அக்கல்கோட் ஸமர்த்த

மகராஜ் ஸ்வாமிகள் 

-வரலாறும் அவர் மகிமைகளும்-
சாந்திப்பிரியா

   

பாகம்-1

உலகத்தில் எப்போதெல்லாம் பாபச் செயல்கள் தலை தூக்கி நிற்குமோ அப்பொழுதெல்லாம் கடவுள் பல ரூபங்களிலும் தோன்றிக் கொண்டே இருந்து அதர்மங்களை அழிக்கின்றார், மக்களை காப்பாற்றுகின்றார் என்பது சத்திய வாக்கு. இப்படிப்பட்ட அவதாரங்களில் ஒருவரே அவதூதரான தத்தாத்ரேயரின் அவதாரமான அக்கல்கோட் ஸ்வாமிகள் என்பவர்.
அவதாரம்

அக்கல்கோட் ஸ்வாமிகளின்  பிறப்பு பற்றிய முழு விவரமும் தெரியவில்லை.  ஆனால் அவர் 1275 ஆம் ஆண்டு வாக்கில் கர்நாடக மாநிலத்தில் கரஞ்சா நகர் என்ற இடத்தில் வாழ்ந்து வந்த மாதவா-அம்பாவாணி என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தாராம். அந்த பிராமணத்  தம்பதியினர் கடவுள் பக்தி மிகுந்தவர்கள்.  பிறந்த குழந்தை சில நாட்களிலேயே வாய் ஓயாமல் ஓம் , ஓம்  என உச்சரித்தவண்ணம் இருந்ததாம்.
இன்னொரு செய்தியின்படி அக்கல்கோட் ஸ்வாமிகள் 875 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சிலேக்ஹெடா எனும் கிராமத்தில் எட்டு வயதான சிறுவனாக இருக்கும்போது  அவரை அங்குள்ள மக்கள் முதன் முறையாக பார்த்ததாக கதையும் உள்ளது. ஆனால் அவர் பிரபலமானது  மகாராஷ்டிராவில் உள்ள அக்கல்கோட் எனும் கிராமத்தில்தான்.

வயதாக வயதாக அதன் குணமே மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு இருந்ததாம். மற்ற சிறுவர்களின் நடத்தையும் இந்தக் குழந்தையின் நடத்தையும் முற்றிலும் மாறுபட்டு இருந்தது.  உனக்கு எந்த ஊர் என அவரைக்  கேட்டால் தத்த  நகரம் என்பாராம். அதாவது மறைமுகமாக தான் தத்தாத்திரேயரின் அவதாரம் என்பதை அப்படிக் கூறி வந்துள்ளார்.

வாழ்க்கை  – முதல் கட்டம்

நாட்கள் செல்லச் செல்ல குழந்தை பக்தி  மார்கத்தில் செல்லத் துவங்கியது.  அதைக் கண்ட அவருடைய  பெற்றோர்கள் அந்த சிறுவனை ஸ்ரீ கிருஷ்ண சரஸ்வதி என்ற மகானிடம் அழைத்துச் சென்றார்கள். அவரரும் அந்த சிறுவன் சன்யாச மார்கத்தில்தான் செல்ல வேண்டியவன் என்பதை புரிந்து கொண்டதினால்  அந்த சிறுவனுக்கு ஸ்ரீமத் நரசிம்ம சரஸ்வதி என்ற பெயரை சூட்டி அவருக்கு தீஷையும் அளித்தார்.  நாளடைவில் ஸ்ரீமத் நரசிம்ம சரஸ்வதி பெரும் புகழ் பெற்றவராக மாறிக் கொண்டு இருந்தார்.  அவரை சுற்றி  ஒரு பக்தர் கூட்டம் தோன்றியது.   மெல்ல மெல்ல அவர் தானே தத்தாத்ரேயரின் அவதார புருடர் என்பதை பலருக்கும் பல விதங்களிலும் புரிய வைக்க மக்கள் அவரை தத்தரின் அவதாரமாகவே நாளடைவில் ஏற்றுக் கொண்டார்கள். அவர் செய்துகாட்டிய அற்புதங்கள் அனைவராலும் பேசும்படி ஆயிற்று. அவர் புகழ் அனைத்து இடங்களிலும் பரவியது.

மல்லிகைப் பூ  படகில் நதியில் பயணம்

அப்படி வாழ்ந்து கொண்டு இருந்தபோது ஒரு நாள் அவர் தனது நான்கு சீடர்களுடன் படல்கோட் எனும் நதிக்கரைக்குச் சென்றார்.  தன்னுடைய பாதுகைகளை தனது சீடர்களிடம் தந்து விட்டு,  மல்லிகை மலர்களினால் ஆன படகு ஒன்றை தயாரிக்கச் சொன்னார். அதாவது மல்லி மலர்களை தொடுக்கச் சொல்லி அதை ஒரு பெரிய தட்டுப் போல ஒன்றாக்கினார்.  அதை அதை அந்த நதியில் வைத்துவிட்டு அதன் மீது அமர்ந்து கொண்டார்.  எதிர் சூழல் இருந்த பகுதியில் அதை செலுத்தினார். அனைவரும் வியந்து நின்றார்கள். மல்லிகை மலரினால் வேயப்பட்ட தட்டுப் போன்ற பூ மாலை மீது அவர் அமர்ந்தும் அது நதியில் முழுகாமல் படகு போல செல்கிறதே என வியந்தார்கள்.  அனைவரும் பார்த்துக் கொண்டே இருக்கையில் அவர் மறைந்தே போனார். இனி அவர் எப்போது வருவார்? வருவாரா என்பதே தெரியவில்லையே என அனைவரும் குழம்பினார்கள்.

