தெரிந்த ஆலயம் ,பலரும் அறிந்திடாத வரலாறு – 10
சென்னை கோலவிழி
அம்மன் ஆலயம்
சாந்திப்பிரியா
நம்மில் பலரும் அது நடக்கும், இது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் ஆலயங்கள் செல்கின்றோம். ஆனால் அந்த ஆலயம் எப்படி வந்தது, அதன் தலவரலாறு என்ன என்பதை பார்ப்பதே இல்லை. அதை தெரிந்து கொண்டு அந்தந்த ஆலயங்களில் சென்று வழிபடுவது சிறந்த பலனைத் தரும். அதன் விளைவே எழுந்ததே இந்தக் கட்டுரை.
பச்சைப் பட்டுக் கோல விழி அம்மன் என்கின்ற ஆலயம் மயிலை லஸ் பகுதியில் சம்ஸ்கிருத காலேஜ் அருகில் உள்ளது. அந்த ஆலயம் எப்போது வந்தது என்பதற்கான குறிப்புகள் இல்லை . ஆனால் அது கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு முற்பட்ட ஆலயம் என்பது மட்டும் தெரிகின்றது. ஆகவே ஆலயம் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க வேண்டும்.
ஆலயத்தின் அமைப்பைப் பார்ப்பதில் இருந்து அது முன் ஒரு காலத்தில் கிராம தேவதை அல்லது காவல் தெய்வமாகவே இருந்து இருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. அவளது கண்கள் மிகப் பெரியதாக உள்ளதால் பயம் ஏற்படும். அதனால் ஊருக்குள் நுழைய நினைக்கும் தீய சக்திகள் அதைக் கண்டு பயந்து ஓடுமாம். மூலஸ்தானத்தில் கோலவிழி அம்மனும் பத்ர காளியும் உள்ளனர். அதற்குக் காரணம் தீய சக்திகளை விரட்ட கையில் ஆயுதம் ஏந்தி காளியும், வந்தவர்களுக்குக் கருணைக் காட்ட கோல விழி அம்மனும் உள்ளதாக இதீகம் உள்ளது. மூலஸ்தானத்தின் பின்புறம் பெரிய பாம்புப் புற்றும் உள்ளது. கோலவிழி அம்மன் பார்வதியின் அவதாரம் எனவும் ஸ்வயம்பு எனவும் நம்புகிறார்கள்.
அந்த ஆலயம் காவல் தெய்வமும் கிராமிய தேவதையாகவும் இருந்து இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சான்றாக உள்ள செய்தி இன்னொன்று இது. கபாலி கோவில் உற்சவம் துவங்கும் முன் கோலவிழி அம்மன் ஆலயத்திலேயே வந்து முதலில் கிராமதேவதை பூஜையை நடத்தி ஆலய உற்சவம் தடங்கல் இன்றி நடந்தேற வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டப் பின்னரே கபாலி ஆலயத்துக்குச் சென்று உற்சவத்தைத் துவக்குவார்கள் . மேலும் அறுபத்தி மூவர் ஊர்வலத்தில் விநாயகருக்கு அடுத்து செல்வது கோலவிழி அம்மனாம்.
இதை எல்லாம் பார்க்கும்போது அது மயிலையில் அந்த காலத்தில் ஒரு எல்லை அம்மன் கோவிலாகவே அது இருந்து இருக்க வேண்டும் என்று நம்பினாலும். வேறு சிலர் அது ஒரு சக்தி ஆலயமாக சிறிய அளவில் இருந்து இருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். சாதாரணமாக கிராமங்களில் எல்லை அம்மன் ஆலயங்களில் மற்றும் ஊருக்குள் வெளியில் உள்ள ஆலயங்களில் பயத்தின் காரணமாக எவரும் அதிகம் செல்வது இல்லை. வருடாவருடம் விழா நடக்கும்போது மட்டுமே மக்கள் செல்வார்கள். பலிகள் தரப்படும். விழாக் காலத்தைத் தவிர மற்ற நாட்களில் ஆலயம் வெறிச்சோடிக் கிடக்கும். அதனால்தான் அந்த ஆலயம் சில வருடங்களுக்கு முன்னால் பிரசித்தி பெற்றதாக இருந்து இருக்க வாய்ப்பில்லை . ஆனால் அந்த ஆலயத்து அம்மன் சக்தி ஆலயம் எனவும், அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள் என்பதையும் கண்டறிந்த மயிலை மாமுனிவரான குருஜி என்பவர் அந்த ஆலயத்தை புனரமைத்து, அம்மனின் சக்திகளை உள்ளடக்கிய யந்திரத்தை ஆலயத்தில் ஸ்தாபனம் செய்ய அந்த ஆலயம் இன்று ஜே ஜே என உள்ளது.
கோலவிழி அம்மன் ஆலயத்துக்குச் சென்று தம்மை துன்புறுத்தும் தீய ஆவிகளை துரத்த வேண்டும், வாழ்கையில் ஏற்படும் தடைகள் விலக வேண்டும் ,தமக்கு வந்துள்ள தீராத நோய்கள் விலக வேண்டும், என வேண்டிக்கொண்டு அம்மனின் கண்களையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தபின் வந்தால் வேண்டியது நிறைவேறுமாம். ஆலயத்தில் பச்சைப் பட்டு கோலவிழி அம்மன், ஆனந்தக் கோலவிழி அம்மன், காலி, விநாயகர் மற்றும் முருகன் போன்றவர்கள் உள்ளனர்.