சிறு புராணக் கதை
சாந்திப்பிரியா
கிரேத யுகத்தில் மாருத்தா என்ற ஒரு மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் விஷ்ணு வழி வந்தவன். பல நற்குணங்கள் பெற்றவன். அவன் ஒரு முறை ஒரு யாகம் செய்ய முடிவு செய்தான். ஆனால் அவனிடம் தேவையான பணம் இல்லை. ஆகவே அவன் நாரதரின் ஆலோசனைப்படி சிவனை துதித்து யாகம் செய்தது நிறைய தங்கத்தைப் தானமாகப் பெற்றான். சில காலம் பொறுத்து அவன் மீண்டும் இன்னொரு யாகம் செய்தான். அதற்கு பல தேவர்களையும் அழைத்து இருந்தான். அந்த நேரத்தில்தான் இராவணன் தனது வெற்றி யாத்திரையை துவக்கி பல இடங்களுக்கும் சென்று கொண்டு இருந்தான். அவன் அந்த நேரத்தில் சீதையை கடத்தி இருக்கவில்லை. அவன் பெரும் சக்திகளை பல கடவுட்களிடம் இருந்தும் பெற்று இருந்தான். அவனைக் கண்டாலே பல தேவர்களுக்கும் பயம் உண்டு. இராவணன் யாகம் நடந்து கொண்டு இருந்த இடத்துக்கும் வந்தான். அங்கு இருந்த முக்கியமான தேவர்கள் பயந்து போய் வேறு பல உருவங்களை எடுத்துக் கொண்டனர். இந்திரன் மயில் உருவையும், குபேரன் ஓணான் உருவையும், யமன் காக்கையாகவும் வருணன் அன்னமாகவும் வடிவை எடுத்துக் கொண்டனர். மயிலும் அன்னமும் அப்போது வேறு வண்ணத்தில் இருந்தன. யாகசாலைக்கு வந்த இராவணன் மாருத்தாவிடம் தகராறு செய்தான். ஆனால் மாருத்தாவை ராவணனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏன் எனில் அவரும் ராவணனைப் போல பல அறிய வரங்களைப் பெற்று இருந்தார். ஆகவே ராவணன் அங்கிருந்த பல ரிஷி முனிவர்களை கொன்றுவிட்டுச் சென்று விட்டான். அவன் சென்ற பிறகு இந்திரன், வருணன், போன்றோர் சுய உருவை எடுத்து யாகத்தில் கலந்து கொண்டுவிட்டுச் சென்றனர்.
அதனால்தான் இந்திரன் மயிலுக்கு பலவிதமான ஜொலிக்கும் வண்ணகளைக் கொண்ட பறவையாக மாறுமாறும், வருணன் அதுவரை கருப்பும் வெளுப்புமாக இருந்த அன்னத்தை நல்ல வெண்ணிறமாக மாறவும், ஓணான் பல நிறங்களை இடத்துக்கு ஏற்ப மாறும் வகையில் பெற்றிட குபேரனும், யம லோகம் போகும் முன் இறந்தவர்கள் வீட்டில் இறந்தவர்களுக்கு செய்யும் காரியங்களில் முக்கியமாக சடங்காக காக்கைக்கு உணவு அளிப்பதை கடைபிடிப்பார்கள் என யமராஜரும் தம்மை காத்த பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் அருள் செய்ய அவை அந்த நிறங்களைப் பெற்றன.