150 வருட  தவம் :  வெளிநாட்டுப் பயணம் 

நீரிலே மிதந்து சென்ற மல்லிகை பூவின் படகு கர்டாலி  என்ற இடத்தின் வனப் பகுதியை அடைந்தது. அந்த வனப் பகுதியில் இறங்கியவர் அந்த அடைந்த காட்டுக்குள்ளே சென்றார். அங்கு சுமார் 150 வருட காலம் தவத்தில் அமர்ந்து இருந்தார்.  அந்த தவத்தை முடித்துக் கொண்ட அவர் வனத்தில் இருந்து  வெளி வந்து அங்கிருந்தே வெளி நாடுகளுக்குச் செல்லத் துவங்கினார்.  இந்திய எல்லையில்  இருந்த சீனாவில் நுழைந்தவர் ஜப்பான் ஆஸ்திரேலியா, ஜாவா, சுமத்ரா போன்ற நாடுகளுக்கு எல்லாம்  ஆன்மீகப்  பயணத்தை மேற்கொண்டார்.  அந்தப் பயணத்தை முடித்துக் கொண்டவர் மீண்டும்  இமய  மலை வழியே இந்தியாவுக்குள் வந்தார்.  அங்கு இமயமலை அடிவாரத்தில் இருந்த வனத்தில் இருந்த ஆதிவாசிகளுடன் தங்கினார்.

சிறு குறிப்பு: –

ஸ்வாமிகளின் வாழ்கை வரலாற்றைப் பற்றிக் கேட்ட பலரும் எழுப்பிய ஒரு கேள்வி இது. ” எவரும் அவருடன் செல்லாமல் தனியே வனத்துக்கு சென்ற ஸ்வாமிகள் 150 வருட காலம் வனத்தில் தவம் இருந்ததாகவும் இமய மலை அடிவாரத்தில் 300 ஆண்டுகள் தவம் இருந்ததாகவும்  அவர் புரிந்து உள்ள மகிமைகளையும் பற்றிக் கூறப்படுவதை எப்படி நம்புவது ?”

இது நியாயமான கேள்விதான்.  இதற்கு பதில் தந்தனராம்  ஸ்வாமிகளின் வரலாற்றை ஆராய்ந்தவர்கள்.  அவர்கள் கூறியது  இதுதான்:-   ” ஸ்வாமிகள் மல்லிகைப் பூ மலர் படகில் தனிமையில் சென்றபோது  அவர் வனப் பகுதியில் இருந்த கரையில் இறங்கினார். அதைப் பார்த்த அங்கிருந்த வன வாசிகள் அதிசயித்தார்கள். மல்லிகைப் பூ மலர் படுக்கையில் நதியில் மிதந்து வந்தவரை  மாபெரும் மகான் என்றே  நம்பியவர்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்தார்கள். அவர் வனத்தில் தவம் இருந்தபோது அவரை பாதுகாத்து வந்தவர்களும் அவர்களே. அவர்களே ஸ்வாமிகள் அங்கிருந்தபோது அவர் வாழ்கை பற்றிய தகவலை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த ஸ்வாமிகளைப் பற்றிய செய்தி  மெல்ல மெல்ல அனைத்து இடங்களுக்கும் பரவியது.  ஆகவே எந்த ஒரு மகான்களுடனும் அவர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் காலம் வரை யாருமே நிலையாக  இருந்தது இல்லை.  அது சாத்தியமும் இல்லை. காரணம் மகான்கள் பல இடங்களுக்கும் சுற்றித் திரிந்தவர்கள். அனைத்து மகான்களும் வாழ்ந்த இடங்களில் அவரை வணங்கித் துதித்தவர்கள்  கொடுத்த செய்திகளைக் கொண்டே அந்தந்த மகான்களின் வாழ்கை வரலாறுகள் எழுதப்பட்டு உள்ளன. மேலும் பெரும்பாலான மகான்களைப் பற்றிய செய்திகள் வாய்  வழிச் செய்திகளாகவே வந்துள்ளன. அந்த செய்திகளின் நம்பகத் தன்மைகளையும், அவை நடந்த இடங்களை சென்றடைந்து ஆராயந்துமே  அவை  வரலாற்று வடிவம் பெற்றுள்ளன . மேலும் எந்த ஒரு  மகானைப் பற்றிய வரலாறுமே ஒருவரால் மட்டுமே எழுதப்பட்டவை அல்ல. பலரும் பல விதங்களில் எழுதி உள்ளார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றிய செய்திகளை பல இடங்களிலும் கேட்டறிந்தே எழுதுகிறார்கள். அதுவே பின்னர் யாரேனும் ஒருவரால் ஒரே வரலாறாக தொகுக்கப்படுகின்றது. ஆகவே  அவை நம்பத் தகுந்தவைகளே. அதுவே இந்த ஸ்வாமிகளுக்கும் பொருந்தும் .”

பாகம்- 2…..தொடரும்