திக்குவாய் முனிவர்

சொன்ன நீதிக் கதை-2

சாந்திப்பிரியா

முன்னொரு காலத்தில் பல கலைகளயும் கற்றறிந்திருந்த முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மாரிச முனிவரின் மகன். எத்தனை அறிவாளியோ அத்தனை திமிர் பிடித்தவர், தலைகனம் மிக்கவர். அவர் இராஜ்ய இராஜ்யமாகச் சென்று கொண்டு மன்னர்களை சந்தித்தவண்ணம் இருப்பார். அவருக்கு இராஜ மரியாதை கிடைக்கும். அவர் செல்லும் இராஜ்யங்களில் எல்லாம் மன்னர்களுடன் சொற்போர் நடக்கும். அவர் அந்த இராஜ்யத்து மன்னனிடம் நூறு கேள்விகள் கேட்பார். அவர்கள் அதில் குறைந்தது பாதியாவது சரியான பதில் தந்து விட்டால் அவர் அவர்களுக்கு ஆசி கூறிவிட்டுச் சென்று விடுவார். எவர் ஒருவர் பாதிக்கும் குறைவான பதிலைத் தருவார்கனோ அவர்கள் இராஜ சிம்மாசனத்தை விட்டு இறங்கி அமைச்சர்களுடன் சென்று அமர வேண்டும். அந்த முனிவர் அந்த ஊரில் இருக்கும்வரை அவருடைய கைத்தடியும், கமண்டலமும் அந்த சிம்மாசனத்தில் வைக்கப்பட்டு இருக்கும். அதே நேரத்தில் அந்த நாட்டு மன்னனையும்  தன்னை அவர்கள் மூன்று கேள்விகள் கேட்க அனுமதிப்பார். அதற்கு அவர் சரியான பதிலைத் தராவிட்டால் மன்னன் மீண்டும் சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்ளலாம். அவர் சரியான பதில் தந்து விட்டால் அரசன் மொட்டை அடித்துக் கொண்டு வந்து அந்த ஊரில் முனிவர் உள்ளவரை ஆசனத்தில் தலைப்பாகை இல்லாமலேயே அமர வேண்டும். பல மன்னர்களுக்கும்  முனிவரிடம் கேள்வி கேட்கும் அளவில் ஞானம் இல்லை என்பதினால் முனிவர் பல மன்னர்களை அவமானப்படுத்திக் கொண்டே இருந்தார்.

ஒரு முறை அவர் ஒரு இராஜ்யத்துக்குச் சென்றார். அந்த அரசன் மிக்க புத்திசாலி. நன்கு படித்தறிந்தவர். அவன் இராஜ்யத்துக்குச் சென்ற முனிவர் அரசனிடம் கேள்விகள் கேட்டார். அந்த அரசனோ விடைகள் நன்கு தெரிந்திருந்தும் வேண்டும் என்றே பாதிக்கும் குறைவானவற்றுக்கே சரியான பதில் தந்தார். ஆகவே அடுத்து மன்னன் கேள்விகள் கேட்க சந்தர்ப்பம் கிடைத்தது. முனிவர் வெற்றிச் சிரிப்புடன் அமர்ந்து இருந்தார். இவன் என்னிடம் என்ன கேள்வி கேட்க முடியும் ? எனக்குத் இல்லாத ஞானமா இவனுக்கு என இறுமாப்புக் கொண்டு அமர்ந்திருந்தார்.

மன்னன் முனிவரிடம் கேட்டான் “ மாபெரும் முனிவர் அவர்களே, பேரானந்த நிலை என்பது என்ன? அது எங்கு உள்ளது என்பதை எனக்குக் காட்ட முடியுமா?  இரண்டாவது பேரானந்த நிலையை கண்களைத் திறந்து வைத்திருந்தபடிக் காண முடியுமா?  முடியும் என்றால் அது எப்படி?”

முனிவர் பேரானந்த நிலைப் பற்றி எதையெதையோ கூறத் துவங்கினார். ஆனால் அவரால் அதைக் காட்ட முடியவில்லை. எவன் அதை அனுபவிக்கிறானோ அவன்தானே அதைக் கூற முடியும், ஆனால் அதை எப்படி வெளிக்காட்டுவது? அரச சபையில் சலசலப்பு ஏற்பட்டது. அது முடியாது என நினைத்த மன்னனிடம் முனிவர் கூறினார்  ‘எங்கே அதை நீ காட்டு பார்க்கலாம். நான் உனக்கு தலை வணங்கி விட்டு உடனேயே கிளப்பி இந்த நாட்டை விட்டுப் போய் விடுகின்றேன்’.

மிகவும் நிதானமாக மன்னன் அவரை அந்த அரண்மனையில் குறட்டை விட்டபடி தூங்கிக் கொண்டு இருந்த ஒருவனிடம் அழைத்துச் சென்றான். அவர்களுடன் அனைவரும் அதைப் பார்க்கச் சென்றனர். அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தவனை தட்டி எழுப்பினான் மன்னன். நீ தூக்கத்தில் என்ன பார்த்துக் கொண்டு இருந்தாய் எனக் கேட்டான். அவன் முழித்தான். ‘தவறு ஐயா என்னை மறந்து நன்கு உறங்கி விட்டேன்’; என்றான். அரசன் முனிவரிடம் கூறினார் ‘இதுவே பேரானந்த நிலை என்பது. தன்னையே மறந்து, தன் ஜீவனை மறந்து இந்த உலகில் நடப்பதையே தெரிந்து கொள்ளாமல் ஏகாந்த நிலையில் உறங்கியவாறு இருந்தானே அதுவே பேரானந்த நிலை என்பது. கண்களை திறந்து வைத்துக் கொண்டு இருந்தால் அதைக் காண முடியாது. காரணம் அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கும் கண்கள் மனதை அதன் மீது செலுத்தும். தன்னை மறந்து இருக்க முடியாது’.

அதைக் கேட்ட முனிவர் வெட்கம் அடைந்தார். தமது வாழ்க்கையில் முதன் முறையாகத் தோற்று விட்டோமே என வருந்தினார். அனைவரின் முன்னாலும் மன்னனிடம் தலை குனிந்து மன்னிப்புக் கேட்டப் பின் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார். அதன் பின் அவர் காடுகளிலேயே தவம் இருக்கலானார். எந்த இராஜ்யங்களுக்கும் செல்லவில்லை.

நீதி:- ஆணவம் அறிவை அழிக்கும். அகம்பாவம் உன்னையே அழிக்கும்.