிகளைக் கொண்ட விளக்காக இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். பன்னிரண்டு திரிகளும், முருகனின் பன்னிரண்டு கைகளைக் குறிக்குமாம்.
கதிர்காமத்தில் உள்ள ஸ்கந்த ஆலயம் பற்றிய செய்தி 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டு இருந்த சியாமி-பாலி என்ற புத்த நூலான ‘ஜினகலாமனி’ என்பதில் இருந்துக் கிடைத்தது. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் புலவரான அருணகிரிநாதர் என்பவர் இயற்றிய பாடல்களில் கதிர்காமனில் உள்ள முருகனைப் பற்றிய பாடல்கள் இடம் பெற்று இருந்ததினால் 15 ஆம் நூற்றாண்டில் ஸ்கந்த முருகனின் ஆலயம் பக்தர்களுக்கு புனிதமான ஒரு யாத்திரை மையமாக இருந்து இருக்க வேண்டும் என்பது புரிகின்றது .
16 ஆம் நூற்றாண்டில் ஆயுதம் ஏந்திய வீரர்களால் கடுமையாகக் காவல் காக்கப்பட்டிருந்த அந்த ஆலயம் மிகுந்த செல்வச் செழிப்போடு இருந்து இருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக அந்த ஆலயத்தை கொள்ளை அடிக்க வந்த போர்துகீஸிய படை வீரர்களில் ஒருவனான ரிபிரோ (Ribero) என்பவன் எழுதிய குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது. அதில் கூறப்பட்டு இருந்தது இதுதான் :-
”காடிகாவோ எனப்பட்ட கதிர்காமனில் ஆயுதம் ஏந்திய ஐநூறு படை வீரர்களால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ள இந்த ஆலயத்திற்கு பல ஆண்டுகளாகவே பக்தர்கள் பெரும் அளவில் நன்கொடைகளும் காணிக்கைகளையும் செலுத்தி வந்திருக்க வேண்டும் என்பதின் அடையாளமாக விலை மதிக்க முடியாத தங்கம், வைரக் கற்கள் ஆகியவற்றால் செய்யப்பட்டிருந்த நகைகளும் அங்கு இருந்தன. அந்த சொத்துக்களை நாமே எடுத்துக் கொண்டு விடலாம் என எண்ணி அது பற்றிய தகவல்களைத் தருமாறு பலரிடமும் நாங்கள் பல தடவை கேட்டோம். 1642 ஆம் ஆண்டில் இரண்டாயிரம் ‘லாஸ்கரினிய’ (Lascarins) படை வீரர்களுடனும், உள்ளுர் மக்களின் மொழி மற்றும் பழக்க வழக்கங்களை நன்கு அறிந்திருந்தவரும், அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவருமான ‘கஸ்பார் பிகூரியா டீ செர்ப்பே’ என்ற தலைவரின் கீழ் (Gaspar Figueira de Cerpe), என்னையும் சேர்த்து 150 போர்த்துகீஸிய படை வீரர்கள் அந்தப் பொருட்களைக் கொள்ளை அடிக்கச் சென்றோம் . அந்த ஆலயம் இருந்த இடத்தின் அருகில் இருந்த ஒருவரிடம் அந்த ஆலயம் பற்றி விவரம் கேட்டோம். அவரும் தனக்கு அந்த ஆலயம் உள்ள இடம் தெரியும் என்று கூறி விட்டு எங்களுக்கு வழி காட்டிக் கொண்டு சென்றார். பல மணி நேரம் காட்டுப் பகுதிகள் நிறைந்து இருந்த மலையை சுற்றி சுற்றி வந்தும் அந்த மலை மீதே இருந்த ஆலயத்தை எங்களால் காண முடியவில்லை. எங்களுடன் வழிகாட்டிக் கொண்டு வந்த ஐந்து பேர்கள் ஒருவரை ஒருவர் அவர்களுக்குத் தெரியாதது போல காட்டிக் கொண்டு, முன்னுக்குப் பின் முரணாக பேசிக் கொண்டு, எதை எதையோ சம்மந்தம் இல்லாமல் கூறிக் கொண்டு, வழி நெடுக நடந்து வந்ததினால் வேண்டும் என்றே எங்களை திசைத் திருப்ப அப்படி நாடகம் ஆடுகின்றனர் என எண்ணி அவர்களில் மூவரைக் கொன்று விட்டோம். மிஞ்சி இருந்த இருவரும் அப்படியே நடக்கத் துவங்க வேறு வழி இன்றி காடிகோவில் இருந்த அந்த ஆலயத்தைக் கண்டு பிடிக்க முடியாமல் நாங்கள் வந்த வழிலேயே திரும்ப வேண்டியதாயிற்று.
