தெரிந்த ஆலயம் – பலரும் அறிந்திராத தல வரலாறு 1

ஐராவதர் ஆலயம்

சாந்திப்பிரியா

நம்மில் பலரும் அது நடக்கும் இது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் எந்த ஒரு ஆலயத்திற்கும் செல்கின்றோம்.  ஆனால் அங்கு அந்த ஆலயம் எப்படி வந்தது, அதன் மகத்துவம் என்ன என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு ஆலயத்துக்குச் சென்றால் அதன் தலவரலாற்றை தெரிந்து கொண்டு வழிபடுவதின் மூலம் நம்பிக்கைகள் இன்னமும் ஆழமாகப் பதியும். அதன் விளைவாக எழுந்ததே இந்த சுருக்கமான தல வரலாறு.

கும்பகோணத்தில் இருந்து மூன்று கிலோ தொலைவில் உள்ளதே தரசுராம் என்ற சிறிய தாலுக்கா. அந்த சிறிய ஊரில் உள்ளது ஐராவதம் என்ற ஆலயம். இந்திரனின்  ஐராவதம் அதாவது யானை இந்த ஆலயத்தில் வந்து சிவனை வழிபட்டு தமக்கு துர்வாச முனிவரினால் ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொண்டதாம்.  துர்வாச முனிவரின் சாபத்தினால் அதன் வெண்மையான நிறமே வேறு பிராணிபோல மாறிவிட, தனக்கு தன்னுடைய உண்மையான நிறம் மீண்டும் கிடைக்க வேண்டும் என இங்கு வந்து பிரார்தனை செய்து சாபத்தை விலக்கிக் கொண்டு தன்  பழைய நிறத்தை அடைந்ததாம்.  தேவ லோகத்தில் இருந்து தற்போது ஆலயம் உள்ள இடத்துக்கு வந்து, லிங்க வடிவில் இருந்த சிவபெருமானை வழிபட்டு வணங்கியதினால் அந்த சிவலிங்கம் ஐராவதர் பெயரிலேயே அமைந்ததாம்.

அது மட்டும் அல்ல யமதர்மராஜர் ஒரு ரிஷியின் சாபம் பெற்றார். அதன் விளைவாக அவருடைய உடம்பு முழுவதும் நெருப்புப் போல எரியத் துவங்க அவர் ஐராவதத்தின் ஆலோசனையின் பேரில் இந்த ஆலயத்திற்கு வந்து அங்குள்ள குளத்தில் முழுகி குளித்தவுடன் அந்த எரிச்சல் நின்றதாம். ஆலயம் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கள் காலத்தைச் சேர்ந்தது. அந்த ஆலயத்தில் கரிகால சோழனும், மற்ற சோழ அரசர்களும் வந்து சிவபூஜை செய்து வழிபட்டனராம்.

காவிரி ஆற்றில் இருந்து வரும் தண்ணீரினால் நிறப்பப்படும் ஆலயக் குளத்தில் நீராடினால் சர்வ தோஷங்களும் ரோக சம்மந்தமான நோய்கள் தீரும் எனவும், மரண பயம் மனதைவிட்டு விலகும் எனவும் பண்டிதர்கள் கூறுகின்றனர். அவர்கள் மேலும் கூறுகையில் அதற்குக் காரணம் ஐராவதம் அருகில் இருந்த காவிரி ஆற்றில் இருந்து தண்ணீரை தன் துதிக்கையில் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்ய அந்த புனித நீர் அருகில் இருந்த குளத்தில் சென்று விழுந்ததாம். அங்குதான் யமதீர்த்தம் எனப்படும் குளம் தற்போது உள்ளதாம்.

இது நம்பிக்கையில் வந்துள்ள கிராமியக் கதையாகவே இருக்க வேண்டும். ஏன் எனில் கல்வெட்டுக்களில் அத்தகைய விவரங்கள் காணப்படவில்லை. ஆனால் அற்புதமான கலையழகில் கட்டப்பட்டு உள்ள ஆலயம் காரணம் இன்றி அத்தனை நேர்த்தியாகக் கட்டப்பட்டு இருக்க முடியாது. ஆலயத்தில் பார்வதி தேவி பெரியநாயகி அம்மன் என்ற பெயரில் தனி சன்னதியில் காட்சி தருகிறார். சிவன் சன்னதியை குதிரைகள் ஒரு இரதத்தில் இழுத்துச் செல்வது போல காணப்படுகின்றது.