ஆலமரத்து அடியில் கேட்ட ஆலயக் கதைகள் – 35
திருநிலை
பெரியாண்டவர்  ஆலயம்
சாந்திப்பிரியா
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருகழிக்குன்றத்தில் இருந்து சுமார் ஏழு கிலோ தொலைவில் உள்ளதே பெரியாண்டவர் சிவன் ஆலயம். வயல் வெளியில் இருந்த சிவலிங்கத்திற்கு சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆலயம் எழுந்துள்ளது. அந்த ஆலயத்தின் வரலாறு என்ன?
ஒரு முறை பார்வதி கொடுத்த சாபத்தின் காரணமாக சிவபெருமான் பூமியில் மானிடனாக அவதரிக்க வேண்டி இருந்தது. அவர் பூமிக்கு வந்து தன் நிலை மறந்து அங்கும் இங்குமாக பைத்தியக்காரர் போல அலைந்து திரிந்து கொண்டு இருந்தார். அவர் அந்த நிலையில் இருந்ததினால் அனைத்து இயக்கங்களும் தடைப்பட்டன. தேவர்கள் கவலை அடைந்தனர். அவர்கள் பார்வதியிடம் சென்று அந்த நிலையை மாற்றுமாறு வேண்டிக்கொள்ள அவளும் சுற்றி அலைந்து கொண்டு இருந்த சிவபெருமானின் நிலையைக் கண்டு மனம் வருந்தினாள். ஆனாலும் சாப விமோசனம் குறிப்பிட்ட காலத்தில்தானே நடக்க முடியும். அதற்கேற்ப அவர் இந்த ஆலயம் இருந்த இடத்துக்கு வந்தபோது சாபத்தை தன்னுள் வைத்து இருந்த அவர் கையில் இருந்த சூலாயுதம் கீழே விழ சாப விமோசனம் பெற்ற சிவன் தன் நிலைக்கு வந்தார் . அந்த இடத்திலேயே தான் சிவலிங்கமாக நிலைக் கொள்ள அந்த இடத்தின் பெயர் திருநிலை என ஆயிற்று. சூலாயுதம் விழுந்த இடத்தில் முதலில் ஜோதி வடிவமாகக் காட்சி தந்தார். அதன் பின்னரே லிங்க வடிவம் பெற்று ஸ்வயம்பு லிங்க உருவில் அங்கு அமர்ந்தார்.
அந்த நிலையை அவர் அடையும் வரை இருபத்தி ஒரு சிவ கணங்களும் அவருக்குப் பாதுகாப்பாக எவர் கண்களிலும் படாமல் மறைந்த நிலையில் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தனர். அதை குறிக்கும் வகையில்தான் அங்கு இருபத்தி ஒரு சிவலிங்கங்கள் உள்ளனவாம். அவை எப்படி ஏற்பட்டது என்றால் சிவன் கையில் இருந்த சூலாயுதம் கீழே விழுந்தபோது அந்த இடத்தில் இருந்த பூமி மண்ணில் மறைந்தவாறு வந்து கொண்டு இருந்த சிவ கணங்கள் இருபத்தி ஒரு மண்கட்டிகளாக தெறித்து விழ அவை அந்த இருபத்தி ஒரு சிவலிங்கங்களாயின. அது மட்டும் அல்ல அவரைத் தொடர்ந்து அவருக்குக் காவலாக மனித உருவிலேயே நந்தியும் வந்து கொண்டு இருந்தாராம். ஆகவே சிவன் நிலையாக நின்ற இடத்தில் நந்தி தேவரும் அதே மனித உருவில் நின்று விட்டதினால்தான் நந்தி தேவர் நின்ற நிலையில் அந்த ஆலயத்தில் காட்சி தருகிறார்.
ஆலயத்தின் இன்னொரு விசேஷம் என்ன என்றால் அங்கு சிவபெருமானின் சன்னதிக்குப் பக்கத்தில் பார்வதி தேவி அங்காள பரமேஸ்வரியாக இருந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் புரிகிறாள். அவள் பெயர் அங்கு திருநில்லைநாயகியாம். அமர்ந்த நிலையில் அவள் காட்சி தருகிறாள். பார்வதி எப்படி அங்காள பரமேஸ்வரியாக ஆனாள் என்பது தனியான சுவையானக் கதை. அந்த ஆலயத்துக்கு அருகில் உள்ள புனிதக் குளத்தில் குளித்துவிட்டு ஆறு வாரங்கள் பெரியாண்டவர் மற்றும் அங்காள பரமேஸ்வரி சன்னதிக்குச் சென்று பூஜை செய்து வணங்கி வந்தால் நடக்காத காரியங்கள் கூட நடைபெறுமாம். குழந்தைபேறு பெற இங்கு வந்து வணங்குவது விசேஷமாகக் கருதப் படுகின்றது. மேலும் அந்த இடத்துக்கு பல முனிவர்களும் ரிஷிகளும் வந்து சிவனை வணங்கிச் சென்று உள்ளனர். அந்த இருபத்தி ஒன்று சிவ லிங்கங்களும் சிவ பெருமானான மூல லிங்கமான பெரியாண்டவரை அங்கு வணங்கி பூஜிப்பதான இதீகமும் உள்ளது. சிவபெருமான் மனித உருவில் வந்ததினால் அவர் காலடி நேரடியாகப் பட்ட தலம் இது.