அவர்களது செய்கைகளைக் கவனித்தபோது அந்த ஆலயத்தை உள்ளுரில் இருந்த மன்னனும், பக்தர்களும் மிகவும் பக்தி பூர்வத்துடன் பாதுகாத்து வந்துள்ளனர் எனத் தெரிந்தது. அதன் பக்கத்தில் உப்பேணி வைத்திருந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்த வருமானத்தில் ஒரு பங்கினை அந்த ஆலயத்திற்கு காணிக்கையாகக் கொடுப்பது வழக்கம் என்பதைக் கவனித்திருந்த ‘இராபரட் நாக்ஸ்’ (Robert Knox) என்பவர் எழுதி உள்ள குறிப்பும் அந்தக் கருத்தை உறுதி செய்யும் அளவில் உள்ளது”.
‘இராபரட் நாக்ஸ்’ என்பவர் எழுதி இருந்தார்: “பக்கத்தில் இருந்த நிலங்கள் மூலமோ, கடல்களில் கப்பல்கள் மூலமோ சென்று நெருங்க முடியாதபடி அமைந்து இருந்தது அந்த மலைப்பாங்கானப் பிரதேசம். கடவுள் அருளால் ஏற்பட்டிருந்த கடிக்கிராம் என்ற அந்த மலைப்பாங்கான பிரதேசத்தில் உப்பளத்தை வைத்திருந்த ஏழை மற்றும் பணக்காரர் என்ற எந்த பாகுபாடுகளும் இல்லாமல் அனைவருமே தங்களுடைய வருமானத்தில் குறிப்பிட்ட அளவு வருமானத்தை அந்த ஆலயத்திற்கு காணிக்கையாகக் கொடுக்க வேண்டும் என்ற நியதி இருந்தது.”
இந்த ஆலயம் அங்கு எழுந்த விவரமும் அதன் சிறப்புக்களும் வரலாற்றில் சிறிதளவு கூறப்பட்டு உள்ளது. தனது நாட்டை தமிழக மன்னர்களுடன் போர் செய்து இழந்து விட்டு, அனுராதபுரத்தில் வந்து தங்கி கதர்காமத்தில் கிரி விஹாரா என்பதை நிறுவிய மஹானகா என்ற மன்னனின் வம்சத்தவரான ‘தத்தகாமனி’ என்ற மன்னன், மீண்டும் தமிழ் மன்னன் ‘இலாரா’ என்பவன் மீது படை எடுத்து அனுராதபுராவின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு ஸ்கந்தன் துணை வேண்டும் என அவரை பிரார்த்தனை செய்தான். அதன் பலனாக அவனுக்கு கிடைத்த வெற்றிக்கு அந்தக் கடவுளே தனக்கு அருள் புரிந்ததாகக் கருதி பழமையான அந்த ஆலயத்தை மீண்டும் அழகான ஆலயமாக மாற்றிக் கட்டினான் என்கிறார்கள். ஆனால் இதற்கு சரித்திர பூர்வமாக எந்த விதமான ஆதாரங்களும் இல்லை.
இப்படிப்பட்ட அபூர்வமான ஆலயத்துக்கு வருடத்துக்கு ஒருமுறை ஸ்ரீ லங்காவின் பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் பாத யாத்திரையை மேற்கொள்கிறார்கள். முன் காலத்தில் அங்கு செல்வதற்கு சரியான பாதை இல்லாமல் இருந்தது என்பதினால் அந்த புனித யாத்திரையை மேற்கொண்ட யாராவது அனுபவசாலியைத் துணையாகவே கொண்டு ஒரு குழுவாக பாத யாத்திரையை மேற் கொள்வார்கள். அந்த யாத்திரை முடிவதற்கு சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் பிடிக்கும். அதற்குக் காரணம் அவர்கள் காடுகளின் வழியே கல்லிலும், மண்ணிலும், முட்புதர்களைத் தாண்டியும் நடந்து செல்ல வேண்டும். வழியில் எதுவும் கிடைக்காது என்பதினால் தம்முடன் உணவுப் பொருட்களையும் கட்டி எடுத்துச் செல்வார்கள். காலில் காலணி கூட இல்லாமல் பாத யாத்திரையை மேற்கொண்டவர்களின் மன திடம் உறுதியாகவே உள்ளதினால் அவர்களுக்கு கால் வழிக் கூடத் தெரியாது. வழியில் அங்காங்கே தங்கிக் கொண்டு நடைப் பயணம் தொடரும். இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தொடர்ந்து நடந்து செல்ல வேண்டி இருந்த அந்தப் பாத யாத்திரை பயணத்தில், வழியில் ஒவ்வொரு புனித இடங்களுக்கும் விஜயம் செய்தப் பின் முடிவாக பதினைந்து நாட்கள் விழா நடைபெறும் கதிர்காமனை சென்றடைவார்கள். ஆனால் தற்போது கதிர்காமனுக்கு செல்ல நல்ல பாதை உள்ளது.


ஆலயத்துக்கு முன்னால் உள்ள வேல்
படம் நன்றி : http://www.panippulam.com

<படம் நன்றி : http://www.panippulam.com