மஹாவித்யா  –  (7)  
பகளாமுகி  தேவி

சாந்திப்பிரியா 

சத்யுகத்தில் ஒருமுறை மகா பிரளையம் ஏற்பட்டு உலகமே அழிந்து விடும் நிலைக்குச் சென்றுவிட அதனால் கவலையுட்ற விஷ்ணு  சௌராஷ்டிரத்தில் ஒரு இடத்தில் சென்று தனிமையில் அமர்ந்தார். அப்போது அவர் நாபியில் இருந்து வெளிவந்த ஜோதியும், ஆகாயத்தில் இருந்து வந்த நட்சத்திர ஒளியும் சேர்ந்து ஒரு தேவி வெளியே வந்தாள். அவளே பகலாமுகி தேவி . அவள் அந்த பிரளயத்தின் சீற்றத்தை  அடக்கி உலகை அழிவில் இருந்து காப்பாற்றினாள். அவளுக்கு மூன்று கண்கள், நான்கு கைகள். மூன்று கண்களும் திருமூர்த்திகளை குறிப்பிடுவதாம். அவளுக்கு பிடித்த நிறம் மஞ்சள். அவள் மந்திர தந்திர சக்திகளை அடக்கி ஆள்பவள்.

முன்னர் மதன் என்றொரு அசுரன் அளவிடமுடியாத சக்திகளை, முக்கியமாக வாக்கு சித்தியை  பெற்று இருந்தான்.  அதனால் அனைவருடைய சித்திகளும், பூஜை மந்திர ஒலிகளும் நின்றன. எவர் எதை ஒதினாலும் அவன் அவற்றை தன் வாக்கு வலிமையினால் தடுத்தான். தேவர்களை கொடுமை படுத்தினான். ஆகவே அவர்கள் பகளாமுகி தேவியை  சந்தித்து தம் இன்னலைக் கூறி தம்மை காத்தருளுமாறு அவளிடம் வேண்டிக் கொள்ள பகளாமுகி தேவி  அந்த அசுரன் மீது படையெடுத்து அவனுடன் சண்டையிட்டு அவன் நாக்கைப் பிடுங்கி எறிந்து  அவனுடைய வாக்கு சக்தியை அழித்தாள்.  நாக்கு இருந்தால்தானே எதையும் உச்சரிக்க முடியும்.  பகளாமுகி என்றால் கொக்கு உருவம் என்பது. அவளுடைய முகமும் அப்படியே இருந்ததினால் அவளுக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது. வாக்கு சாதுர்யம், வாக்கு வலிமை பெற்றிட எதிரிகளை அடக்க, மன வலிமை பெற்றிட, தம்மீது எழும் அவதூறுகளை களைந்திட என பல காரணத்தினால்  அவளை ஆராதிக்கிறார்கள்.  அவள் அனைவரது அறியாமையையும் விலக்குகிறாள். முக்கியமாக மந்திர தந்திர சித்திகளைப் பெற்றிட அவளை பூஜித்து ஆராதிக்கின்றனர்.

உஜ்ஜயினில் மந்திர தந்திர சக்திகளை உள்ளடக்கிய யந்திரத்தைப் பதித்து விக்ரமாதியன் காலத்தில் அவளுக்கு ஒரு சக்தி ஆலயம் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு உள்ளது. மஹா வித்யாவில் வரும் எட்டாவது  தேவி அவள்.