துலா புராணம்- 13
காவிரி ஆற்றின் மகிமை

சாந்திப்பிரியா

 

திரௌபதி கேட்டாள்’ யோகீஸ்வரா, எதனால் எங்களுக்கு கேசவன் மீது பக்தி ஏற்படும்?  எங்களுக்கு நரகம் கிடைக்காமல் இருக்க என்ன வழி? வேதங்கள் கூறும் நன்னெறியை எமக்குக் கூறுவீர்களா?’ .

அதைக் கேட்ட நாரதர் கூறத் துவங்கினார் ‘  திரௌபதி, விஷ்ணு பக்தியினால் சம்சாரக் கடலை எளிதில் கடக்க முடியும். பதிக்கு பணி செய்வதே பெண்களின் தர்மம் என்பார்கள்.  பெண்கள் பதியைத் தவிர  வேறு தேவதைகளை கூட  சேவிக்கக் கூடாது.  பதி ஜீவித்து இருக்கும்போது  தமது உடலை உபவாசங்களினால் வருத்திக் கொள்வது பதியின் ஆயுளைக் குறைக்கும் என்பார்கள். அப்படி செய்தால் அவளும் நரகத்துக்கு செல்வாள். பிரும்மச்சாரிகள் ஒரு குருவிற்கு பணிவிடை செய்ய வேண்டும், புத்திரன் பித்ருக்களுக்கும் சேவை செய்து வர ஸ்த்ரீகள்  சிசுக்களை (குழந்தைகள்) பாதுகாத்து வரவேண்டும். அதனால் மகா விஷ்ணு பெரும் சந்தோஷசம் அடைவார். அவர்களை வைகுண்டத்துக்கு அனுப்புவார். விஷ்ணுவின் ஆசிகள் வேண்டும் என்றால் பதி கோபித்தாலும்  முகத்தைக் கடுமையாக்கிக் கொள்ளாதே. விளையாட்டாகக் கூட பதிக்கு பிடிக்காததை செய்யாதே.  களைத்து வரும் பதிக்கு விசிறினால் அப்சரைகள் உனக்கு  விசிறி விடுவார்கள். பதிக்கு காலைப் பிடித்து விட்டால் ஸ்வர்கத்துக்கு செல்வாய். இப்படியாக பதிக்கு  செய்யும் சேவையைப் பொறுத்தே உன் வாழ்கையும் அமையும். இந்தக் கதையைக் கேள்.

திரௌபதி  நாரதரை வணங்கி சந்தேகத்தைக் கேட்டாள் 

ஒருமுறை ஸ்வர்ணமயமான எறும்பு ஒன்றை கண்ட ஜுரும்பூ  என்ற ஆண்  எறும்பு அதன் மீது மையல் கொண்டு அதை அணுகி தன்னை மணந்து கொள்ள விருப்பமா என்று கேட்டது. அது மேலும் கூறியது ‘உன்னைக் கண்டாலே  என் உள்ளத்தில் காம உணர்வு தோன்றுகிறது. அதனால் உன் மீது காமம் கொண்டதினால் நான் வேறு பெண்ணை மணக்க விரும்பவில்லை. காரணம் ஒருவனுக்கு ஒருத்தி என்பதைப் போல ஒருவளுக்கே ஒருவன் என இருக்க வேண்டும்  என்பதை நம்புபவன் நான். உன்னை நான் நினைத்து விட்டதினால் உனக்கு மட்டுமே கணவனாக இருக்க விருப்பம் கொண்டுள்ளேன் ‘ என்றது. அதைக் கேட்டு ஆனந்தம் அடைந்த பெண் எறும்பும் ஜுரும்பூவை மணந்து கொண்டு நிறைய குழந்தைகளைப் பெற்றெடுத்துக்  கொண்டு ஆனந்தமாக வாழ்ந்து வந்தன.

ஒரு நாள் ஜுரும்பூ இறை சேகரித்து வர வெளியில் சென்று இருந்தபோது வேறு ஒரு ஆண் எறும்பு அங்கு வந்தது. அதற்கும் ஜுரும்பூவின் மனைவியின் மீது ஆசை வந்துவிட்டது. அதை தானும் அனுபவிக்க எண்ணி  அதனிடம் சென்று அன்று ஒருநாள் மட்டும் அதனுடன்  சல்லாபிக்க விரும்புவதாகக் கூறியது. அதைக் கேட்ட அந்தப் பெண் எறும்போ கோபமுற்று அதனிடம் கூறியது ‘ என்ன வார்த்தை கூறுகிறாய் அயோக்கியா. என் கற்பைக் கெடுக்க நினைக்கிறாயா? அது மகா பாபம் அல்லவா. உன்னைப் பார்த்தால் போன ஜென்மத்தில் பெரும் பண்டிதனாக இருந்திருக்க வேண்டியவர் போல தெரிகிறது. ஆனால் உன் மனதில் இத்தனை விகார எண்ணமா ? தயவு செய்து என் கணவர் வருவதற்கு முன் இங்கிருந்து ஓடிப் போ’ என்றது. ஆனால் அந்த ஆண் எறும்போ ‘ முடியாது, பெண்ணே என்னால் உன்னை அனுபவிக்காமல் இங்கிருந்து செல்ல முடியாது. அதற்கு நீ ஒப்புக் கொள்ளவில்லை என்றால், நான் பலவந்தமாக உன்னை சல்லாபிப்பேன்’ என்று கூறியவாறு அந்த பெண் எறும்பை நோக்கி வேகமாக வந்தது. உடனே அந்த பெண் எறும்பும் நாதா….நாதா எனக் கத்தியவாறே ‘நீ சாம்பலாகக் கடவது’ என்று அந்த ஆண் எறும்பை நோக்கி சாபமிட, அடுத்த கணம் அந்த ஆண் எறும்பு சாம்பலாகி விட்டது.

