மஹாவித்யா  –  (6)  
திரிபுரசுந்தரி    தேவி
சாந்திப்பிரியா 

லலிதா திரிபுரசுந்தரி அல்லது சோடக்ஷி என்பவள் மஹா வித்யாவின் மூன்றாவது தேவியாம். அவள் அவதரித்த வரலாறு பற்றி இரண்டு கதைகள் உண்டு. முதலாம் கதைப்படி ஒருமுறை சிவபெருமானின் தவத்தைக் கலைத்த மன்மதனை சிவபெருமான் கோபமுற்று எரித்து விடுகிறார். அப்போது தேவர்கள் சிவ பெருமானிடம் சென்று மன்மதனுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவருக்கு உயிர் தருமாறு வேண்ட சிவபெருமானும் அந்த எறிந்த சாம்பலுக்கு உயிர் தந்தார். ஆனால் அந்த சாம்பலில் இருந்து ஒரு கொடிய அசுரன் வெளிவந்து உலகை அட்டிப் படைத்தான். தேவர்கள் துன்பமுற்றனர். ஆகவே பார்வதியிடம் சென்று அவனை கொன்று தம்மைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொள்ள அவள் தன் உடலில் இருந்து திரிபுராவை படைத்து அந்த அசுரனை வதம் செய்து உலகை காப்பாற்றினாளாம் .

இரண்டாவது கதை என்ன எனில் சிவ பெருமான் காளியை படைத்தப்  பின் ஒரு முறை அனைவர் முன்னிலும் அவளை அழைக்க காளி, காளி எனக் கூவினாராம். காளி என்றால் கருப்பானவள் எனவும் அர்த்தம் உள்ளது. ஆகவே தான் கருப்பாக இருப்பதினால் தன்னை கறுப்பி என அழைப்பதாக கருதியவள் அவரைப் பிரிந்து போய் விட்டாள்.  சிவ பெருமானுக்கு அவள் சென்ற இடம் தெரியவில்லை. ஆனால் நாரதர் மூலம் அவள் இருந்த இருப்பிடத்தைக் கண்டு பிடித்து அங்கு சென்று அவளுக்கு தன் நிலையை விளக்கிக் கூறி, இனி அவளை மூவுலகமும் போற்றும் அதி சுந்தரமான உருவில் காட்சி அளிப்பாய் எனக் கூறி ஆசிர்வதிக்க அவள் பதினாறு வயதான பெண் போன்று அதி சுந்தர திரிபுரா சுந்தரியானாளாம் .

தன் கைகளில் கரும்பினால் ஆனா வில்லை ஏந்தியும், படுத்துள்ள சிவன் மீது உள்ள தாமரை மலரின்மீது அமர்ந்து அழகான கண்களுடன் கருணை முகத்தைக் காட்டி காட்சி தருகிறாள். அவளுடைய ஸ்லோகத்தின் யந்திரங்கள் பல உள்ளன. அவற்றை நியமபூர்வமாக பூஜித்து ஆராதித்தால் பல நன்மைகள் கிடைக்கும், உடல் நலன் பெரும், பணம் மற்றும் பொருள் சேரும் என்பது நம்பிக்கை.