இறந்தவர்கள் வீட்டில்
ஒப்பாரி வைப்பது ஏன்?
சாந்திப்பிரியா
கிராமங்களில் பொதுவாக எவராவது இறந்து விட்டால் ஊர்மக்களும் உறவினர்களும் ஒன்றாகக் கூடி அழுவதுடன் தனித்தனியான குழுக்களாகப் பிரிந்துபிணத்தின் அருகில் அமர்ந்து கொண்டு ஓப்பாரி வைப்பார்கள். நாம் நினைப்பது போல ஒப்பாரி என்பது ஓலம் அல்ல. அது ஒரு விதமான பாட்டு. சில காரணங்களுக்காக அந்த காலத்தில் கடை பிடிக்கப்பட்டு வந்த விதிமுறை. அதற்கு ஒரு பின்னணி உண்டு. ஒருவர் இறந்தவுடன் அவருடைய உடலை விட்டு ஆத்மா வெளியேறும். அந்த உடல் தகனம் செய்யப்பட்டு விட்டாலும் பத்து நாட்கள் வரை அந்த ஆத்மா அங்குதான் சுற்றிக் கொண்டே இருக்குமாம். மேலே யம தூதுவர்கள் அந்த ஆத்மாவை கயிற்றினால் கட்டி வைத்து இருப்பார்கள் . கீழே அவர்களுடைய உறவினர்களும், அவரால் நன்மை, தீமை அடைந்தவர்கள் அந்த இறந்து போனவரைப் பற்றி அவர் செய்த நன்மை தீமைகளை கூறி அழும்போது அதை யம தூதர்கள் குறிப்பு எடுத்துக் கொள்வார்களாம். அதற்கேற்ப தண்டனை தர சித்ரகுப்தர் அதை பயன்படுத்துவாராம். மேலும் அப்போது அந்த ஆத்மாவும் தாம் செய்த நல்லவை, கேட்டவைகளை கேட்டு அறிந்து கொண்டு அடுத்த ஜென்மத்தில் அந்த தவறுகளை செய்யாமல் இருக்குமாம். அதற்காகத்தான் இறந்தவர்களைப் பற்றி எல்லோரும் உரத்த குரலில் ஒப்பாரியாகப் பாடுவார்களாம். அது ஒரு விதத்தில் இறந்தவருக்கு செய்யும் புனிதமான பூஜையாம்.  முன் காலத்தில் ஒப்பாரியை எப்படிப் பாடுவார்கள் தெரியுமா? இறந்தவர் வீட்டில் அனைவரும் ஒன்று கூடியதும் ஒப்பாரிப் பாடகர்களும் வருவார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் ஒப்பாரி வைக்கவே சில குழுக்கள் உண்டு. அவர்கள் வந்ததும் இறந்தவரின் நண்பர்களும், உறவினர்களும் அவர்களிடம் சென்று இறந்தவரைப் பற்றியா செய்திகளை தருவார்கள். அவர்களின் செய்திகளே ஒப்பாரிப் பாடலாக ஒலிக்குமாம். அவர்கள் தம்மை நான்கு நான்கு பேர்களாக பிரித்துக் கொண்டு இறந்தவர் முன் சென்று அமர்ந்து கொண்டு ஒருவர் தோளில் ஒருவர் கைகளை வைத்துக் கொண்டு மேலும் கீழும் தலையை ஆட்டி ஆட்டி ஓலமிடுவார்கள். அவர்களது முறை தீர்ந்ததும் அடுத்த குழு வந்து அமரும். ஒப்பாரி தொடரும். ஏன் நான்கு நான்கு பேர்கள் என்றால் ஒரு திசைக்கு ஒருவராம். ஒவ்வொரு திசையிலும் அமர்ந்து இருக்கும் யம தூதுவர்கள் குறிப்பு எடுக்க அது உதவுமாம். அதை ஒரு புனிதமான தொழிலாகவே கிராமங்களில் செய்து வந்தனர். ஆனால் நாளடைவில் அது மருவி இறந்தவரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் , இறந்தவரின் கணக்குகள், வழக்குகள் போன்றவற்றை அனைவருக்கும் கூற பயன்படுத்தப் படத் துவங்க அதன் மகிமை குன்றியது. காலப் போக்கில் உண்மையில் எந்த காரணத்துக்காக ஒப்பாரி துவங்கியதோ அது மறைந்துவிட்டது என பல கிராம மக்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள். ஆனாலும் ஒப்பாரி வைக்கும் பழக்கம் தொடரத்தான் செய்கின்றது.