உணவைத் தேடிச் சென்ற ஜுரும்பூ திரும்பி வந்ததும், நடந்தவற்றை தெரிந்து கொண்டாது. தம் மனைவியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ‘நீயே நல்ல சத்தியமான மனைவி  பெண்ணே…இனி உன்னை நான் பிரியேன் ‘ என்று ஆனந்தமாக கூறி மகிழ்ந்து இரண்டும் சல்லாபிக்கத் துவங்கின.

அந்நிய  ஆண் எறும்பு  ஜுரும்பூவின் மனைவியை மிரட்டியது 

அவை அனைத்தும் நடந்தது அந்த ஊரில் இருந்த ஒரு மன்னனின் அரண்மனைத் தோட்டத்தில் ஆகும். அங்கு மன்னன் தனது மனைவியுடன் நடந்து கொண்டு இருந்தார். அவருக்கு பிராணிகள் மற்றும்  மிருக பாஷைகளும் நன்கு தெரியும். அங்கு நடந்தவற்றைக் கேட்டுக் கொண்டு இருந்தவர் சிரிப்பு தாங்காமல் சிரித்து விட  அவர் மனைவி அவர் சிரித்ததின் காரணத்தைக் கேட்டாள். ஆனால் மன்னனோ தான் சிரித்ததின் காரணத்தைக் கூறினால் தான் மரணம் அடைந்து விடுவேன் என்பதினால் அந்த ரகசியத்தைக் கூற மாட்டேன் என்று கூறியும், அவருடைய  மனைவியோ தனக்கு அவர் சிரித்ததின் காரணம் தெரிந்தே ஆக   வேண்டும் என்றும், அப்படி அவர் கூறாவிடில் தான் தற்கொலை செய்து கொண்டு விடுவதாகவும்  பயமுறுத்தினாள்.  மன்னன் கோபம் அடைந்தான். ‘நான் அதைக் கூறினால் நான் மரணம் அடைந்து விடுவேன் என்பது நியதி. அதைக் கூறியும் நான் சிரித்ததின்  காரணத்தை கேட்டு நச்சரிப்பதினால் நீ எனக்கு தகுந்த மனைவியாக இருக்க முடியாது.  ஆகவே நீ மடிந்து போ’ என அவளை சபித்துவிட்டார். அவளும் மரணம் அடைந்து பதிக்கு விருப்பமற்றதை செய்ததினால் நரகத்துக்கு சென்றாள்’.
இதைக் கூறிய நாரதர் மேலும்  கூறினார் ‘ திரௌபதே,  நீயும் ஐவரை மணந்துள்ளாய் . ஆகவே நீ யாருடைய மனமும் நோகாத அளவு இருக்க வேண்டும். ஒருவருக்கொருவரை விட்டுக் கொடுக்காமல் அவர்களுடைய தர்ம பத்தினியாகவே இருக்க வேண்டும். அது போலவேதான் அவர்களும் உனக்கு அனுசரணையாக இருக்க வேண்டும். அதுமே உங்கள் அனைவருக்கும் ஸ்வர்கத்தை தரும். வருடத்துக்கு ஒருமுறையேனும் துலா ஸ்நானம் செய்து ரங்கநாதரை வணங்கி வந்தால் அவர் மீது பக்தி தானாகப் பெருகும்’ என்றதும் பாண்டவர் ஐவரும் வெட்கம் அடைந்தார்கள். உடனேயே அவருக்கு முன்னால் அவர்கள் ஒரு சபதத்தை எடுத்துக் கொண்டார்கள் ‘ ஒவ்வொரு ஆண்டும் திரௌபதியுடன் ஐவரில் ஒருவர் மட்டுமே கணவனாக வாழ்வார்கள். அந்த நேரத்தில் மற்றவர்கள் அவளை அண்ணியாகவே எண்ணிப் பார்ப்பார்கள்.  அந்த தர்மத்தை எந்த காலத்திலும் மீற மாட்டோம் என்று கூற நாரதர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அவர்களை வாழ்த்தி விட்டு அங்கிருந்து சென்றார்.

‘பாண்டவ சகோதரர்களும் திரௌபதியுடன் ஒரு ஆண்டுக்கு ஒரு கணவர் என்ற கணக்கில் வாழ்ந்து கொண்டு நல் வாழ்கையை மேற்கொண்டு இருந்தார்கள். வருடத்துக்கு ஒருமுறை துலா ஸ்நானம் செய்தவாறும், காவேரிக் கரையில் இருந்த ரங்கநாதரை வணங்கித் துதித்தவாறும் இருந்து கொண்டு இருக்கத் துவங்கினார்கள்.  இப்படியாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் வாழ்க்கையில் இன்னொரு சம்பவம் நடந்தது’ என்று அகஸ்திய முனிவர் அரிச்சந்திரனுக்கு கூற ‘அது என்ன என்பதை எமக்குக் கூறுவீர்களா’ என ஆவலுடன் அரிச்சந்திரன் கேட்டார்.

…….தொடரும்
முந்தைய பாகங்கள்